எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 மே, 2015

ஓலை. ( சொல்வனம் )



ஒரு பறவையை
தூதனுப்ப நினைக்கிறேன்.
தன் காலை உடைத்துக் கொள்கிறது.
தீனி தின்ற வயிற்றுப் புடைப்பைக் காட்டுகிறது.
அலகின் கூர்மை மழுங்கியதாகச் சொல்கிறது.
முன்பு சென்ற தடம் ஓர்மையில்இல்லையென்கிறது.
காற்றின் திசையில் ஏழுலோகத்துக்குள்
எந்த லோகம் என்று திரும்பத் திரும்ப விசாரிக்கிறது
கடலில் அலையும் பாய்மரம் போல
இறகை விரித்து விரித்துக் கோதி
விரிவு பத்தாதென்கிறது.
கால் நகங்களை வெட்டியதால் வழுவிவிடுமோவென்ற
அச்சத்தைத் தாறுமாறாகக் கீறுகிறது.
ஒரு சுருட்டப்பட்ட ஓலையின் கயிறு
தனக்கான தூக்குக்கயிறாகிவிடுமோவென்ற பயத்தில்
பறப்பதை மறந்து விட்டிருக்கின்றது.
முன்பு சென்ற இடத்தில் குவிந்திருந்த
தன்னுடல் பாகம் போன்ற எலும்புகள்
அதற்குக் காய்ச்சல் ஏற்படுத்திக் குளிரூட்டுகின்றன.
அவ்வளவு ஒன்றும் அவசரமில்லை என
ஒலையை ஒரு புகைபோக்கியினுள் போடுகிறேன்.
இன்னும் காலக்கெடு மிச்சமிருக்கிறது
இவை இரண்டும் போய்ச்சேர.
புகைபடிந்த ஒட்டடையோடு ஓலையும்
அதன் மாடத்தில் ஒடுங்கிய புறாவும்
அஸ்தமன வெய்யிலை வெறித்தபடி இருக்கின்றன.

டிஸ்கி :- இந்தக் கவிதை மார்ச் 1 - 15, 2015 சொல்வனத்தில் வெளியானது. 

6 கருத்துகள்:

  1. அவசரமில்லை என்றாலும் ..ஒருநாள் செல்லத்தான் வேண்டும் டிடி சகோ :)

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. //இந்தக் கவிதை மார்ச் 1 - 15, 2015 சொல்வனத்தில் வெளியானது. //

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. அவ்வளவு ஒன்றும் அவசரமில்லை என்பது பல அர்த்தங்களைச் சொல்லுகின்றதே சகோதரி!! அந்த தூது எதைப் பொருத்து என்று!! அருமை!

    பாராட்டுகள், வாழ்த்துகள்! அவசரமில்லை....இன்னும் நிறைய எழுத வேண்டும்...காலக்கெடு இருக்கின்றதே !!

    பதிலளிநீக்கு
  5. நன்றி கோபால் சார்

    தூதைப் பற்றி நான் குறிப்பிட்டுள்ளதை மிக அருமையான புரிதலோடு கவனித்துப் பதில் அளித்தமைக்கு நன்றி துளசிதரன் சகோ:) அவசரமில்லைதான். ஆனாலும் நிர்ணயிக்கப்பட்டதுதானே :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...