இந்திரனின் துடுக்குத்தனம்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள் . அதனால் கிட்டிய அமிர்தத்தைக் குடித்து தேவர்கள் பலம் பெற்றார்கள். ஆனால் ஏற்கனவே அழகாபுரியில் அனைத்து ஐஸ்வர்யங்களோடும் இருந்த தேவர்கள் அமிர்தம் அருந்த வேண்டிய அவசியம் என்ன.? எல்லாவற்றுக்கும் இந்திரனின் துடுக்குத்தனம்தான் காரணம். அதைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
தேவலோகம் தங்கநிற வெளிச்சத்தால் ஜொலித்துக் கொண்டிருந்தது. தன் யானையின் மேல் இந்திரபுரியின் இராஜபாட்டைகளில் உலாவந்து கொண்டிருந்தான் இந்திரன். அமரர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் கந்தர்வர்களும் கானமிசைக்க தேவலோக கன்னியர் நடனமாடி பூத்தூவியபடி முன் வந்தனர்.
தான் தேவலோகத்துக்கே அதிபதி என்ற செருக்கு இந்திரன் முகத்தில் ஒளிவிட்டது. யாரையும் லட்சியம் செய்யாமல் அவன் யானையில் பவனி வந்து கொண்டிருந்தான். அப்போது துர்வாச முனிவர் அங்கே வந்தார். சிவபெருமானிடம் தான் பெற்று வந்த மாலையினை தேவேந்திரன் என்பதனால் அவனுக்குக் கொடுத்து வாழ்த்தினார். ஆனால் தேவேந்திரனோ அகம்பாவமாக அம்மாலையின் அருமை பெருமை உணராமல் தன் யானையிடம் கொடுத்தான். அது மாலையை வாங்கித் தன் காலில் போட்டு மிதித்தது.
அவ்வளவுதான் வந்ததே கோபம் துர்வாசருக்கு. உடனே கொடுத்துவிட்டார் பிடிசாபம். “பதவி செல்வம் இருக்கும் ஆணவத்திலும் இந்திராபுரிக்கே அதிபதி என்ற ஆணவத்திலும் நான் கொடுத்த மாலையை மதிக்கவில்லை. என்னை அவமானப்படுத்திவிட்டாய். அதனால் உன் செல்வம், பதவி, செருக்கு எல்லாம் அழிந்து போகும். இந்த தேவலோகமே நாசமாகும். நீ அனைத்துமிழந்து அவதிப்படுவாய். “ என்று சாபமிட்டார்.
அன்று முதல் தேவர்களின் தன்னம்பிக்கை குறைந்தது. எதைக் கண்டாலும் பயந்தார்கள். அவர்கள் நிம்மதி பறிபோனது. அசுரர்களின் கை ஓங்கியது. தேவர்களை விரட்டத் துவங்கினார்கள். தங்கள் சுகங்களை இழந்த தேவர்கள் அவதியுற்றனர். எங்கும் அவதி எதிலும் அவதி ஏற்பட்டது. உடனே இந்திரனை அழைத்துக் கொண்டு பிரம்மாவிடம் ஓடி தங்களைக் காக்க வேண்டினர்.
அவர் அனைவரையும் அழைத்துச் சென்று சிவனிடம் சரணடைந்தார். சிவன் பிரம்மாவையும் , இந்திரனையும் மற்ற தேவர்களையும் கூட்டிக்கொண்டு மஹாவிஷ்ணுவை சந்தித்து ஆலோசித்தார்.
அப்போது மஹாவிஷ்ணு சொன்னார், “ பாற்கடலைக் கடைந்தால் அமிர்தம் வரும் அதை உண்டால் அமரத்தன்மை கிடைக்கும், தேவர்கள் இழந்த பலத்தைப் பெறலாம் “ பாற்கடலைக் கடையக் கூடத் தேவர்கள் தாங்கள் பலமற்று இருப்பதால் அசுரர்களின் துணையை நாடினர்.
மந்தாரமலையை மத்தாகவும் சிவனின் வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் கொண்டு தலைப்புறம் அசுரர்களும் வால்புறம் தேவர்களும் கடையத் தொடங்கினார்கள். கடையக் கடைய மந்தாரமலை பாற்கடலில் மூழ்கத் தொடங்கியது. உடனே மஹாவிஷ்ணு ஆமை வடிவெடுத்து மந்தாரமலையைத் தாங்கினார்.
பல மாதங்கள் கடந்தது. கடைந்து கடைந்து சலிக்கத் தொடங்கினர் தேவர்கள். வாசுகிப் பாம்பும் வலி தாங்க முடியாமல் துன்புற்றது. அந்நேரம் பாற்கடலில் இருந்து ஆலம் என்னும் விஷம் மேலெழும்பியது. அத்தோடு வாசுகிப் பாம்பு வலியோடு கக்கிய காலம் என்னும் விஷமும் கலந்து ஆலகாலம் என்னும் விஷமாகக் கறுப்பாகக் கிளம்பியது.
தேவர்களும் அசுரர்களும் விஷத்தின் வீர்யத்தைக் கண்டு பயந்து ஓடினார்கள். மஹாவிஷ்ணுவோ ஆமையாக இருக்கிறார். எனவே சிவன் தேவ அசுரர்களைக் காக்க அந்த ஆலகாலத்தை எடுத்து விழுங்கினார், ஐயோ அது உள்ளே சென்றால் இவ்வுலகமே அழிந்துவிடும் என்று பார்வதி சிவனின் கண்டத்தைப் பிடிக்க அங்கேயே நீலநிறத்தில் தங்கியது விஷம்.
அதன் பின் தேவர்கள் தொடர்ந்து பாற்கடலைக் கடைய சந்திரன், வாருணி, உச்சைஸ்ரவஸ், ஐராவதம், காமதேனு, பாரிஜாதம், கற்பகவிருட்சம், கௌஸ்துபமணி, குடை, தோடு, அப்சரஸ், சங்கு, லெக்ஷ்மி, ஜ்யேஷ்டாதேவி, அதன்பின் அமிர்தகலசம் ஏந்திய தன்வந்திரி ஆகியோர் கிடைத்தார்கள்.
இந்த அமிர்தம் எடுக்கும் வரையில் ஒற்றுமையாயிருந்த அசுரர் கூட்டமும் தேவர் கூட்டமும் அமிர்தம் கிடைத்ததும் அலைமோதியது. உடனே ஆமையாயிருந்த மஹாவிஷ்ணு வெளிப்பட்டு மோகினி உருவம் எடுத்தார். அமிர்தத்தைத் தான் பகிர்ந்து தருவதாகக் கூற மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் சம்மதித்தனர்.
ஆனால் அசுரர்கள் அமரத்தன்மை அடைந்தால் இன்னும் தீமை, கொடுமை செய்வார்கள் என்று எண்ணி மோகினி தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் வழங்கினாள். அதனால் அமரர்கள் அமரத்தன்மை அடைந்து தைரியம் பெற்றார்கள். இவ்வாறு தேவர்களின் இழந்த பலத்தை மீட்டுத் தந்தது அமிர்தம்.
இவ்வாறு முனிவரை அவமதித்த இந்திரனின் துடுக்குத்தனத்தாலேதான் தேவர்கள் பலம் இழக்க நேரிட்டது. அதனால் பெரியோர், சிறியோர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனக் கருதாமல் அனைவரையும் மதித்து நடக்கவேண்டும் என்பதை இந்திரனின் கதை நமக்குப் போதிக்கிறதுதானே குழந்தைகளே.
டிஸ்கி 1 :- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 26. 7. 2019 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.
டிஸ்கி 1 :- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 26. 7. 2019 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.
வாழ்த்துகள் சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!