எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 19 ஜனவரி, 2012

அன்பின் அம்மாவும் அசடன் புத்தகமும்., குற்றமும் தண்டனையும் விமர்சனமும்.


அம்மா.. என்ன சொல்வது வார்த்தைகள் இந்த வருடங்களையும் வெற்றிடத்தையும் நிரப்பி விடுமா என்ன..?

எனக்கும் உங்களுக்கும் அறுக்கப்படாத தொப்புள் கொடி உறவாய் நம் தமிழ் அமைந்திருப்பது சிறப்பு அம்மா..

அசடன் புத்தகம் மிக அருமை.. படிக்க பல மாதங்கள் ஆகும்போல.

ஜெயமோகனின் முன்னுரையையே சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்தேன். அவர் எதையும் ஆராய்ச்சிக்கட்டுரைபோல சிறப்பாக வழங்குவதில் வல்லவர்.

உங்கள் கதைமொழிபெயர்ப்பில் நம் ஃபாத்திமா அம்மாவின் விமர்சனமும் பார்த்தேன்.

இன்னும் பல பிரபல எழுத்தாளர்களும் இருக்கும் இடத்தில் என்னுடைய விமர்சனத்தையும் சேர்த்தது உங்களுடைய பெருந்தன்மை அம்மா..

இன்னும் உங்கள் அடுத்த முயற்சிகளையும் எனக்கான தூண்டுதலாய் சுயநல நோக்கோடு உங்களின் அடுத்த புத்தகங்களையும் எதிர்பார்க்கிறேன் அம்மா.

பபாசி என்னும் தேரில் பல தெய்வங்கள். உங்கள் புத்தகங்கள் இருந்த இடத்தில் நான் எழுதிய ஒன்றும் அச்சிலேறி உற்சவமூர்த்தியானது குறித்து மகிழ்ந்தேன்.

எப்போது வருவீர்கள் உங்களை நேரில்காணலாம் என்ற ஆவலில் இருக்கிறேன்.

மாணவிகள் தன் ஆசிரியரை ஞாபகம் வைத்திருப்பது புதிதல்ல.. ஆனால் ஆசிரியை தன் மாணவியை ஞாபகம் வைத்து அடையாளம் காண்பிப்பதும் எளிதல்ல.

இது போராடிய ஜெயித்த பெண்களின் கதைகள்தான். உங்கள் அன்பை அருந்திய பாக்கியத்துடன் இன்னும் எனக்கான மற்றும் எல்லாருக்குமான இலக்கியம் படைக்கும் உறுதியையும் எனக்கு ஆசியாய் வழங்கும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் அம்மா.!

**********************************************************

என்னைப் பற்றியும் என் நூல் பற்றியும் அவர்கள் கருத்துக்கள் கட்டுரை வடிவில்

“மகளாய்.. மாணவியாய்..


***********************************************************

இது குற்றமும் தண்டனையும் விமர்சனம்:-


( ஏறக்குறைய 4 வருடங்களுக்கு முன் எழுதி என் அம்மாவுக்கு அனுப்பியதை அவர் தன் வலைத்தளத்திலும் வெளியிட்டு தற்போது தன்னுடைய அசடன் நூலிலும் பதிப்பித்திருக்கிறார். நன்றி அம்மா.:)

///தேனம்மை,மதுரை.
சின்ன வயதில் மிக்கேல் ஷோலகோவ் கதைகளை (தமிழ் மொழிபெயர்ப்பு)என் அம்மா வாங்கித்தந்து படித்திருக்கிறேன்.உலகத்தைச் சுற்றிவரும் ஒரு சிறுவனின் கதையையும் படித்திருக்கிறேன்.அதற்குப்பின்பு தற்போதுதான் ஒரு மிகச்சிறந்த ரஷிய எழுத்தாளரின் படைப்பைத் தமிழில் படிக்கும் பேரனுபவம் ஏற்பட்டது.பாராட்டுக்கள். உங்கள் முயற்சி அளவிடற்கரியது.எவ்வளவு பாராட்டினாலும் சொல்லில் அடங்காதது.

தனி மனிதர்களின் மன மேன்மைகளை,உன்னதங்களை,உயர் இலட்சியங்களை மட்டுமல்லாது குறைகளை,குணக்கேடுகளை,நோய் பிடித்த மனத்தின் சிறுமைகளை, சீரழிவுகளை,வக்கிரங்களை, அவலங்களை உங்கள் மொழியாக்கத்தின் மூலம் தரிசனம் செய்தபோது நிறைய ஆத்ம விசாரங்களும்,ஆத்ம விசாரணைகளும் ஏற்பட்டன.
சோனியாவின் ஜீவனோபாயமும்,ரஸ்கோல்நிகோவின் மனச்சங்கடமும், ஸ்விட்ரிகைலோவின் மன விகற்பமும் என்னை அவர்களுள் ஒருத்தியாக்கி,வேதனைப்படவும், அழவும்,வெகுண்டெழவும் வைத்தன. தன் உடன் பிறவாச் சகோதர,சகோதரிகளுக்காகவும், குடும்பத்தை இரட்சிக்கவும் அவள் விபச்சாரியாகும் காலகட்டத்திலும், முகஸ்துதிகள் மூலம் துனியாவை ஸ்விட்ரிகைலோவ் ஏமாற்றும் இடத்திலும் தவிர்க்க இயலாமல் அழுது கொண்டும், ஸ்விட்ரிகைலோவ் என் கையில் கிடைத்தால் கொன்று விடும் உத்தேசத்துடனும் இருந்தேன்.

ரஸ்கோல்நிகோவைப் பற்றித்தான் முன்பு நிறைய எழுத நினைத்தேன். ஆனால் நீண்ட நாட்களுக்குப் பின்பும் அந்த இரண்டு பெண்களும்தான் என்னை மிகவும் பாதித்து இருக்கிறார்கள். காரணம்,-அபலைகள்; தங்கள் வாழ்வைத் தாங்களே தீர்மானிக்க முடியாமல்-பணத்தின், சூழ்நிலையின், வாழ்க்கைத் தேவைகளின் கைப்பாவையாக- ஆனால்...உயர்ந்த கொள்கைகளிலும், உயர்ந்த பண்புகளிலும் உறுதியும், திடமும் உள்ளவர்களாக இருக்கும் அபலைகள்.

ஜூலை மாத மாலைநேரக் கசகசப்பில் ஆரம்பிக்கும் ரஸ்கோல்நிகோவின் வாழ்வைப்பற்றி நினைக்கும்போது-இனிப்பு உண்ணும்போதும் நாவினடியில் ஏற்படும் ஒரு சமயக் கசப்பு போல ஒரு சோகம் ஏற்படுகிறது.எப்படி வர வேண்டியவன் தன் வாழ்வை எப்படி ஆக்கிக்கொண்டான் என்றும்,சோர்வுற்ற மனமே சூழ்நிலைகளையும், தங்குமிடத்தையும் எப்படி மாற்றி விடுகிறது என்றும் எண்ணினேன். Once wearஉடைகளை ரஸுமிகின் வாங்கி வந்து கடை பரப்பும்போது, ஏழைகளின் வாழ்வு இவ்வளவு துயரங்களுக்கு உள்ளானதா என்று தோன்றியது.'ஏழை படும் பாடு' நாவலில் வரும் ஜீன்வால்ஜீனையும், கோஸத்தையும் நினைத்துக்கொண்டேன். இந்தியாவில் தீவிரவாதிகள் என்றும்,நக்ஸலைட்கள் என்றும்,மாவோயிஸ்டுகள் என்றும், சாராயம் காய்ச்சினான்...கஞ்சா விற்றான்...கொள்ளையடித்தான் என்றும் போலீசால் என்கௌண்டர் செய்யப்படும் தாதாக்கள்,குண்டர்கள்,அடியாட்கள் ஆகிய அனைவருமே குற்றம் செய்தவர்தானா என சிலர்

முகங்களைப்பார்க்கும்போது தோன்றும்.ரஸ்கோல்நிகோவ் போல தடி எடுத்தவன் எல்லாமே தண்டல்காரனாக ஆகிவிடமுடியாது.அது அடிப்படையிலேயே தவறு.

இந்தக்கதையின் மையக்கருவே ரஸ்கோல்நிகோவ் தன் குற்றத்தைத் தானாகவே ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்றுக்கொள்கிறானா என்பதுதான். மனித மனம் எத்தனை விசித்திரங்கள் நிரம்பியது என்பதை ...நான் பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியைப் படித்துத்தான் புரிந்து கொண்டேன். சாதாரண விஷயத்திற்கே சிலர் உண்மையைக்கூறாதபோது 'எவ்வளவு பொய், நெஞ்சழுத்தம்' என்று நினைத்துக்கொள்வேன். ரஸ்கோல்நிகோவ் நம் மனமே ஆயாசப்படும் வகையில் -கடைசி வரையில் குற்றத்தை முழுமனதோடு தானாக ஒப்புக்கொள்ளவே இல்லை.சோனியாவின் அன்பு, காதல், மற்றும் அவளது வார்த்தைகளுக்காகத்தான் ஒப்புக்கொள்கிறான் என உணர்ந்தபோது -மனித மனதில் கடைசிவரை போராடிப்பார்க்கும்....தன் செயலை எல்லாம் நியாயப்படுத்த நினைக்கும் ஒரு extreme corner இருக்கிறது(எல்லோருக்குமே) என உணர்ந்து கொண்டேன்.
ஆனால் ஒன்று சொல்ல வேண்டும்; ரஸ்கோல்நிகோவின் உடல் உபாதைகள்,மனச்சோர்வு,கொள்கை உறுதி, செயலில் நிலையாக நிற்பது ...இவை எல்லாமே நம்மைப்பிடித்து ஆட்டுகின்றன. அவன் போலீசில் மாட்டி விடக்கூடாதே என்ற பேராசையும், அவனைத்துன்பப்படுத்தும் போர்பிரி பெத்ரோவிச்சை ஏதாவது செய்து விடலாமா என்ற விபரீத எண்ணங்களும் நமக்கே உதிக்கின்றன.

ரஷியாவில் ஏற்பட்ட பலவித புரட்சி மாற்றங்களைக் கதை பேசுகிறது.அந்த எண்ணச்சிக்கல்களுக்குள் மாட்டிக்கொண்ட ஏழை இளைஞன் ரஸ்கோல்நிகோவின் வாய்க்கசப்பும், எதோ ஒரு தாகத்தில் தவிப்பவனைப்போல அலையும் அலைச்சலும், அவனுடைய பழைய உடைகளும், தொப்பியும், ஷூக்களும் நம்மைத் தீவிரமாகப் பாதித்துக் காய்ச்சலை உண்டு பண்ணுகின்றன.

துனியாவுக்குத்தான் எவ்வளவு சோதனைகள்...இடர்ப்பாடுகள்! ரஸ்கோல்நிகோவின் மீது அவன் தாய் பல்கேரியா அலெக்ஸேண்ட்ரோவ்னா வைத்த பாசமும் , நம்பிக்கையும் நம் மனதை நெகிழச்செய்கிறது. காதரீனா இவானோவ்னா இந்திய ஏழைத் தாய்களின் பிரதிநிதியாகவும், மர்மெலாதோவ் இந்தியக்குடிகாரத் தந்தையின்(மனைவி தாலியைப்பறித்துக்கொண்டுபோய்க்குடிப்பது) பிரதிநிதியாகவும் இருக்கிறார்கள்.

அல்யோனா- பணக்காரர்களின், அடாவடிக்காரர்களின், அக்கிரமக்காரர்களின் குறியீடு;

ரஸ்கோல்நிகோவ்- ஏழைகளின், இயலாதவர்களின்,புரட்சிச் சிந்தனையாளர்களின் கோபத்தின் குறியீடு;

ஸ்விட்ரிகைலோவ் ,லூசின் -கயவர்களின் குறியீடு;

துனியா, சோனியா -நேர்மைகளின்,நம்பிக்கைகளின், நன்னெறிகளின், நல்லொழுக்கங்களின் குறியீடு (அறியாமையினாலோ, குடும்பத்தேவையினாலோ பிறழ்ந்தவர்களை நான் மோசமானவர்களாகக் கருதவில்லை);.

காதரீனா, மர்மெலாதோவ்-இயலாதவர்களின், வறுமையின் குறியீடு.

போர்பிரி பெத்ரோவிச்-கடமை தவறாதவர்களின் குறியீடு.

லெபஸியாட்னிகோவ், ரஸுமிகின் போன்ற இளைஞர்கள்தான் நல்ல,,இனிமையான எதிர்காலத்துக்கான குறியீடு.

இவ்வளவு உணர்வுகளையும் படித்து...புரிந்து...உணர்ந்து...அனுபவித்து எங்களுக்காகக்கொடுத்திருக்கிறீர்களே ,உங்கள் கரங்களுக்கு ஆயிரம் வந்தனங்கள். ///

அசடனைப் படிக்க இன்னும் இரு மாத கால அவகாசம் தேவைப்படும். இவ்வளவு பெரிய நூலை எப்படி மொழி பெயர்த்தீர்களோ என்ற ஆச்சர்யத்துடன் இன்னும் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அம்மா. அதில் வரும் காரெக்டர்ஸ் படங்களுடன் முன்னுரையில் இருப்பது சிறப்பு.

ஜெயமோகனின் நல்லவர் , கெட்டவர் இயல்பு ( தெய்வீகத்தன்மை மற்றும் அசட்டுத்தனம், புத்திசாலித்தனம் மற்றும் கயமைத்தனம் ) பற்றிய ஒப்பீடுகளை சிறிது நேரம் அசைபோட்டுக் கொண்டிருந்தேன். நானும் நூலை முழுமையான அனுபவித்தபின் எழுதுகிறேன் அம்மா எனக்குத் தெரிந்த மொழியில்..:)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...