எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 1 ஜனவரி, 2024

எனது 25 ஆவது நூலுக்கு கவிதாயினி மதுமிதா அவர்களின் முன்னுரை

வாஞ்சைமணம் பரப்பும் வாடா மலர்கள்


தேவானை, திருநிலை, ஒப்பிலாள், உண்ணா, ஒமையாமற்றும் செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் - தேனம்மைலெக்ஷ்மணன் சிறுகதைத்தொகுப்பு நூல். 

உலகம் தோன்றி கோடிக்கணக்கான ஆண்டுகளாகி விட்டன. பல லட்சம் வருடங்களுக்கு முன்பு உலகில்உயிர் தோன்றி, பல்கிப் பெருகி ஓரறிவிலிருந்து ஆறறிவு உயிராக பரிணாமமடைய ஆரம்பித்தன. அதன் தொடர்ச்சியாக, பல்லாயிரக்கணக்கான வருடங்களாக தொடரும் வாழ்க்கைப் பயணத்தின் நீட்சியில், ஆதி மனித வாழ்க்கை, கற்கால வாழ்க்கை எனத் தொடர்ந்து மனித நாகரீகம் உருவாகி வரும் பாதையில்,ஆயிரம் வருடங்கள், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கைவரையிலும் இன்னும் ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கின்றன. செப்பேடுகளும், கல்வெட்டுகளும், பனையோலைகளும் இந்த உண்மைகளைக் கண்டறியும் ஆய்வில் துணை நிற்கின்றன. அச்சுத்துறை முழுமையான பயன்பாட்டுக்கு வந்த பிறகு, அந்தந்த காலத்தில் எழுதப்பட்டவை எழுத்தின் மூல ஆதாரங்களாக உள்ளன.

இதோ இன்றைய காலக்கட்டத்தில் நம் கண் முன்பாக கீழடியில்அகழ்வாராய்ச்சி நடப்பதைக் காண்கிறோம். பல உண்மைகளைக் கண்டடைந்து கொண்டிருக்கிறோம்.

இருநூறு, நூறு வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கை குறித்தும் ஆய்வுகள் விரிவாக செய்ய வேண்டும். இப்போதோ இணைய வளர்ச்சிக்குப் பிறகு, இருபது, பத்து வருடங்கள் மட்டுமில்லை… இரண்டு வருடங்கள், ஒரு வருடம் முந்தைய வாழ்க்கை கூட ஆவணப்படுத்தப் பட வேண்டிய விஷயங்களின் முக்கியவத்தை உணர்கிறோம்.

மனித குலத்தின் மொத்த வாழ்க்கையில், பெண்களின் வாழ்க்கை, மனித குல வளர்ச்சியில் பெண்களின் நிலை, பெண்களின் முன்னேற்றம், பெண்களின் உரிமைக்கான போராட்டம், ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளிலும் பெண்களின் பங்கு, ஒவ்வொரு துறையிலும் பெண்களின் வளர்ச்சி என்று நுண்ணிய நோக்கில் பார்த்துப் பதிவு செய்யப்பட வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

இந்த நூற்றாண்டில் உலகம் முழுக்க இருக்கும் பிரச்சினைகள், நம் நாட்டிலும், நம் மாநிலத்திலும் ஒரு விதமாக பிரதிபலிப்பதும், அதிலும், பருவங்கள் சார்ந்து உருவாகும், பெண்களுக்கான  தனிப்பட்ட பிரச்சினைகள் ஒவ்வொரு மாவட்டம் சார்ந்தும் வெவ்வேறு விதமாக இருப்பதையும் படைப்புகள் பதிவு செய்கின்றன.

இலக்கியம், எழுத்து என்று இந்தப் படைப்புத்துறைக்கு வரும்போது, எழுத்தாளர்களாக எழுதும் பெண்கள், மேலும், எழுத்தில், இலக்கியப் படைப்பில் படைக்கப்படும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய முக்கியத்துவம் நிறைந்த பெண்கள் உள்ளனர். இவர்களே அனைத்துப் பிரிவிலும் இருக்கும் பெண்களைப் பற்றி ஆழ்ந்து கவனித்து ஆழமாகப் பதிவு செய்து படைப்பில் நிரந்தரமாக வாழ வைக்கிறார்கள். மறக்கப்பட்ட, கவனிக்கப்படாத எளிய மக்களின் வாழ்வு நிலைகளை சாகா வரம் பெற்றவர்களாக மாற்றுகிறார்கள்.

தனிப்பட்ட இனம் சார்ந்த, பிரத்தியேக இடம் சார்ந்த, வட்டார வழக்கு மொழி சார்ந்த என்று பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின், பெண்களின் வாழ்வியல், உளவியல் குறித்து வெளிவரும் படைப்புகள் முக்கியத்துவம் பொருந்தியதாகப் பார்க்கப்படுகின்றன. அதிலும் அடித்தட்டு, மத்தியதரம், மேல்தட்டு பெண்கள் என்று வெவ்வேறு தளங்களிலும் விரிவாக ஆழமாக உணர்வுகளை வெளிப்படுத்திச் சொல்லப்படும் படைப்புகள் வீரியம் பொருந்தியவையாகப் பார்க்கப்படுகின்றன.

இதோ தேர்ந்த படைப்பாளியாக, தோழி தேனம்மைலெக்ஷ்மணன்இந்தக் கதைகளைப் படைப்பதன் மூலம், அப்படியான முக்கியத்துவம் பொருந்திய அந்தப் பணியைக் கையில் எடுத்துள்ளார்.

இந்தக் கதைகள் அனைத்தும், செட்டி நாட்டைச்  சார்ந்த மக்களின் வாழ்வியலின் பின்னணியில் படைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக செட்டி நாட்டுப் பெண்களின் வாழ்க்கையின்  கோட்டுச் சித்திரங்களாகவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரத்தியேகப் பிரச்சினைகளின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்சிப் படுத்துவதாகவும் படைத்திருக்கிறார்.

கதைகளுக்குள் போவதற்கு முன்பு கதைகளைப் படைத்தவரைப் பார்ப்போம். தோழி தேனம்மைலெக்ஷ்மணன் கவிஞர், எழுத்தாளர், வலைப்பதிவர், சுதந்திரப் பத்திரிக்கையாளர். சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண்பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு என்னும் படைப்புகள் தொடங்கி, வளையாபதி&குண்டலகேசி மூலமும் உரையும், நாககுமார காவியம், நீலகேசி, ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள், கோலங்கள், மகாபாரதக் கதைகள், சாணக்ய நீதி, சோகி சிவா ஆகிய இருபத்து நான்கு நூல்களின் ஆசிரியர். அமேஸானில் 57 நூல்கள் வெளியாகி உள்ளன.

இந்த 13 வருடங்களில் வெளிவந்த நூல்கள் இவை. நினைத்தும் பார்க்க முடியாத அயராத தொடர்ந்த உழைப்பினால் இதை சாத்தியப்படுத்தி இருக்கிறார்.

அழகப்பா பல்கலை வெளியிட்ட கருத்தரங்க நூலில் 20 ஆம் நூற்றாண்டு புதின ஆசிரியர்களில் ஒருவராக இடம் பெற்றிருக்கிறார். அழகப்பா பல்கலையின் தொலைதூர பாடத்திட்டத்தில் இவரது கவிதை இடம்பெற்றுள்ளது.

இவரை சந்தித்த நாளிலிருந்து, முதல் புத்தகத்திலிருந்து ஓய்வின்றி படைப்புகள் அளித்துவரும் இவரின் இந்த தொடர் வளர்ச்சியைப் பார்த்து பூரித்துப் போகிறேன். சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொண்டு இவரின் சிறுகதைகள் பரிசுகளைப் பெறும் போது பெருமிதம் கொள்கிறேன். போட்டிகளில், அச்சு இதழ்களில், இணைய இதழ்களில் வெளிவந்த சிறுகதைகள் இவை.

இந்த சிறுகதைகளில், ஒவ்வொரு பெண்ணின் வாழ்வும் அவர்களின் தியாகம் பொருந்திய வாழ்க்கையும் கணவனின் வாழ்வில் வந்த மற்ற பெண்களின் திருமண உறவை மீறிய உறவினைக் கடந்தும் நேசிப்பதும், இன்னொரு பெண், குழந்தைகளுடன் தம் வாழ்வில் வந்தாலும் அவர்களையும் வாழ வைக்க நினைக்கும் குணச்சித்திரமும், தன் அறியா வயதில் ருதுவாவதற்கு முன்பே திருமணம் செய்துகொண்ட உறவின் சத்தியத்தில் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் நேர்மையும் வாசிக்கையில் நம் மனதில் அந்தப் பெண் கதாபாத்திரங்கள் அப்படியே ரத்தமும் சதையுமாக உயிர்ப்புடன் வந்து நம்மை ஈர்த்து தங்களைடைய வாழ்வின் நோக்கத்தை நுண்ணிய மனதுடன் உணர்ந்து பார்க்கச் சொல்லி கோருகிறார்கள்.

முதுமையிலும் உடலும் மனமும்சோர்ந்த பின்பும் அன்புடன் குழந்தைகளுக்கு செய்யும் கடமைகள், தனிமை வாழ்வில் இருந்தாலும் சுயத்தை இழக்காமல் அனைவருக்காகவும் இரங்குதல் என்று விரிவாக ஒவ்வொரு கதையும் செட்டி நாட்டு வட்டார வழக்கு சொற்களில், கண்முன்னே திரைப்படக் காட்சிகளாக விரிகின்றன.

உயிருடன் இருக்கும் போது பணிபுரிவர்களிடம் நம்பிக்கை வைத்து உதவுதல் மட்டுமல்லாது, தங்கள் மறைவுக்குப் பிறகும், தனக்காக பணிபுரிவர்களின் குழந்தைகளுக்காக தன் உடலில் அணிந்த நகைகளை அவர்களுக்குத் தர வேண்டும் என்று அளிக்கும் மாண்பில் அந்த பணிபுரிபுவர் கலங்கும் போது நாமும் உடன் இணைந்து கலங்கிப் போகிறோம்.  நம்பிக்கை இழக்கும் தன்மையையும் அதில் குற்றமனப்பான்மையுடன் நினைவு கூறும் கதையையும் காண்கிறோம். மனம் வருந்தி திருந்துபவர்கள், குழந்தையால் கூட சித்தியின் மனதை மாற்ற முடியும் போன்ற உளவியல் சிறப்பையும், குழந்தைகளின் பாசம், பெற்றோர் குழந்தைகளை நேசிப்பது என்று பல்வகை கோணங்களில் கதைகள் சிறப்புற மிளிர்கின்றன. மனைவியை இழந்த கணவன், கணவனை இழந்த மனைவி அவர்களின் இணைந்த வாழ்க்கை என்று பல தளங்களிலும் கதைகள் பயணிக்கின்றன. வம்ச விருத்திக்கு வணங்கும் பெண்களுக்கு கட்டுப்படும் இயற்கை நம்மை உயிர்க்கச் செய்கிறது. உடல் உபாதைகள், மருத்துவ சிகிச்சைகள், ஆரோக்கிய விழிப்புணர்வை அளிக்கும் கதைகளாக விரிந்திருக்கின்றன. மனித நேயத்தை வளர்க்கும் வாஞ்சை மணம் பரப்பும் வாடா மலர்களாக மலர்ந்திருக்கின்றன.

’ஹரித்ரா நதி’ குறிப்பிடப்பட்ட இடம் வரும் போது அந்த இடத்துக்குச் சென்று நதியைப் பார்க்கும் ஆவல் எழுகிறது.

இணையம், மெயில், வாட்ஸப் முன்னிலை வகிக்கும் இந்தக் காலக்கட்டத்தில், தபால், தந்திமுறைகள் எல்லாம், காலம் கடந்து போகும் நிலையில், இவை இந்தக் கதைகளில் முக்கியப் பங்கை வகிக்கின்றன. அவர்களுக்கும் மக்களுக்குமான அழகான உறவு முறை கதை போகும் போக்கிலேயே சொல்லப்படுகிறது.

சில குறிப்பிட்ட உணவு வகைகள் பதிவு செய்யப்பட்டவை போல, இவர்கள் வணங்கும் தெய்வங்கள்,

’நீ கவலைப்படாதாத்தா. அக்கினியாத்தாளும் நரியங்குடிக் கருப்பரும் தொணையிருப்பாக.’,

’மூணும் பொண்ணாப் போச்சு. அடுத்தாவது மகளுக்கு மகனைக் கொடுங்கப்பா பழனி தெண்டாயுதபாணி. ராச கோபாலா’,

’மன்னார்குடி ராசகோபாலன் சந்நிதியில் தொட்டிலில் கிடக்கும் சந்தான கோபால கிருஷ்ணனை வேண்டி ஆராட்டிச் சீராட்டிப் பெத்த பிள்ளையல்லவா.’

’பாமா ருக்மணியோடு ராஜகோபாலன் உறையும் தட்சிணத் துவாரகையாம் அந்த ஊர்.’

இப்படி ஒவ்வொரு பேச்சிலும் வெளிப்படுவதை அப்படியே அந்த மொழிவழக்கில் உணர்வுபூர்வமாக பதிவு பெற்றுள்ளன.

உரையாடல் வசனங்களும் முக்கியத்துவம் பொருந்தியதாக அமைந்துள்ளன. ஒன்றே ஒன்றை மட்டும் எழுதி முடிக்கிறேன். மீதியை வாசித்து ரசியுங்கள்.

’நீங்கள்லாம் வாழ்வுக்காகக் காத்திருக்கீக..  நான் சாவுக்காகக் காத்திருக்கேன்’

இதை வாசிக்கையில் அதிர்ந்து சிறிது நேரம் கண்ணீர் மல்க அங்கேயே சில நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு, மீண்டும் வாசித்துவிட்டுப் பிறகு தொடர நேர்ந்தது. படைப்பாளியின் எழுத்தின் வெற்றியாக இதைப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கதையிலும் சொல்லப்படும் முக்கிய கதாபாத்திரமான ஒரு பெண் மட்டுமல்ல, அவரின் மேன்மையை சொல்ல வரும் ஒவ்வொரு பெண்ணும் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். அப்படியாக ஒரு முக்கியமான கதை சொல்லும் பாணி கைவரப் பெற்றிருக்கிறார் தோழி தேனம்மை.

தலைப்பில் வரும், பெண்களின் வாழ்க்கையை இந்தத் தொகுப்பில் 14 சிறுகதைகளில் ஆவணம் போல இந்தச் சிறுகதைகளைப் படைத்துள்ளார். ஆய்வுக்குரிய நூலாக நிச்சயம்  பேசப்படும், பல விருதுகளைப் பெறும் புத்தகமாக இருக்கும் இந்தப் புத்தகம் இன்னும் பல படைப்புகளை அளிக்கும் உத்வேகத்தை தேனம்மைக்கு அளிக்கட்டும்.

அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

அன்புடன்

மதுமிதா

05.10.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...