துருக்கியசமூகம், தமிழ்ச்சமூகம் பற்றி முபீன் சாதிகா
முபீன் சாதிகா. இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமை. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள் என இவரின் தமிழ்ப்பணி அளப்பரியது. தொடர்ந்து செயல்பட்டு இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்களையும் இளம்தலைமுறையினர் அறிந்து பயன்படும்வண்ணம் எளிமையாக்கித் தருபவர்.
கோவை மாவட்டத்தில் பிறந்தவர். அம்மா இல்லத்தரசி. அப்பா மருந்தாளுநராக, தமிழக அரசில் வேலை பார்த்தவர். அண்ணன் நிஜந்தன். ஊடகவியலாளர்.
கோவை மாவட்டத்தில் சிறுவயதில் மருத்துவத்துறையினருக்கான குடியிருப்பில் வளர்ந்தவர். அப்போது அங்கு அடர்த்தியான மரங்களும் பூங்காக்களும் இருந்தன. அவற்றில் இருந்த செடிகளின் பெயர்களை மனப்பாடமாக அறிந்திருந்தவர். மரங்களுடன் பேசுவது மிகவும் பிடித்த பொழுது போக்காக இருந்தது. கோழிகள், பூனைகள் எல்லாவற்றுடனும் நல்ல நட்பைப் பேணி வந்தார். (இது குழந்தை மனோபாவத்துடன் இவரின் நூறு புராணங்களின் வாசல் தொகுப்பில் வெளிப்படும்.) நான்காம் வகுப்புப் படிக்கும் போது அப்பாவின் வேலை மாற்றல் காரணமாகச் சென்னை வந்தவர்.
பள்ளியில் படிக்கும் போது மத, சாதிய ரீதியிலான பாகுபாட்டை அனுபவித்திருக்கிறார். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போதிலிருந்து கல்லூரி வரை சில mystique அனுபவங்களை எதிர்கொண்டிருக்கிறார். அதனால் இவருள் உள்ளுணர்வு, டெலிபதி போன்ற திறமைகள் உருவாயின.
எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பயின்றவர். பின்னர் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு முதுகலையும் அதே கல்லூரியில் பயின்றார். அதன் பின் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை சென்னைப் பல்கலைக் கழகத்தில் முடித்தார்.
யுஜிசி ஜேஆர்எப் தேர்வில் தேர்ச்சி பெற்று அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் சேர்ந்தார். அந்தப் பல்கைலக் கழகம் கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டதாலும் ஜேஆர்எப் நல்கைக் கிடைக்காததாலும் முனைவர் பட்ட ஆய்வைக் கைவிட்டார்.
யூடிவி என்ற தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளாராக பகுதி நேர பணியைச் செய்தார். மிகச் சிறந்த செய்தி வாசிப்பாளர் என்று பெயர் பெற்றவர். யூடிவியில் பல நிகழ்ச்சி தயாரிப்புப் பணிகளைச் செய்தார். ஷோபா டெக்ஸ்டைல்ஸ், கோகோ கோலா போன்ற விளம்பரங்களுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.
அதன் பின் ஆங்கில மொழிப் புலமையை வளர்க்க வேண்டும் என்று பிரிட்டீஷ் தூதரகத்தில் சேர்ந்து அப்பர் இண்டர்மீடியெட் தேர்ந்தார். அதன் பின் தொடர்ந்து ஆங்கிலத்திலும் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதத் தொடங்கினார்.
ஆங்கிலத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் ஆர்வம் கொண்டு புதுக் கல்லூரியில் சேர்ந்தார். தமிழில் முதுகலையும் ஆய்வியல் நிறைஞரும் முடித்திருந்ததால் ஆங்கிலத்தில் முனைவர் பட்ட ஆய்வைச் செய்ய பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் சிறப்பு அனுமதி பெற்று முனைவர் பட்ட ஆய்வைச் செய்து முடித்தார்.
Counter Cultural Resistance and Activism in Select Turkish and Tamil Novels-A
Comparative Study என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வைச் செய்தார். துருக்கிய நாவல்களிலும் தமிழ் நாவல்களிலும் உள்ள எதிர் பண்பாட்டு முரண்களும் செயல்பாட்டுத் தன்மையும் என்ற கருத்தை ஆழமாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். ஓரான் பாமுக்கின் இரு புதினங்களையும் எலிஃப் ஷஃபக்கின் புதினத்தையும் தமிழில் தமிழவன், சல்மா, நிஜந்தன் ஆகியோரின் புதினங்களையும் ஒப்பீட்டுக்காக அதில் எடுத்துக் கொண்டார். அரசியல், மதம், சாதி, பெண் ஒடுக்குமுறை போன்ற பண்பாட்டு, சமூகக் கூறுகளில் காணப்பட்ட எதிர்ப்புணர்வையும் அதற்குத் தேவைப்பட்ட செயற்பாட்டுத் தன்மையும் இந்தப் புதினங்களில் எப்படி வெளிப்படுகிறது என்பதை ஆய்வு செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் துருக்கிய சமூகத்திற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் இருக்கக்கூடிய ஒற்றுமை, வேற்றுமைகளை இந்தப் புதினங்கள் வழி எப்படி கண்டடைவது என்பதையும் இந்த ஆய்வில் அவர் கூறியிருக்கிறார்.
தமிழில் கவிதைகள் எழுதத் தொடங்கிய போது அவை சங்க இலக்கியத்தின் மொழி போல் அமைந்தன. அதற்கான காரணத்தை அவரால் அப்போது அறிய முடியவில்லை. தன்னுணர்வு இன்றி இது போன்ற கவிதைகளை எழுதுவதாகச் சொல்கிறார். 'அன்பின் ஆறாமொழி,' மற்றும் 'உளம் எனும் குமிழி' ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. அடுத்து விரைவில் ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவரவிருக்கிறது.
கவிஞர் சண்முகம் இவரை நேர்காணல் கண்டு அது 'உறையும் மாயக் கனவு' என்ற தலைப்பில் நூலாக வந்திருக்கிறது. அதில் தன் அனுபவங்கள், வாசிப்பு போன்ற பலவற்றையும் பகிர்ந்திருக்கிறார்.
தொடர்ந்து பல ஆங்கில, பிற மொழி இலக்கியங்களை வாசித்து தமிழில் பல கட்டுரைகளை பல இலக்கிய இதழ்களுக்கும் எழுதியிருக்கிறார். இவரது கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப் பெற்று ’முபீன் சாதிகா கட்டுரைகள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது.
மலேஷிய கவிஞர்களுடன் இணைந்து கவிதை வாசிப்பு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பல பெண் கவிஞர்களும் இடம்பெற்றனர். மீண்டும் ஒரு முறை காரைக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் இவர் 40 தமிழ்ப் பெண் கவிஞர்களின் படைப்புலகம் குறித்து தொகுத்து 40 நூல்களை வெளியிட்டிருக்கிறார். இவருடைய படைப்புலகம் பற்றிய நூலும் வெளிவந்திருக்கிறது.
சமீபத்தில் ‘நூறு புராணங்களின் வாசல்” என்ற இரு குறுங்கதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். அந்த ஒவ்வொரு நூலிலும் நூறு கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. பெரும் வரவேற்பைப் பெற்ற நூல்களாக இவை உள்ளன. மலாயிலும் பாலியிலும் இந்த நூல்கள் மொழிபெயர்ப்பதற்கான உடன்படிக்கை சென்னையில் நடந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கையெழுத்தாகியுள்ளது.
ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பல தேசிய சர்வதேச இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உலக பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் இவருடைய ஆங்கிலக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன.
தொடர்ந்து இவர் பல பன்னாட்டு ஆய்வாளர்கள் கலந்து கொண்ட சர்வதேச மாநாடுகளில் கலந்து கொண்டு கட்டுரைகள் வாசித்திருக்கிறார். மைசூருவிலுள்ள த்வன்யலோகாவில் ‘கடந்த ஐம்பதாண்டு தமிழ் கவிதைகள்’ தலைப்பில் ஆங்கிலத்தில் கட்டுரை வாசித்தார். அந்த நிறுவனம் வெளியிட்ட யுஜிசி அங்கீகரித்த இதழில் அந்தக் கட்டுரை வெளியானது.
ஃப்ரெஞ்சு தத்துவவியலாளர்கள் டெல்யூஜ், கத்தாரி குறித்த சர்வதேச கருத்தரங்கங்களில் கலந்து கொண்டு கட்டுரைகள் வாசித்திருக்கிறார். அதன் படி மும்பையிலுள்ள டாடா சமூகவியல் நிறுவனத்தில் ‘தமிழ் நவீன ஓவியங்கள்’ குறித்து கட்டுரை வாசித்தார். சென்னையில் நடைபெற்ற அதே போன்ற கருத்தரங்கத்தில் ‘உள்ளுணர்வு மூலம் தொடர்புறுத்தம்’ குறித்த கட்டுரையை வாசித்தார். அது ஆங்கிலத் தொகுப்பு ஒன்றில் Political Enactments, Controls and Intuition as Communication என்ற தலைப்பிலான கட்டுரையாக இடம்பெற்றிருக்கிறது. டெல்லியி
அது மட்டுமல்லாமல் லயோலா கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி போன்ற கல்லூரிகளில் தேசிய கருத்தரங்கங்களில் பங்கு கொண்டு கட்டுரை வாசித்தார். அவை அந்தக் கல்லூரிகளின் இதழ்களில் வெளியாயின. அவை பெண்ணியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் அமைந்த கட்டுரைகளாக இருந்தன.
அது தவிர தமிழகத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக போபால், டெல்லி போன்ற இடங்களில் சாகித்ய அகாடமி நடத்திய பல்வேறு கட்டுரை வாசிப்புகளிலும் கவிதை வாசிப்புகளிலும் பங்கேற்றிருக்கிறார். அந்தக் கருத்தரங்கங்களில் வாசித்த கட்டுரைகள் சாகித்ய அகாடமி நூலாகக் கொண்டுவந்திருக்கிறது.
சாகித்ய அகாடமி இதுவரை அகில இந்திய அளவில் கவிதை வாசிப்புக்காக தமிழ்நாட்டிலிருந்து இவரை அழைத்திருக்கிறது. அந்த நிகழ்ச்சி போபாலில் நடைபெற்றது.அதில் இவர் கலந்துகொண்டு கவிதை வாசித்திருக்கிறார். அதே போல் தென்னிந்திய அளவிலான கவிதை வாசிப்பில் இவரை சாகித்ய அகாடமி அழைத்தது. அதுஹைதராபாதில் நடைபெற்றது. அதிலும் இவர் கலந்து கொண்டு தமிழிலும் அவற்றின்ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் வாசித்தார்.
ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் சாகித்ய அகாடமிக்காவும் பிற பதிப்பகங்களுக்காகவும் மொழிபெயர்க்கிறார். இதுவரை பல ஐரோப்பிய தத்துவவியலாளர்களின் நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவர் மொழிபெயர்த்த ‘குறியியல்’ குறித்த நூல் விரைவில் வெளியாகவிருக்கிறது. இவர் மொழி பெயர்த்த டெல்யூஜ், கத்தாரி எழுதிய கோட்பாடுகள் குறித்த நூல் அடுத்து வரவிருக்கிறது. அது தவிர தினம் முகநூலில் பல தத்துவவியலாளர்களின் கோட்பாடுகளை மொழிபெயர்த்து அறிமுகம் செய்து வருகிறார். அதுவும் நூலாக்கம் பெறவிருக்கிறது.
டெல்யூஜ், கத்தாரி, மசூமி, ஹிமேனா கானெலிஸ், டேனியல் ஸ்மித், ஜுடித் பட்லர்,ழான் புத்ரியா, ழாக் டெரிடா, ஹெலன் சிக்ஸூஸ், ப்ரூனோ லாட்டூர், லூச் இரிகரை,ஜார்ஜியோ அகம்பென், ழாக் லக்கான், தெக்கார்த், ரோஸா லக்ஸம்பர்க், ஜிஜெக்உள்ளிட்டப் பல அறிஞர்களின் கோட்பாடுகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
ஓவியங்களை வரைவதில் ஆர்வம் உள்ளது. நூல் அட்டைப் படங்களுக்கான ஓவியங்களை வரைந்திருக்கிறார்.
இவருடைய நேர்காணல்கள் பொதிகை, மிர்ச்சி, அகில இந்திய வானொலி போன்ற ஊடகங்களிலும் சில இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன.
இவருடைய எழுத்திற்காக இலக்கிய வீதியின் அன்னம் விருதைப் பெற்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டிற்கான ’மேலும்’ விமர்சன விருதைப் பெற்றிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)