இன்று காலை காரைக்குடியில் நடைபெற்ற ஏகன் அநேகன் தொடர் நிகழ்வில் நாச்சி ரெஸிடென்சியில் "அந்தாதியும் அனுபூதியும்" என்ற தலைப்பில் பேசினேன். அதற்காக எடுத்த குறிப்புகளை இங்கே பதிவிட்டேன் . நன்றி
அந்தாதியும் அனுபூதியும்
ஏகன் அநேகன் குழுவினருக்கும் நாச்சி ரெஸிடென்ஸிக்கும், நாச்சம்மை அண்ணாமலை அவர்களுக்கும் மற்றுமுள்ள ஆன்றோருக்கும் சான்றோருக்கும் பக்தப் பெருமக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
1.அவள் அருளாலே அவள்தாள் வணங்கி ஆரம்பிக்கின்றேன். ஆதியந்தம் அற்றவனின் இடப்பாகம் கொண்டவள், அவனின் சரிபாதி ஆனவள் அம்மை. எனவே அவளும் ஆதி அந்தம் அற்றவள். அதனால் அவள் அந்தாதிக்கு உரியவள்.
2.புவி ஏழையும் பூத்தவள் , புவனம் பதினான்கையும் காத்தவள், அண்டமெல்லா பூத்தவள், புவி அடங்கக் காத்தவள். அபிராமிப் பட்டர்போன்ற மெய்ஞானிகள் கண்ட இப்பேருண்மையை இன்றைய விஞ்ஞானமும் ஒப்புக் கொள்கிறது. பிக் பாங்க் தியரி என்று.
ஒன்றிலிருந்து வெடித்துப் பலவாய்ப் பெருகி ஒன்றிலேயே அடங்குதல் என்பதை. ஒன்றாய் இருந்து பலவாய் விரிந்து ஒன்றுள் ஒடுங்கும் உலகை உபநிஷதங்கள் மட்டுமல்ல அபிராமி அந்தாதியும் அழகாய் விளக்குகின்றது.
3.சோழநாட்டின் திருக்கடையூரில் உள்ள அமிர்த கடேசுவரர் கோயில் அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. அவ்வூரில் அபிராம பட்டர் என்பவர் இருந்தார். அவர் அமிர்தகடேசுவரர் கோயிலில் உள்ள அபிராமி அம்மையைத் தாயாக் கருதிக் குழந்தையைப் போன்ற வாஞ்சையோடு இருந்தார். அவ்வப்போது அவர் தன்னை மறந்து கடவுள் திருக்காட்சியில் ஆழ்ந்து விடுவது வழக்கம்.
“சின்னஞ்சிறு பெண்போலே. சிற்றாடை இடை உடுத்தி சிவகங்கைக் குளத்தருக்கே சீர்தூர்க்கை சிரித்து நிற்பாள், என்ற பாடலில் பித்தனுக்கு நிகராக நர்த்தனம் ஆடிடுவாள்.என்று முடிப்பார் சீர்காழி கோவிந்தராஜன். அந்தப் பாடலில் வரும் பித்தனைப் போல இந்த அபிராமிப் பட்டரும் அம்மையிடம் கொண்ட பக்தியில் பித்துக் கொண்டிருந்தார்.
அப்படி இருக்கையில் சரபோசி மன்னர் ஒருநாள் அக்கோயிலுக்கு வருகை தந்தார். வந்ததோ மன்னர். ஆனால் இவரோ அம்மையிடம் கொண்ட ப்ரேமையால் வந்தவர் மன்னர் என்பதைக் கூடக் கவனிக்காமல் அவருக்கு உரிய மரியாதையைத் தராமல் இருந்தார். இதைப் பார்த்த சரபோசி மகராஜா இவரைச் சோதிக்க எண்ணினார்.
”நாளை என்ன திதி” என்று அவர் கேட்டார். நாள் கிழமை தெரியாமல் அம்மையின் பக்தியில் ஆழ்ந்திருந்த பட்டரோ அம்மையின் பூரண நிலவு ஒத்த முகத்தை மனக்கண்ணில் கண்டு ”நாளை பௌர்ணமி!” என்று கூறிவிட்டார். ஆனால் உள்ளபடி மறுநாள் அமாவாசை.
இதைக் கேட்டு அங்கே இருந்தவர்கள் பதறினார்கள். ஆனால் பட்டரோ துளிக்கூடப் பதறவில்லை.என்னைச் சொல்ல வைத்தவள் அவள். அவளே அனைத்திற்கும் காரணி என நம்பினார்.
”அப்படியானால் நாளைக்கு வானில் பௌர்ணமி உதிக்க வேண்டும்” என மன்னன் கூற அபிராமபட்டர் ஒப்புக் கொள்கிறார். அவரைக் கைது செய்து சிறையில் அடைக்கும்படிக் கூறுகிறார் சரபோசி மன்னர்.
அக்கினிக் குண்டம் ஒன்றை வளர்த்து அதன்மேல் ஒரு உறியைவைத்து நூறு கயிறுகளால் கட்டச்செய்தார் மன்னர் அந்த உறியில் அபிராமிப் பட்டரை அமரவைத்தார். அப்போது அவர் பாடியதுதான் இந்த அந்தாதி.
அபிராமியின் தாள், தவம், தாய்மை, ஒளி ஆகியவற்றைச் சிறப்பித்துப் பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாட்டு முடிந்ததும் ஒவ்வொரு கயிறாகப் பணியாளர்களை அறுக்கச் சொன்னார் மன்னர். அவர்களும் அவ்விதமே செய்துவர கிட்டத்தட்ட 78 கயிறுகள் – புரிகள் அறுக்கப்பட்டு விட்டன. 79 ஆவது பாடலைப் பாடும்போதுதான் அம்மை அவருக்குக் காட்சி தருகிறாள்.
அவளிடம் தன் குறையைச் சொல்லி அவர் முறையிட அவளோ தனது தாடங்கம் – காது குண்டலம் – காதணி ஒன்றைத் தருகிறாள். அதை வாங்கி அபிராம பட்டர் மறுநாள் வானை நோக்கி விட்டெறிகிறார். அந்தக் குண்டலத்தின் ஒளி நிலவொளியைப் போல விகசித்து வான மண்டலத்தை நிறைக்கிறது.
பார்த்தவர்கள் கண்ணெல்லாம் பூத்துவிட நிலவு அங்கே ஒளிவிட்டது அபிராம பட்டரின் அயராத நம்பிக்கையால். அபிராமியின் அருளாட்சியால். அந்தாதியின் அனுபூதியால்.
சரபோசி மன்னர் உடனே அபிராமப் பட்டரிடம் மன்னிப்புக் கேட்டாராம்.
4.இந்த அபிராமி அந்தாதி என்னை ஆட்கொண்டு தந்த அனுபூதியையும் இங்கே தர விழைகிறேன்.
ஆதியும் அந்தமுமில்லாமல் இருப்பவள் அபிராமி. அந்த ஆதி அந்தத்துக்குள்ளேயே நம்மை நான் எனது என்ற ஆதி அந்தம் அற்றுக் கரைப்பவள் அபிராமி. இதுதான் அந்தாதி தந்த முதல் அனுபூதி.
5.நமக்கு அவர் 79 ஆவது பாடலைப் பாடும்போதுதான் அம்மை காட்சி அளிப்பதாகத் தோன்றினாலும் அவரின் உள்ளமெல்லாம் ஒளியாய் நிரம்பி இருப்பவள் அபிராமியே எனப் புரிந்து கொள்ள முடியும். அதனாலேயே அவர் அந்த ஒளியையே நிலவாய்க் கண்டு பௌர்ணமி எனச் சொல்கிறார்.
விழி என்றால் ஒளி. அந்த விழி நம்மை நோக்கினால் அது அருள். பேரருள்.அவர் கண்ட அப்பேரருட் காட்சியை ஊனக் கண் உள்ள நாமெல்லாம் காணத்தான் ஞானக் கண் படைத்த அவர் இந்த அந்தாதியினைப் பாடி இருக்கிறார்.
ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதிலும் மேவி உறைபவள் அவள். அஞ்ஞான இருள் அகற்றி அது தரும் ஞான ஒளியிலேயே நாமும் அமிராமிப் பட்டரையும் அபிராமியையும் பௌர்ணமிப் பிரகாசமாய் உணர்கிறோம்.
இதில் ஒவ்வொரு பாடலையுமே ப்ரத்தியேகமாகக் கூறலாம். முதலில் விநாயகர் காப்பு அடுத்து 100 பாடல்கள், பின் நூற்பயன் என 102 பாடல்கள் கொண்டது அபிராமி அந்தாதி. திதி நித்ய ஆராதனா என்று ஸ்ரீ சக்கரத்தில் நவாவர்ண க்ரமப்படி உபாசித்தார். ஒவ்வொரு திதிக்கும் ஒரு தேவதை உண்டு. அதனால் அங்கே அந்தக் குண்டலம் நிலவாக ஒளிவிட்டது..
எடுத்துக்காட்டாய் “மணியே மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே “என்ற பாடலைச் சொல்லலாம். அநேகப் பாடல்களில் அவள் உதிக்கின்ற செங்கதிர், நிலவு, ஞாயிறு, ஒளி பேரொளி. நமது விழிகளில் அந்தப் பேரொளி பட்டொளி வீசுகிறது. இது ஒளி அனுபூதி. இவ்வாறு நமக்கும் ஒளிகாட்டி வழிகாட்டியவர் அபிராமி பட்டர்.
6.அபிராமி என்றால் இலக்குமி என்றொரு அர்த்தம் உண்டு. செல்வத் திருமகள். இங்கோ அவள் துர்க்கை, லெக்ஷ்மி, சரஸ்வதியாகவும் காட்சி அளிக்கிறாள்.
“தனம் தரும். கடைக்கண்களே”
தனம் தரும் - செல்வம் அளிக்கும் இலக்குமியாக, கல்வி தரும் –கல்வி தரும் சரஸ்வதியாக, ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் – என்றும் நம்பிக்கையையும் வீரத்தையும் அளிக்கும் துர்க்கையாகக் காட்சி அளிக்கிறாள். நல்லன எல்லாம் தருபவளாகக் காட்சி அளிக்கிறாள். முப்பெரும் தேவியாக மட்டுமல்ல. பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவருக்கும் அன்னையாகவும் இறைவனுக்கு மூத்தவளாகவும் மூவா முகுந்தற்கும் இளையவளாகவும் , மாற்று இல்லாதவளாகவும். எல்லாப் பரிமாணத்திலும் ஜொலிக்கிறாள். அன்னை.
7.இங்கே அந்தாதியில் வரும் ஆரம்ப முடிவு வரிகளையும் கவனிக்க வேண்டும். எழுத்து, அசை, சீர், அல்லது அடி இவற்றில் ஒன்று ஒவ்வொரு பாடலும் முடியும் போது அடுத்த பாடலின் தொடக்கமாக அமையும் . முதல் வரி விநாயக வணக்கத்தில் ”தாரமர் கொன்றையும்” என ஆரம்பித்து, நூற்பயனில் ” தீங்கில்லையே” என்பதில் முடியும். அதேபோல் முதல் பாடல் ”உதிக்கின்ற” என்று ஆரம்பிக்கும் உதிக்கின்ற செங்கதிர். உச்சித்திலகம் உணர்வுடையோர். 100 வது பாடல் இப்படி முடியும் “ ”உதிக்கின்றனவே” – நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே” என்று. இது அந்தாதி அமைப்பில் சிறப்பு.
காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியும் திருவாசகம், திருமந்திரம், திருவாய்மொழி, நான்மணி மாலை, இரட்டை மணிமாலை, மும்மணிக்கோவை, கலம்பகம் ஆகியனவற்றிலும் பதினோராம் திருமுறையும் அந்தாதி வடிவில் அமைந்துள்ளன.
8. அருணகிரி நாதரைப் போலச் சொல்லற. சும்மாயிரு. என்றிருந்தவர் அபிராமி பட்டர். சும்மா எப்போது இருக்க முடியும் ஒன்று முதுமையை நெருங்கும்போது இருக்க முடியும். ( நமக்கு எதுக்கு வம்பு என்று பலர் முதுமையில் மௌனமாகி விடுகிறார்கள் ) அல்லது இறைமையை நெருங்கும்போது சும்மா இருக்க முடியும். இங்கே இறைவியை நெருங்கியதால் அபிராமி பட்டர் சும்மா இருந்தார். அதை நாமும் கற்றுக்கொண்டு சும்மா இருந்தால் நமக்கும் அபிராமியின் அனுபூதி கிடைத்துவிடும். இது மௌன அனுபூதி.
9.ஆத்தாளை என்ற சொல்வழக்கு செட்டிநாட்டுக்கே உரியது. இங்கே அபிராமி பட்டர் ஆத்தாளைத் தொழுதால் வாழ்வில் தீங்கே ஏற்படாது என்கிறார். இதனாலும் இது மனதுக்கு நெருக்கமானது.
10.பொதுவாகவே இயற்கையை உபாசிப்பவர்கள் நாம். இரவு, நிலவு, சூரியன், பூமி, பிரபஞ்சத்தத்துவம், ஆற்றல், இவற்றோடு அன்னையை இந்த உலகில் பிறந்த எல்லா உயிராகவும் கருதுவது இதில் தெள்ளென உள்ளது. மான் கண், தாமரைக் கண், தாமரை முகம், தாமரைப் பாதம், அவளேதான் பூலோகம், பதினான்கு லோகம், அண்டம் எல்லமே.
11.அமிர்தகடேசுவரர் மார்க்கண்டேயனை யமனிடம் இருந்து காத்தது போல் அவரின் சரிபாதியான இவளும் தன் பக்தர்களைக் காக்கிறாள்.”இழைக்கும் வினை வழியே அடுங்காலன் எனை நடுங்க அழைக்கும்பொழுது அஞ்சல் என்பாய் “ இன்னும் கூற்றுவனைத் துரத்தும் சில பாடல்களும் உண்டு. இம்மைக்கும் மறுமைக்கும் வணங்க வேண்டிய தேவி அபிராமி.
அவள் பாதார விந்தங்களை, தாள்களைத்தான் பல்வேறுபாடல்களில் பணிந்து பணிந்து பாடுகிறார். முதலில் தாள் சரணம். அதில் தன்னை அர்ப்பணித்தல், தன் பாவம் கர்மவினை போக்க வேண்டுதல், தன்னை அவளோடு சேர்த்துக் கொண்டு பிறவி அறுக்க வேண்டுதல் என அவர் மருகி உருகிப் பாடுகிறார்.
12.எல்லாவற்றுக்கும், எல்லாக் குறைகளும் நீங்க இதில் பாடல்கள் உண்டு. ஞானம், வித்தை, கல்வி, செல்வம், தெய்வத்துணை, மோட்சம் கிட்ட, வசீகரிக்க, வசப்படுத்த, பேரின்பம், மகிழ்ச்சி, புண்ணியம், வைராக்கியம், தலைமைப் பொறுப்பு, அழகு, அறிவு, மங்கலம், உடல் மன நலம், நாவன்மை, அரசபதவி, அஷ்ட சித்தி, நிலபுலன், அணிகலன், பயிர், பொன், ஏன் இந்திர பதவி கிட்டக்கூடப் பாடல் உண்டு.
குடும்பம் சிறக்க, நல்ல குழந்தைகளைப் பெற, மெய்யுணர்வு தோன்ற, தமிழில் புலமை பெற, கலைகளில் சிறக்க, உறுதியான மனம் பெற, விதியை வெல்ல, கணவன் மனைவி ஒற்றுமைக்கு, பிரிந்தவர் கூட, ஆண்களின் நீண்ட ஆயுளுக்கு, சிறந்த குரு கிடைக்க, உயர்ந்த பிறவி கிடைக்க, திருமணம் செய்ய, அன்பால் பிணைக்க என்றும் பாடல்கள் உண்டு.
13.அது மட்டும் போதுமா.. பாவம் போக, மனக்கவலை தீர , துறவறம் மேற்கொள்ள, மரணத்தை வெல்ல, பிறவா வரம் கிடைக்க, சஞ்சலம் நீங்க, நோய்கள் தீர, அகால மரணம் நேராதிருக்க, பெண்ணாசை அகல, பகை நீங்க, தோஷம் நீங்க, மோகம் நீங்க, மரண பயம் நீங்க, வறுமை நீங்க, மனநோய் அகல, வஞ்சகரது செயலில் இருந்து விடுபட, சிற்றினம் சேராதிருக்க என்றெல்லாம் பாடல்கள் இயற்றி இருக்கிறார் அபிராமி பட்டர். இதெல்லாம் உறியில் இருந்து புரி அறுபட்டு அக்கினியில் விழப்போகும் சமயத்திலும் இந்த ஞாலம் உய்யப் பாடியது.
14. தேர்வில் வெற்றி பெற 50 ஆவது அந்தாதி –நாயகி நான்முகி நாராயணி, ஹயக்ரீவர் மட்டுமில்லை. அபிராமியும் தேர்வுகளில் வெற்றி பெற வைக்கக் கூடிய கியாதி உடையவள்.
15.நோய்கள் தீர 24 ஆவது பாடல் – மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே , அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப் பிணியே, பிணிக்குப் பெரு மருந்தே, அமரர் பெரு விருந்தே, பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே. – தன்வந்திரி போல அபிராமியும்.
16.தாயின் துணை கிடைக்க, ஆயுள் கூட 33 ஆவது பாடல். இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க அழைக்கும்பொழுது வந்து அஞ்சல் என்பாய், அத்தர் சித்தமெல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே! உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே“ இது சிவனின் ருத்ர மந்திரம்போல் உயிர் காக்கக் கூடியது” நமஸ்தேஸ்து பகவான் விஸ்வேஸ்வராய”
17.குடும்பம் சிறக்க 44 ஆவது பாடல். “ தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.
18.நல்ல குழந்தைகளை பெற 59 ஆவது பாடல். தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவ நெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன். ஒற்றை நீள் சிலையும் அஞ்சு அம்பும் இக்கு அலராக நின்றாய்: அறியார் எனினும் பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.”
19.மக்கட் செல்வம் கிடைக்க 65 ஆவது பாடல். “ககனமும் வானும் புவனமும் காண விற்காமனங்கம் தகனம்முன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம்முகனும் முந்நான்கு, இரு மூன்று எனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயதன்றோ வல்லி நீ செய்த வல்லபமே.
20.சகல செல்வமும் கிடைக்க 69 ஆவது பாடல். “ தனம்தரும் கல்வி தரும்”
21. கணவன் மனைவி ஒற்றுமைக்கு 76 ஆவது பாடல் “குறிதேன் மனத்தில் நின் கோலம் எல்லாம்:நின் குறிப்பு அறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை மெய்யில் பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே.
22.துணையுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கையையும் ஒளியாகும் எனச் சொன்ன பாடல்.78 ஆவதுபாடல், இது ஆண்களின் நீண்ட ஆயுளுக்கும் பாட வேண்டியது. :செப்பும் கனக கலசமும் போலும் திருமுலை மேல் அப்பும் களப அபிராமவல்லி, அணிதரளக் கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும் துப்பும் நிலவும் எழுதி வைத்தேன் என் துணை விழிக்கே.
23.சிற்றினம் சேராதிருக்க. 79 வது பாடல். இதில்தான் அருட்காட்சி கிடைத்தது அவருக்கு. ” விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு, வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப் பழிக்கே உழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக் குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்னகூட்டு இனியே.”
24. திருமணம் செய்ய 99 ஆவது பாடல். அம்மை அப்பனுடன் குயிலாய் இருக்கும் மதுரை, மயிலாய் இருக்கும் இமயம் தாமரை மீது அன்னம்போல் இருக்கும் கயிலாயம் என்ற பாடல் வெகு அழகு. இது . ” சடையாய் எனுமால் “ என்று திருஞான சம்பந்தர் அருளிய திருமண தேவாரப் பதிகம் போல் மேலும் அவர் பாடிய மூன்றாம் திருமுறையின் 78 ஆம் பதிகம். “ நீறுவரி ஆடரவோடாமை மன என்புநிரை புண்பர் இடபம்” திருவேதிக்குடி பதிகம் போல் சிறப்பானது.
25.அபிராமிப் பட்டரின் பித்து நிலையைக் கூறும் 94 ஆவது பாடலும் அன்பால் பிணைக்கும் 100 வது பாடலும் வெகு அழகு.. “விரும்பித்தொழும் அடியார் தம் உடல் நடுங்க மெய் சிலிர்க்க ஆனந்தமடைந்து அறிவிழந்து மொழி தடுமாறி விழியில் நீர் கசிய புளகாங்கிதம் அடைந்து தான் நிற்பதாகக் கூறுகிறார். அதே போல் அன்பால் பிணைக்கும் நூறாவது பாடல் ” குழையத்தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி கழையப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும் விழையப் பொருதிறம் வேரியம் பாணமும் வெண்ணகையும் உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே. இது வெகு சிறப்பு.
26.இதில் மூன்று, நான்கு பாடல்கள் வித்யாசம். வேறு சமயம் எதுவும் இல்லை. அபிராமியே ஆறு சமயங்களுக்கும் தலைவி. அப்படி இருக்கும்போது பிற சமயங்களைப் பின்பற்றுவது பெரிய மலையைத் தடி கொண்டு அடிப்பது போன்றது என்று சொன்ன 63 ஆவது பாடல்.
அதே போல் பலியிடும் தெய்வங்களின் பால் அன்பு பூணேன். உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் என்று கூறிய 64 ஆம் பாடல்.
தன்மேல் வில்லெறிந்த காமனை நெருப்பினால் அழித்து உருவமறச் செய்த சிவனுக்கு அறுமுகமும் பன்னிரெண்டு கையும் வேலும் கொண்ட அழகிய வேலனை மகனாகப் பெற்றுக் கொடுத்தாயே வல்லியே நீ செய்த வல்லபம்தான் என்னே எனப் புகழும் 65 ஆவது பாடல்.
ஆணவம் கன்மம் மாயை எல்லாவற்றையும் உடைத்தனை என்று கூறிய 27 ஆம் பாடல். வஞ்சப் பிறவியை, நெஞ்சத்து அழுக்கை எல்லாம் அருட்புனலால் துடைத்தனை என்று கூறியது சிறப்பு. இவை நான்கும் வித்யாசமாக என்னைக் கவர்ந்தன.
27.எதை சிந்திக்கிறீர்களோ அதை நோக்கியே போகின்றீர்கள். அதுவாகவே ஆகின்றீர்கள். அதுபோல் அபிராமியையே சிந்தித்து அபிராமியில் கலந்தவர் அபிராமிப் பட்டர். ஒரு குழந்தைக்காகத் தாய் ஒளியானாள். அதனால் பட்டரின் உள்ளத்தில் உடனடியாய்க் கருவாகி உருவானதுதான் அபிராமி அந்தாதி.
என் வாழ்வில் சித்தியும் அவள், சக்தியும் அவள். நமக்கும் தெளிவு அருள் எல்லாம் தந்து மாயை தெருள் எல்லாம் நீக்கி, உள்ளும் புறமும், அகமும் புறமும் அல்லும் பகலும் நினைவிலும் கனவிலும் ஆட்சிசெய்கிறாள் அன்னை அபிராமி. நம்மை மட்டுமல்ல மும்மூர்த்திகளையும் கூட ஆளும் அன்னை அபிராமியைத் தொழுவார்க்கு என்றைக்கும் வாழ்வில் ஒருதீங்கும் நிகழாது.
அன்னை, தந்தை, குழந்தைகள், கணவர், செல்வம், ஆயுள் , இறையருள் எல்லாமே எனக்கு அபிராமியின் அந்தாதி தந்த அனுபூதிகளே. நன்றி அனைவர்க்கும்.!!!
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!