எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

பார்பரிகாவின் சொல்லப்படாத கதை

பார்பரிகாவின் சொல்லப்படாத கதை

குருக்ஷேத்திரப் போர் பதினெட்டு நாட்கள் நடைபெற்றது. ஆனால் அதைத் தன்னால் ஒரே நிமிடத்தில் முடிக்கமுடியும் என்று போர் ஆரம்பிக்கும் முன்பே கூறினார் ஒருவர். எதை வைத்து அப்படிச் சொன்னார், யார் அவர் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன் இடும்பி தம்பதியின் மகன் கடோத்கஜன். இவரது மகன் பார்பரிகா. மிகச் சிறந்த வீரர். சிறந்த சிவபக்தரும் கூட. சிவனிடம் நிறைய வரங்கள் பெற்றவர். மேலும் அவரிடம் மிகச் சிறந்த மூன்று அம்புகள் இருந்தன.

மகாபாரதப்போர் ஆரம்பிக்கும் முன்பு கிருஷ்ணர் சிறந்த வீரர்களிடம் இப்போர் முடிவடைய எத்தனை காலம் ஆகும் எனக் கேட்டார். அதற்கு பீஷ்ம பிதாமகர் இருபது நாட்கள் ஆகுமென்றும், துரோணர் இருபத்தி ஐந்து நாட்களும் கர்ணன் இருபத்தி நான்கு நாட்களும், அர்ஜுனன் இருபத்தி எட்டு  நாட்களும் ஆகுமெனக் கூறினர். அப்போது அங்கே இருந்த பார்பரிகா தன்னால் அப்போரை ஒரே நிமிடத்தில் நிறுத்திவிட முடியும் எனக் கூறினார்.

இதைக் கேட்டு வியப்புற்ற கிருஷ்ணர், ” மாவீரர்களே பல நாட்கள் ஆகுமெனக் கூறுகிறார்கள். ஆனால் பார்பரிகா நீ எப்படி ஒரு நிமிடத்தில் நிறுத்துவாய்?” எனக் கேட்டார்.

“என்னிடம் இருக்கும் இந்த மூன்று அம்புகள் போதும் போரைத் தடுத்து நிறுத்த”’.என்று பார்பரிகா கூறினார். “இதென்ன வேடிக்கை பார்பரிகா. வெறும் மூன்று அம்புகளை வைத்துக்கொண்டா இவ்வளவு சேனைகளையும் அழிப்பாய்.? நம்பும்படி இல்லையே” எனக் கிருஷ்ணர் கூற ”நிஜம்தான் கிருஷ்ணரே. வாருங்கள் உங்களுக்கு அது எப்படி என நிரூபிக்கிறேன்” என்று ஒரு வனத்துக்கு அழைத்துச் சென்றார் பார்பரிகா.

”என்னிடம் இருக்கும் இந்த மூன்று அம்புகளில் முதல் அம்பு அழிக்க வேண்டியதைக் குறிவைக்கும். மூன்றாம் அம்பை எய்தால் அழித்து விடும். அதேபோல் இரண்டாம் அம்பைக் கொண்டு அழிக்கக் கூடாதவைகளைக் குறியிட்டபின் மூன்றாம் அம்பை எய்தால் அது அழிக்கக் கூடாதவைகளை விட்டுவிட்டு மிச்சத்தை எல்லாம் அழித்துவிடும்”. என்றார். ”அதோ அந்த மரத்தின் இலைகளைக் குறிவைக்கிறேன் என்று பார்பரிக்கா கூற அவருக்குத் தெரியாமல் கிருஷ்ணர் ஒரு இலையை எடுத்துத் தன் பாதத்தின் கீழ் மறைத்து வைத்துக் கொண்டார். பார்பரிக்கா குறிவைக்கக் கடைசியாக கிருஷ்ணரின் பாதத்தின் கீழ் இருந்த இலைக்கும் அந்த அம்பு குறிவைக்க வியந்துபோன கிருஷ்ணர் தன் பாதத்தை எடுத்துக் கொண்டார். பார்பரிக்கா எய்த இரண்டாம் அம்பு அனைத்து இலைகளையும் கொய்து ஒரு இடத்தில் குமித்தது.

அவரால் பாரதப் போரை ஒரே நிமிடத்தில் நிறுத்தமுடியும் என்பதை உணர்ந்த கிருஷ்ணர் “ பார்பரிக்கா அப்படியானால் நீ யார்பக்கம் துணையிருந்து போரிடுவாய்” எனக் கேட்டார். பரமேஸ்வரன் பலவீனமானவர்களுக்குத் துணை செய்யவே இந்த அம்புகளைக் கொடுத்துள்ளார். எனவே பாண்டவர்களுக்குத் துணையாகத்தான் போரிடுவேன்.”

“நீ பாண்டவர் பக்கம் வந்துவிட்டால் அந்த அணி பலமாகிவிடுமே. அப்படியானால் நீ திரும்ப பலவீனமான கௌரவர் அணிக்குப் போக நேரிடும். அப்போது அந்த அணி பலமுள்ளதாகிவிடும். இப்படி இரு அணியிலும் நீ மாறிமாறி அம்புகளை எய்துகொண்டிருந்தால் இரு அணியிலும் யாரும் மிஞ்சமாட்டார்கள் உன்னைத் தவிர”

இதைக் கேட்டுக்குழம்பிய பார்பரிகா தன்னிடம் இருக்கும் சக்தியை யாருக்குமே பயன்படுத்த முடியாது என்றால் அது வீண்தானே, மேலும் தன்னிடம் இப்படிப்பட்ட சக்தி இருக்கும்போது யாருக்கும் உதவாமல் இருக்கவும் தன் மனம் ஒப்புக்கொள்ளாதே. அதனால் உயிருடன் இருந்தால்தானே இந்த இடரை எல்லாம் எதிர்கொள்ள நேரும் எனப் பொதுநலனுக்காகத் தன் தலையைத் துண்டித்துக் கொண்டார்.

அதற்குமுன்பு கிருஷ்ணரிடம் பார்பரிக்கா தான் இந்த மகாபாரத யுத்தம் முழுமையையும் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கிணங்க பீமன் கொண்டுபோய் ஒருமலை உச்சியில் பார்பரிக்காவின் தலையை வைத்தார். மகாபாரதப் போர் ஒருவழியாக முடிந்தது. முழுப்போரையும் அதில் கிருஷ்ணரின் செயல்பாடுகளையும் பார்த்திருந்தார் பார்பரிகா.

போரின் வெற்றிக்குத் தாங்கள்தான் காரணம் எனப் பாண்டவர்கள் வாதிட்டுக் கொள்ள மௌனசாட்சியாக இருந்த பார்பரிகாவோ அதன் வெற்றிக்கு கிருஷ்ணரின் சாதுர்யமும் தந்திரமும் ஆலோசனையும்தான் காரணம் எனப் பதில் அளித்தார்.

இவ்வாறு மூன்று அம்புகள் பெற்றிருந்தும் பொது நன்மைக்காகத் தன்னையே தியாகம் செய்த பார்பரிக்காவின் நெஞ்சுரம் போற்றுதலுக்குரியதுதானே குழந்தைகளே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...