எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 17 அக்டோபர், 2024

புவனா

புவனா

”அடி ஒனக்கும் ரெண்டு பொண்ணு ஒம் மகளுக்கும் ரெண்டும் பொண்ணா” தம்பி கல்யாணத்துக்கு வந்திருந்த உறவினரில் ஒருவள் விருந்தைத் தின்றுவிட்டுச் சும்மா ஏன் இருப்பானேன் என்று பிருந்தா சித்தியிடம் கேட்டு வைத்தாள்.

ஏற்கனவே மனக்குறையில் இருந்த பிருந்தாவுக்கு வயிறெரிந்தது. அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்தவள் கண்ணில் விளையாடிக் கொண்டிருந்த ஆச்சியின் பேரன்கள் பட்டார்கள். கோபத்தோடு சாபமிட்டாள். “இவனுகள்ளாம் பெரிசானதும் பொண்ணு கொடு, பொண்ணு கொடுன்னு பொண்ணு கெடைக்காமக் கெஞ்சிக் கதறப் போறாய்ங்க” ரெண்டு மகனைப் பெற்ற பெருமிதத்தில் இருந்த புவனாவுக்கு பிருந்தா சித்தியைப் பார்க்கவே பயமாயிருந்தது. ”உங்களுக்குக் கோபம் வந்தா என் புள்ளைக்களுக்கு ஏன் சாபம் கொடுக்குறீங்க சித்தி” என்று கேட்க நினைத்து மௌனித்தாள் புவனா.

சித்தியின் வாய் முகூர்த்தமோ என்னவோ அவளின் மூத்த மகன் மீனாக்ஷி சுந்தரனுக்குத் திருமண வயது வந்தும் வரன்கள் தட்டிக் கொண்டே சென்றன. அவனோ எந்த மேட்ரிமோனியைப் பார்த்தாலும் நல்லா ஃபேஷனாக உடை உடுத்தி முடியை விரித்துப் போட்டுக் கொண்டிருந்த மணப் பெண்களை செலக்ட் செய்ய அவனது அப்பத்தாளோ,”அப்பச்சி முடிய விரிச்சுப் போட்டுக்கிட்டு இருந்தா லெச்சுமி தங்காது வீட்டுல. நல்ல பதவிசான பொண்ணாத்தான் பார்க்கணும்.”என்று எதவான பெண்களாகப் பார்க்க அவன் கண்ணில் அனைவரும் சப்பை ஃபிகராகத் தெரிந்தார்கள்.

இளவட்டமாக இருபத்தி ஐந்தில் பார்க்க ஆரம்பித்தது இருபத்தி ஆறு, ஏழு, எட்டு என்று வருடங்கள் ஓட இப்போது முப்பத்தி ஆறில் முன்புற வழுக்கையும் லேசான தொந்தியுமாய் குட்டி அப்பச்சி ஆகிக் கொண்டிருந்தான். இரண்டு மூன்று செட்டியார் வீட்டுப் பையன்கள் அவனோடு மற்ற பொறியியல் வகுப்புக்களில் இருந்ததால் சிவில் இன்ஜினியரிங் படித்த கல்லூரிக் காலத்திலேயே அவனுக்கு நண்பர்கள் இட்டபெயர் சிவில் அப்பச்சி. 

150 ப்ரோஃபைல்களில் இருந்து கோவில், வயது, படிப்பு, வேலை, குடும்பம், பெண்ணின் தோற்றம், குடும்பப் பேர் இவற்றில் வடிகட்டி முதன் முதலாக ஜோசியம் பார்க்கச் சென்றபோது மகனுக்குப் பொருந்தமாகப் பதினெட்டுப் பெண்களின் ஜாதகங்களை எடுத்துச் சென்றாள் புவனா. ஜோசியர் அதில் நான்கை பொருத்தமில்லை என விலக்கினார். மாமனார் இருக்கேளா மூலம் ஆகாது, மாமியார் இருக்கேளா ஆயில்யம் ஆகாது. செவ்வாய் இருக்கா பையனுக்கே ஆகாது. ராகு கேது இருந்தா பையனுக்கும் ராகு கேது இருந்தால்தான் செய்யணும்.

இவன் சாதுவான பையனுங்க. சிம்மமெல்லாம் வேண்டாம். பையனை அடிச்சிரும். இதெல்லாம் ரஜ்ஜு தட்டும். குடும்ப ஒற்றுமை, ஸ்திரீ தீர்க்கம், குழந்தைப் பேறு இதெல்லாம் கிடையாது. என்று வடிகட்டி பத்துக்கு எட்டு ஒன்பதுன்னா உத்தமம். ஆறு ஏழுன்னா மத்திமம்னு 4 ஜாதகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். மேலும் ஆறு நட்சத்திரங்களைக் குறிப்பிட்டு இதுல எல்லாம் பொண்ணு ஜாதகம் வந்தா கொண்டு வராதீங்க. இவருக்குப் பொருந்தணுமில்ல.  பொருத்தமாய் இருக்காது, அதுனால சொன்னேன் என்றார்.

பையனுக்கு வேறு ஜாதகத்தில் ஓரு கட்டத்தில் சூரியன் சுக்கிரன், செவ்வாய், புதன் என்று நட்சத்திரக் குடும்பமே குந்தி இருந்தது. இப்ப அவளே ஜாதகக் கட்டம் மட்டுமல்ல திசாபுக்தி, லக்கினத்துக்கு ரெண்டிலோ பன்னிரெண்டிலோ, ஏழிலோ எட்டிலோ பாவக் க்ரகம் இருந்தால் செய்யக் கூடாது. ஐந்தில் பாவக்கிரகம் இருந்தால் பிள்ளைப்பேறைப் பாதிக்கும் என்று சொல்லுமளவு தேறி இருந்தாள். 

இப்பிடி கிரகங்கள் கும்மி அடிப்பதால் மூன்று நான்கு பரிகாரங்களை எழுதித் தந்தார். அவர் சொன்னபடி தேவிபட்டினத்தில் நவக்ரகத்தைச் சுற்றி வந்து உப்பும் நவதானியமும் கொட்டிவிட்டுக் குளித்துவிட்டு உடுத்திய உடுப்புக்களை அங்கேயே உரிந்து போட்டுவிட்டு வேறு மாற்றிக்கொண்டான். பலவண்ண உடுப்புகள் மலைபோல் குவிந்து கலர் கலரான பாம்புகள் போல் அசைந்து கொண்டிருந்தன நீரில்.

ராமேஸ்வரத்தில் 22 தீர்த்தத்திலும் நீராடி ராமநாதரை தரிசித்து வரணும். புவனாவின் குடும்பமே தீர்த்தமாடினார்கள். அரியக்குடியில் பெருமாளுக்கு வேஷ்டியும் அம்பாளுக்குப் புடவையும் தாலியும் சாத்தவேண்டும். மகனைக் கூட்டிக் கொண்டு அப்பச்சி ஆத்தாளோடு போய் அரியக்குடியில் சொல்லி வைத்துப் பெருமாளுக்கும் தாயாருக்கும் வேஷ்டி, புடவை சார்த்தி தாலி செலுத்தி வந்தார்கள்.

வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய்க்குப் பரிகாரம் செய்யணும். அங்கோ செவ்வாயின் பக்கத்தில் ஆண் பெண் குழந்தைகளின் கூட்டமான கூட்டம். ”இதென்னம்மா ஒருவர் மடியில் இன்னொருவரை உட்கார வைக்கவில்லை, பொண்ணுங்க எல்லாம் பாவம்” என்று சலித்துக் கொண்டான் மகன். அவ்வளவு நெருக்கடி.

அறிந்தவர், அறியாதவர், தெரிந்தவர், தெரியாதவர், கூகுளாண்டவர், வாட்ஸப் அறிஞர்கள், யூ ட்யூப் ஜோதிடர்கள் சொன்ன பரிகாரமெல்லாம் இன்ன கடவுள், இன்ன முறை என்று எல்லாம் பாரபட்சம் பார்க்காமல் செய்து வந்தாள் புவனா. யாரும் செய்வினை வைத்து விட்டார்களோ என்று பயந்து கூட சுவாதி நட்சத்திரத்தன்று 108 தேங்காய் மூலைக் கருடனுக்கு உடைத்தாள்.

குருவுக்கு அர்ச்சனை, சனிதான் நீ வணங்க வேண்டிய ஒரே கடவுள். ராகுவுக்குப் பரிகாரம் செய். ஆஞ்சநேயருக்கு தயிர்சாத மூட்டை கட்டு. 5 வாரம் கட்டி அதோடு வெண்ணெயும் சாத்தினான்.

சாமிக்குச் சாத்திய புடவைகளை ஏலத்தில் எடுத்தால் நல்லது என்று ஒருமுறை ஐயாயிரத்துக்கும் இன்னொரு முறை பதிமூன்றாயிரத்துக்கும் ஏலம் எடுத்து அது அலமாரியின் கீழ் தட்டைப் பர்மனண்டாகப் பிடித்திருக்கிறது. அதை சுத்தபத்தமாக இருக்கும் நாட்களில் ஓரிருமுறை உடுத்தியும் பார்த்துவிட்டாள். சொந்தக்காரர்களின் பேரப் புள்ளைக்குத் தொட்டியாகவும் கட்டி ஆட்டினாள்.

பிள்ளையாருக்கு வாழைப்பழ மாலை மற்றும் வாழைப்பழ நிவேதனம். பதினோரு வாழைப்பழங்களை மாலையாகக் கட்டிப் போட்டு இரு வாழைப்பழங்களை வெற்றிலை பாக்கோடு படைத்து மிச்ச மூன்று வாழைப்பழங்களை ஏழு துண்டாக வெட்டி நடுவில் குடைத்து நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும் என்று சொன்னாள் தோழி. சொன்னது தோழியாச்சே, அதனால் இதுபோல் பதினோரு வாரம். கும்பிட்டாள். அதன் பின் அதை மாட்டுக்குக் கொண்டு சென்று மறுநாள்கொடுக்க வேண்டுமாம். சிலசமயம் வாழைப்பழம் அதிகம் கனிந்துவிட்டால் அதை மாடு கூட முட்டி விட்டுக் காலால் சிதைத்துச் சென்றது.

அய்யோ பிரசாதம் ஒழுங்கா சாப்பிடு என்று அதை மிரட்ட முடியுமா என்ன. ஒருமுறை பக்கத்துக் கடைக்காரர் தன் அக்கா வீட்டில் மாடு இருப்பதாக வாங்கிச் சென்றார். நன்கு கிண்ணென்றிருந்த வாழைப்பழ மாலையை அவர் பார்த்த பார்வையைப் பார்த்தால் அது மாட்டுக்குப் போச்சோ அல்லது மனுசருக்குப் போச்சோ என்று எண்ணத் தோன்றியது.

பிள்ளையாருக்குப் பதினாறு நாள் பதினாறு மஞ்சள்கிழங்கை மாலையாக் கட்டிப் போடுங்க என்றார் ஒரு புத்தகப் பூசாரி. பிள்ளையார் மஞ்சள் மாலையோடு இருப்பாரே என்று அவ்வப்போது பன்னீர்ப் பூவையும் மாலையாகக் கட்டிப் போட்டு வந்தாள். பதினாறுநாள் கழித்து அபிஷேகம் ஆராதனை செய்து பிரசாதம் செய்து சுண்டல், கொழுக்கட்டை, பொங்கல் சகிதம் உண்டு வந்தார்கள் கணவனும் மனைவியும்.

பேரையூரில் ராகுகாலத்தில் பால் அபிஷேகம் பண்ணி அர்ச்சனை செய்யணும். அங்கோ ஊர்ப்பட்ட க்யூ. ஓம்காரச் சுனையின் ஒரு பக்கம் இருந்தது ராகு சந்நிதி. நடுவில் சிவன். கோயில் பூராக் கல் நாகங்கள் அணிவகுத்தன. அவள் கனவில் கூடக் கற்பாம்புகள் நெளிந்தன. அடுத்துத் திருநாகேஸ்வரத்தில் ராகுவுக்குப் பரிகாரம். பால் அபிஷேகம், அர்ச்சனை. நீலநிறத்தில் பால் வழிந்து ஒடியது. ராகுவின் முன்னே நூற்றுக் கணக்கான பெண்கள் பிள்ளைகள் பெற்றோர்கள். ”இந்த ராகு கேதுவுக்கெல்லாம் இந்தமாதிரிக் கோயில்கள்ல உக்கார இடமா இல்லை எங்க பிள்ளைகள் ஜாதகத்தில் வந்து வேண்டாத எடத்துல எல்லாம் ஒக்காந்திருக்குது” என்று சலித்தபடி சொல்லிச் சென்றாள் ஒரு பெண்ணின் அம்மா.  

பிள்ளையார் ஆஞ்சநேயர் கோவிலுக்கு 48 நாட்கள் போய் வணங்கி தினம் பத்து ரூபாய் தட்டில் போட்டு வந்தாள். மாலை வாங்கி 108 பிரகாரம் வலம் வந்து பூர்த்தி செய்ததோடு மகனுக்குத் திருமணம் அமைந்தால் சந்தனக் காப்பும், வெண்ணெய்க் காப்பும் செய்வதாக உறுதி அளித்து விட்டு வந்திருக்கிறாள் பிள்ளையாரிடமும் ஆஞ்சநேயரிடமும். விட்டு விட்டுத்தான் போக முடிந்தது கொரோனாவால்.

திங்கட்கிழமை அம்பாளுக்கு வெள்ளைப் பூ சார்த்தி பூஜை செய்யணும். என்றார் ஒரு அர்ச்சகர். அம்பாளுக்கு மட்டுமென்ன சுவாமிக்கும் சேர்த்தே வெண்பூ சார்த்திப் பூஜை செய்தாச்சு. இதுபோக சிவன் கோவிலில் பள்ளியறை பூஜைக்குப் பால் வாங்கிக் கொடுத்தா நல்லது. பள்ளியறை பூஜைக்குப் பால் வாங்கிக் கொடுத்துப் பூர்த்தி நாளில் பூமாலையும் சார்த்தினாள்.

மனத்தாங்கல் ஏற்படும்போதெல்லம் குடும்ப ஜோசியர்கள் வேறு அவளை வழி நடத்தினார்கள். திருநெல்லிக்காவல்தான் இதற்கான ஸ்தலம். அங்கே போய்க் கும்பிடு என்று ஒரு உறவு ஜோசியர் சொல்ல உடனே காரை எடுத்துக் கொண்டு இரண்டு பக்கமும் வாய்க்காலும் வரப்பும் வயலும் தொடர உயிரைக் கையில் பிடித்தாற்போல் ஒருபயணம். நல்ல வேளை கோபுர வாசல் திறந்திருந்தது. அர்ச்சகர் வராததால் பூட்டியிருந்த கர்ப்பக்கிரகக் கதவின்  வழியாகச் சாமியைத் தரிசித்து வெளியே வந்தார்கள்.

இதுக்கு ஒரே பரிகாரம் இராகுவுக்கு விளக்கேற்றுவதுதான். தன் கல்யாணத்துக்கே துர்க்கைக்கோ ராகுவுக்கோ விளக்கேற்றாதவள் மூன்று வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை நாலரை டு ஆறு மணிக்கு சிவன் கோவிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றினாள். இப்போதெல்லாம் துர்க்கை சந்நிதியில் ஏற்றக் கூடாதாம். வெளியேதான் ஏற்ற வேண்டுமாம். துர்க்கை சந்நிதியில் ஏற்றி ஒரு தட்டில் வைத்து வெளியே கொண்டுபோய் வைத்தாள்.

அடுத்து ராகுவுக்கே அர்ச்சனை செய்து விளக்கு ஏற்ற வேண்டும் என்று சொன்னதால் நவக்ரக சந்நிதியில் காத்திருக்க அந்த அர்ச்சகரோ இங்கே அர்ச்சனைதான் செய்யணும். வெளக்கை வெளியேதான் ஏத்தணும் என்றார். அங்கே தொங்கிய நிலை விளக்கில் யாருக்கும் தெரியாமல் தான் கொண்டு சென்ற எண்ணெயை சிறிது ஊற்றி விளக்கேற்றுமாறு அர்ச்சகரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். அவரும் ஏதோ தயவு பண்ணி ஊற்றினார்.

வயசானவர்களுக்கு மாதுளம் பழம் வாங்கி கொடுத்தால் ராகு தோஷம் நீங்கி விடும் என்று புதுசாக ஒரு புரளியை யாரோ கிளப்பி விட்டிருந்தார்கள். வயசான சொந்தக்காரவுகளுக்கு மாதுளம்பழம் வாங்கிக் கொடுத்தாள். இதென்ன இம்புட்டுச் செவப்பாயிருக்கு. பீட்ரூட் சாயத்தை ஊசில ஏத்தி இருப்பானோ என்று சந்தேகப்பட்டாக தூரத்துப் பெரியத்தா ஒருத்தவுக. செம்புராங்காளிக்குக் குங்குமம் வாங்கிக் கொட்டினாள். வீட்டிலும் மாதுளையும் குங்குமமும் செந்நிறமாய்க் கொட்டின.

ஒரு ஜோசியரிடம் சென்று இவ்வளவும் செஞ்சிருக்கேனே. எப்போதுதான் மகனுக்குத் திருமணம் ஆகும் எனக் கேட்டபோது அவர் ஒருபேப்பரை வைத்து கொண்டு எதையோ எழுத ஆரம்பித்தார். ‘வடகிழக்கில் இருந்து பெண் அமையும். இரண்டு குழந்தைகள் உண்டு. 36 வயதில் திருமணம் நடைபெறும்.ஒங்க வீட்டுல நாலு தலைமுறைக்கு முன்னாடி தாய் தகப்பன் சொத்தைத் தன் தங்கச்சிக்குத் தராம அண்ணன் தம்பிக பங்கு போட்டுக்கிட்டாங்க. அந்தப் பொண்ணு தன் கணவரோடு காளி கோயிலுக்குப் போய் காணிக்கை வைச்சு வேண்டிக்கிட்டு இருக்கு. இந்த வீட்டுக்கு வந்து சாபம் போட்டுட்டுப் போயிருக்கு. அது இந்தக் குடும்பத்தின் மூத்த வாரிசான ஒங்க பிள்ளை தலையில விழுந்திருக்கு. அதுனால  ராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடி ராமநாத சாமிக்கு வெண்பட்டுச் சார்த்த வேண்டும்’.

நீங்க முன்னாடியே தில பூஜை செய்திருக்கீங்க. அதுனால கொஞ்சம் வீர்யம் இப்பக் கொறைஞ்சிருக்கு. இப்ப இந்த பூஜை பண்ணிட்டாக் கல்யாணம் ஆகிரும். திரும்ப ராமேஸ்வரத்துக்குப் படையோடு சென்று வெண்பட்டுச் சார்த்தினார்கள்.

அதன்பின்னும் பெண் வீட்டார் போனையே எடுப்பதில்லை. அப்பாவோ அம்மாவோ எடுத்தாலும் எகனை மொகனையான பேச்சு. மதிக்காத டோன். போனால் போகுதுன்னு வெவரத்தை வாட்ஸப்பில் அனுப்பச் சொல்லி விட்டுத் தங்கள் பெண்ணைப் பற்றிய விவரத்தையோ ஃபோட்டோவையோ கூட  அனுப்பாமல் கம்முன்னு இருக்குறது. ஒருதரம் ரெண்டு தரம் இல்லை பல தரம் இப்பிடி நடந்திருக்கு.

பொண்ணுக்கு அம்மாதான் அநேக ஆர்டர்கள் கொடுப்பார். “நாங்க இந்த ஊர்ல இருக்கோம். மாப்பிள்ளை இந்த ஊருக்கு வரணும்””. வீட்டோடு மாப்பிள்ளை என்று சொல்லவில்லை. ஏன் டைவர்ஸ் ஆனது என்று கேட்டதற்கு அவர் குடிச்சிட்டு அடிச்சார். வெளிநாட்டுல வேற கல்யாணம் பண்ணி இருக்காரு. அவன் ஆம்பிள்ளையே இல்லையாம் என்று காரணங்களை அடுக்கினார்கள். முன்பெல்லாம் பெண் பார்ப்பதுபோல் இப்பவெல்லாம் மாப்பிள்ளையை மட்டும் பார்க்கப் பெண்ணின் அப்பா, அம்மா, ஐயா, அப்பத்தா, ஆயா, மாமா, அத்தை வகையறா வருகிறார்கள்.

இப்பவெல்லாம் கருத்து வேறுபாடுன்னாக் கூட டைவர்ஸ் பண்றது சர்வ சாதாரணமாயிருச்சு. ஆனா அவனுக்கு அடுத்துக் கல்யாணமாகி ரெண்டு பிள்ளையாச்சும் பிறந்திருது. டைவர்ஸ் ஆன பொண்ணுக்குக் கூட முதல் கல்யாண மாப்பிள்ளை கிடைக்குது. ஆனா டைவர்ஸ் ஆன பையனுக்கு டைவர்ஸ் ஆகிக் குழந்தை இருக்கும் பெண் கூடக் கிடைப்பதில்லை.

இன்னொரு ஆச்சி சொன்னதுதான் அதிர்ச்சி ரகம். “உடம்பு சரியில்லாத பொண்ணைக் கட்டி வைச்சிட்டீகன்னு டைவர்ஸ் பண்ணிட்டாக”. அதைக் கேட்டதும் புவனா அடுத்து அந்த ஆச்சியின் நம்பரை முதல் காரியமாக ப்ளாக் செய்தாள்.

ஏதோ ஒரு பெண்ணுடன் கோவில் வயது படிப்புப் பையனுக்குப் பொருந்தி வந்தால் சந்தோஷமாகப் போன் செய்வாள் புவனா. அவர்களோ முகத்தில் அடித்தாற்போல் டபுள் டிகிரி படிச்சிருக்கான பையன், எங்க பொண்ணு மாசம் மூணு லெட்சம் சம்பளம் வாங்குது, உங்க பையன் அதுல பாதிதானே வாங்குறான். அப்புறம் ஈகோ க்ளாஷ் வந்திரும்” என்பார்கள். மாப்பிள்ளைக்கு தலைமுடி கம்மியாயிருக்கு , குண்டாயிருக்காங்க என்பதைச் சொல்லாமல் இவள் எவ்வளவுதான் ஜாதகம் பொருந்தி இருக்கு என்று படித்துப் படித்துச் சொன்னாலும் ஜாதகம் சுத்தமாப் பொருந்தலை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வார்கள்.

இன்னொரு ஜோசியர் ஆன்லைனில் பணம் கட்டினால் பரிகாரம் சொன்னார். கன்சல்டேஷனில் இரண்டு மாலை வாங்கிக் கொண்டு நெய்வாசலுக்குப் போய் 501 ரூபாய் கட்டி ஹோமத்தில் கலந்து கொண்டு தாலி செலுத்தினால் திருமணம் ஆகிவிடும் என்றார். அவதி அவதியாய் மஞ்சு விரட்டு அன்று காரில் ஊரைத்தேடித் தேடிப் போகக் கரெக்டாக ஹோமம் முடிந்து இரண்டு மாப்பிள்ளைகள் வெளியே வந்தார்கள். 36 வயசுப் பையனுடன் சென்ற இவர்களைப் பார்த்து அந்த அர்ச்சகர் கேட்டார் பையன் வந்திருக்காரா. புருஷனும் பொண்டாட்டியும் சொல்ல வார்த்தையின்றி விழித்தார்கள். இவன்தான் பையன். இவருக்கு மாலையைப் போடுங்க என்று சொல்லி மாலை போடச் சொன்னார்கள்.

குலதெய்வம் கோவிலில் ஜாதகத்தை வைத்து வணங்கி வந்தால் திருமணம் ஆகும். எல்லாச் சாமிக்கும் அபிஷேகம், மாலை வஸ்திரம் சாத்தித் தளிகை படைச்சாக் கல்யாணம் ஆகுமென கைபார்த்தவர் ஒருவர் சொல்ல அதையும் செய்தாள். தைப்பூசம் முடிந்து குன்னக்குடியில் காவடியும் வேலும் வந்து பூஜை நடக்கும்போது போய்க் கும்பிட்டு அர்ச்சனை செய்து பூசாரி கையால் மாலை வாங்கிப் போட்டு வந்தால் கல்யாணம் நடக்குமென முருக பக்தர் ஒருவர் சொல்ல அதையும் ஏன் விடுவானேன் எனச் செய்தாள்.

காளி கோயில்ல போய் மண்ணெடுத்துக் கொண்டு வந்து கும்பிடு. யாரும் சாபம் போட்டிருந்தாலும் ஓடிப் போயிரும் என்று படைப்பு வீட்டில் சாமி வந்து பெரியாச்சி சொல்ல ஊரில் இருக்கும் காளி கோயில், பொன்னியம்மன், கருப்பர் கோயிலின் இருக்கும் காளி சன்னதியிலிருந்தெல்லாம் மண்ணை அள்ளிவந்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கும்பிட்டு வருகிறாள்.

நாகரைக் கும்பிடு என்று வாட்ஸப்பில் நீண்ட தகவல் பார்த்து வெள்ளி கிலோ ஒரு லட்சம் விற்கும் நிலையில் சின்ன வெள்ளி நாகர் சிலையை வாங்கி வந்து கொள்ளு, கருப்பு உளுந்து, கோதுமை பரப்பி அதில் மூன்று நிற ரவிக்கைத் துணிகள் வைத்து நாகரைப் பிரதிஷ்டை செய்தாள். தினம் தினம் பால், நீர், மஞ்சள் அபிஷேகம் செய்து ஓம் கணேசாய நமக, ஓம் குருவே நமக, ஓம் நாகராஜாய நமக, ஓம் நாககன்னிகையே நமக என்றெல்லாம் பலமுறை துதித்துப் பதினோறாம் நாள் பக்கத்திலிருக்கும் நாகாத்தம்மன் கோவிலில் கொண்டு சென்று வைத்து தாலி செலுத்திப் பூஜை தீப தூப ஆராதனை பார்த்து உடனே திருமணம் ஆகிவிடும் என மகிழ்ந்து வந்தாள். 

திருப்பதியில் திருக்கல்யாணம் பார்த்துத்தான் முதல் கல்யாணமே ஆச்சு. மூன்று டர்பன், மூன்று மாலை வீடு கொள்ளாக் கூட்டம். முதல் நாள் எல்லாம் யாரும் வராமல் ஊருக்கே அள்ளிக் கொடுத்த விருந்து. திருமணத்தன்று ஊரே வீட்டில் திரண்டுவிட இரவுப் பலகாரம், ரொட்டி, மிட்டாய், பூ எதுவுமே பத்தவில்லை. மிச்சமே இல்லை. பெண் அழைத்த விருந்தில் முதன் முதலாக மாப்பிள்ளைக்கு அப்பாவும் அம்மாவும் பரோட்டா சாப்பிட்டது அன்றைக்குத்தானாக இருக்கும். மனப் பொருத்தம் இல்லாமல் செய்த கல்யாணம். அம்மா அப்பாவுக்காகச் செய்து கொண்ட கல்யாணம் எல்லாம் நிலைக்காது என்று புரிய புவனாவின் மகனுக்கு இரண்டு நாளில் புரிந்து போனது. புவனாவுக்கோ அவனுக்கு டைவர்ஸ் ஆகியும் அது மட்டும் ஏனோ புரியாத விஷயமாய்ப் போனது.

புரோக்கர் மூலமாக் கல்யாணம் வந்தா அந்தக் காலத்துல அது வெளிய யாருக்கும் சொல்லக் கூடாத கொடுமையான விஷயம். சொந்தக் காரங்க சொல்லுற கல்யாணத் தாக்கல்லேயே எல்லாம் முடிவாயிரும். அங்க பொண்ணு இருக்கா, இங்க மாப்பிள்ளை இருக்கான்னு. திருமணம் செய்துகிட்டு எல்லாரும் உரசலோ, குறைச்சலோ இருந்தாலும் வெளியே சுமுகமாத்தான் காமிச்சிக்கிட்டு வாழ்ந்தாங்க.

”பிருந்தா சித்தியின் பெரிய மகளின் மகள்களுக்கும் திருமணமாகி ஆளுக்கு ஒரு பெண் குழந்தை. அவங்க சின்ன மகளுக்கு ரெண்டு பசங்க. அவங்க பேரன்களுக்கும் வரன் பார்த்துட்டு வர்றாங்க. பேத்தி கூட சமைஞ்சிட்டா. இன்னும் நம்ம மகனுக்கு இன்னோரு கல்யாணம் நடக்கலியே” என்று புலம்புவாள் புவனா அவ்வப்போது. ”மொதல்ல அவனுக்கு அடுத்த கல்யாணம் பண்ணிக்கணும்னு எண்ணம் வரணும். கமிட்மெண்ட் அப்பிடின்னே கழிச்சுக் கட்டிக்கிட்டு  இருக்கான். அவனுக்கா அந்த எண்ணம் வந்தாத்தான் நடக்கும். நீ என்ன பண்ணினாலும் நடக்காது. இதுதான் யதார்த்தம். உண்மையைப் புரிஞ்சிக்க” என்பார் அவள் கணவர்.

”இப்ப நான் நிம்மதியா இருக்குறது உங்களுக்குப் பிடிக்கலையா. சிங்கிளா இருக்குறது ஒண்ணும் தப்பு இல்ல. சமூகத்துக்காகப் பிடிக்காத, பொருத்தமில்லாத கல்யாணத்துல அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கதுதான் தப்பு. நான் இப்ப சந்தோஷமாவே இருக்கேன். நீங்களும் எனக்குக் கல்யாணம் ஆகாட்டா சொசைட்டி உங்களைக் குத்தம்  சொல்லும்னு கவலைப் படுறத விட்டுட்டு உங்களுக்குப் பிடிச்ச ஹாபில ஈடுபட்டு சந்தோஷமா இருங்க” என்று கூறிவிட்டான் புவனாவின் மகன்.

திருமணப் பதிகம், நீறுவரி ஆடரவோடு ஆமைமன, சடையால் எனுமால் சரண் நீ எனுமால் என்ற பாடல்களை 51 தரம் பாராயணம் செய்துவந்தால் திருமணம் ஆகும் என்று ஓரிரண்டு வருடமாகத் தினம் பாடி வருகிறாள். அவ்வப்போதும் வெள்ளிக்கிழமைகளிலும் வீட்டில் திருப்புகழ் பாராயணம் செய்வாள் புவனா.. விறல் மாரனைந்து மாலையில் வந்து மாலை வழங்கு என்று பாடிப் பாடித் தொண்டை வரண்டு போச்சு.

இப்ப அன்னூர் கோவில்ல இருக்குற சாமிக்கு திருக்கல்யாணம் பண்ணனும்னு புதுசா ஒரு ஜோசியர் சொன்னாராம். ”என்னது அன்னூரா..” என்றார் கணவர். மேலும் குணசீலத்துல துலா பாரம் கொடுக்கணுமாம். முன்னாடியே கோதானம் பண்ணி இருக்கணுமாம். திருமணஞ்சேரியில் பூஜை செய்து மாலை வாங்கி வரணுமாம். இந்தப் பையன் ஜாதகப்படி ஏற்கனவே டைவர்ஸ் ஆன பெண்ணைத்தான் முதல் கல்யாணம் செய்து இருக்கணும். அப்பிடி இருந்தால் இந்த டைவர்ஸ் ஆகி இருக்காது என்று புதுத் தகவல் சொன்னார் இன்னொரு ஜோசியர் என்றாள் கணவரிடம்.

இப்படித் தொடர்ந்து மன அழுத்தத்தோடும் மனவருத்தத்தோடும் புவனா இருந்ததைப் பார்த்த அவளின் சின்னத்தா மகள் மூணுதரம் மூணு வருஷமா ராமாயணம் படிக்கிற வீட்டிலேருந்து மாலை வாங்கியாந்து தந்தாள். நாலைந்து வருடமாகச் சாமி வீட்டிலிருந்து சாமிக்குப் போட்ட மாலைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கிட்டத்தட்ட பதினைந்து இருபது மாலைகள் இருக்கும். எல்லாம் சாமி ஷெல்ஃபின் கீழ்த்தட்டை அடைத்துக் கொண்டிருக்கின்றன. படைப்பு வீட்டிலிருந்து வருடம் ஒரு மாலை. வாராவாரம் அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்து வருவதால் சில சமயம் மாலை கிடைக்கும்.

வீட்டில் தற்போது தோராயமாகச் சேர்ந்திருக்கும் 38 மாலைகளுடன் ப்ரேமா சித்தி கொண்டு வரப் போகும் இரண்டு மாலைகளையும் வைக்க அந்த ஷெல்ஃப் போதுமா அதுக்கு மேல் ஷெல்ஃபையும் ஒதுக்க வேண்டுமா என்பதே இப்போதைக்குப் புவனாவின் கவலையாய் இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...