ஞாயிறு, 21 ஜூலை, 2019

விகடக் கூத்தாடிய விச்வக்சேனர். தினமலர் சிறுவர்மலர் - 24.

விகடக் கூத்தாடிய விச்வக்சேனர்
நம்மிடம் இருக்கும் ஒரு பொருள் பறிபோய்விட்டால் அதைப் போராடிப் பெற முயல்வோம். மன்னர்கள் தம் பொருளை இழந்தால் யுத்தம் நிகழ்த்தி அப்பொருளைக் கைப்பற்றுவார்கள். ஆனால் விச்வக்சேனர் என்பவர் ஒரு பொருளைக் கைப்பற்ற விகடக் கூத்தாடினார். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
விஷ்வக்சேனர் என்பவர் ஆதிசேஷன் , கருடன் போல் நித்யத்துவம் வாய்ந்தவர். துலா மாசம் பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர் இவர். இவரின் மனைவி பெயர் சூத்ரவதி. இவர் எல்லாத் திசைகளிலும் விஷ்ணுவின் படைகளுக்கு சேனைத்தலைவராக விளங்குபவர். அதனால் இவரை சேனை முதலி, சேனாதிபதி ஆழ்வான் அப்பிடின்னு அழைக்கப்படுகின்றார்.
நம்மாழ்வாருக்கு உபதேசம் செய்த பெருமை உடையவர். பராசரபட்டரால் வணங்கப்பட்ட பெருமைக்குரியவர். சடகோபரே இவரோட அம்சமாகத்தான் அவதரித்தார். பெருமாள் என்ன நினைக்கிறாரோ அதை உணர்ந்து செயல்படுத்தக்கூடிய வலிமை வாய்ந்தவர் விஷ்வக்சேனர்.

இத்தனை பெருமை உடைய இவரை விஷ்ணு லெக்ஷ்மிக்கு அடுத்தபடியா நாம வணங்குறோம். இன்னும் இவர் கையில் ஒரு பிரம்பு ஒன்று இருக்கும். செங்கோல் போன்ற இதை ஏந்தித்தான் இவர் பெருமாளை வணங்கவரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவாராம். அதுவும் எப்பிடி தெரியுமா ? தேவர்கள், முனிவர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள், மருத கணங்கள், வித்யாதரர்கள், ஆழ்வார்கள், அடியார்கள்னு பொங்கிப் பெருகும் பக்த கூட்டத்தை பிரம்பை சாட்டை மாதிரி சொடுக்கி ஒழுங்குபடுத்துவாராம். சுருக்கமா சொன்னா முப்பத்து முக்கோடி தேவர்களும் இவரைப் பணிவார்களாம். அப்படிப்பேர்ப்பட்ட இவர் ஒரு வெண்தலை கபாலத்துக்கிட்ட விளையாட்டுக்காட்டவேண்டிய அவசியமும் நேர்ந்துச்சு.
ஒரு முறை சலந்திரன் என்னும் அரக்கனை அழிக்க விஷ்ணுவுக்கு ஈஸ்வரன் ஒரு சக்ராயுதத்தைக் கொடுத்திருந்தார். அந்த சக்ராயுதத்தை விஷ்ணு வீரபத்திரர் மேலே ஏதோ ஒரு கோபத்துல ஏவினார். வீரபத்திரர் கபாலங்களைக் கோத்து மாலையா அணிந்திருப்பார். அதுல ஒரு வெண் தலை கபாலம் என்ன பண்ணுச்சு தெரியுமா.
விஷ்ணு ஏவின சக்ராயுதத்தை டபக்குன்னு வாயை அகலமா திறந்து முழுங்கிடுச்சு. அஹா அதை வைச்சுத்தானே காத்தல் தொழிலை செய்துக்கிட்டு வந்தார் விஷ்ணு. அது இல்லாமல் என்ன செய்றது. இந்த வெண் தலை கபாலம் முழுங்கிடுச்சே. என்று யோசனையில் ஆழ்ந்தார் விஷ்ணு.
விஷ்ணு என்ன நினைச்சாலும் அது விஷ்வக்சேனருக்குத் தெரிஞ்சிடும்தானே. அதுனால அவருக்கு அந்தச் சக்கரம் இல்லாம விஷ்ணு என்ன செய்வார்னு கவலை வந்திருச்சு. ஒரு தரம் வயிரவரோட சூலத்துலேருந்து விஷ்வக்சேனரை விஷ்ணு காப்பாத்தி இருந்தாரு. அதுனால என்னவாவது செஞ்சு அந்த சக்ராயுதத்தை மீட்டு விஷ்ணுவுக்குத் தரணும்னு விஷ்வக்சேனர் ஆசைப்பட்டாரு.
அதுனால நேரே வீரபத்திரர் கோயிலுக்குப் போனாரு. ஆனா அங்கே காவல் காக்குற பானுகம்பன் போன்றவங்க விடல. பிடிச்சி வெளியே தள்ளினாங்க. ஆனாலும் விஷ்வக்சேனர் மனம் சோர்ந்து போயிடல. கோயிலுக்கு உள்ளேதானே போய் வீரபத்திரரை பார்க்க முடியாது. அதுனால ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை பண்ணி அவரை வீரபத்திரரா நினைச்சு வழிபட்டார்.
இவரோட பக்தியைப் பார்த்த வீரபத்திரர் இவர் முன்னே தோன்றி ”என்ன வேணும் விஷ்வக்சேனா ”அப்பிடின்னு கேட்டார்.
“சுவாமி, விஷ்ணுவோட சக்ராயுதம் வேணும்.” என்றார் விஷ்வக்சேனர்.
“அப்பிடியா அதெல்லாம் என் கையில இல்லப்பா. இதோ இந்த மாலையில் இருக்குல ஒரு வெண் தலை கபாலம். அது குறும்பு பிடிச்சது. அந்த சக்ராயுதத்தை இதுதான் முழுங்கி வைச்சிருக்கு . அதுகிட்ட கேளு , திருப்பித்தந்தா வாங்கிக்க “ அப்பிடின்னு சொல்லிட்டாரு வீரபத்திரர்.
”என்னது .. வெண் தலை கபாலத்துக்கிட்ட வாங்கிக்கிறதா. சரியாப்போச்சு. அதே குறும்பு பிடிச்சது. பிடிவாதம் பிடிச்சது. முழுங்குனதை திருப்பக் குடுக்குமா என்ன ?” அப்பிடின்னு யோசிச்சபடி இருந்தார் விஷ்வக்சேனர்.
மனசுல அவருக்கு திடீர்னு ஒரு எண்ணம் உதிச்சிது. ’சண்டைபோட்டோ, பிடுங்கியோ அந்த வெண் தலை கபாலத்துக்கிட்டேருந்து சக்ராயுதத்தை எடுக்கமுடியாது. அது வழியிலேயே நாமளும் குறும்புத்தனம் பண்ணுவோம். அப்ப திரும்பித் தந்துடும்.’ அப்பிடின்னு நினைச்ச அவரு உடனே தன்னோட உடம்பை அஷ்ட கோணலா மாத்துனாரு.
அதைப் பார்த்த மத்த கபாலமெல்லாம் திகைச்சுப் போய் சிரிச்சுதுங்க. ஆனால் அந்த சுட்டித்தனமான வெண் தலை கபாலம் மட்டும் வாயே திறக்கல. திரும்ப கைகாலை முறுக்கி உடம்பை அஷ்டகோணலாக்கி கோமாளி மாதிரி ஆடி நின்னார். அப்பவும் வெண் தலை கபாலத்துக்கிட்ட லேசான சிரிப்பு மட்டுமே வந்துச்சே தவிர அந்த சக்ராயுதத்தை தராம அழுத்தமா இருந்துச்சு. மத்த கபாலங்கள் எல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சிக்கிட்டே இருந்துச்சுங்க.
மூன்றாவது தரமா அவர் தன்னோட மூஞ்சியை அஷ்டகோணலாக்கி கண் வாய் மூக்கு அவ்வளவையும் அங்கேயும் இங்கேயும் திருகி அகட விகடம் செய்தார். “ஹாஹ்ஹாஹ்ஹா “ன்னு ஒரு பெருஞ்சிரிப்புச் சத்தம் கேட்டுச்சு. தன்னை மறந்து அந்த வெண் தலை கபாலம் தன் வாயில் பிடிச்சிருந்த சக்ராயுதத்தை நழுவவிட்டுட்டு சிரிச்சிக்கிட்டே இருந்துச்சு. மத்த கபாலங்களோ கேக்க வேண்டாம். ஒன்னோடொன்னு மோதிக் குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சுதுங்க.
’இதுதாண்டா வாய்ப்பு’ன்னு விஷ்வக்சேனர் அந்த சக்ராயுதத்தை எடுக்குறதுக்குள்ள அங்கே வந்த குட்டி விநாயகர் எடுத்துக்கிட்டாரு. என்னடா இது சோதனைன்னு விஷ்வக்சேனர் விழிக்க இன்னொருதரம் ”இதே மாதிரி எனக்காக இன்னொருதரம் விகடக் கூத்தாடுனா தரேன் “ என்று விநாயகர் ஒப்புக்கொள்ள அவருக்காகவும் ஒருதரம் உடம்பு கைகால் முகம் கண் வாய் எல்லாவற்றையும் அஷ்டகோணலாக்கி விகடக் கூத்தாடி சிரிக்கச் செஞ்சாரு விஷ்வக்சேனர்.
கைதட்டி சிரித்து மகிழ்ந்த விநாயகர் அந்த சக்ராயுதத்தை விஷ்வக்சேனரிடம் கொடுக்க அதை எடுத்து வந்து விஷ்ணுவிடம் சமர்ப்பிக்கிறார் விஷ்வக்சேனர். இதுனால சந்தோஷமான விஷ்ணு விஷ்வக்சேனரை சேனாதிபதியாக்கி அவரைத் தன்னோட தலைமைத் தளபதியா நியமிச்சார்.
ரத்தம், சத்தம்,  யுத்தம் எதுவுமில்லாம சிரிச்சிக்கிட்டேயும் ஒரு காரியத்தை சாதிக்கலாம் என்பதை விஷ்வக்சேனரோட இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறதுதானே குழந்தைகளே. 

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 5. 7. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார். 

2 கருத்துகள்:

  1. நன்றி ஜெயக்குமார் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)