எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 13 மார்ச், 2013

இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்..

இராஜாளி:-
*********************
ஒரு இராஜாளி
வேட்டையாடப்பட்டது..
இதனை இருட்டுக்கள்
பயமுறுத்தவில்லை.
கைவிடவில்லை.
மஞ்சள் போர்வை போர்த்திய
பகல் போலிகளே
சாம்பலாக்கிப் போட்டன.

கண்ணைக் கூசி
மினுக்கும் சூரியனைத்
தேடி ஓடித்
தஞ்சம் புகுவதாய்
நினைத்துக்
கருகிப் போனது.

எத்தனையோ விஷ அம்புகள்..
எத்தனை யெத்தனை
வேடன்கள் பார்த்திருக்கும் ..
கேவலம் ஒரு
சிறுவன் விட்ட கல்லா
அதைச் சேதமாக்கியது..?

இனிமேல் அந்த
இராஜாளிக்குச்
சிலைகள் செதுக்கப்படும். .
உருவங்கள் பொறித்த
முத்திரைகள் வரும்.
அனைத்திதழ்களும்
அச்சுப் பொறித்து
பொய் விவரமெழுதி
காசுத் தொப்பையை
குலுக்கும். நிரப்பும்.
அந்த இராஜாளி
என்ன செய்தது..?
அதன் இராஜதந்திரமென்ன..?
என அரசியல்வாதிகள்
வாய் கிழியப் பேசுவார்கள்.
அதன் சிதைவுக்குக்
கண்டனம் கூறுவார்கள்.

மலர் வளையம் வைத்து
அஞ்சலி செலுத்திக்
கட்சிக்குக் கட்சி
பெயர் சொல்லிப்
பிரார்த்தனை நடத்தி
'ஜன கன மண' வுடன்
முடிப்பார்கள்..

ஓராண்டு கழித்து நினைவுநாள்
நூறாண்டு கழித்து
பிளாட்டின விழா
அவ்வளவுதான்
முடிந்தததன் சகாப்தம்..

இனி
எத்தனை வல்லூறுகளோ
அந்த நீல வானில்
வட்டமிட்டு மேகம்
குதறி ஆட்டமிடும்.

கண்ட இடத்திலும்
இரையெடுத்து விகாரமாய்
வயிறு நிறைத்து
ஓய்வெடுக்கும்.
எல்லாருக்கும்
இராஜாளி நினைவு வரும்.
வாய்க்கு வாய்
அனுதாபங்கள்தான்
உதிர்க்கப்படும்.
பழம்பெருமை
பேசப்படும்.

அந்த இராஜாளி வழி
நடக்க எந்தப்
பருந்தால் முடியும்..?
எதையும் குதறாமல்
தானும் குதறுபடாமல்
காக்க எந்தக் கருடனால்
முடியும்..?
யார் தயார்..?

டிஸ்கி:- இந்தக் கவிதை  டிசம்பர் 1984 லீவ்ஸ் ஆஃப் ஐவியில் வெளியானது.


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...