எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

மால்வாவின் ராணி தாமரைப் பெண்மணி ரூப்மதி

மால்வாவின் ராணி தாமரைப் பெண்மணி ரூப்மதி

 

மால்வா.. பஞ்சாபின் தென்கிழக்கில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள, விந்திய மலைத்தொடருக்கு அப்பால் உள்ள அழகிய நாடு அதன் தலைநகரம் மாண்டு. ரூப்மதி.. பேரைப்போலவே சுந்தரமான நிலவு. சௌந்தர்ய ரூபவதி. மால்வாவின் வசீகரமிக்க பேரழகி, தாமரைப் பெண்மணி. பாஸ் பகதூர். மால்வாவின் மன்னன். ஆண்களில் வசீகரமான  பேரழகன். அந்தத் தாமரைப் பெண்ணின் மனங்கவர்ந்த மணாளன்.

 

பதினாறாம் நூற்றாண்டில் இங்கே புகழ்பெற்ற காதல் ஜோடியாக வாழ்ந்தவர்கள் பாஸ் பகதூரும் ரூப்மதியும். “இங்கே ஒவ்வொரு காதலனும் சர்தார் மற்றும் ஒவ்வொரு காதலியும் சுல்தானா.” என்று அலி சர்தார் ஜாஃப்ரி என்ற கவிஞர் பாஸ்பகதூர் , ரூப்மதிபோல் ஆத்மார்த்தமாகக் காதலிப்பவர்களைப் பற்றித் தனது கவிதைகளில் குறிப்பிடுகிறார். திருமணத்தில் முடிந்தது இவர்கள் இனிய காதல் வாழ்வு. மதங்களைத் தாண்டிய காதலுக்கு இவர்கள் வாழ்வுதான் எடுத்துக்காட்டு. ஆனால் அதன் பின் அக்பரின் தளபதி ஆதம்கானின் படையெடுப்பால் அது பூரணமாய்ச் சிதைந்துபோய் துயரம் சூழ முடிவுக்கும் வந்தது.

 

அக்காலத்தில் நிலத்தின் மேல் மட்டும் மன்னர்கள் போர் நடத்தவில்லை. பெண்களின் உடலின்மேலும் போர் நடத்தினார்கள். மண்ணை வெல்வதுபோல் மன்னர்களுக்குப் பெண்ணை வெல்வதும் ஒரு சாகசமாயிருந்தது.

 

அப்பேர்ப்பட்ட காலகட்டத்திலும் எவ்வளவு வலிமையான அரசனாயிருந்தாலும் ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் எந்த ஆணாலும் அவளைத் தொடக்கூட முடியாது என்பதை நிரூபித்தவள் ரூப்மதி. ’மால்வாவின் பத்மினி’ என்று போற்றப்பட்டவள். நாட்டையும் தன்னையும் காப்பாற்ற இயலாதபோது அந்நியனின் வசப்படலாகாது எனத் தன்னை அழித்துக் காப்பாற்றிக் கொண்டவள் ரூப்மதி.

 

ஒரு ஆடு மேய்க்கும் பெண்ணும் அரசனும் காதல் வயப்பட முடியும் என்றோ அவள் அவன் மனச் சிம்மாசனத்தில் மட்டுமல்ல உண்மையான சிம்மாசனத்திலும் இடம் பிடிக்க முடியும் என்றோ சொல்லமுடியாத காலகட்டம் அது. ஆனாலும் அது நடந்தது, ஏனெனில் வார்த்தைகளால் அளவிட முடியாத அளவு பேரழகையும் கவிதா விலாசத்தையும் பெற்றவள் இராஜபுதனத்தின் ரூப்மதி.

 

1555 முதல் 1562 வரை ஆட்சி செய்த மால்வாவின் கடைசி சுல்தான் மியான் பயேசித் பாஸ் பகதூர். அவருக்கு இசையின் மேல் ஈடுபாடும் உண்டு. ஒருமுறை ராஜா பாஸ் பகதூர் வேட்டையாடியபடி ஒரு வனத்தைக் கடந்தபோது இனிமையான ஒரு பெண் குரலால் கவரப்படுகிறார். அழகான வார்த்தைச் சந்தத்தோடு எடுப்பான குரலும் அந்தப் பாடலைப் பொலிவூட்ட அக்குரலுக்குச் சொந்தக்காரியைப் பார்த்துவிடும் ஆவலில் முன்னேறுகிறார்.

 

பாடல் ஒலி கிட்டே நெருங்குகிறது. பூக்களின் இனிமையான வாசம் ஒன்று அவரைத் தாக்குகிறது. தன் முன்னே இருக்கும் மரத்தின் கிளைகளை மடக்கி எட்டிப் பார்த்த பாஸ் பகதூரின் மூச்சு இன்ப அதிர்ச்சியால் ஒருகணம் நின்றே போனது. அப்படி ஒரு சௌந்தர்ய தேவதையை அவர் தன் வாழ்வின் முன்னும் பின்னும் கூடக் கண்டதில்லை. அவள்தான் ரூப்மதி.

 

அவளின் பேரழகைக் கண்டு முன்னேறிய பாஸ் பகதூர் அவள் எதிரில் நின்றபோது அவளும் அவரின் பேரழகைக் கண்டு நாணித் தலைகுனிந்தாள். பாஸ் பகதூர் அவளைத் தன் ராணியாக அழைத்துச் செல்ல விரும்பியபோது அவள் தன் விருப்பமாகக் கேட்டது ஒரே ஒரு  விஷயம்தான். இருவரும் தத்தம் கேள்விகளைக் கவிதையாகவே பேசிக் கொண்டார்கள். ’தனக்கு மிகவும் பிடித்த ரேவா எனப்படும் நர்மதை நதி எப்போதும் தன் பார்வையில் படும்படி  வசிக்க வேண்டும்’. அவ்வளவுதான். ஏனெனில் நர்மதையின் நதிக்கரையிலும் மால்வாவின் வனப்பகுதியிலும்தான் அவள் இயற்கை எழிலோடு வளர்ந்தாள்.

 

காதல் என்றால் சாதாரணக் காதல் அல்ல. பாஸ் பகதூருக்குப் பார்த்த முதல் பார்வையிலேயே அவள் மேல் வெறித்தனமான காதல்.ரேவா எனப்படும் நர்மதை ஓடுவதோ பல மைல் தொலைவிற்கு அப்பால். மாண்டுவுக்கு அந்த நதியைத் திசை திருப்பவேண்டும்.

 

காதலி கேட்டபின் காதலன் மறுப்பானா என்ன. தன் மனம் கவர்ந்த ரூப்மதிக்காகச் சுல்தான் பாஸ்பகதூர் நர்மதை நதியின் போக்கையே மாற்றி மலையின் மீது ஏறி 20 கிலோமீட்டர்கள் மற்றும் ஆயிரம் அடி உயரமுள்ள மாண்டுவின் வழியாகப் பாயும்படித் திருப்பினார். அதை மால்வாவின் வனப்பகுதிக்குத் திருப்பி ரேவந்த்குந்த் என்ற நீர்த்தேக்கத்தைக் கட்டி  அதன் மேல் மாண்டுவில் ஒரு அரண்மனையை அவளுக்காகக் கட்டினார். அங்கேயிருந்து அவள் தன் காதல் கணவரின் அரண்மனையையும், நர்மதை நதியையும் கண்டு களிக்க முடிந்தது.

 

அவர்கள் இந்து மற்றும் முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.15 வயதில் பாஸ் பகதூரின் மனைவியாகி ஆறு வருடங்கள் இந்த அரசத் தம்பதிகள் இன்புற்று வாழ்ந்தார்கள். கலைகளை ரசிக்கவும் , ரூப்மதியுடன் உல்லாசமாய் இருக்கவுமே சுல்தான் பாஸ் பகதூர் நேரத்தைச் செலவழித்தார். படைகளைக் கட்டமைப்பதிலும் நாட்டின் பாதுகாப்பிலும் போதிய கவனம் செலுத்தவில்லை.

 

முகலாய ஆட்சியில் ஆப்கானிய, துருக்கிப் போட்டிகள் நிலவின. லோதிகள் தோற்கடிக்கப்பட்டனர். சுல்தான் பாஸ் பகதூர் அவரது தந்தை ஷூஜாத் கானுக்குப் பின் தனது அரசை மரபுரிமையாகப் பெற்றார். அதை முகலாயர்களின் இறையாண்மையை மீறி சுதந்திர தேசமாக அறிவித்தார். அதனால் முகலாய மன்னர் அக்பரின் அதிருப்திக்கு ஆளானார்.

 

எல்லா தேசங்களும் முகலாயப் பேரரசுக்குக் கட்டுப்பட்ட போது மால்வா மட்டும் கட்டுப்பட மறுத்தது. 29 மார்ச்,1561 இல் மால்வாவைக் கட்டுக்குள் கொண்டு வர முகலாயப் பேரரசர் அக்பரால் அனுப்பப்பட்ட படைத்தளபதிகள் ஆதம்கானும், பீர் முகம்மது கானும் மால்வாவை நெருங்குகிறார்கள். அங்கே போரை எதிர்பார்த்திராத பாஸ் பகதூர் தனது சிறிய படையுடன் சாரங்க்பூரில் ஆதம்கானை எதிர்கொள்கிறார். அக்பர் சக்கரவர்த்தியின் பெரும்படையின் முன்னே தயாரிப்பு ஏதுமில்லாத சிறுபடை நிற்க முடியுமா என்ன. மிக எளிதாய் விழுந்தது மால்வா. 

 

மாண்டு கோட்டை பிடிபட்டு விட்டது. பாஸ் பகதூரைப் பிடிக்க ஆதம்கானின் படைகள் முன்னேறுகின்றன.  கோட்டை அந்நியரின் பிடியில் விழுந்ததும் நாட்டைக் காப்பாற்ற பாஸ் பகதூரோ அண்டை நாடான சித்தோர்கரிலிருந்து படை உதவி பெற வேண்டி மாண்டுவிலிருந்து தப்பித்து ஓடுகிறார். கஜானாவின் பொக்கிஷங்களை மட்டுமல்ல தனது சொந்தப் பொக்கிஷமான ரூப்மதியையும் வேறு வழியில்லாமல் விட்டுவிட்டுச் செல்கிறார்.

 

நாட்டை ஆக்கிரமித்த ஆதம்கான் கோட்டைக்குள் நுழைகிறார். அங்கே அந்தப்புரத்தில் இருந்த ரூப்மதியின் ஈடு இணையற்ற பேரழகைக் கண்டவருக்குப் பித்தம் தலைக்கேறுகிறது. அந்நியர்கள் படையெடுத்தால் அந்தப்புரப் பெண்கள் அனைவரும் பிணைக்கைதிகள்தான். மேலும் அவர்கள் மேல் எல்லாவிதமான ஆக்கிரமிப்பும் நடைபெறும்.

 

ஏற்கனவே அவளது பேரழகைக் கேள்விப்பட்டே இப்போரில் ஈடுபட்ட முகலாயத் தளபதி ஆதம்கான் அவளது எழிலை நேரில் கண்டு வியந்து அவளை அடைய விரும்புகிறார். அவள் மறுக்கவே வலுக்கட்டாயமாக அவர் அவளை அடைய வரும்போது பூ விற்கும் பெண்ணாக மாறுவேடமிட்டு மறைகிறாள் ரூப்மதி. அவள் தப்பிப்போனதை அறிந்ததும் ஆதம்கான் குதிரைப் படைகளை ஏவி அவளைப் பிடித்து வரும்படிக் கட்டளையிடுகிறார். சாரங்க்பூரிலிருந்து தப்பி ஓடி ஏறத்தாழ இருபது மைல்கள் கடந்து தன் சகோதரர்களிடம் சென்று காப்பாற்றும்படிக் கேட்கிறாள். ஆனால் ஆதம்கானின் படைகள் அவர்களது போராட்டத்தைத் தகர்த்து அவர்களை அழித்து ரூப்மதியைக் கைப்பற்றி மாண்டுவுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

 

எங்கெங்கும் கடுமையான கண்காணிப்பு. தப்பிக்கவே இயலாது. அவள் எவ்வளவோ கெஞ்சியும், மறுத்தும், தடுத்தும், எடுத்துச் சொல்லியும் ஆதம்கான் கேட்காததால் ரூப்மதி துணிந்து கடைசியாக ஒரு முடிவெடுக்கிறாள். மூன்று நாட்களுக்குப் பின் ஆதம்கானைச் சந்திப்பதாகச் சொல்லி அனுப்புகிறாள். மூன்று நாட்களுக்குப் பின் ஆதம்கான் அவளைச் சந்திக்க அவளது அந்தப்புரத்துக்குப் போகும்போது விஷம் கலந்த வைரப்பொடியை உட்கொண்டு இறந்துகிடக்கிறாள். தன் காதல் கணவனான பாஸ் பகதூருக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட உடலின் மேல் அந்நியனின் கை பட்டுவிடக்கூடாது என்ற விசுவாசம் ஆதம்கானை அறைந்தது. அதன்பின் அவள் சாரங்க்பூரில் அடக்கம் செய்யப்பட்டாள்.

 

பீர் முகம்மதுவால் தாக்கப்பட்டு முதலில் காந்தேஷ்க்குத் தப்பி ஓடிய பாஸ் பகதூர், காந்தேஷின் இரண்டாம் மீரான் முபாரக் ஷா, மற்றும் பெராரின் துஃபல் கான் ஆகியோருடன் இணைந்து பீர் முகம்மதுவை எதிர்த்தார். இவர்களோடு இணைந்து போரிட்டு பீர் முகம்மதுவைத் துரத்தி இறுதியாக முகலாயர்களை மால்வாவிலிருந்து வெளியேற்றித் தன் நாட்டைக் கைப்பற்றினார். ஆனால் வெகு விரைவிலேயே பேரரசர் அக்பரின் மற்றொரு பெரிய இராணுவம் அவரைத் தோற்கடித்தது. எனவே 1570 இல் அவர் அக்பரிடம் சரணடைந்தார்.  அதன் பின் அக்பருக்கு சேவை செய்தார். ஆனால் அடாவடி ஆதம்கான் அரசுக்குச் சேரவேண்டிய பொருட்களைப் பதுக்கி வைத்ததாலும் துர் நடவடிக்கைகளாலும் தண்டிக்கப்பட்டு அக்பரால் தூக்கிலிடப்பட்டார்.

 

பாஸ் பகதூரும் இறப்பிற்குப் பின் சாரங்க்பூரிலேயே அடக்கம் செய்யப்பட்டார். நட்சத்திரக் காதலர்களாகப் போற்றப்பட்டனர் பாஸ்பகதூரும், ரூப்மதியும். இன்று மாண்டு ஒரு புனித ஸ்தலமாக போற்றப்படுகிறது மற்றும் மத்திய பிரதேசத்தின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

 

ரூப்மதியின் இக்காதல் செறிந்த வீரக்கதை சேகரிக்கப்பட்டு 1599 இல் பாரசீக மொழியில் எழுதப்பட்டது. 1653 இல் ஒரு கையெழுத்துப் பிரதியாக உருவாக்கப்பட்டது. பல்வேறு கரங்களுக்கு இக்கையெழுத்துப் பிரதி கைமாறி வந்து ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது. “தாமரைப் பெண்மணி, ரூப்மதி, மாண்டுவின் ராணி : 1926 இல் விசுவாசத்தின் விசித்திரமான கதை. ”இதில் பன்னிரெண்டு தோஹாக்கள், பத்து கவிதைகள் மூன்று தொகுப்புகள் உள்ளன. பாலெட்டுகளிலும் ராணி பற்றிய பாடல்கள் பாடப்படுகின்றன.

 

தான் விரும்பியவனைத் தவிரத் தன்னைக் கடத்திச் செல்லும் ஆணுக்குப் போகப்பொருளாக வசப்படலாகாது என்று தைரியமாகத் தன் இதயத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்தவள் ரூப்மதி. எனவே அவள் இன்றும் அன்பின், வீரத்தின், விசுவாசத்தின் அடையாளமாகப் போற்றப்படுகிறாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...