ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :- 5
”இந்த டாய்ஸை என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட காட்டணும். இன்னிக்கு ஒரு
நாள் நான் ஸ்கூலுக்கு எடுத்திட்டுப் போறேம்மா “ என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்
ஆதித்யா.
எப்போதும் அவனுடன் எதற்காவது சண்டை போடும் ஆராதனாவும் ”ஆமாம் அம்மா
எடுத்துப்போறோம் ” என்று ஒத்தூதினாள்.
பாட்டரி போட்டால் பறக்கும் சிறிய சைஸ் ரிமோட் பொம்மை விமானம் ஒன்றை
அவனுக்கு வெளிநாட்டில் வசிக்கும் அவனது தாய்மாமா கண்ணன் பரிசளித்திருந்தார்.
சனிக்கிழமை கையில் கிடைத்ததால் இருநாட்கள் அதை ஓட்டி அவனும் ஆராதனாவும் பொழுதைக் கழித்திருந்தார்கள். அந்த விமானத்தின் மீதுள்ள ஆசை இன்னும் வடியாததால் அவர்களுக்குப் பள்ளி செல்லவே விருப்பம் இல்லை.
“அதெல்லாம் கொண்டு போறதில்லை. அங்கே கொண்டுபோனா ஒடைச்சிருவீங்க. ரொம்ப
காஸ்ட்லி அது. வீட்ல வைச்சிட்டு ஸ்கூலுக்குக் கிளம்புங்க “ என்று கோபித்துக்
கொண்டாள் அவர்கள் அம்மா ரம்யா.
“நாங்க ஸ்கூலுக்குப் போகமாட்டோம் “ என்று இருவரும் அடம் பிடிக்கத்
துவங்கினார்கள். பள்ளி வேன் வரும் நேரம் நெருங்கவே அவர்களிடமிருந்து பொம்மை விமானத்தைப்
பறித்து வைத்துவிட்டு தோளில் தட்டி ஸ்கூல் பையை மாட்டி விட்டாள் ரம்யா.
பெரிதாக அழத்துவங்கிய ஆராதனாவைப் பார்த்து ஆதித்யாவுக்கும் கண்கள்
கலங்கியது. அம்மாவைக் கோபமாகப் பார்த்து இருவரும் சொன்னதையே திரும்பத் திரும்பச்
சொன்னார்கள். “ நாங்க ஸ்கூலுக்குப் போமாட்டோம்” “ டாய்ஸை குடுத்தாத்தான் போவோம். “
”ஸ்கூலுக்கு கொண்டுபோனா மிஸ் திட்ட மாட்டாங்களா. ? ஏன் கொண்டு வந்தீங்கன்னு
வாங்கி வைச்சிருவாங்க “ என்றாள் ரம்யா.
“மிஸ்ஸுக்கு தெரியாம இண்டர்வெல்ல விளையாடுவோம். பேக்ல வைச்சிக்குவேன்மா “
என்று அனத்தினான் ஆதித்யா. கூடவே அனத்தினாள் ஆராதனா.
”ரெட்டைவாலு ரெண்டும் சேர்ந்திட்டுது பாரு. சந்தர்ப்பவாத கூட்டணி “ என்று கோபத்தின்
உச்சியில் அவர்களை இரண்டு அடி போடு போட அவர்கள் அம்மா ரம்யா நெருங்கினாள். கடைக்கு
முடி வெட்டச் சென்றிருந்த ஆராவமுதன் இதையெல்லாம் பார்த்தவாறே வந்து “விடும்மா நான்
பார்த்துக்குறேன் “ என்று சொல்லிவிட்டு ஆதித்யாவிடமும் ஆராதனாவிடமும் கண்ணைக்
காட்டினார்.
”குட்டீஸ். உங்களுக்காகத் தாத்தா என்ன வாங்கி வந்திருக்கிறேன் பாருங்க “
என்று சொல்லியபடி தன் கையில் இருந்த அவல் பொரி உருண்டையைக் கொடுத்தார். இருவருக்கும்
மிகப்பிடித்த அந்த வெல்ல அவல்பொரி உருண்டையை வாங்கிக் கொண்டார்கள்.
கரகரவென்று வெல்லச் சுவையுடன் இருக்கும் அந்தப் பொரி உருண்டை வாரச்
சந்தைக்குச் சென்றால்தான் கிடைக்கும். தன் பேரன் பேத்திக்கு இயற்கை உணவுகளை
அறிமுகப்படுத்தி அவற்றின் சத்துக்களைக் கூறுவது அவர் வழக்கம்.
”இந்த அவல் உருண்டையைப் பார்த்ததும் எனக்கு குசேலன் ஞாபகம் வருது.” என்று
சொல்லி விட்டு இருவரின் கைகளையும் பிடித்தவாறு இருபுறமும் பார்த்து ரோட்டைக்
கிராஸ் செய்தார் ஆராவமுதன்.
“ஆமா தாத்தா அந்த குருகுலத்துல கிருஷ்ணாவோட ஃப்ரெண்டு தானே” “பின்னாடி
கிருஷ்ணாவுக்கு அவல் கொடுத்தாரே. அதுக்கு கிருஷ்ணா குசேலர் வீட்டை மாளிகையாக்கி
நிறைய செல்வம் கொடுத்தாரே” என்று கேட்டான்
ஆதித்யா.
“குட் நல்லா ஞாபகம் வைச்சிருக்கியேடா கண்ணு . அதே கிருஷ்ணாவோட
ஃப்ரெண்டுதான். ” என்று சொல்லியபடி அவன் முதுகில் ஒரு ஷொட்டுக் கொடுத்தார்.
“அவங்க ரெண்டு பேரும் குருகுலத்துல படிக்கும்போது ராஜா மகன் மாதிரியும்,
சாதாரணப் பிரஜையோட பையன் மாதிரியும் பழகல. ஏன்னா அந்தக்காலத்துல குருகுல அமைப்பு
அப்பிடி.
குருகுலத்துல ராஜாவானாலும் சரி மத்த பசங்களானாலும் சரி அங்கேயே தங்கணும்.
அங்கே கொடுக்கப்படுற எளிய உணவைத்தான் சாப்பிடணும். குரு சொல்ற வேலையெல்லாம்
செய்யணும். இதுல அரசனும் இல்லை, ஆண்டியும் இல்லை. எல்லாரும் சமம்.
இதே மாதிரிதான் மத்த எல்லா குருகுலத்துலயும் ராஜா மகன், மந்திரி மகன்,
தளபதி மகன், சாதாரண பிரஜையோட மகன் அப்பிடின்னு எல்லாம் வித்யாசம் பார்க்காம
எல்லாரையும் குரு சமமாகவே நடத்துவார். குருகுல வாசம் முடிகிறவரைக்கும் எல்லாரும்
மாணவர்கள் மட்டுமே. குருவோட வயல்ல தண்ணீர் பாய்ச்சணும்.மடை கட்டணும், மடை
மாற்றணும். மேய்ச்சலுக்கு ஆவினங்களை கூட்டிப் போகணும். யக்ஞம், யாகம், ஹோமம்
நடத்துனா குருவுக்கு சமித்துகள் கொண்டுவந்து தரணும். நான் ராஜா மகன்னு சொல்லிட்டு
எதையும் செய்யாம இருக்கக் கூடாது. ”
”குருகுலவாசம் முடிஞ்சுபோன பின்னாடிதான் அவங்களுக்குக் கிடைக்கும் வாரிசு
உரிமைப்படி ராஜாவாகவோ, அல்லது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப மந்திரியாகவோ,
தளபதியாவோ செயல்படுவாங்க. ”
லேசாக ஏதோ புரிவது போலிருந்தது ஆதித்யாவுக்கு. பஸ் ஸ்டாப்பில் அவர்கள்
மூவரும் நின்றிருந்தார்கள். இன்னொரு பள்ளியின் வேன் கடந்து சென்றது. அந்தப்
பள்ளியின் சீருடைகள் அரக்கு வெள்ளை வண்ணத்தில் இருந்தன.
”உங்க ஸ்கூல் வேனாக்கும்னு நினைச்சேண்டா. ஆனா
யூனிஃபார்ம் வேற. உங்க ஸ்கூல் யூனிபார்ம் மெருன் & வொயிட். பாரு எல்லா ஸ்கூல்லயும் யூனிபார்ம் ஃபாலோ பண்ணுறாங்க.
படிக்கிற பிள்ளைகளுக்கு நடுவுல வித்யாசம்
வந்திடக்கூடாதுன்னு யூனிஃபார்ம் அணிவதை கட்டாயமா வைச்சிருக்காங்க. இல்லாட்டி
பணக்காரப் பிள்ளைங்க படாடோபமா ட்ரெஸ் போட வசதிக்குறைவான பிள்ளைகள் அதைப் பார்த்து
ஏங்கக் கூடாதுல்ல, அதுனாலதான். “ என்றார்.
“தாத்தா, கரெக்ட் தாத்தா . இப்ப நாங்க அந்த பொம்மை விமானத்தைக் கொண்டு
போனாலும் அதை வாங்க முடியாத மத்த பசங்க அதை நினைச்சு ஏங்குவாங்கள்ல. நீங்க சொன்னது
சரி தாத்தா. பள்ளியில் அனைவரும் சமம்தான். அத வீட்லயே விளையாடிக்கிறோம் “ என்றான்.
ஆராதனா தன் கரிய பெரிய விழிகளால் தாத்தாவை ஏக்கத்துடன் பார்த்தாள். அண்ணன்
சொன்னது சரிதான் என்றாலும் தன் தோழிகளிடம் அதைக் காட்ட முடியவில்லையே என்ற ஏக்கம்
மின்னியது அவள் விழிகளில்
அப்போது தாத்தா சொன்னார். ”உடையது விளம்பேல் அப்பிடின்னு ஔவைப்பாட்டி
சொல்லி இருக்காங்க” ஆத்திச்சூடியில். ”அப்பிடின்னா உன்கிட்ட இருக்கிற காமிச்சு
பெருமைப் பட்டுக்கொள்ள நினைக்கக்கூடாது. அது தவறு.”
ஔவைப்பாட்டி சொன்னாங்க என்றவுடன் லேசாக சமாதானமான ஆராதனாவுக்கும் ஆதித்யாவுக்கும்
வெல்லப் பாகு போக வாட்டர் பாட்டிலிலிருந்து தண்ணீர் ஊற்றிக் கையைக் கழுவிவிட்டார்
தாத்தா. அப்போது ஸ்கூல் வேன் வர ஏற்றிவிட்டுத் திரும்பினார்.
இனி மாலை வந்து விளையாடிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இருக்கைகளில்
அமர்ந்தார்கள் ஆதித்யாவும் ஆராதனாவும்.
5. உடையது விளம்பேல்
உன்னுடைய பொருளை அல்லது கல்வி முதலிய சிறப்பை நீயே புகழ்ந்து பேசவேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)