எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

குமரேச சதகத்தில் வாழ்வியல் விழுமியங்கள் – தேனம்மைலெக்ஷ்மணன்

குமரேச சதகத்தில் வாழ்வியல் விழுமியங்கள் – தேனம்மைலெக்ஷ்மணன்

முன்னுரை:- சதகம் என்றால் நூறு பாடல்கள் கொண்டது. தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று இச்சதக அமைப்பு. குமரேசர் என்று சொல்லப்படும் முருகக் கடவுள் பற்றிய 100 செய்யுட்களால் யாக்கப்பட்டது இந்நூல். 18 ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்புல்வயல் என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானின் மீது பக்தியுற்று இதை இயற்றியவர் குருபாததாசர் எனப்படும் முத்து மீனாட்சிக் கவிராயர்.

நூல் அமைப்பு:- புறப்பொருள் பற்றிய இந்நூலில் ஒவ்வொரு அடியின் முடிவிலும் புல்வயலில் உறையும் குமரேசக் கடவுளை வாழ்த்தும் முகமாகவும், உட்பொருளாக மனிதர்கள் கைக்கொள்ள வேண்டிய பக்தி, அன்பு, அறம், ஒழுக்கம், நேர்மை ஆகிய வாழ்வியல் விழுமியங்களை வலியுறுத்தியும், தமிழின், திருக்குறளின் மாண்பைச் சிறப்பிக்கும் வண்ணமும் பாடல்கள் அமைந்துள்ளன. காப்பு, அவையடக்கம் இவை தவிர 100 பாடல்கள் நூற்பயனுடன் ஆசிரிய விருத்தப் பாவில் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடுபொருளிலும் அதன் சார்பாகவும், எதிராகவும் பத்துமுதல் பன்னிரெண்டு பொருட்களை ஈடாகக் கூறி விளங்க வைக்கிறார் குருபாத தாசர். கிமு மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சாணக்ய நீதிக்கும், சௌரியப் பெருமாள் தாசர் என்பாரால் இயற்றப்பட்ட ஸ்ரீ பார்த்தசாரதி மாலை என்ற 100 பாடல்கள் கொண்ட நூலுக்கும் இந்நூலுக்கும் கருத்தளவில் அதிக ஒற்றுமை உள்ளது.

வேளாளர்களின் சிறப்பு:- விநாயகர் காப்பாக சரவணத்தில் தோன்றிய முருகனைக் காக்கும் குஞ்சர வணத்தானைப் பாடியுள்ளது சிறப்பு. அடுத்த பாடல் உலகத்தார் துன்பமுறும்போது அவர்கள் நினைப்பதற்கு முன் வந்து அதைத் தீர்த்து ஆறுதலை அளிக்கும் ஆறுமுகனைப் பாடுகின்றது. இரண்டாம் மூன்றாம் நான்காம் பாடல்களில் வர்ணாசிர தர்மப்படி அந்தணர், அரசர், வணிகர் ஆகியோரின் கடமைகள் பற்றிச் சொல்லப்பட்டாலும் ஐந்தாம் பாடல் இம்மூவரும் தம் கடமையைச் செவ்வனே ஆற்றிச் செல்ல உதவும் வேளாளரின் சிறப்பை  ”உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்பது போல் “வல்லமைகள் சகலமும் வேளாளர் மேழியின் வாழ்வினால் விளைவதன்றோ” என்று உரைக்கின்றது.

பெற்றோரின் சிறப்பு:- எளிமையான தலைப்புக்களில் அருமையான பாடல்கள். பெற்றவர் மட்டுமல்ல, வளர்த்தவர், கல்வி கற்பித்தவர், மெய்நெறியைக் காட்டியவர், அரசன், ஆபத்தில் காத்தவர், தமையன், மனைவியின் தந்தை, வறுமையை நீக்கியவர் ஆகிய அனைவரும் தந்தையே என நன்னிலை உணர்த்துகின்றார். சூரபதுமனை மயிலும் சேவலுமாக ஆக்கி நீ தெய்வமாய்க் காத்ததுபோல் அன்னமிட்டவர், அரசர், ஆசிரியர், உறவினர்கள் மட்டுமல்ல, மனைவிக்குக் கணவனும், பிள்ளைகளுக்குப் பெற்றோரும் பெரும் தெய்வம் என்பதையும் வலியுறுத்துகிறார்

பெண்ணின் கடமை:- நீதிபரிபாலனம் செய்யும் அரசன், நன்மைப் பொருள் கூறும் மந்திரி, நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் வீரன், நன்மருத்துவன், மெய்ஞானி ஆகியோர் ஒரு நாடு சிறக்கக் காரணம். அறிவை உண்டாக்குவது நூல். சொல்லுக்கு அழகு உண்மை. அதுபோல் கணவனை விளக்கமுறச் செய்பவள் பெண். மயிர்நீக்கின் உயிர்வாழாக் கவரிமானைப் பெண்ணுக்கு ஒப்புமைப்படுத்திக் கற்பு நெறியின் சிறப்பை விளக்குகிறார்.

உடல்நலம் பேணுதல்:- மீதூண் விரும்பல், மலசலம் அடக்கல், உண்டபின் குளித்தல், தூக்கம் கெடுதல், கலவியில் அதிவிருப்பம் கொள்ளுதலால் பிணி உண்டாகும். வருடமிருமுறை வயிற்றுக் கழிவு மருந்து, தினமும் தலைக்குத் தைலமிடுதல், பாலைக் காய்ச்சி, நீர்மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி உண்ணுதல், பசித்தபின் புசித்தல், உண்டபின்னே நீரருந்துதல், உணவுக்குப் பின் உலாவல் என்று இவர் கூறியிருப்பதை பின்பற்றினாலே எந்தப் பிணியும் நம்மை அணுகாது. யாக்கை நிலையாம உடையது..விருந்தும் மருந்தும் மூன்றுநாள்தான். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. எல்லாமே அதனதன் முறைமையில் இருக்க வேண்டும்.

அல்லவை நீக்குதல்:- இவர்க்கு இது துரும்பு என்று வரும் பாடலில் நற்பொருட்களின் தன்மையைப் புகழ்ந்தும் அற்பப் பொருட்களின் தன்மையை இகழ்ந்தும் கூறி வருகிறார். பெற்றோரைப் பழித்தவர்கள், நன்றி மறந்தவர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்தவர்கள், பஞ்சமாபாதகம் புரிந்தவர்கள், கொலைப்பாதகர்க்கு ஈடானவர்கள். களைப் பயிரைக் களைவதுபோல் துட்டர்களை, கெட்ட நினைவுடைய மனைவியை, நன்னெறியில் நில்லாதோரை அன்றே அடக்குதல் வேண்டும்.

நிசம் உரையாதோர் வாயிலும் தூய்மையற்ற இல்லத்திலும் மூதேவி குடியிருப்பாள் என எச்சரிக்கிறார். மணலைக் கூடக் கயிறாகத் திரித்துவிடலாம், ஆனால் நாய்வாலை நிமிர்த்தமுடியாது என்பதுபோல் கீழ்மக்கட்கு நல்லறிவு புகட்ட முடியாது என்கிறார். அடுத்தது காட்டும் பளிங்கு போல் அவரவர் செயல்களால் அவரவரை அறியலாம். செருக்குற்றுத் திரிபவர்களையும் குணக்கேடர்களையும் பெரியோரை மதியாதோரையும், விலை மகளைக் கூடுவோரையும், இலஞ்சம் வாங்குவோரையும் பேய்க்கு நிகர் என்கிறார்.

தக்கதருணத்தில் உதவி செய்யாதோர், உள்ளன்பு இல்லாதோர், தக்கபருவத்தில் செய்யாத திருமணம், ஈயாத செல்வம், காட்டில் பெய்யும் மழை, நற்குணமில்லாத பெண் இவற்றால் பயனில்லை. தற்பெருமை கொள்வோர், புறணி பேசுவோர் பதருக்கு ஒப்பாவர். தாயை அறியாத சேய், கணவரைப் பிரிந்த பெண்களின் வாழ்வு இன்பம் இல்லாத இளமைப் பருவத்துக்குச் சமமானது.

நற்குணங்கள்:- சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். சத்தியம் தவறாது இருப்பவரிடத்தில் செல்வம் பெருகும். இவர்களிடம் ஈகையும் சத்ருவை வெல்லும் திறனும் இருக்கும் எனவே உண்மையைக் கைக்கொள்க என்கிறார். நல்லவர்க்கு உயர்நெறிகள் மீதும் வேசி, கள்ளருக்குப் பொருளின் மீதும், காமுகர்க்குப் பெண்களின் மீதும் நினைவு. இழிந்தவருக்கு ஒழுக்கமில்லை. எனவே மனத்தூய்மையுடன் எண்ணுவதெல்லாம் உயர்வாக எண்ண வேண்டும் என்பதும் தெளிவாகிறது. பொறுமை, கற்புநெறி, நிறைகல்வி, அன்பு ஆகியனவே வலிமை வாய்ந்தவை.

மேன்மக்களின் சிறப்பு:- குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு கருதக்கூடாது. பொய்கூறாத நல்லோரிடத்து இலக்குமி குடியிருப்பாள்.  ”பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” என்பதற்கேற்ப பிறப்பினால் மேன்மையுறாமல் தத்தம் செயலினால் மேன்மையுறவேண்டும், அதுவும் மழை, ஊருணி, நிழல்தரும் தரு, கனி தரும் விருட்சம், ஊற்று, தண்ணீர்ப் பந்தல், சூரியன் சந்திரன், காற்றைப் போல் பலருக்கும் பயன்தரும்வண்ணம் வாழவேண்டும் என்கிறார்.நல்லொழுக்கத்தில் உறுதியாய் வாழ வேண்டும் என்பதற்காக அட்டாலும் பால் சுவையில் குன்றாது, சங்கு சுட்டாலும் வெண்மை தரும் எனவே மேன்மக்களாய் வாழுங்கள் என்கிறார்.

நட்பெனப்படுவது:- உரிய சமயத்தில் துணை செய்யாத நட்பால் பயனில்லை. நல்லவர், அல்லவர், வல்லவர் யாராயிருந்தாலும் அவரிடம் பகைமை கொள்ளக் கூடாது. அதனால் கெடுதியே விளையும்.

செல்வத்தின் பயன்:- செல்வம் வந்தாலும் பணிவு வேண்டும். ஈயாதவர்களால் எவருக்குமே நன்மையில்லை. உலோபிகளாக இருந்தால் அவர் செல்வம் களவுக்கும் தண்டனைக்குமே போகும். உலகம் உய்ய தானதருமங்கள் செய்தோர் இறந்தும் இறவாத புகழுடம்பு பெற்றவராகவும், தீயநெறியில் ஈடுபடுவோர் இருந்தும் செத்தவராகவும் கருதப்படுவர், செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல், ஆனால் அதே சமயம் பயனற்றவர்களுக்குச் செய்யும் உதவி விழலுக்கு இறைத்த நீர், காட்டில் பொழியும் நிலவொளி. எனவே உரியவர்க்கு உதவி புரிதல் வேண்டும்.

வினைப்பயன்:- அவரவர் வினைப்பயனை அவரவரே அனுபவித்திடல் வேண்டும். இப்பிறப்பில் நல்லவராய் இருந்தாலும் ”ஊழிற்பெருவலி யாவுள” என்பதுபோல் ஊழ்வினையை வெல்ல முடியாது. உரிய வினைப்பயனை அனுபவிக்காமல் தப்பவேமுடியாது. பெரியோர் சொல் கேளாதோர் விலங்குக்கு ஒப்பாவார். அற்பருக்கு வாழ்வு வந்தால் யாரையும் மதியார். எல்லோரையும் பகைத்துக் கொள்வோர் கெடுகோள்களைப் போன்றவர்கள். இறுமாப்புக் கொண்டால் இராவணன், இரணியன், துரியோதனன், மாவலி, கீசகன் போல் அழிய நேரிடும்.

ஆணின் கடமை:- அன்னை முதலாய உறவினரைக் கைவிடாமல் காக்க வேண்டும். மனைவி தவிர வேறோரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது. விலை மகளிர் உறவு பற்றியும் பிறன்மனை விழைதல் பற்றியும் சாடுகிறார். தீயவர் சேர்க்கை என்றும் கெடுதி தரும். சொன்ன சொல்லை, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். காலம் இடம் பொருளறிந்து செயலாற்ற வேண்டும். ஒருவரின் குற்றத்தை விடுத்துக் குணம் நாடி ஏற்கவேண்டும். விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை. மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு. இத்தகைய வாழ்வியல் நெறிகளை இவரைப் போல் இன்று போதிப்போர் யார் உளர் ?

மக்கட் சிறப்பு:- ”பருவத்தே பயிர் செய்” என்பதைப் போல தக்கபருவத்தில் திருமணம் குழந்தைப் பேறு முக்கியம் என உரைக்கிறார். பல பிள்ளைகளைப் பெறுவதினும் அறிவுடைய மகன் ஒருவனைப் பெறுவதே சிறப்பு. தந்தை மகற்காற்றும் நன்றியும், இவன் தந்தை எந்நோற்றான் கொல் என்று மகன் தந்தைக்காற்றும் உதவியும் இன்றியமையாதது.

தமிழின் சிறப்பு:- உயர்திணையானாலும் அஃறிணை ஆனாலும் சிறப்புடையன அவ்வவ்வினத்தில் உயர்ந்தவை. அதிலும் தமிழினில் அகத்தியம் மிகச் சிறப்பு வாய்ந்தது என்று தமிழ் மொழியையும் அகத்தியத்தையும் போற்றிப் புகழ்கிறார்..அதேபோல் திருமுருகாற்றுப் படை என்னும் தமிழ்ப்பாவைப் பாடிய நக்கீரன்முன் எழுந்தருளி அருள் பாலித்தவன் முருகன் என்கிறார்.

திருக்குறளின் பெருமை- திருக்குறளின் பல்வேறு கருத்துக்களை ஆங்காங்கே காண முடிகிறது. அறம் பொருள் இன்பம் என்னும் வகைமையிலும் இந்நூலில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இது 86 ஆம் பாடலில் ”அழுத்தமிகு குறளினுக் கொப்பாகவே பொருள் அடக்கமும் இருக்கவேண்டும்  என்பதில் வெளிப்படுகிறது.

பக்தி நெறி:- திருநீறு வாங்கும் முறை, தரிக்கும் முறை பற்றித் தெளிவுறக் கூறுகிறார். இறைச்சிந்தையில் உறையாத பிறவி பயனற்றது. செல்வமும் வாழ்க்கையும் நிலையற்றது. இறப்புக்குப் பின்னும் புகழுடம்போடு வாழ வேண்டும்.. திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணைவரும்.

நல்லோர் கைக்கொள்ள வேண்டியவை:- நீதி மிகு நல்லோர்கள் நிறைகுடம் போன்றவர்கள். பொறுமையே பெரியோர் மாண்பு. நல்லினம் சேர்வதால் நற்பழக்க வழக்கங்கள் வரும். ஆசிரியரின் ஆணைப்படி நடத்தல், பெற்றோரை வணங்குதல், ஒற்றுமையாகக் கூடிவாழ்தல், தெய்வீகத் திருப்பணி செய்தல்,ஈந்து உண்ணுதல்,சிறியோர் செய்யும் பிழை பொறுத்தல், சினத்தைத்தவிர்த்தல், பெரியோரைப் பணிதல், முன்னோர்களின் ஆன்மா அமைதியுறும் முகமாக வறியவர்க்குக் கொடுத்தல் ஆகியன நல்லோர் முறைமை என்கிறார்.

முடிவுரை:- இவ்வாறு தமிழ், பக்தி, அன்பு, அறம்,ஒழுக்கம், நேர்மை போன்ற வாழ்வியல் விழுமியங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலின்  முடிவிலும் முருகனின் திருவிளையாடலும் வாழ்க்கையும் புராணக்கதையாய் விரிகிறது. விநாயகருக்குப் பின் பிறந்த மெய்ஞான குருவாம், தகப்பன் சாமியாம் முருகனின் பாதம் பணிந்த குருபாத தாசன் இப்பாடல்களைப் படித்தவர்கள், கேட்டவர்கள், கற்றவர்கள் ஞானமும் முக்தியும் பெறுவார்கள் என வாழ்த்துகிறார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...