எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 28 மார்ச், 2013

புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.

செப்.1984 இல் தேன்மழையில் ஒரு ஊனம் தேவை என்ற தலைப்பிலும் 
நவம்.1984 புதிய பார்வையில் வேலை கிடைச்சிட்டுது என்ற தலைப்பிலும் 
வெளியான சிறுகதை இது. 


அன்றையப் பொழுது ரொம்ப உற்சாகமாய் விடிவதாய்த் தெரிந்தது ரவிக்கு. 
இன்றைக்கு இருபத்தைந்தாவது இண்டர்வியூ. எம்ப்ளாய்மெண்ட் 
எக்ஸ்சேஞ்ச் மூலம் வந்தது.
 
நாலரைக்கே விழிப்பு வந்து விட்டது. எழுந்துபோய் பல் விளக்கிவிட்டு 
உள்ளே வந்தபோது ’முணுக், முணுக்’ கித்த சிம்னியில் அம்மா 
அடுப்புப் பற்ற வைக்க முயற்சிப்பது தெரிந்தது.
 
--- “ ஏம்பா ..! இப்பவே ஏந்திருச்சிட்டே..! கொஞ்சம் இரு 
டீ போட்டுத் தாரேன்..! “ என்றூ கூறிப் பின் வீட்டுக்குச் சென்று 
100 மில்லி பால் வாங்கி வந்தாள் பத்துப் பேருக்கு டீ கலக்க..! 
 
பௌர்ணமி இரவில் நட்சத்திரமே வானில் இல்லாததுபோல் 
அம்மாவும் இருந்தாள் மழுமழுவென்று, நகையணியாத பௌர்ணமி மாதிரி.!

 
 
ஒவ்வொன்றாக மூலைக்கடை சேட்டிடம் வைத்தது சீக்குக்கு, 
படிப்புக்கு, அப்பா போனபின் சாப்பாட்டுக்கு என்று பணம் 
வாங்கியாகி விட்டதே!. அந்த வீட்டின் ஒவ்வொரு 
மூலையிலும் வறுமை தன் வீறாப்பை வளைய விட்டிருந்தது.
 
பேசாமல் வந்து திண்ணையில் அமர்ந்தபோது இரண்டாவது 
அக்கா வாசல் தெளிக்க வாளியில் நீரோடு வருவது தெரிந்தது. 
முதல் அக்கா எஸ்.எஸ்.எல்.சியை முடித்துவிட்டு வீட்டில் 
இருந்தாள். இப்போது ஷார்ட் ஹாண்ட், டைப்ரைட்டிங் கற்றுக் 
கொள்ள அடுத்த தெருவில் உள்ள இன்ஸ்ட்டிடியூட்டுக்குச் 
செல்ல தன்னிடமிருந்த ஒரே ஒரு சேலையை, கிழிசலை 
மடிப்புக்குள்ளே மறைத்து மறைத்துக் கட்டிப் பார்த்தாள். 
ஒரு கிழிசலை மறைத்தால் இன்னொருபுறம் பெரிதான கிழிசல் 
ஒட்டுத்தையலோடு பல்லிளித்தது துண்டுவிழும் பட்ஜெட் மாதிரி.!
 
’இன்னைக்கு அந்த இண்டர்வியூவுக்குப் போகணும்.’ 
அம்மா காப்பி கொடுத்தாள். புகையடித்தது. பேசாமல் வாங்கிக் 
குடித்தான். அம்மா மேல் கோபப்பட முடியாது. பாவம்.. 
அவள் என்ன செய்வாள்..? 
 
 
சுவரில் மாட்டியிருந்த ரசம் போன கண்ணாடியில் 
சோப்புப் போடாமல் வெறும் ப்ளேடு வைத்து ஷேவ் பண்ணிக் 
கொண்டான். பத்து ஒட்டுக் குடித்தனக்காரர்களின் அவசரம், 
ஒரு பாத்ரூம்தான். ஐந்து நிமிஷக் குளியல். தலையணைக்கடியில் 
இரவு மடித்து வைத்த பிரவுன் கலர் பாண்டும், சட்டையும் 
எடுத்துப் போட்டுக் கொண்டான். சட்டைக் காலரின் பின்புறம் 
கிழிசல் இருந்தது. பரவாயில்லை ..காலர் மறைத்துவிடும். 
 
அம்மா என்னமோ வேலையே கிடைத்துவிட்டாற் போலவும், 
மகன் வேலைக்குப் போவது போலவும் சந்தோஷப்பட்டாள். 
பக்கத்து வீட்டு இட்லிக்காரப் பாக்கியத்திடம் சொல்லி நாலு 
இட்டலி கணக்கில் வாங்கி வந்து இவனைக் கரிசனத்துடன் 
உண்ணச் சொன்னாள். தொண்டையில் எதுவோ இவனுக்கு 
அடைத்தது. தண்ணீரை ஊற்றி விழுங்கிவிட்டு எழுந்து விட்டான். 
 
“நாலு எடம் போற பிள்ள.. ரெண்டு இட்டலி கூடத் 
திங்கமாட்டேங்கிறானே..” -- அம்மா. சர்டிஃபிகேட்டுகளைச் 
சரிபார்த்தான். ” இரு,இரு” என்று அம்மா கூறிவிட்டு 
வாசலுக்கு ஓடிப்போய்ப் பார்த்துவிட்டு இவனை வரச் சொன்னாள். 
ஒரு சுமங்கலிப் பெண் குழந்தையுடன் வந்து கொண்டிருக்க 
“ நல்ல சகுனம் “ என்றாள் அம்மா. 
 
 மணி எட்டுத்தான் ஆகியிருந்தது. அம்மா கொடுத்த ஒரு ரூபாய் 
அழுக்கு நிறத்தில் நைந்து விடுவது போல சட்டைப் பாக்கெட்டில் 
இருந்தது. ‘நடைராஜா’ சர்வீசில் போனால் ஒரு ரூபாய் 
மிச்சம் என நினைத்தான். 
 
 
தன் அப்பாவினுடைய பழைய வாட்சை - ஸீக்கோ- தன் 
கையில் கட்டிக் கொண்டு வந்திருந்தான். அம்மாதான் கட்டாயப்படுத்தி 
அதைக் கட்டிக்கொண்டு போகச் சொன்னாள். வேகமாக வந்த 
ஸ்கூட்டர்காரன் எதிரில் வந்த காருக்குப் பயந்து வண்டியைத் திருப்ப, 
ப்ளாட்பாரத்தில் நடந்து கொண்டிருந்த இவனை வசமாய் மோதிவிட்டுச் 
செல்ல, பக்கவாட்டுச் சுவரில் வாட்ச் மோத, இவன் தன் சிராய்ப்புக் 
காயங்களைப் பொருட்படுத்தாமல், செயின் அறுந்து ஸ்கிராட்ச்சிட்டுப் 
போன அந்த வாட்சை ஒரு வேதனையான வாஞ்சையுடன் பார்த்துக் 
கண் கலங்கினான். நல்லவேளை..! வாட்ச் ஓடிக் கொண்டிருந்தது.
சர்டிஃபிகேட்டுக்களைப் பொறுக்கிக் கொண்டு விடுவிடென ஓடி வந்தான். 
முழங்கை எரிச்சல் எடுத்தது. சதை பேர்ந்துபோய்..
 
 
அனந்தப் பத்மராம் ஹோட்டல். ஐந்து மாடிக்கட்டிடம். வாசலில் 
வாட்ச்மேன். காரில் வருபவரைத் தவிர வேறு யாரைப் பார்த்தாலும் 
அலட்சியம் அவனுக்கு. அரைமணிநேரம் வாக்குவாதம். ரவிக்கும் 
அவனுக்கும். முடிவில் ஒரு ரூபாய் கைமாறியது. மனம் ஆயாசப்பட்டது 
ரவிக்கு. ஒரு ஓரத்தில் இருந்த அறைக்கு வழி காண்பித்துப் போகச் 
சொன்னான் வாட்ச்மேன். சுற்றியலைந்து ஒரு வழியாய்க் கண்டுபிடித்துப் 
போய்ச் சேருகையில் கெடிகாரத்தில் மணி 11.10. அறை வாசலில் 
நின்ற பியூன் உள்ளே விடமாட்டேன் என்றன். 
 
வாட்ச் செயின் பாண்ட் பாக்கெட்டிலிருந்து வெளியே தெரிய, 
“ அது என்ன” என்று ப்யூம் கேட்டு அதை எடுத்துப் பார்த்துத் தன் 
கையில் வைத்துக் கொண்டு, “ பரவாயில்லை, தம்பி!” நீ உள்ளே 
போ! நான் உனக்கு வழி பண்றேன்..” 
 
உள்ளே பத்துப் பேராவது இருப்பார்கள். வாட்சைத் திருப்பிக் 
கேட்கவும் தெம்பில்லை. ஏதாவது சொல்லப் போய் அவன் பாடு 
வெளியே அனுப்பி விட்டால்..? 
அம்மா காண்பித்த அந்த சுமங்கலிப் பெண் குழந்தையோடு 
அவன் கண்முன் வந்து போனாள். நினைத்துக் கொண்டான், 
‘கட்டாயம் வேலை கிடைச்சிடும்’ என்று..!. வேலை கிடைத்தால் 
சுவாமிமலைக்கு ஒருதரம் வந்து போவதாக வேண்டிக் கொண்டான். 
 
மதியம் இடைவேளி, எட்டுப் பேர் சாப்பிடச் சென்றார்கள். 
ஒன்பதாகவதாக டிப்டாப்பாக உடையணிந்திருந்த ஒருவனை அவன் 
நண்பன் போலும் இன்னொரு சர்வர் வந்து அழைத்துச் சென்றான். 
அந்த அறையில் இவன்தான் பாக்கி. பசியெடுத்தது. காபி 
குடிக்கக்கூட காசு இல்லை. காலையில் அடிபட்டதில் கால்கள் 
வலித்தன. ஏகமாய்ச் சோர்ந்திருந்தான். 
 
‘லஞ்ச்’ முடிந்து இண்டர்வியூ தொடர்ந்தது. இவனை எல்லாரும் 
ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். எவன் எங்கே கவனித்தான். 
வீட்டு ஞாபகம்தான். வேலை கிடைக்கணும் என்ற வேண்டுதல்தான். 
 
கடைசியாக நாலு மணிக்கு உள்ளே அழைத்தார்கள். மூன்று பேர் 
அமர்ந்திருந்தார்கள். உள்ளே சென்றவன் ஏ.சி.யின் மிதப்பில் 
பாதிக்கப்பட்டான். சர்டிஃபிகேட்டுக்களை மேஜையில் வைத்துவிட்டுக் 
கையைக்கட்டிக் கொண்டு நிற்க பூசணிக்காய் மாதிரி கழுத்தே 
இல்லாமல் இருந்த மூன்றாவது ஆள் கத்தினார்.,” ஏன் மேன் ! 
இன்னிக்குக் கூட ட்ரெஸ் ஒழுங்காப் போட்டு வரத் தெரியாது..? 
எவ்வளவு டர்ட்டி.” பணிவுடன் காலையில் நடந்ததைத் தெளிவான 
ஆங்கிலத்தில் விளக்க சர்வர் வேலைக்கு வந்திருந்த அவனிடம் 
இளம் முதலாளியான ராம், சிலுக்கையும், ஜீனத்தையும் 
ஒப்பீடு செய்யச் சொன்னான். 
 
தாளமுடியாத எரிச்சல் வந்தது. வாயில் வந்த வசவுகளைச் 
சமாதி தோண்டி மூடிவிட்டு.. அசட்டுப் புன்னகைத்தான். 
பூசணிக்காய் பக்கத்திலிருந்த கொத்தவரங்காய் மனிதன், 
“ கோயில் அதிகாரி வெங்கடாசலம் கொலை செய்யப்பட்டதில் 
எதிர்க்கட்சியின் சதி இருக்கிறதென்று நினைக்கிறாயா.? 
இவன் படீரென்று வெடித்தான். 
 
“ஏன்யா.. நீங்கள்ளாம் சர்வருக்கு இண்டர்வியூ எடுக்கிறீங்களா.? 
இல்ல அரசியலையும் சினிமாவையும் ஆராய்றீங்களா..? 
உங்க மட்டமான ரசனையை எங்ககிட்டயும் எதிர்பாக்குறீங்க. 
எல்லாம் கண் துடைப்பு. பிறகு மந்திரி சிபாரிசு, நடிகர் சிபாரிசுல 
வந்தவனை வேலைக்குப் போடுறது.அப்புறம் எதுக்கு மத்தவனை 
இண்டர்வியூவுக்குக் கூப்பிடணும். அறிவு கெட்ட முண்டங்கள்..” 
அடுத்த நிமிடம் ப்யூனின் திருக்கையால் வெளியே எறியபட்டான். 
மெல்ல எழுந்து அடுத்த தெருவுக்கு வந்தால் வேலையில்லாப் 
பட்டதாரிகள் ஊர்வலம். 
 
 
“ வேலை கேட்பது இளைஞர் உரிமை; வேலை கொடுப்பது 
அரசின் கடமை.” 
 
“இல்லை  இல்லை  ; என்னா இல்லை ; வேலை இல்லை” 
 
“ நேர்மையான வழியினால பயனே இல்லை.. போராட்டம் 
ஒன்றுதான் சிறந்த வழி..” கூட்டத்தில் இவனும் ஐக்கியமானான். 
கூட்டம் அடுத்த தெருவில் திரும்ப, கோஷம் போட்டுத் தொண்டை 
வத்திய இவன் மெல்ல மயங்கி விழுந்தான். கூட்டம் போய்ச் சேர்ந்தது. 
 
குடித்துவிட்டு லாரி ஓட்டு வந்த டிரைவருக்கு இவன் கிடப்பது 
தெரியவில்லை.’வி’ மாதிரிப் படுத்திருந்த இவனின் கால்களில் 
ஒன்று சட்னியாகிப் போனது. 
 
“ம்மா..!” - கத்தல் - மயக்கம்- இரத்தவெள்ளம் - ஆஸ்பத்திரி - 
வீடு - இடதுகால் பாதியாகிவிட்டது. 
 
இரண்டு மாதம் கழித்து கையில் ஊன்றுகோலுடன், அம்மா 
போயிட்டு வரேன்..” அம்மா கண்கலங்குகிறாள். இவன் நடையில் 
பெருமிதம். டக்.. டக்.. டக்... 
 
ஊனமுற்றோர் வேலை செய்ய அரசு அமைத்துத் தந்த கூண்டு. 
இவன் ஒருவருக்கு ஃபோன் நம்பரைச் சுழற்றிக் கொடுத்து, 
காசை வாங்கிப் போட்டுவிட்டுக் கட்டைகளைச் சுவற்றில் 
சாய்த்து வைத்து விட்டு நாற்காலியில் அமருகின்றான். 
 
” எனக்கும் வேலை கிடைச்சுட்டது” என்ற பெருமிதம் முகத்தில்..!

டிஸ்கி:- ஒரு ஊனம் தேவை என்று செப் . 1984 தேன் மழையிலும் , வேலை கிடைச்சிட்டுது என்று நவம்பர் 84’ புதிய பார்வையிலும்  வெளிவந்தது .

7 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. தேன்மழை ஆசிரியர் பெயரென்ன தோழர்

    பதிலளிநீக்கு
  3. தேன்மழை ஆசிரியர் மற்றும் பதிப்பாளர்கள் பெயரென்ன தோழர்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...