செவ்வாய், 30 ஜூலை, 2019

டாஸோஸும் டார்டெல்லானியும்.

2281. சொல்லிக் கொள்ளும்படியாக என்ன செய்தாய் என்ற கேள்வி துரத்தும்போது தூக்கம் போய்விடுகிறது.

2282. வைஷ்ணோ தேவி கோவிலுக்கு பாதி தூரம் மலை ஏற வேண்டும்.பின் இறங்க வேண்டும். இறக்கத்தில்தான் கோவில் அமைந்திருக்கிறது.

பயணத்தில் பதட்டப்பட வைக்கும் சரிவுகள் அதிகம். அதிலும் சிலர் குதிரைகளில் தேசிங்கு ராஜன்/ராணிகள் போல் பட்டிவாரில் கால்மிதித்து உய்யெனப் பறப்பார்கள்.

சிலர் டோலியில் போய்ச் சேர்ந்தால் போதும் என அரைகுறையாகப் படுத்திருப்பார்கள்.

ஜெய் மாதா தீ என ஒரு கோலைப் பிடித்து ஔவையார் பாணியில் ஏறி இறங்கிப் போய் வந்த நோவு ஒன்றுதான் நம் கடவுட் தேடலில் கிடைத்த அடையாளம்.

ஏறினோமா இறங்கினோமா. எதைப் பெற்றோம். வாழ்க்கையும் சிலசமயம் அப்படித்தான். எழுத்தும்..

2283. Tazos

2284. ஒரே இட நெருக்கடி. :D

ஞாயிறு, 21 ஜூலை, 2019

விகடக் கூத்தாடிய விச்வக்சேனர். தினமலர் சிறுவர்மலர் - 24.

விகடக் கூத்தாடிய விச்வக்சேனர்
நம்மிடம் இருக்கும் ஒரு பொருள் பறிபோய்விட்டால் அதைப் போராடிப் பெற முயல்வோம். மன்னர்கள் தம் பொருளை இழந்தால் யுத்தம் நிகழ்த்தி அப்பொருளைக் கைப்பற்றுவார்கள். ஆனால் விச்வக்சேனர் என்பவர் ஒரு பொருளைக் கைப்பற்ற விகடக் கூத்தாடினார். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
விஷ்வக்சேனர் என்பவர் ஆதிசேஷன் , கருடன் போல் நித்யத்துவம் வாய்ந்தவர். துலா மாசம் பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர் இவர். இவரின் மனைவி பெயர் சூத்ரவதி. இவர் எல்லாத் திசைகளிலும் விஷ்ணுவின் படைகளுக்கு சேனைத்தலைவராக விளங்குபவர். அதனால் இவரை சேனை முதலி, சேனாதிபதி ஆழ்வான் அப்பிடின்னு அழைக்கப்படுகின்றார்.
நம்மாழ்வாருக்கு உபதேசம் செய்த பெருமை உடையவர். பராசரபட்டரால் வணங்கப்பட்ட பெருமைக்குரியவர். சடகோபரே இவரோட அம்சமாகத்தான் அவதரித்தார். பெருமாள் என்ன நினைக்கிறாரோ அதை உணர்ந்து செயல்படுத்தக்கூடிய வலிமை வாய்ந்தவர் விஷ்வக்சேனர்.

வெள்ளி, 12 ஜூலை, 2019

சகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன். தினமலர் சிறுவர்மலர் - 23

சகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன்
இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பாசத்தால் விஞ்சிய சகோதரர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அதிகம் பேசப்படாமல் இராமாயணத்தில் ஓரிரு இடங்களில் ஆங்காங்கே வந்தாலும் சத்ருக்னன் இராமன் மேல் மட்டுமல்ல தன் சகோதரர்கள் மூவர் மேலும் கொண்ட பாசம் நம் கண்களைக் கலங்க வைத்துவிடும்.
அயோத்தியை ஆண்ட தசரத மன்னருக்குப் புத்திர பாக்கியமில்லை என்பதால் புத்திர காமேஷ்டியாகம் நடத்துகிறார். ஹோமப் ப்ரசாதமாக பாயாசம் தரப்படுகிறது. அதை தசரதரின் மனைவியரான கௌசல்யை, கைகேயி, சுமித்திரை ஆகியோர் அருந்துகிறார்கள். கடைசியாக அருந்தும்போது பாயாசப் பாத்திரத்தில் சுமித்திரைக்கு மட்டும் கடைசியாக இருமடங்கு பிரசாதம் கிடைக்கிறது. அதனால் கௌசல்யைக்கு ராமரும், கைகேயிக்கு பரதனும் பிறக்க சுமித்திரைக்கு லெக்ஷ்மணன், சத்ருக்னன் என்ற இரு மகன்களும் பிறக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் வசிஷ்டரின் வழிகாட்டுதலின் படி கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகிறார்கள்.  இப்படி இருக்கையில் ஒரு நாள் விசுவாமித்திர முனிவர் தனது தவத்துக்கு இடையூறு செய்யும் அரக்கர்களை அழிக்க ராமனையும் லெக்ஷ்மணனையும் அனுப்பும்படி தசரதரிடம் கேட்கிறார். குழந்தைகளைப் பிரிய தசரதர் தயங்கினாலும் அனுப்பி வைக்கிறார்.

வியாழன், 11 ஜூலை, 2019

காரைக்குடிச் சொல்வழக்கு. கா(ல்)ப்பொறப்பும் தோமாலையும்

1281. சதப்பெறட்டு, - சதை பிரண்டு போதல். ஏதாவது கடினமான காரியம் செய்யும்போது சதை பிசகிப் போதல். பொதுவாக கை அல்லது காலில். படிகள் அல்லது சீரற்ற தரையில் நடக்கும்போது கால் பிசகி கெண்டைக்காலில் அல்லது பாதத்தில்தான் அதிகம் சதைப்பிரட்டு ஏற்படும்.

1282. தவிடு வறுத்து ஒத்தனம், - இந்த சதைப்பிரட்டுக்குத் தவிட்டை வறுத்து ஒத்தடம் கொடுப்பார்கள். ஒரு துணியில் தவிட்டை முடிந்து வெறும் வாணலியை அடுப்பில் சூடேற்றி அதில் இந்த தவிட்டு மூட்டையைச் சூடுபடுத்தி வலிக்கும் இடத்தில் ( சுளுக்கு அல்லது சதைப்பிரட்டு ) ஒத்தடம் கொடுப்பார்கள்.

1283. புளிப்பத்து, - இந்த ஒத்தடத்தில் ( தவிட்டு ஒத்தனம் ) வலி தீராவிட்டால் புளியைக் கெட்டியாக கரைத்துக் கொதிக்க வைத்து வலிக்கும் இடத்தில் அந்தப் புளிச்சாறால் தடவி சூடாகப் பத்துப் போடுவார்கள்.

1284. முட்டப்பத்து, - நரம்பு போன்றவை பிசகி இருந்தாலோ அல்லது எலும்பில் விரிசல், மெல்லிய விரிசல் இருந்தாலோ ரத்தக்கட்டு ஏற்பட்டாலோ அதற்கு முட்டைப் பத்துப் போடுவார்கள். முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துப் பத்தாகப் பூசி விடுவார்கள். அது இறுக இறுக வலி குறையும். எலும்பை இணைக்கும். இந்தப் பத்துக்களை எல்லாம் முட/நுட வைத்திய சாலையில் போடுவார்கள்.  


தினமலர் திண்ணை பற்றி வாசகர் கடிதங்களும், மஞ்சளும் குங்குமமும் வெளியீடும்.

1. வாரமலர் திண்ணை பகுதியில் 20. 1. 2019 இதழில் எனது விடுதலை வேந்தர்கள் நூலில் உள்ள வேலு நாச்சியார் பற்றி ”திருமாங்கல்யம் அளித்து அஞ்சலி” என்ற தலைப்பில் குறிப்பு வெளியானது.

அது பற்றி 3. 2. 2019 வாரமலர் அர்ச்சனை (வாசகர் கடிதம்) பகுதியில் கிருஷ்ணகிரி , ராஜசிம்மன் அவர்களின் பாராட்டுக் கடிதம். மகிழ்வுடன் பகிர்கிறேன். தினமலருக்கு நன்றி :) டபிள் தமாக்கா 😍

புதன், 10 ஜூலை, 2019

டாலிஸ்மேனும் டேல் கார்னகியும்.

2261. கோவில் சாவி இல்ல. வீட்டு சாவிதான்

2262. அழகான மாத்தூர் நகர விடுதி

2263. இடுக்கண் வருங்கால் நகுக.

இத இலக்கியவாதிகளின் நண்பர்களுக்கு பொருத்தலாம்.
சக இலக்கியவாதியின் கஷ்டத்த கொண்டாடித் தீர்க்குறாங்க.
நாளைக்கு நமக்கும் இதேதான்.
எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம் ?

திங்கள், 8 ஜூலை, 2019

ஏகலைவன் கொடுத்த குருதட்சணை. தினமலர் சிறுவர்மலர் - 22.

ஏகலைவன் கொடுத்த குருதட்சணை
ஒரு வித்தையைக் கற்றுக் கொண்டால் கற்றுக் கொடுத்த ஆசிரியருக்கு தட்சணை கொடுப்பது அக்காலத்திய வழக்கம். ஆனால் மானசீகமாக ஒருவரை குருவாக வரித்து ஒருவன் ஒரு வித்தையைக் கற்றுக் கொண்டான். அந்த மானசீக குரு கேட்டதற்காக தன் கட்டைவிரலையே கொடுத்தான் அவன். அப்படிப்பட்ட வீரன் யார் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
மகதநாட்டைச் சேர்ந்த வேடுவ மன்னன் ஏகலைவன். அவன் தந்தை அடிக்கடி வேட்டைக்குச் செல்வார். ஒருமுறை தானும் வருவதாகக் கூறிச் சென்றான் ஏகலைவன். அடர்ந்த காட்டில் துஷ்ட விலங்குகளின் நடமாட்டமும் அச்சுறுத்தும் ஒலியும் அதிகமாக இருந்தது.
சிறுவனாக இருந்தாலும் பயப்படாமல் தந்தையுடன் சென்றான் ஏகலைவன். அவர் விலங்குகளின் ஒலியை வைத்தே அவை எங்கே, எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து வில்லில் அம்பு பூட்டி எய்து வேட்டையாடினார். பிரமிப்பின் உச்சத்தில் சென்ற ஏகலைவன் கேட்டான், “ தந்தையே எப்படி நீங்கள் விலங்குகளை நேரடியாகக் காணாமல் ஒலியை வைத்தே வேட்டையாடுகிறீர்கள். எனக்கும் கற்றுத்தாருங்கள். “

ஞாயிறு, 7 ஜூலை, 2019

காரைக்குடிச் சொல்வழக்கு. சிலேட்டு விளக்கும் சாரட்டும்.

இவர்கள் எங்கள் பெரியப்பா வெ. தெ. மாணிக்கனார் அவர்கள். இவர்கள் 1276*ஆவுடையான் செட்டியார் வீட்டைச் சேர்ந்தவர்கள். மாபெரும் தமிழறிஞர். பச்சையப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இவரது மாமனார் 1277* சேந்தனியார் வீட்டு ராமசாமி செட்டியார் அவர்கள். 1278* செட்டிநாட்டு அரசர் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களுடன் இருவரும் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம்.

சேந்தனியார் வீட்டு ராமசாமி அண்ணன் அவர்களின் மகன்தான் ( பெரிய கருப்பன் அவர்கள் ) காரைக்குடியில் தமிழ்க் கல்லூரியை நிறுவியவர். இன்றும் அது மாத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. 


வள்ளல் அழகப்பரின் அண்ணன் மகள் வள்ளியாச்சியின் வீட்டில் நான்காம் உலகத் தமிழ்க் கருத்தரங்கு நடைபெற்றபோது இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். மேங்கோப்பும் ஷாண்ட்லியர்களும் மிக அழகு.

சனி, 6 ஜூலை, 2019

என்ன சமையலோ..


என்ன சமையலோ..

கல்யாணம் ஆன புதுசுல கணவன் மனைவிகிட்ட ஆசை ஆசையாக் கேட்டான், ”உனக்கு என்னெல்லாம் சமைக்கத் தெரியும். ”.
மனைவி சொன்னா ”எனக்கு நூடுல்ஸ் சமைக்கத் தெரியும்.”.
கணவன் சொன்னான் “ அத நான் கூட செய்வேனே.. வெந்நீர் கொதிக்க வைச்சு அதுல நூடுல்ஸைப் போட்டா வெந்திரும் அதென்ன கம்பசித்திரமா . ”
மனைவி சொன்னா “அதேதாங்க எனக்கும் வெந்நீர் வைக்க மட்டும்தான் தெரியும். அதுல நூடுல்ஸைப் போட்டுக் கொதிக்க வைச்சு சாப்பிடுவேன்.” இதக் கேட்டு அந்தப் புருஷன் முகம் போன போக்கைப் பார்க்கணுமே..
ஏன் சமையல் என்பது பெண்ணுக்கும் மட்டும்தான் எழுதி வைச்சிருக்கா. அதை ஆண் பெண் இருவருமே செய்யலாம். என்ன விஷயம்னா. இந்தக் காலத்துல பையன் பெண் இருவருமே படிக்கிறதாலயும் வேலைக்குப் போறதாலயும் சமையல் கத்துக்குறதுமில்லை. அதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறதுமில்லை. கணவனும் மனைவியும் அவங்க அவங்க வேலை செய்யிற இடத்துல இருக்க உணவகத்துலேயே உணவை வாங்கி சாப்பிட்டுட்டுப் படுக்க மட்டும்தான் வீட்டுக்கு வர்றாங்க.

வெள்ளி, 5 ஜூலை, 2019

கல்லும் கனிந்து தாயானது. தினமலர் சிறுவர்மலர் - 21.

கல்லும் கனிந்து தாயானது
தவறு செய்பவர்கள் பலரகம். தெரிந்தே தவறு செய்பவர்கள்,தெரியாமல் தவறு செய்பவர்கள் என்று. சிலர் தவறே செய்யாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறானவர்களாகக் கருதப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். கம்பராமாயணத்தில் நிரபராதியான ஒரு பெண் அப்படித் தண்டிக்கப்பட்டு மனதால் கல்லான கதையைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஒரு முறை ப்ரம்மா குறையே இல்லாத ஒரு பெண்ணைப் படைக்க எண்ணினார். அவள் பூரணத்துவம் மிகுந்தவள். அவள் முன் மோகினி கூட நிற்க முடியாது. அவ்வளவு எழில், அவ்வளவு அழகு, அவ்வளவு சாந்தம். தன்மையா குணம் கொண்ட அவளை விண்மீன்களும் சூரியனும் சந்திரனும் கூட ஆராட்டிப் பாராட்டி வளர்த்தார்கள். குறையே இல்லாமல் படைக்கப்பட்ட அவள் பெயர் அகல்யை.
அந்தப் பெண்ணரசி திருமணப் பருவம் எட்டினாள். அவளை மணந்துகொள்ள இந்திரனும் மற்ற தேவர்களும் கூட போட்டி போட்டனர். அங்கே வந்தார் துறவியான கௌதம மகரிஷி.

வியாழன், 4 ஜூலை, 2019

காரைக்குடிச் சொல்வழக்கு :- ஊட வாரதும் நெருக்குவெட்டும்.

1256.சடைப்பெரம்பாய் - கெட்டிப்பிரம்பால் பின்னப்பட்ட பாய். இது பட்டாலையில் விரிக்கப்படும். சுமாராக ஆறடி அகலமும் பத்தடி நீளமும் கூட இருக்கும். பொதுவாக பட்டாலையில் விரிக்கப்படும் இது திருமணம், குடிபுகல் போன்ற விசேஷம் அனுவல் என்றாலும் திருவிழா சமயங்களிலும் பட்டாலை தவிர பத்தி முகப்பு ஆகியவற்றிலும் பெரும்பாலும் ஆண்கள் அமர விரிக்கப்படும். பெண்கள் அமர சமுக்காளம் விரிப்பார்கள். 

1257.குரிச்சி - சாய்வு நாற்காலி.இது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஓய்வெடுக்கப் பயன்படுத்துவது. ஈஸி சேர் போன்ற அமைப்பில் இருக்கும். மரத்தால் ஆனது. கால் வைக்க இருபுறமும் இருக்கும் கட்டைகளைப் பிரித்துவிட்டுக் காலை நீட்டித் தூங்கலாம். இதன் உடல் பகுதி பிரம்பு அல்லது பட்டை ப்ளாஸ்டிக்கால் பின்னப்பட்டிருக்கும். இதன் மேற்பகுதி/முழுப்பகுதியும் யானையின் முகபடாம் மாதிரி வெல்வெட் துணியால் போர்த்தப்பட்டிருக்கும்.  

1258.கவுளி சொல்லுதல் - பல்லி தட்டும் சத்தம். இது தட்டும் திசைக்கேற்பப் பலன் கொள்வார்கள்.  

புதன், 3 ஜூலை, 2019

கூகுள் ஹிந்தியும் நான்கு மொழிப்பாடமும்.

2241. நமக்கும் ஹிந்திக்கும் எல்லைத்தகராறு எல்லாம் இல்லை. ப்ரவேஷிகாவில் நெய்வேலியில் முதலாவதாகவும் தக்ஷின் பாரத் ஹிந்தி ப்ரச்சார் சபாவில் மூன்றாவதாகவும் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். டில்லியில் நான்கு வருடம் வாழ்ந்திருக்கிறேன். கட்பட் ஹிந்தி பஞ்சாபி ஸ்டைலில் கூட பேசுவேன் :)

#கூகுளில் தமிழில் ஒன்றைத் தேடும்போது கூட ஹிந்தி துருத்திக் கொண்டிருப்பதுதான் கடுப்பேத்துறாற் மைலார்ட்.

2242. நானெல்லாம் இந்தில ஒன்னு ரெண்டு கத்துக்கிட்டதே இந்தப் பாட்டிலேருந்துதான். :) சொல்லப்போனா சத்தீஸ் வரை கத்துக்கிட்டுருக்கேன்.

#EK DO THEEN CHAR PAANCH CHEY SAATH AAT NOU THAS KIYAARAH BAARAH THERAH.. :) :) :)

திங்கள், 1 ஜூலை, 2019

டைட்டானிக்கும் ஒபிலிக்ஸும்.

இதெல்லாம் ஒண்ணு சேர எங்க பார்த்தீங்கன்னு கேக்குறீங்களா. தியேட்டர்லயோ ஷாப்பிங் மால்லயோ  எல்லாம் இல்லை. கோவைப் பொருட்காட்சியிலதான்.

குழந்தைகளைக் கவர கோடை விடுமுறையில் பல்வேறு விதமான விளையாட்டுகள் கோவை மத்திய சிறையை ஒட்டிய திடல்ல பொருட்காட்சி, கண்காட்சியா நடந்துக்கிட்டு இருந்தது. அதில் நம்ம வீட்டு வாண்டுகளுடன் போனோம்.

இந்த டோரா டோரா மாதிரி சுத்துறதுல எல்லாம் பிள்ளைகளை தயதுசெய்து ஏத்த வேண்டாம். ஏத்திட்டு அது தாறு மாறா சுத்துறதப் பார்த்து டென்ஷனா ப்ரேயர் பண்ணியபடி இருந்தோம் எல்லாரும். உள்ளபடியே பிள்ளைகள் பயந்திருந்தாலும் அதை எல்லாம் வெளிக்காட்டிக்கலை.