எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 7 அக்டோபர், 2024

மும்தாஜ் இல்லம்

 மும்தாஜ் இல்லம்

“அண்ணே சௌதில இருக்காங்க. அங்க வரச் சொல்லி லெட்டர் போட்டிருக்காங்க” பின்னால் வந்து கொண்டிருந்தான் அவன். ”இந்தா இத வாங்கிப் பாரு. உண்மையத்தான் சொல்றேன்” என ஒரு கடிதத்தை நீட்டினான். வெளிநாட்டுத் தபால்தான். கடந்த சில மாதங்களாகப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறான். டைப்ரைட்டிங்க் இன்ஸ்டிடியூட்டின் எதிரில் இருந்த ஒரு ஜவுளிக்கடையில் அவனைப் பார்த்திருக்கிறாள். சில சமயம் கல்லாவிலும் அமர்ந்திருப்பான். கடைக்காரருக்கு உறவினர்போல என நினைத்திருந்தாள்.

மாடியில் இருந்தது அவள் டைப்ரைட்டிங் கற்றுக் கொண்டிருந்த இன்ஸ்டிடியூட். அதன் அருகிலேயே தேரடி. எனவே அதன் பக்கவாட்டு மரப் படிகளில் ஏறித்தான் மாடிக்குச் செல்ல வேண்டும். கோ ஆப் டெக்ஸின் மேல்தளம் பார்வைக்கு அகப்படும். அந்த வரிசையில் கடைசியில் இருந்தது இன்ஸ்டிடியூட். பேப்பரை டைப்ரைட்டரில் சொருகி Asdfgf ;lkjhj என டைப்ப ஆரம்பித்து இப்போது இன்வாய்ஸ், கடிதம் என்று அடிக்க ஆரம்பித்திருக்கிறாள். இன்னும் சில நாட்களில் பரிட்சை.

உள்ளே ஏதோ ரிப்பேர் வேலை என்று மூன்று நாட்களாக இன்ஸ்டிடியூட்டின் வெளி வராண்டாவிலேயே டைப்ரைட்டர்களைப் போட்டு வைத்திருந்தார்கள். அங்கேயே அமர்ந்து அவளைப் போலச் சிலரும் சாலைப் போக்குவரத்தைக் கவனித்தபடி டைப்படித்துக் கொண்டிருந்தார்கள்.

எதிரே ஒரு ஜவுளிக்கடை. அங்கே வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டியில் பளீரென்று ஒரு உருவம். ஒரு தீர்க்கமான பார்வை இவளை அசையச் செய்தது. கவனம் விலகிக் கீழே பார்த்தாள். அவன்தான் கடையின் வாரத்தைப் பிடித்தபடி நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். இவள் பார்த்தது தெரிந்ததும் மந்தகாசமாகப் புன்னகைத்தான் ஒரு ஆணின் நேரடிப் பார்வை என்னவெல்லாம் செய்யும். இவளை நெளியச் செய்தது. வெட்கம் வந்து முகத்தைத் தாழச் செய்தது. பார்க்கும்படி கொஞ்சம் அழகாய்த்தான் இருக்கிறேனோ.. அவளுக்கு உடனே கண்ணாடியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.

ஒருமணி நேரம் விநாடி போலக் கழிந்தது. டைப்ரைட்டிங் பரிட்சைக்கான முன்னோட்டம் அது. திடீர் திடீரெனப் பக்கவாட்டில் பார்ப்பதும் டைப் அடிப்பதுமாய் அன்றைக்கு ஏகத்துக்கும் தப்பும் தவறுமாக அடித்தாள். டைப் அடித்த பேப்பரை உருவிக் கொடுத்துவிட்டுக் குதித்தபடி கீழே இறங்கினாள். ஓரக்கண்ணால் பக்கவாட்டில் பார்த்தால் அவன் ஒரு சைக்கிளோடு நடந்து வந்து கொண்டிருந்தான். சிறிது கிட்டே வருவதுபோல் தோன்றியபோது வேகமாக விலகி மக்களோடு கலந்தாள். பின்னேயே வந்தவன் வீட்டைக் கண்டுபிடித்துவிட்டான்.

அன்றிலிருந்து இவள் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டுக்குச் செல்லும் போதும் திரும்பும்போதும் பாடிகார்டு போல் பின் தொடர்கிறான். இன்பமாயும் இருந்தது. இம்சையாயும் இருந்தது. தெரிந்தவர் யாரும் பார்த்துவிட்டால்.. வேறு வினையே வேண்டாம். எல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளி. இவள் விரைந்து நடந்தாள். அன்று அவன் லுங்கியும் டீ சர்ட்டும் அணிந்திருந்தான். இவள் மஞ்சளும் பிங்க் கலரும் கலந்த கட்டம் போட்ட பட்டுப் பாவாடை, கரை வைத்த பிங்க் ரவிக்கை, மஞ்சள் தாவணி அணிந்திருந்தாள். படபடப்போடு இவள் நடக்க நடக்க அவன் நடையும் வேகமாகியது.

”என் பேர் ஷாஜகான். உம் பேரு என்ன.?

”சொல்லமாட்டியா. சரி மும்தாஜ்னு வைச்சிக்கவா. ”.

லேசாக அவள் முறுவலிக்க ’பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும்’ என்ற பாடல் முக்கு டீக்கடையில் இருந்து ஒலித்தது. வீடு வந்துவிட்டது. “கொஞ்சம் நல்லா சிரிச்சாத்தான் என்னவாம், அன்னைக்கு சிரிச்ச மாதிரி, புன்னகை அரசி”, எனச் செல்லமாகக் கூறியபடிக் கடந்து சென்றான்.

என்னைக்குச் சிரிச்சோம். யோசித்தாள். ரோட்டுல மட்டுமில்ல. வீட்டுக்குள்ளயும் பொம்பளப் புள்ளை சத்தம் போட்டுச் சிரிக்கக்கூடாது. இப்படித்தாள் வளர்க்கப் பட்டிருந்தாள் அவள். ஒருமுறை ராஜா தியேட்டருக்கு சினிமா பார்க்கச் சென்றிருந்தார்கள், ராஜியக்காவும் இவளும். அவ்வப்போது யாருக்கும் புரியக்கூடாது என்று வார்த்தைகளின் நடுவில் ய்ன, ம்ட போட்டுப் பேசிச் செல்வது இருவருக்கும் வழக்கம்.

சினிமா பார்க்க நடந்து செல்லும் போது ராஜியக்காவிடம் சொன்னாள். ”அய்னக்கா பிய்னன்னாலே பய்னார்க்காதே. ஒய்னொருத்தன் ஃபைனாலோ பய்னண்றான்ல “ (அக்கா பின்னாலே பார்க்காதே, ஒருத்தன் ஃபாலோ பண்றான்ல.” அக்கா தன்னையறியாமல் திரும்பிப் பார்த்தாள். பார்த்துவிட்டு ”சூம்டூப்பரா இம்டுருக்காண்டி, இம்டிவன்தான் ஒம்டொன்ன ஃபம்டாலோ பம்டண்றான்னு சொம்டொன்னியா”. ( சூப்பரா இருக்காண்டி, இவந்தான் ஒன்ன ஃபாலோ பண்றான்னு சொன்னியா) சைக்கிளைத் தள்ளிக் கொண்டே பின்னேயே வந்தான்.

“ஆள் கரவு செறிவா இருக்கான். வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் எடுப்பா இருக்கு. சுருட்டைத் தலமுடி.. கங்கா மாதிரி இருக்காண்டி. நீ கொடுத்து வச்சவ” லேசான பொறாமை அக்காவின் வார்த்தைகளில் வெளிப்பட்டது. ”அக்கா பார்க்காதேன்னு சொன்னேன்ல. பார்த்துக் காட்டிக் கொடுத்திட்டியே.” எனத் தலையைச் சாய்த்துச் சிரித்தாள். ” ஏய், சிரிக்காதடி, உன் சிரிப்பு ஆளை அள்ளுது. அந்தாளு க்ளோஸ்”” எனக் கூடச் சேர்ந்து சிரித்தாள் அக்கா. இதைத்தான் சொல்கிறான் போல. 

வீட்டிற்குள் வந்ததும் வேர்த்துக் கசகசத்ததால் முகத்தைக் கழுவினாள். சாந்துப் பொட்டுக் கரைந்தது. திரும்பப் பொட்டு வைக்க மறந்து அமர்ந்திருந்தாள். ”பொட்டு வைக்காமத் திரியாதே. துலுக்கச்சி மாதிரி இருக்கே.” திட்டினாள் செல்லம்மக்கா. அட துலுக்கச்சி மாதிரியே இருக்கனா. மனதுள் மெல்லிய மயக்கம் வந்தது. கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.  மெல்லத் திறந்தது கதவு அமலா போல் இணைந்த புருவங்கள் அவளுக்கு. முன்னாடிப் பார்த்தா கே ஆர் விஜயா, பின்னாடிப் பார்த்தா சரோஜா தேவி. புன்னகை அரசி எனக் கல்லூரியில் தோழியரின் கிண்டலில் நனைந்திருக்கிறாள். ஆனால் ஒரு ஆணின் பாராட்டென்பது அவளுக்குப் புதிதாக இருந்தது.

எங்கே உன்னைக் கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம். ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம் இப்படி அந்த டீக்கடையில் ரேடியோ பாடிய ஒரு விடுமுறை நாளில் பூட்டிக்கிடந்த எதிர்வரிசைக் கடைகளின் இணைந்த படிகளில் அமர்ந்திருந்தார் அந்தக் கடைகளின் உரிமையாளர். சாலையில் நடந்து வந்த எதிர்வீட்டுப் பெண்ணான இவளின் பின்னால் இருவர் பின் தொடர்வதைப் பார்த்தார். அப்பெண்ணின் பின்னே பவ்யமாய் இருபக்கமும் வந்தவர்கள் அவள் படியேறிப் போனபின் திடீரெனக் கைகலப்புச் செய்தார்கள். 

”என் ஆளை நீ எப்படி ஃபாலோ பண்ணலாம்?” ”நான் அத லவ் பண்றேன். அதுவும் என்னை லவ் பண்ணுது. ஆனா சொல்லல. நீ ஒதுங்கிப் போயிடு, பிரச்சனை பண்ணாம” “அது என் ஆளு” அந்தத் தெருவில் இன்னொருவன் தன்னைப் பின் தொடர்வதே அவளுக்கு அப்போதுதான் தெரிந்தது. காதல் பற்றிய குழப்பங்கள் தொடர்ந்தன அவளை. 

அடுத்த நாள்தான் கடிதம் பற்றிய பிரஸ்தாபம். ஷாஜகானிடமிருந்து நீட்டப்பட்டக் கடிதத்தை அவள் அந்நியத்தன்மையோடு பார்த்தாள். இதுவரை அந்நியரிடம் உரையாடியது கூட இல்லை. அதுவும் ஒரு ஆண்மகனோடு நட்ட நடுத்தெருவில் பக்கம் பக்கமாக நடந்து போவதே அவளுக்குப் பயமாக இருந்தது. அந்தக் கடிதத்தை வாங்குவதா. ஒருவேளை காதல் கடிதமாக இருக்குமோ. ரோட்டில் யாரும் பார்க்கிறார்களோ. கடையின் வாசற்படிகளில் அமர்ந்து ஒரு வயதானவர் இவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். திடுக்கிட்ட அவள் அக்கடிதத்தை வாங்காமல் விருட்டென வீட்டிற்குள் படியேறினாள்.

இதன் பின் கண்காணிப்பு இறுகியது. பார்த்துக் கொண்டிருந்த கிழவர் வீட்டாரிடம் போட்டுக் கொடுத்து விட்டார். தினமும் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் செல்லும் போதும் திரும்பி வரும்போதும் பின்னாலேயே வந்து முணு முணுத்துக் கொண்டிருந்தது காதல். ஒரு வாரத்துக்குள் அதற்கும் முற்றுப் புள்ளி விழுந்துவிட்டது. கல்யாணம் செய்ய வேண்டிய பிள்ளை. இனி எதையும் படிக்கப் போக வேண்டாம்.

ஒரு நாள் அவளுக்கு உடம்பு சரியில்லை. காய்ச்சல். டாக்டர் அகமதின் ஆஸ்பத்ரிக்குத் தம்பியோடு சென்றிருந்தாள். எல்லா நோவுக்கும் அங்கே ஊசிபோடுவார்கள். இதுதான் நடைமுறை. டாக்டரிடம் சென்று ஊசி போட்டுக் கொண்டால் எல்லாம் சரியாகி விடும். எப்படி வந்தான் எனத் தெரியாமல் அவள் முன் நின்றிருந்தான் அவன். அவளின் ஒவ்வொரு அசைவுக்காகவும் அவன் காத்திருந்தது போலிருந்தது. வீட்டிற்குள் அவள் மூச்சு விடுவதும் கூடக் கேட்டுக் கொண்டிருப்பான் என்றுதான் தோன்றியது.

’கண்ணைச் சுருக்கி என்ன ஆச்சு’ என விசாரித்தான். இவள் பெஞ்சில் அமர்ந்திருக்க எதிரேயே பழியாய் நின்றிருந்தான். பயமாய் இருந்தது இவளுக்கு. தம்பிவேறு துணைக்கு வந்து இருக்கிறான். பார்த்தால் வீட்டில் பற்றவைத்து விடுவான். கழுத்தில் கை வைத்துக் காட்டி விட்டுப் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். காய்ச்சலுக்காக இவளுக்கு நர்ஸ் ஒரு ஊசி போட அவன் முகம் வலியால் சுருங்கியது. பக்கவாட்டில் திரும்பி இருந்தவளின் ஓரக்கண்ணில் அவன் வலி தெரிந்தது. கண்கள் கலங்கியது அவனுக்கு. உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டான். வலிக்குதா என ஜாடையாய் வினவினான். லேசாகத் தலையசைத்தாள். தன் புஜத்தைத் தடவி விட்டான், இருமுறை அழுத்தமாய். அடுத்து ஊசி போட்டுக் கொண்டவர்களிடம் ”கையை நல்லாத் தடவி விடுங்க, இல்லாட்டி ஊசி மருந்து நின்னுடும்” எனச் சொல்லி இவளை ஜாடையாகப் பார்த்தான்.

சந்தனத் திரள். செந்தழல் நிறம். புருவம் அடர்த்தி. ஆண்மையைப் பறைசாற்றும் மீசை, கட்டழகு உருவம், கனிவான ஏங்கும் கண்கள். உருவக் கவர்ச்சியா காதல். காதல் என்பது என்ன? ”இந்த வயசுல ஏற்படுற இதெல்லாம் காதல் இல்ல. கன்னுக்குட்டிக் காதல், இல்லாட்டி இனக்கவர்ச்சி” என  ஹாஸ்டலில் இவளின் ரூம்மேட்டான ஜேனட் அக்கா சொன்னது ஞாபகம் வந்தது. 

”மானும் ஓடி வரலாம், மாநதியும் ஓடி வரலாம், மங்கை தனியே வரலாமா, தன் மானம் மறந்து ஓடி வரலாமா” ரேடியோவைப் பட்டென அணைத்துப்  ”பாரு பாட்டுல கூடச் சொல்லுறானுங்க கூத்தாடிப் பசங்க. அவளப்  புடிச்சு வீட்ட விட்டு வெளிய தள்ளுங்க. இனிமே இங்கே வராதடின்னு. அப்பிடியே வந்தாலும் வீட்ல சேர்க்காதீங்க, சொத்துல உனக்கு சல்லிப் பைசா கிடையாதுன்னு தொரத்துங்க. அவய்ங்க வெரெட்டி விட்டாத்தான் புத்தி வரும் ” என்று தாத்தா உறுமிக் கொண்டிருந்தார். மருந்துக்கடை வைத்திருந்த சாமியப்ப மாமாவின் பெண் ரத்னா அக்காதான் ஓடிப் போனது. அவள் ஒரு கிறித்துவப் பையனைக் காதலித்து சர்ச்சில் மணந்து கொண்டாள். அன்று தாத்தா ஆடிய ருத்ர தாண்டவத்தை அந்த அக்காள் பார்க்கவில்லை. இவள்தான் பார்த்துவிட்டு விதிர் விதிர்த்துப் போயிருந்தாள்.

 

காதல் என்பது என்ன? பாதுகாப்பான திருமணம், வசதியான வாழ்க்கையா. பணம், சௌகர்யம், ஆடம்பரம், பொய் மோகம், நிரந்தரிக்கப்பட்ட நடைமுறைகள், நிலை நிறுத்திய உறவுகள் இதற்குள் எந்த இடுக்கிலும் காதல் அவள் முன் தோன்றக் கூசியது. நான் யார் தெரியுமா, எந்த வீட்டின் பிள்ளை தெரியுமா, என் மனதில் இந்த உணர்வுகளுக்கெல்லாம் இடமில்லை.

அப்பா அம்மா பார்க்கும் வரன் தான் என் கணவன், இணையர், துணை. உன்னால் எனக்கு சமூக அந்தஸ்துத் தரமுடியுமா. உன்னை மணந்து கொண்டால் நானும் ஒரு ஓடுகாலி. என்னைப் பற்றிச் சமூகம் என்ன நினைக்கும். நீ நல்ல மனிதன் தான். அழகன் தான். ஆனால் நான் என் கட்டுப்பாட்டை மீற முடியாது. சாதி, மதம் என்னும் எத்தனை குறுக்குச் சுவர்கள் இவற்றைத் தாண்ட அவளுக்குப் பலமில்லை, மனமுமில்லை.

அவர்கள் அந்தஸ்திற்குச் சமமாய் இருந்த அவள் சாதியையும் மதத்தையும் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பெண் பார்த்துச் சென்றிருந்தார்கள். அவளுக்கென்று கருத்து ஏதுமில்லை. தந்தை சொன்னார் என்று கல்லூரியில் விருப்பப் பாடம் முதற்கொண்டு எடுத்து படித்தவள் அவள். கல்யாணத்துக்கும் அவர் விருப்பம்தான் அவளைச் செலுத்தியது. கல்யாணத்துக்குச் சில தினங்களே இருந்தன.

ஒருநாள் காலை எதிர்த்த ஆயுர்வேத மருத்துவனையை ஒட்டிய கடைகளில் கரும்புகை. நடனமாடியபடி தீ லாவிக் கொண்டிருந்தது. வீட்டிலிருந்தோர் அனைவரும் மொட்டை மாடிக்கு ஓடிச் சென்று பார்த்தார்கள். பல நாட்களாக வீட்டில் முடங்கிக் கிடந்த அவளும் மாடி ஏறிப் பார்த்தாள். எத்தனை நூறு பார்வைகள் இருந்தாலும் ஒரு பார்வை அவளுடைய உள்ளுணர்வோடு உரையாடியது. கூட்டத்துக்குள் கூர்ந்து பார்த்தாள். சுவரோரமாக நின்று எக்கியபடி அவளை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான் அவன். ஏக்கமும் காதலும் தாபமும் தளும்பிய பார்வை. முகத்தைத் திருப்பிக் கொண்டாள். எதிரே பாய்ந்து கொதித்தேறிய செந்தழல், தலையை நீட்டி நீட்டி அவனைப் போலவே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

முகம் முழுக்கத் தாடியோடு அன்று அவன் மாடியையே பார்த்த பார்வை அவள் மனதில் அழியாத சித்திரமாய்ப் படிந்துபோனது.  எல்லோரும் தீயைப் பார்த்தார்கள். அணைக்கப் பறந்தார்கள். அவளோ அவன் கண்ணீல் அத்தீ கொழுந்துவிட்டு எரிவதைப் பார்த்தாள். உனக்கும் என்னைப் பிடித்திருக்குதானே.. சொல்ல மாட்டாயா.

கேள்விகள் எவ்வி எவ்வி மாடியின் விளிம்பில்  தொங்கின. எட்டிப் பார்த்துப் பதில் தெரியாதது போல் தன்னை ஒளித்துக் கொண்டாள். காலப் பேழைக்குள் மூடிப் போனது அந்தக் காதல்பார்வை. யுக யுகாந்திரமாய் மீற முடியாத அட்சரேகைகள், தீர்க்க ரேகைகள். கற்பனைக் கோடுகள். அவளுக்குத் திருமணம் நிச்சயமானது கூட அவனுக்குத் தெரியாது.

கல்யாணமா.. அவளுக்கா.. கேட்டதும் ஒடிந்து போனது அவன் உள்ளம். அதன் பின் இரண்டு மாதங்களில் திருமணம் முடிந்துவிட்டது. கடைத்தெருவில் இவளைப் பார்த்தவன் கண்ணில் ஒரே ஒரு கேள்விதான். ஏன் என்னை நிராகரித்தாய்? நான் உன் சாதி இல்லை என்றுதானே.

இருபது ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். பிள்ளைகளுடன் லீவுக்கு அம்மா வீட்டுக்கு வந்திருந்தாள். ”மாரியம்மன் கோவில் தெருவில் ஒரு கசாப்புக் கடை இருக்கு. பிஸ்மில்லா சொல்லி வெட்டுவாங்க. கறி ரொம்ப நல்லா இருக்கும். அங்க வாங்கிட்டு வாங்க. தம்பி பொண்டாட்டி சொல்லத் தம்பியுடன் சென்றாள்.  கசாப்புக் கடையில் கூட்டம். கறி வெட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்துத் திகைத்தாள். ஷாஜகான்தான் அது.

தம்பி ”பாய் கொழம்புக்குத் தலையும் பாயா போட காலும் வேணும்.” எனக் கேட்க “இருங்க சுட்டுட்டு வரச் சொல்றேன்” எனச் சிரித்த ஷாஜகான் திரும்பி சதக் சதக் என வெட்டிக் கறியைக் கூறாக்கிக் கொண்டிருந்தான். தன்னை அடையாளம் தெரிந்திருக்குமோ, சிரிப்பு மறந்துபோன முகத்துடன் தடித்த உருவத்துடன் இருந்தாள் இவள்.

மிகுந்த ஆடம்பரத்துடன் கலர்க் கண்ணாடிச் சாரளங்கள் அமைக்கப்பட்டு லேஸ் திரைச்சீலைகளால் அலங்கரிக்கப்பட்டுக் கசாப்புக் கடையின் எதிர்வரிசையில் இருந்தது அந்த மும்தாஜ் இல்லம். ஷாஜகானின் சாயலில் இரு வாலிபர்களும் இரு இளம் பெண்களும் வெளியே வந்தார்கள். ”பாய் ஒங்க பிள்ளைங்களா.” கடைக்கு வந்த யாரோ வினவ “ அவருதான் கல்யாணமே பண்ணிக்கலீல்ல. அது அவர் அண்ணன் பசங்க” என்றார் இன்னொருவர். “அப்புறம் ஏன் பாய் வீட்டுக்கு மும்தாஜ் இல்லம்னு பேரு வைச்சிருக்காரு” “அவரு ஷாஜகான்ல. மும்தாஜ்னு யாரையோ காதலிச்சிருப்பாரு போல. பதினைஞ்சு வருஷமா சௌதில சம்பாதிச்சத எல்லாம் இப்பிடி வீடாக் கட்டி மும்தாஜ் இல்லம்னு பேரு வைச்சிட்டாரு. அப்பிடித்தானே பாய்” எனக் கேட்டுச் சிரித்தார்கள். ”சரியாச் சொல்லீட்டீங்களே”” என்று சமமாகச் சிரித்தபடி வெட்டிக் கொண்டிருந்தான் ஷாஜகான்.

“நெஞ்சுக் கறி அரைக்கிலோ போடுங்க பாய்” என அவர்களுள் ஒருவர் சொல்ல “உங்களுக்கு இல்லாததா, நல்லா போட்டுறலாம்” என்று சொல்லி இவளை ஜாடையாகப் பார்த்தபடி “தம்பி உங்களுக்கும் நெஞ்சுக்கறி போட்டுறலாமா”. எனக் கேட்க இவளுக்குப் படபடப்பாயிருந்தது. ””வேண்டாம் பாய்.” தம்பி சொல்ல ஆசுவாசமானாள்.

’நான் உன் சாதி இல்லை என உன்னை நிராகரிக்கவில்லை. என்னிடம் காதல் இருந்தது. அதைச் சொல்லும் தைரியம்தான் இல்லை’ சொல்லப்படாமல் உள்ளேயே பூட்டி வைத்த அந்தக் காதல் வாழ்நாள் முழுக்க அவளை முன்னும் பின்னும் உந்தித் தள்ளிக் கொண்டே இருந்தது. வேட்டையாடிக் கொண்டிருந்தது. காரியத்தில் கண்ணானவன் போலப் பட் பட்டென நெஞ்சுக் கறியைத் துண்டுபோட்டு  வெட்டிக் கொண்டிருந்தான் ஷாஜகான். கடையை விட்டு விலகி வந்தபின்னும் அந்தத் துண்டுகள் போல அவள் நெஞ்சும் துண்டு துண்டாய்ச் சிதறிக் கொண்டிருந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...