எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

ஜெண்டர் அஜெண்டா.. ஆண் பெண் சமத்துவம் உண்டாகிவிட்டதா.

ஜெண்டர் அஜெண்டா.. ஆண் பெண் சமத்துவம் உண்டாகிவிட்டதா.

இந்த மகளிர் தினத்தன்று புதுக்கோட்டையில் உள்ள கற்பகவிநாயகர் ட்ரஸ்ட் குழுமத்தைச் சேர்ந்த  ஜெ ஜெ கல்லூரிகளில் ( ஆர்ட்ஸ் & சயின்ஸ், எஜுகேஷன், நர்சிங், டீச்சர் ட்ரெயினிங் )உரையாற்ற அழைப்பு வந்தது. கிட்டத்தட்ட 1200 மாணவிகள், 150 ஆசிரியைகள் கொண்ட கூட்டத்தில் எனது கருத்துக்கள் பலவற்றையும் வளரும் தலைமுறைப் பெண்களிடம் பகிர்ந்து கொண்டேன்.


ஜெ ஜெ கலை அறிவியல் கல்லூரி 1993 இல் புதுக்கோட்டையில்  சரோஜா ஆச்சி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் அறங்காவலர் கவிதா. தாளாளர் சுப்பிரமணியன் இருவரும் சிறப்பாக செயல்பட்டு அந்த ஏரியாவின் தேவைக்கேற்ப கல்லூரிகளை இருபது ஆண்டுகளில்  விரிவுபடுத்தியுள்ளார்கள். பாவை விளக்குப் போல ஒரு தீபத்திலிருந்து பல உயிர் தீபங்களை, ஒளிவீசும் மகளிர் சக்திகளை கல்வி வழங்கியதன் மூலம் உருவாக்கியவர்களின் சேவை பெரிது.

பெண் ஜனாதிபதி,  துணை ஜனாதிபதி,  பெண் பிரதமர், பெண் முதல்வர், பெண் ஆளுநர் என பல உயர்ந்த பொறுப்புக்களைப் பெண்கள் வகித்தாலும் இன்னும் 33%  நமக்குக் கிடைக்கவில்லை. நமது பாராளுமன்றத்திலேயே 534 எம்பிக்களில் 49 பேர்தான் பெண்கள். கிட்டத்தட்ட 9 % தான் மகளிர் பங்களிப்பு இருக்கும். ஆனால்  ஜெ ஜெ ஆர்ட்ஸ் & சயின்ஸ் கல்லூரியில் 50 %, ஜெ ஜே காலேஜ் ஆஃப் எஜுகேஷனில் 60 %, ஜெ ஜெ காலேஜ் ஆஃப் நர்சிங்கில் 95 சதவிகிதம் என  மகளிர் சக்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது கற்பக விநாயகர் ட்ரஸ்ட். இது மட்டுமல்ல. சக்தி பாதி சிவன் பாதி என்பதுபோல 50:50 கவிதாவும் சுப்பிரமணியன் அவர்களும் இதன் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள்.  

என் கல்லூரிக் காலத்தில் எனக்குக் கிடைத்த வாய்ப்புக்களையும் இன்றைய பெண்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களையும் ஒப்பு நோக்குகிறேன். நிச்சயம் பெண்களுக்கான உலகம் விரிவடைந்திருக்கிறது. உடை, கல்வி, வேலை எல்லாவற்றிலும் நிறைய சுதந்திரத்தைப் பெண்கள் அடைந்திருக்கிறார்கள். இது ஒரு தொடர் போராட்டம்தான். இதன் மூல முடிச்சைப் பார்ப்போமானால் நாம் ஃப்ரெஞ்சுப் புரட்சிக்குப் போக வேண்டும்.

1979 இல் ஜூன் 14 இல் ப்ரெஞ்சுப் புரட்சியின் போது லூயி பிலிப்பின் ஆட்சியில் பெண்கள் கிளர்ந்தெழுந்து அரசனின் அரண்மனையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். கொட்டும் மழையில்  அவர்களோடு துணையாக அங்கே இருந்த ஆண்மக்களும் பங்கேற்றார்கள். வாயிலில் இரண்டு மெய்க்காப்பாளர்கள் தடுக்க கோபமடைந்த பெண்கள் அவர்களைத் தாக்கிக்  கொன்றார்கள்.

மன்னன் லூயி ஃபிலிப்பிடம் சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம்  ஆகியன தரக் கோரினார்கள்.  இந்த வருடம் கூட ஜெண்டர் அஜெண்டா முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது. ஆண்களுக்கு சமமான ஊதியம், பணி நேரம்,  சமமாக மதிக்கப்படுதல், அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம் பெறுதல் வேண்டிய கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத மன்னன் முடி துறந்தான்.

பின் 1858  மார்ச் 8 இல் ப்ருஸ்ஸியன் மன்னன் லூயி ப்ளாங்க் இந்தக் கோரிக்கைகளில் சிலவற்றை நிறைவேற்றி அரசவை ஆலோசனைக் குழுக்களில் பெண்களை இடம் பெற வைத்தான்.  இது ஜெர்மனி க்ரீசிலும் பரவி அங்கிருந்த பெண்களும் தங்கள் உரிமைகளுக்காகப் போராட ஆரம்பித்தனர். அமெரிக்காவிலும் தியோடர் ரூஸ்வெல்ட் ஆட்சியில் பெண்கள் போராட்டம் நடத்தினர். ரஷ்யாவிலும் ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து  மக்களும் பெண்களும் போராட்டம் நடத்தினர்.  1911 இல்  க்ளாரா தலைமையில் மகளிர் மாநாடு கூடியது. அது மகளிருக்கான அமைப்பைத் தோற்றுவித்து ஆண்டுதோறும் மகளிருக்கான தினம் கொண்டாட முடிவு செய்தது.

ஆனால் முதலில் ஃபிப்ரவரி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட்ட இது பின்னர் தங்களுக்கு முதலில் உரிமை வழங்கப்பட்ட தினமான மார்ச் 8 ஐ நினைவு கூறும் விதமாக மார்ச் 8 இல் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனாலும் பெண் முன்னேற்றம், பெண் கல்வி,  பெண் சுதந்திரம் பற்றிப் பார்த்தோமானால் பலவித சங்கடங்களுக்கு மத்தியில் நன்மைகள் விளைந்திருந்தாலும் அதை நாம் சரிவரப் பயன்படுத்துகிறோமா எனப் பார்க்க வேண்டும். அம்பேத்கார், பெரியார் என்ற இருவரையும் குறிப்பிடாமல் பெண் விடுதலை, பெண் கல்வி, பெண் சமத்துவம் என்பது இந்தியாவில் சாத்தியப்பட்டிருக்காது. இவர்களின் பணி அரும்பணி. பெரியார் , “ ஒரு ஆண் படித்தால் அவன் மட்டுமே படித்தவனாவான். ஆனால் ஒரு பெண் படித்தால் அந்தக் குடும்பமே கல்வி பெறும். எனவே பெண் கல்வி முக்கியம் “ என்றார்.

பொதுவாக நாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பார்த்தாலும் இரண்டு விதமாக பெண்கள் நடத்தப்பட்டிருக்கிறார்கள். யாக்யவல்கர் என்ற முனிவருடன் சரிசமமாக மைத்ரேயி என்ற பெண் வாதத்தில் சமர் புரிந்துள்ளார். ஆனால் அதன் பின் வந்த காலகட்டங்களில் கூட பெண் ஏதோ ஒளித்து வைக்கப்பட வேண்டிய உரிமைப் பொருளாக நிலவறைக்குள் கூட அடைக்கப்பட்டிருக்கிறாள்.

கி மு கி பி யில் பார்த்தோமானால் கூட க்ளியோபாட்ரா போன்ற பெண்கள் அரசாட்சி செய்துள்ளார்கள். ஜோன் ஆஃப் ஆர்க், ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீர மங்கைகள் இருந்திருக்கிறார்கள். ஆனால் சமூக நிலையில் பெண்கள் பணயப் பொருளாகவும் பிணைப் பொருளாகவுமே பார்க்கப்பட்டிருக்கிறாள். ராஜாக்கள் தாம் ஜெயிக்க முடியாத ராஜாக்களோடு பெண் கொடுத்து சம்பந்தம் செய்து சமரசம் செய்து கொள்வார்கள். தமது நாட்டைக் காப்பாற்ற பெண்ணைப் பலி கொடுப்பார்கள்.

சேரர் சோழர் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் ஆநிரைகளைக் கவர்தல் என்ற ஒன்று உண்டு. உடனே அடுத்த நாட்டுக்காரர்கள் ஆநிரைகளைக் கவர்ந்த நாட்டவரின் கோட்டைகளை முற்றுகை இடுவார்கள். உடனே யுத்தம் தொடங்கும். இந்த யுத்தம் ஒருவாறாக முடிவுக்கு வரும்போது தோற்ற அரசனின் கோட்டை உடைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு அங்கே இருக்கும் அரண்மனைப் பெண்கள், அந்தப்புரப் பெண்கள் , பணிப்பெண்கள், ஜெயித்த ராஜாவின் அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு போகப்பொருளாக ஆக்கப்படுவார்கள்.  நாட்டில் இருக்கும் மற்ற பெண்கள் சிறைபிடிக்கப்பட்டு அடிமைகளாக ஆக்கப்படுவார்கள்.

இதை விரும்பாத அரசகுலப் பெண்கள் மொத்தமாக தீவளர்த்து தீக்குளிப்பார்கள். அரசர்களுக்கு மண்ணை ஆள்வது போல பெண்ணை, அவள் உடலை ஆள்வது ஒரு சாகசமான ஒன்று. தான் எந்த விதத்திலும் வெற்றி கொள்ள முடியாத ஒரு பெண்ணை ,மாசுபடுத்த முடியாத ஒரு பெண்ணைத் தன் அந்தப்புர நாயகியாக்கி அவளைத் தனக்குக் கட்டுப்பட்டவளாக  ,அடிமையாக, போகப்பொருளாக மட்டுமே ஆக்குவது அவர்களின் தீரமுடியாத ஆவலாய் இருந்திருக்கிறது.

இந்த நூற்றாண்டுகளிலும் எந்த யுத்தமானாலும் சரி, ஆஃப்கன் யுத்தம்,  இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, பாகிஸ்தான் பங்களாதேஷ் பிரிவினை , சீனா,  இலங்கை என்று எந்த யுத்தத்தை எடுத்துக் கொண்டாலும்  பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்வது, சீரழிப்பது என்பதுதான் முடிவாய் இருந்திருக்கிறது.

பிறப்பிலிருந்தே இந்தக் கொடுமை பெண் இனத்துக்கு மட்டும்தான். நகரமாயிருந்தால் ( ஸ்கேனில் பெண் எனத் தெரிந்தால் கருஅழிப்பு ) பெண் கருக்கொலை, கிராமமாய் இருந்தால்  ( கள்ளிப்பால் , கருவை முள் ) பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைத் தொழிலாளிகள், பெண் கல்வி மறுப்பு, பால்ய விவாகம்,  சதி/உடன் கட்டை ஏறுதல், பெண் குழந்தைத் தொழிலாளிகள், பெண் பாலியல் தொழிலாளிகள்,  பெண் கொத்தடிமைகள், குடும்ப வன்முறைகள், பணியிடப் பிரச்சனைகள் எனப் பெண்ணுக்கு நேரும் கொடுமைகள் அநேகம்.

க்ளாஸ் சீலிங் எனப்படும் உத்யோக, சம்பள விகிதாசாரம் ஆண்பெண் இருவருக்குமே வேறுபடுதல்,  பிள்ளைப்பேறு, குடும்பத்தைக் கவனிப்பதால் காரியரில் தடைபாடு எனப் பெண்ணுக்கு நேரும் இடர்ப்பாடுகள் அதிகம்.

பாலியல் பலாத்காரம் என்றால் உடனே டெல்லி தாமினி, புனிதா, அருணாஷெண்பக் ஆகியோர்தான் நினைவில் வருகிறார்கள். வார்டு பாயினால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட அருணா ஷெண்பக் மும்பை கெம் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகளாகக் கோமாவில் இருக்கிறார்.

மும்பையில் கிட்டத்தட்ட  30 ஆண்டுகளுக்கு முன்பே எலக்ட்ரிக் ட்ரெயினில்  பயணம் செய்யும் மகளிர் மீது அமில வீச்சு நடைபெற்றது என போலீஸ் காவலை அதிகப்படுத்தினார்கள். ஆண்களுக்கு வேலை கிடைக்காமல் இருக்கும்போது பெண்கள் வேலைக்குச் சென்று தன்னுடைய காலில் சுயமாய் நிற்பது ஆண்களின் கண்களை உறுத்தி அவர்களின் அழகை அழிக்கும் செயலில் ஈடுபடச் செய்துள்ளது. 

தமிழகத்தில் அமில வீச்சால் வினோதினி , வித்யா பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் எல்லா நிகழ்வுகளிலும் எல்லாத் தவற்றையும் ஆண்களின் மீதே போட முடியாது. காரைக்கால் வினோதினி கல்லூரியில் படிக்கும் காலத்தில் கட்டிடத் தொழிலாளி சுரேஷிடம்  நிதிஉதவி பெற்றுப் படித்திருக்கிறார். இந்த விபரம் அவர் குடும்பத்தாருக்கும் தெரியும். வினோதினியை மணக்கும் எண்ணத்தோடேயே இந்த உதவிகளை அவர் செய்து வந்திருக்கிறார் என்பதும் வினோதினியின் தந்தைக்கும் வினோதினி மற்றும் குடும்பத்தினருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் அவர்கள் வினோதினி வேலைக்குச் சென்றதும் சுரேஷைப் புறக்கணித்து வந்துள்ளனர். இதைத் தாங்காத சுரேஷ் வினோதினி மீது அமிலம் வீசி உள்ளார். அவர் வீசியது 100 % கொடுமையான குற்றம் என்றாலும் இதற்குக் காரணம் வினோதினி அந்த உதவிகளை அவரிடம் பெற்றுக் கொண்டதே ஆகும். அன்றே வினோதினி வேண்டாம் என மறுத்திருந்தால் இந்த விளைவுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

கிராமங்களில் இன்னும் அடிப்படை சுதந்திரத்தைக் கூட எட்டாத பெண்களும் உண்டு. நகரங்களில் தன்னுடைய சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பெண்களும் உண்டு. இன்றும் பத்ரிக்கை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பெண்களின் குரல்கள் ஒலிக்கின்றன. முகநூல், ட்விட்டர் போன்றவற்றிலும் காண்கின்றோம். ஆனாலும் பல பெண்கள் தாங்கள் கருத்து சுதந்திரத்தோடு இல்லை என்பதையே பதிவு செய்கிறார்கள். ஒரு பெண்ணாக  மனைவியாக அம்மாவாக  இல்லத்தரசியாக நானும் கூட சிலவற்றையே எழுத முடியும். நாம் என்ன என்னவற்றைச் சொல்லலாம். என்ன என்னவற்றைச் சொல்லக்கூடாது என்பதைச் சமூகமும் நம் குடும்பமும் கடமைகளும் வகுத்து வைத்திருக்கின்றன. எவ்வளவு உயர் பதவிகளில் இருக்கும் பெண்ணாயினும் சரி இதுதான் நிலை.

இன்றும் வீடுகளில் ஆண் ஆளப் பிறந்தவனாகவும் பெண் அடிமையாக வேலைகளைச் செய்யவேண்டும் என்ற எண்ணம் வேரோடி இருப்பதால் பெண் எவ்வளவுதான் கல்வி கற்றிருந்தாலும் எந்த உயரத்தை எட்டி இருந்தாலும் ஆணுக்குக் கட்டுப்பட்டவள் என்ற கட்டுப்பெட்டித்தனமான எண்ணத்தையே உற்பத்தி செய்து வருகிறோம். இது எப்போது நீங்குகிறதோ, இந்த மனோபாவம் எப்போது மாறுகிறதோ அப்போதுதான் உண்மையான பெண் சுதந்திரம் கிடைக்கும்.

கைபேசி மற்றும் இணையப் பயன்பாடு மற்றும் பெற்றோருடனான பிள்ளைகளின் உறவு முறை பற்றி அடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம்.


4 கருத்துகள்:

  1. அருமையான கட்டுரை அக்கா...
    ஜெ.ஜெயில் உங்கள் பேச்சுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நல்ல அருமையான கட்டுரை.
    ஜெ ஜெ கலை அறிவியல் கல்லூரியில் பேசியதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி குமார்

    நன்றி கோமதி மேடம் :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...