காஷ்மீரின் பொற்காலம் ராணி சுகந்தா
காஷ்மீர் பாரதத்தின் தலைநிமிர்வாய் நின்றிருக்கும் ஒரு பகுதி.
அதைப் பத்தாம், பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் கம்பீரமாய் ஆட்சி செய்தவர்கள் இரு பெண்மணிகள்
என்றால் வியப்பாயிருக்கும். பத்தாம் நூற்றாண்டில் காஷ்மீர் பள்ளத்தாக்கை உத்பலா என்றொரு
வம்சம் ஆண்டு வந்தது. அதன் ஆரம்பக் காலங்களில் ஆட்சியாளர்கள் மீது ஏகங்காக்கள் மற்றும்
தந்திரிகள் என்ற இரு இராணுவப் பிரிவுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இதில் ஏகங்காக்கள்
ஆட்சியாளர்களின் மெய்க்காப்பாளர்கள். தாந்திரிக்கள் இராணுவத்தினர்.
பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் (கிபி 904 முதல் 906 வரை ) ஆட்சி செய்தவர் சுகந்தா. பதிமூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆட்சி செய்தவர் கோட்டா ராணி. இவர் முஸ்லீம் ஆட்சியாளர் ரிஞ்சன் எனப்படும் சத்ருதீன் ஷாவின் மனைவியாவார். இந்நிலையில் காஷ்மீரை ஆண்ட இரண்டு இந்து ராணிகளில் சுகந்தாவின் ஆட்சிக் காலம் பொற்காலம் எனப்படுகின்றது.
காஷ்மீருக்கு அருகிலுள்ள ஒரு ராஜ்ஜியத்தின் மன்னரான சுவாமி ராஜாவின்
மகள் சுகந்தா. காஷ்மீரின் மன்னரான சங்கரவர்மனுடன் கிபி 885 இல் இவருக்குத் திருமணம்
நடந்தது. மன்னர் சங்கரவர்மனுக்கு சுரேந்திரவதி உட்பட மூன்று மனைவியர் இருந்தனர். இவர்களுடன்
சுகந்தாவும் அவரது துணைவியாகச் செயல்பட்டார்.
கிபி 902 இல் சங்கரவர்மன் உருஷாவில் நடந்த ஒரு போரில் அம்பு
பாய்ந்து இறந்தார். அவருக்குப்பின் ராஜாவின் மற்ற மனைவியரும் அந்தப்புரப் பெண்களும்
தீக்குளித்து ராஜாவுடன் சதி என்னும் உடன்கட்டை ஏறியபோது தனது மகன் கோபாலகிருஷ்ணனைப்
பாதுகாக்க வேண்டி சுகந்தா அதை மறுத்துவிட்டார். மன்னரின் இறுதிச் சடங்குகள் முடிந்ததும்
கோபாலகிருஷ்ணன் காஷ்மீரின் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
மன்னர் சங்கரவர்மன் கிபி 883 முதல் 902 வரை காஷ்மீரை அரசாட்சி
புரிந்தார். அவர் இறந்துபட்ட பிறகு காஷ்மீரின் சிம்மாசனத்தில் மகன் கோபாலவர்மனுக்காக
ராணி ரீஜண்டாக இரு வருடங்களும், அவருடைய மரணத்துக்குப் பின் காஷ்மீரின் ராணியாக ஆட்சிக்
கட்டிலில் இரு வருடங்களும் ஆண்டவர் ராணி சுகந்தா.
ஆனால் கருவூல அமைச்சர் பிரபாகர தேவாவுடன் அவர் கொண்ட நெருக்கம்
அவரது மதிப்பைக் குலைத்தது. பிரபாகரதேவாவோ இதைப் பயன்படுத்திக் கருவூலப் பொக்கிஷங்களைத்
திருடத் தொடங்கினார். இதனால் மன்னர் கோபாலவர்மனால் விசாரணைக்கு ஆட்பட்டார். இதை மனதில்
கொண்டு பிரபாகரதேவா தனது உறவினரான ராமதேவனை மாந்திரீகம் மூலம் கோபாலவர்மனைக் கொல்லும்படிப்
பணித்தார். கோபாலவர்மன் காய்ச்சலால் இறந்துபட ராமதேவனோ தற்கொலை செய்துகொண்டார். அவருக்குப்
பின் பதவிக்கு வந்த சங்கதாவும் பத்துநாட்களுக்குள் மர்மமான முறையில் இறந்தார்.
902 முதல் 904 வரை அரியணை ஏறிய சங்கரவர்மனின் அனைத்து வாரிசுகளும்
சுகந்தாவின் மகன் கோபாலவர்மன் உட்பட இறந்துபட சுகந்தா ராணியாகப் பதவி ஏற்கவேண்டிய கட்டாயம்
ஏற்பட்டது. மந்திரி சபையினரும் பொதுநபர்களின் மகா பஞ்சாயத்தும் சேர்ந்து மக்களின் ஏகோபித்த
ஆதரவைப் பெற்றவளான சுகந்தாவை அடுத்த ஆட்சியாளராக அறிவித்தார்கள்.. இவரும் இரு ஆண்டுகளே
ஆண்டாலும் காஷ்மீரின் ராணி ”ஸ்ரீ சுகந்த தேவா” என்று அனைவராலும் அறியப்பட்டார்.
காஷ்மீரில் சுகந்தாவின் ஆட்சிக் காலம் சக்தி வாய்ந்த ஒரு பெண்ணின்
தலைமையின் கீழ் அமைந்த சிறப்பான பொற்காலம். குடிமக்களின் விருப்பம் அறிந்து ஆட்சி புரிந்தவர்.
எனவே மக்கள் அவரை நேசித்தனர். அரசவையினரும் அவர்மேல் அளப்பரிய நம்பிக்கை வைத்திருந்தனர்.
இராணுவத்தினரும் போற்றி வந்தனர்.
இவரது ஆட்சியில் சுகந்தா, சுகந்தபுரா மற்றும் கோபாலபுர நகரங்கள்
வடிவமைக்கப்பட்டன. மேலும் விஷ்ணு கோவிலான கோபால கேசவாவும், கோபாலமாதா மடமும் கட்டுவிக்கப்பட்டன.
பட்டனில் உள்ள சுகந்தேஷா கோயிலும் இவர் கட்டியதுதான்.
காஷ்மீரின் உத்பலா வம்ச ஆட்சியில் ஏகங்காக்களுக்கும் தந்திரிக்களுக்கும்
அடிக்கடி நிலவிய போட்டிகளால் அவர்கள் தம் இஷ்டப்படிப் புதிய மன்னர்களை நியமிக்கவும்
அவர்களின் ஆட்சிக் காலத்தை நிர்ணயிக்கவும், பிடிக்காவிட்டால் பதவி நீக்கம் செய்யவும்
முனைந்தனர். இவர்களில் பெரும் ஆதிக்கம் செலுத்தியவர்கள் தந்திரிக்களே. ஏனெனில் இவர்கள்
ஒரு வலுவான இராணுவ அமைப்பாக அசைக்க முடியாத பலத்துடன் திகழ்ந்தனர்.
அரசவையில் தந்திரிகளை ஆதரித்தோர் ஒரு கூட்டமைப்பாகச் செயல்பட்டார்கள்.
இவர்கள் விதித்ததுதான் சட்டம். ஆட்சியாளர்களை ஆதரிப்பதோ அல்லது தண்டிப்பதோ இவர்களின்
விருப்பப்படிதான் நிகழும். ஏகங்காக்கள் அரசர், அரசியின் மெய்க்காப்பாளர்கள் எனினும்
அவர்களும் நீதிமன்றத்திலும் அரசவையிலும் செல்வாக்குக் கொண்டிருந்தனர்.
டமாரஸ் எனப்படும் நிலப்பிரபுத்துவ முதலாளிகள், ஏகங்காக்கள் மற்றும்
தந்திரிகளின் அதிகாரப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆட்சிபீடத்தால் அழைக்கப்பட்டார்கள்.
அவர்கள் வெற்றிகரமாகத் தந்திரிக்களின் அதிகாரத்தை முறியடித்தாலும் அதன்பின் டமாரஸ்களின்
அதிகாரத்தையும் கட்டுப்படுத்த வேண்டிய துரதிர்ஷ்ட நிலைக்குக் காஷ்மீரின் ஆட்சியாளர்கள்
ஆட்பட்டனர். கிபி 914 இல் சுகந்தா தோற்கடிக்கப்பட்டபிறகு அடுத்து வந்த ஆட்சியாளர்களால்
தந்திரிகளின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
கிபி 904 இல் சுகந்தா, கோபால வர்மாவின் மறைவுக்குப்பின் இறந்துவிட்ட
தன் மகனின் மனைவியான ஜெயலட்சுமிக்குப் பிறக்கப் போகும் தன் பேரன் அரசாள்வதற்கான உரிமையைத்
தக்கவைத்துக் கொள்ளவே அரசபதவியை ஏற்றுக் கொண்டார்.
ஆனால் ஜெயலட்சுமியின் கர்ப்பத்தில் உதித்த அப்பேரன் மறைந்து
போனான். சுகந்தா மிகுந்த விரக்தியில் ஆழ்ந்தார். அதன் பின் தன் இரத்த சம்பந்தமான உறவினரான
நிர்ஜிதவர்மன் சூரவர்மனின் பேரனும் அவந்திவர்மனின் ஒன்றுவிட்ட சகோதரனுமான பாங்கு என்ற
புனைபெயர் கொண்ட நிர்ஜிதவர்மன் தனக்குப் பிறகு அரியணை ஏற வேண்டும் என விரும்பினாள்.
நிர்ஜிதவர்மனை அரியணைக்கு அதிபதியாக நியமிப்பதையும் அவள் தனது
மந்திரி சபையின் ஆலோசனையையும் அனுமதியையும் பெற்றே செய்ய வேண்டி வந்தது. உடல் ஊனமுற்ற நிர்ஜிதவர்மனை
அடிப்படையில் மந்திரிகளும் தந்திரிகளுமே வெறுத்தார்கள். இதனால் இந்த நியமனம் கணிசமான
எதிர்ப்பைச் சம்பாதித்தது. இதனால் கோபமுற்ற தந்திரிகள் சுகந்தாவைப் பதவி நீக்கம் செய்தனர்.
அதற்குப் பதிலாக நிர்ஜிதவர்மனின் பத்து வயது மகன் பார்த்தாவை மன்னனாக நியமித்தார்கள்.
தன்னைப் பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து மீண்டும் அரியணைக்கு
உரிமை கொண்டாடினார் சுகந்தா. எதிர்ப்பு செல்லுபடியாகாததால் பின்வாங்கி ஹஸ்கபுராவில்
சென்று வசித்தார்
அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்தது இரண்டே ஆண்டுகள்தான். கிபி
906 முதல் கிபி 914 வரை ஹஸ்கபுராவில் எட்டு ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டார். அவருடைய
மெய்க்காப்பாளர்களான ஏகங்காக்கள், தந்திரிகளுக்கு எதிராகப் போர்புரியும்படி வலியுறுத்தினார்கள்.
914 இல் அரசாட்சி உரிமை கோரி பார்த்தா மற்றும் மந்திரிகள், தந்திரிகளுக்கு எதிராகப்
போருக்குச் சென்றார். ஏப்ரல் 914 இல் ஸ்ரீநகரின் புறநகர்ப்பகுதியில் ராணியின் விசுவாசமான
படைப்பிரிவுக்கும் தந்திரிகளுக்கும் இடையில் கடுமையான போர் நிகழ்ந்தது. முடிவில் எதிர்பாராவிதமாகத்
தந்திரிகள் ஜெயித்தார்கள். தோல்வியைத் தழுவிய ராணி சுகந்தவைக் கைப்பற்றிச் சிறையில்
அடைத்தார்கள். நிஸ்பாலக விஹாரா என்ற புத்த விகாரத்தில் அவர் கொல்லப்பட்டார்.
அரசன் அரசியின் பாதுகாப்பையும் வாழ்வையும் தீர்மானிப்பவர்களாக
ஏகங்காக்கள், தந்திரிகள் மற்றும் டமாரஸ் எனப்படும் நிலப்பிரபுத்துவ முதலாளிகள் என இம்மூன்று
பேரும் இருந்தது காஷ்மீரின் பெரும் சோகம்.
சங்கரவர்மனும் சுகந்தாவும் இணைந்து சங்கரபுராவின் தலைநகரில்
சங்கர கௌரேசா மற்றும் சுகந்தேஸ்வரா என்ற இருகோவில்களை மகாதேவருக்காகக் கட்டினார்கள்.
இவை இரண்டும் இன்றும் பட்டானில் உள்ளன. சுகந்தா தன் ஆட்சிக் காலத்தில் வெளியிட்ட நாணயம்
அவரது சக்திக்குச் சான்றாகும். அதில் சாரதா எழுத்துக்களால் ‘ஸ்ரீ சுகந்த தேவா’ என்ற
ஆண்பால் அடைமொழியால் அவள் அதில் குறிக்கப்பட்டு இருப்பது சிறப்பு. அந்நாணயங்களில் லெக்ஷ்மி
தேவி லலிதாசனத்தில் அமர்ந்திருப்பது போல் பொறிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)