ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 9.
தீபாவளிக்காகப் பட்டாசுக் கடைகள் நகரெங்கும் திறந்திருந்தன.
புத்தாடைகளும் இனிப்பு வகைகளும் விற்றுத் தீர்த்துக் கொண்டிருந்தன. ஒவ்வொருவர்
வீடுகளில் இருந்தும் அதிரசம், முறுக்கு, லட்டு, மைசூர்ப்பாகு போன்றவை செய்யும்
எண்ணெய் வாசமும் வெல்லப்பாகின் மணமும் வந்து கொண்டிருந்தன.
“குலோப் ஜாமுன் மட்டும் செய்திடு. என் ஆஃபிசிலேயே ஸ்வீட்ஸ் டப்பா கிஃப்ட்
கிடைக்கும். மத்த ஸ்வீட்ஸெல்லாம் அதிலேயே இருக்கும். அதுனால செய்ய வேண்டாம்.”
என்றான் ராஜன்.
”தீபாவளிக்கு எண்ணெய்ப் பலகாரம் செய்யணும். அடுப்புல எண்ணெய்ச் சட்டி வைக்கணும். அதுனால இட்லியும் அரைச்சுவிட்ட சாம்பாரும் போட்டு வடையும் செய்திடுறேன்.” என்றாள் ரம்யா.
”சரி பசங்களுக்கும் நமக்கும் இன்னிக்கு ட்ரெஸ் வாங்கப் போவோம். அப்பா
நீங்களும் ரெடியா இருங்க” என்று கூறியபடி அலுவலகம் புறப்பட்டான் ராஜன்.
மாலையில் மிகப் பெரும் ட்ராஃபிக் ஜாமில் மாட்டியதால் ”அப்பா, நான்
வீட்டுக்கு வந்து உங்களை எல்லாம் கூட்டி வர லேட் ஆகும்போலத் தெரியுது. நீங்க ரம்யா
பிள்ளைகளோடு புறப்பட்டு ஷேர் ஆட்டோவுல டி நகர் வந்திடுங்க. நான் ஆஃபீஸிலேருந்து
அங்கேயே வந்திடுறேன்.” என்று ஃபோன் செய்தான்.
தீபாவளி சமயமாதலால் ஆட்டோ எல்லாம் ஒரே நெருக்கடி. குழந்தைகளை எல்லாம்
மடியில் வைத்து உட்கார்ந்து கொண்டார்கள் பயணியர். பின்புறம் வேறு ஸ்டூல் போட்டுப்
பயணிகளை அமர வைத்தார் ஆட்டோகாரர். பிதுங்கி வழியும் கூட்டத்தில் சென்று
குழந்தைகளுக்கும் ராஜன், ரம்யா, ஆராவமுதனுக்கும் உடை எடுத்து வந்தார்கள். அவர்களுடன்
ஆட்டோவில் வந்தவர்கள் சிலர் ப்ளாட்ஃபார்ம்களில் பரப்பி இருந்த துணிகளையும்
பார்த்து வாங்கிக் கொண்டிருந்தார்கள்
ஸ்வீட் ஸ்டாலுக்குச் சென்றால் பிள்ளைகள் ஆசைப்பட்ட ரசமலாய், பாசந்தி
தீர்ந்துவிட்டது. வரும் வழியில் பிரம்மாண்டமாய் இருந்த வெடிக்கடைகள் வேறு அவர்கள்
ஏக்கத்தைத் தூண்டிவிட்டன. சங்குசக்கரம், புஸ்வாணம், பென்சில் வெடி, சாட்டை,
புஸ்ஸென எழும்பும் பாம்புமாத்திரை என ஆராதனா கனவில் மிதக்க, லெட்சுமி வெடி, ஓலை
வெடி , அணுகுண்டு, வெங்காய வெடி, எலக்ட்ரிக் ட்ரெயின் வெடி , ஃப்ளவர் பாட்,
ராக்கெட், தௌசண்ட்வாலா, டென் தவுஸண்ட் வாலா ஆகிய பட்டாசுகள் ஆதித்யாவின் கனவுகளில்
உலா வந்தன.
ஆனால் வீட்டுக்கு வந்ததும் ராஜன் சொல்லிவிட்டான் “ இந்த வருடம் 150
ரூபாய்க்குத்தான் பட்டாசு. சும்மா எல்லாத்திலயும் பேருக்கு ஒண்ணொன்னு. இனிமே
பட்டாசு எல்லாம் வாங்கிக் காசைக் கரி ஆக்கவும் கூடாது. சுற்றுச்சூழலை
மாசுபடுத்தவும் கூடாது “
இதெல்லாம் பச்சைப் பிள்ளைகளுக்கு எங்கே புரியப்போகுது. அவர்கள் இரவில்
தாத்தாவின் மேல் காலைப்போட்டுக்கொண்டு படுத்தபடி கட்டிப்பிடித்துப்
புலம்பினார்கள். “ இந்த ஊரே நெறையா வெடிக்கும். நாங்க மட்டும் வேடிக்கை
பார்க்கணுமா ? எங்களுக்கு ஒண்ணும் வெடியே வேண்டாம் “
”அத அப்ப பார்ப்போம் இப்ப நான் உங்களுக்கு ஒரு கதை சொல்றேன் கேளுங்க. ”
அரைகுறை மனத்தோடு இருவரும் தாத்தா கூறும் கதையைக் கேட்டார்கள். ” கர்ணன்
மகா வள்ளல்தானே. அவன் குருக்ஷேத்திரப் போரில் இறந்தவுடனே சொர்க்கத்துக்குப் போனான்
ஆனா அங்கே அவனுக்குப் பசி எடுத்துச்சாம். சொர்க்கத்துல யாருக்குமே பசிக்காதே
எனக்கு மட்டும் பசிக்குதே, என்ன காரணம்னு யோசிச்சானாம். என்ன பண்ணுறதுன்னே
தெரியலையாம் “
“ஏன் தாத்தா அவர் வள்ளல்தானே அவருக்கே பசி எடுத்துச்சா “ ஆதித்யா வினவினான்.
“ஆமாம். அப்ப அங்கே நாரதர் வந்தாராம். அவர்கிட்ட தனக்கு ஏன் பசிக்குதுன்னு
கர்ணன் கேட்டானாம். அப்ப அவரு சொன்னாராம் கர்ணா நீ எவ்வளவோ தானம் செய்திருக்கே.
ஆனா அன்னதானம் மட்டும் செய்யல. ஆனா ஒருதரம் உன்கிட்ட அன்னதானம் பண்ற இடம் எங்க
இருக்குன்னு ஒருத்தர் கேட்டப்ப நீ அதோ அங்கே இருக்குன்னு உன் சுட்டு விரலால
காமிச்ச. அதுனால உன் சுட்டுவிரல வாயில் வைச்சுக்க பசி அடங்கும் “ அப்பிடின்னாராம்
உடனே கர்ணன் தன் சுட்டுவிரலை வாயில் வச்சவுடனே பசி அடங்குச்சாம். ஆனா அத
எடுத்தா பசிச்சிச்சாம். அப்பத்தான் முடிவு செய்தானாம் அடுத்த ஜென்மம் எடுத்தா
அனைவருக்கும் உணவுதானம் செய்யணும்னு.
நாம் ஷேர் ஆட்டோவுல போனோம்ல. எவ்ளோ பேர் ப்ளாட்ஃபார்ம்ல விக்குற துணியை
வாங்கினாங்க. ஸ்வீட் ஸ்டால் போனோம் அங்கே ரசகுல்லா, பாசந்தி கிடைக்கல ஆனா காலா
ஜாமூன் வாங்கி சாப்பிட்டோம்ல. இதெல்லாம் வாங்க முடியாம எவ்ளோ பேர் இருக்காங்க. ”
தாத்தா சொன்னதும் ஆதித்யா அவரது முகவாயைத் திருப்பினான்
”ஆமாம் தாத்தா. எங்க ஸ்கூல் பக்கத்துல கூட ஆர்பனேஜ் ஒண்ணு இருக்கு. அங்கே
பசங்க பெரியவங்க எல்லாரும் இருக்காங்களாம். அவங்களுக்கு ஏதாவது கொடுக்கலாம்னு
ஸ்கூல் நோட்டீஸ் போர்டுல போட்டிருந்தாங்க. நான் அப்பாகிட்ட கேட்டு அவங்களுக்கு
ஸ்வீட், துணி ஏதும் வாங்கித் தர சொல்லுறேன் தாத்தா.”
”குட் பாய். நாம இந்த தீபாவளிக்கு அவங்களுக்கு ஸ்வீட், பலகாரம்
எடுத்துட்டுப் போய்க் கொடுப்போம். நீ எத்தனை பேர் இருக்காங்கன்னு கேட்டுட்டு வா “
என்று கூறி பேரனை முத்தமிட்டார்.
”தாத்தா எனக்கு எனக்கு” எனப் பேத்தி தாவாங்கட்டையைப் பிடிக்க அவளையும்
முத்திட்டார். ”அண்ணாவோட நானும் வருவேன், ஸ்வீட் தருவேன்” என்றது அந்த
சேட்டைக்காரக் குட்டி. ”கட்டாயம் மூணுபேரும் போவோண்டா செல்லம் “ என்று கொஞ்சினார்
ஆராவமுதன்.
9. ஐயம் இட்டு உண்
தேவைப்படுபவர்களுக்கு உணவளித்துவிட்டுப் பின்பு உண்ணு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)