சனி, 6 ஜூலை, 2019

என்ன சமையலோ..


என்ன சமையலோ..

கல்யாணம் ஆன புதுசுல கணவன் மனைவிகிட்ட ஆசை ஆசையாக் கேட்டான், ”உனக்கு என்னெல்லாம் சமைக்கத் தெரியும். ”.
மனைவி சொன்னா ”எனக்கு நூடுல்ஸ் சமைக்கத் தெரியும்.”.
கணவன் சொன்னான் “ அத நான் கூட செய்வேனே.. வெந்நீர் கொதிக்க வைச்சு அதுல நூடுல்ஸைப் போட்டா வெந்திரும் அதென்ன கம்பசித்திரமா . ”
மனைவி சொன்னா “அதேதாங்க எனக்கும் வெந்நீர் வைக்க மட்டும்தான் தெரியும். அதுல நூடுல்ஸைப் போட்டுக் கொதிக்க வைச்சு சாப்பிடுவேன்.” இதக் கேட்டு அந்தப் புருஷன் முகம் போன போக்கைப் பார்க்கணுமே..
ஏன் சமையல் என்பது பெண்ணுக்கும் மட்டும்தான் எழுதி வைச்சிருக்கா. அதை ஆண் பெண் இருவருமே செய்யலாம். என்ன விஷயம்னா. இந்தக் காலத்துல பையன் பெண் இருவருமே படிக்கிறதாலயும் வேலைக்குப் போறதாலயும் சமையல் கத்துக்குறதுமில்லை. அதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறதுமில்லை. கணவனும் மனைவியும் அவங்க அவங்க வேலை செய்யிற இடத்துல இருக்க உணவகத்துலேயே உணவை வாங்கி சாப்பிட்டுட்டுப் படுக்க மட்டும்தான் வீட்டுக்கு வர்றாங்க.

அவங்களுக்குக் குழந்தை பிறந்தவுடன் வீட்டுல உணவு செய்யிறது கட்டாயமான விஷயம் ஆயிடுது. எப்பிடியும் ஒரு கட்டத்துல குழந்தைக்கு உணவு சமைச்சுத்தானே ஆகணும். அத முன்னாடியே கத்துக்கலாம் வாங்க.
பெரிய பெரிய விசேஷங்களிலும் ஹோட்டல்களிலும் ஆண்களின் நளபாகம்தான் கமகமக்கும். டிவியிலும் ஆண் செஃப்கள் சமைச்சு அசத்துவாங்க. அவங்க என்ன பிறக்கும்போதே சமைக்கக் கத்துக்கிட்டா வந்தாங்க. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் மாதிரி சில வழிமுறைகளையும் சில சுருக்கான செயல்முறைகளையும் கத்துக்கிட்டா நாமளும் சமையல்ல அசத்தலாம்.
தினம் ஒருவேளை சப்பாத்தியோடு சாலட் போன்ற உணவுகளை எடுத்துக்கிட்டா காய் நறுக்குற வேலை மட்டும்தான். வெள்ளரி, வெங்காயம், தக்காளி, கேரட் போன்றவற்றைத் துருவியோ பொடியாவோ பெரிதாவோ நறுக்கியோ உப்பு சேர்த்து எலுமிச்சை பிழிஞ்சு மிளகுபொடியும் கொத்துமல்லித் தழையும் தூவினா சாலட் ரெடி. இதோட கெட்டித் தயிரும் விதம் விதமான ஊறுகாய்களும் வைச்சிக்கிட்டு சப்பாத்தியை வெட்ட வேண்டியதுதான்.
ஆமா சப்பாத்தி எப்பிடிப் பண்றதுன்னு கேக்குறீங்களா. ரெண்டு கப் கோதுமை மாவுல கால் டீஸ்பூன் உப்பு போட்டு ஒரு கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமா ஊத்திப் பிசைஞ்சு அரைமணி நேரம் கழிச்சு தேய்ச்சு தோசைக்கல்லில் சுட்டெடுத்தா சப்பாத்தி ரெடி.
சாதம் வைக்கணும்னா பச்சரிசின்னா ரெண்டு கப், புழுங்கல் அரிசின்னா மூணு கப் தண்ணீர் ஊத்தி குக்கர்ல வைச்சா மூணு விசில் வரும்வரை வச்சு இறக்கினா சாதம் ரெடி. துவரம்பருப்பை மொத்தமா வேகவைச்சு எடுத்துக்கிட்டா  சாம்பார், பச்சடி , கூட்டு எல்லாத்துக்கும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்துக்கலாம்.
அதிகம் சமைச்சு மிச்சமாகி அதை ஃப்ரிஜ்ஜில் வைச்சு சாப்பிடாம இருந்தாலே வயிறு நல்லா இருக்கும். அன்னன்னைக்கு செஞ்சதை அன்னன்னைக்கே காலி செய்துடணும். சில காய்களை ரொம்ப வேகவைக்க வேண்டாம். எடுத்துக்காட்டா புடலை, சௌ சௌ , காரட், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை அரைவேக்காடா சமைச்சாலே ருசியாவும் இருக்கும் சத்தும் போகாது.
பீன்ஸ் ரத்தக் கொதிப்பைக் குறைக்கும். கருணைக் கிழங்கு மூலத்துக்கு நல்லது. கேரட் கண்ணுக்கு நல்லது. பீட்ரூட் ரத்த சிவப்பணுக்களைப் பெருக்கும். வெண்டைக்காய் மூளைக்கு நல்லது. உருளையில் இரும்புச் சத்து இருக்கு. பீர்க்கங்காய், பூசணிக்காய் தாகவிடாய் நீக்கும். சாதத்துக்கு பதிலா காய்கறிகள் அதிகமா எடுத்துக்கிட்டா வெயிட்டைக் குறைக்கலாம்.
கலோரிஸை எண்ணி சமைக்காட்டியும் எண்ணெயை எப்பவும் ஒரு டீஸ்பூன் ரெண்டு டீஸ்பூன் மட்டுமே உபயோகிச்சு சமைக்கக் கத்துக்கணும். எல்லாக் காயையும் ஆவியில் வேகவைத்து எடுட்த்துத் தாளிச்சா ஒரு ஸ்பூன் எண்ணெய் போதும். எல்லாத்தையும் வறுத்துப் பொரிச்சிக்கிட்டு இருக்காம சூப் செய்தும் சாப்பிடலாம். வெள்ளரி, பைனாப்பிள் போன்றவற்றைத் தயிர்ப்பச்சடியாகவும் செய்து சாப்பிடலாம்.
எண்ணெயில் கடுகு உளுந்து பச்சைமிளகாய், வெங்காயம் கருவேப்பிலை தாளித்து தேவையான தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து உப்பு சேர்த்து, உடைத்த அரிசியோ , ரவையோ, சேமியாவோ சேர்த்து வேகவைத்து இறக்கினா உப்புமா ரெடி. இதையே குதிரைவாலி அரிசி, வரகு, சாமை, தினையிலும் செய்யலாம். ஆனால் இதுக்கெல்லாம் ஒரு கப்புக்கு மூணு கப் தண்ணீர் ஊத்தி குக்கர்ல ஒரு விசில் வரும்வரை வைச்சு இறக்கினா பொலபொலன்னு இருக்கும் உப்புமா.
சிறுதானியங்களையே பொங்கலா செய்யணும்னா ஒரு கப் சிறுதானியத்தோட கால் கப் பாசிப்பருப்பு, அரை டீஸ்பூன் மிளகு , சீரகம், சிறிய துண்டு இஞ்சி, ஒரு பச்சை மிளகாய் போட்டு மூணு கப் தண்ணீர் ஊத்தி குக்கர்ல வேகவைச்சு எடுத்து மசிச்சு உப்பு சேர்த்து சிறிது நெய்யில் உளுந்து, சீரகம், மிளகு, முந்திரி கருவேப்பிலை தாளித்துக்  கொட்டி இறக்கினா பொங்கல் ஆஹா ஓஹோதான்.
முளைவிட்ட பயறுவகைகள், கீரைகள் தினமும் ஒன்றாவது இருப்பது முக்கியம். காய்கறிகள் கீரைகளை நறுக்குமுன்னே நன்கு அலசி வைத்து அதன் பின் நறுக்கினால் சத்துக்கள் வீணாகாது. தேங்காய் வேர்க்கடலை, போன்றவற்றில் நல்ல கொழுப்பு அடங்கி இருக்கு. ஆவியில் வேகவைத்து உண்பது எல்லா வயதினருக்கும் ஏற்றது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நன்கு வேகவைத்த உணவுகளும் சூப் ஜூஸ் போன்றவையும் அத்யாவசியம். சுண்டல் வகைகள் தினமும் செய்யலாம். எந்தப் பயறு வகையையும் 12 மணி நேரம் ஊறவைத்து வேகவைத்துத் தாளித்தால் சுண்டல் ரெடி.
சத்துள்ளதை செய்யும்போது நமது பாரம்பரியப் பாத்திரங்களான மண் சட்டி, இரும்புத் தோசைக்கல் போன்றவற்றை உபயோகிப்பது நல்லது. அரிசி கழுவிய கழுநீரில் ஊறவைத்துத் தேய்த்துக் கழுவினால் புதிய மண்சட்டி, இரும்புக் கல் எல்லாம் புழக்கத்துக்கு வந்துவிடும். அலுமினிய பாத்திரம் ஓ பாசிட்டிவ் ரத்த வகையினருக்கு ஆகாது. இந்த நான் ஸ்டிக், டபர்வேர், மெல்மோவேர் போன்றவற்றின் மீது இருக்கும் மோகத்தைக் குறையுங்க. செம்புப் பாத்திரத்தில் நீர் வைத்துக் கொள்வது, கல்சட்டியில் குழம்பை ஊற்றி வைப்பது, ரசாயன மாற்றம் நிகழாத பீங்கான், மங்குப் பாத்திரங்களில் உணவு ஊறுகாய், தயிர் போன்றவற்றை வைப்பதன் மூலம் குடும்ப ஆரோக்யத்தைக் காக்க முடியும். எந்த உணவுப் பொருளையும் சமைத்தவுடன் வேறு பாத்திரத்தில் மாற்றி மூடிவைப்பது முக்கியம்.
இப்ப கிரைண்டர் மிக்ஸி எல்லாம் வேண்டாம்னு சிலர் பாரம்பர்ய முறையில் அம்மிக்கல், ஆட்டுக்கல் வாங்கி அரைக்கிறாங்க. இதுனால ஒரு வாரத்துக்கு அரைச்சு ஃப்ரிஜ்ஜில் வைச்சு பழசைச் சாப்பிடுவதுபோல் சாப்பிடாம அப்பப்ப ஃப்ரெஷா அரைச்சுக் கரைச்சு சாப்பிடலாம். ஜிம், ஃபிட்னெஸ் செண்டருக்கெல்லாம் போகாமயே கைகள் மெலியும். உடல் வளையும், கால்கள் நீளும் , கொழுப்பு கரையும்.
மனைவி சமைத்தா கணவன் காய் நறுக்கிக் கொடுக்கலாம். கிச்சன் வேலைகளை இருவரும் பகிர்ந்து செய்வதால அதன் கஷ்டங்கள் புரிவதோடு பரஸ்பரம் புரிந்துணர்வு பெருகும். முதல்ல எளிமையான சமையல் வகைகளை செய்து பழகிட்டா அடுத்து இடியாப்பம், புட்டு, அல்வா, அவியல், சொதின்னு சிக்கலான சமையலையும் பழக்கத்துலேயே எளிதா செய்ய தானா வரும்.
இப்பிடி வீட்டுலேயே சமைக்கிறதால பர்கர் பிஸ்ஸா கேஎஃப்சி சிக்கன்னு துரித உணவுகள் ரெடிமேட் உணவுகளுக்கு அடிமையாகாம நமக்கு வேணுங்கிறத நாமே வீட்டுலேயே செய்து சாப்பிடலாம். இதனால இப்போ பலருக்கும் வரக்கூடிய தைராய்டு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் , இதய நோய் போன்றவற்றை முளையிலேயே கிள்ளி எறியலாம். மருத்துவ செலவும் மிச்சம். வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என்பது பழமொழி.
இப்பிடிக் கணவனும் மனைவியும் அக்கறையோடு சேர்ந்து சமைச்சா வீட்டுக்குள்ளே நுழையும்போதே ”என்ன சமையலோ”ன்னு வெறுத்து ஓடாம ”இன்னிக்கு என் சமையல்” னு விரும்பி உண்பதா மாறிடும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)