திங்கள், 8 ஜூலை, 2019

ஏகலைவன் கொடுத்த குருதட்சணை. தினமலர் சிறுவர்மலர் - 22.

ஏகலைவன் கொடுத்த குருதட்சணை
ஒரு வித்தையைக் கற்றுக் கொண்டால் கற்றுக் கொடுத்த ஆசிரியருக்கு தட்சணை கொடுப்பது அக்காலத்திய வழக்கம். ஆனால் மானசீகமாக ஒருவரை குருவாக வரித்து ஒருவன் ஒரு வித்தையைக் கற்றுக் கொண்டான். அந்த மானசீக குரு கேட்டதற்காக தன் கட்டைவிரலையே கொடுத்தான் அவன். அப்படிப்பட்ட வீரன் யார் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
மகதநாட்டைச் சேர்ந்த வேடுவ மன்னன் ஏகலைவன். அவன் தந்தை அடிக்கடி வேட்டைக்குச் செல்வார். ஒருமுறை தானும் வருவதாகக் கூறிச் சென்றான் ஏகலைவன். அடர்ந்த காட்டில் துஷ்ட விலங்குகளின் நடமாட்டமும் அச்சுறுத்தும் ஒலியும் அதிகமாக இருந்தது.
சிறுவனாக இருந்தாலும் பயப்படாமல் தந்தையுடன் சென்றான் ஏகலைவன். அவர் விலங்குகளின் ஒலியை வைத்தே அவை எங்கே, எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து வில்லில் அம்பு பூட்டி எய்து வேட்டையாடினார். பிரமிப்பின் உச்சத்தில் சென்ற ஏகலைவன் கேட்டான், “ தந்தையே எப்படி நீங்கள் விலங்குகளை நேரடியாகக் காணாமல் ஒலியை வைத்தே வேட்டையாடுகிறீர்கள். எனக்கும் கற்றுத்தாருங்கள். “

அப்போது அவன் தந்தை சொன்னார், “ மகனே, இதை நீ முறைப்படி துரோணர் என்ற குருவிடம் கற்றுத் தேறலாம். “
“தந்தையே, அவர் எங்கே இருப்பார் ?”
“அவர் அஸ்தினாபுர அரண்மனையில் பாண்டுவின் புதல்வர்களுக்கும் திருதராஷ்டிரனின் புதல்வர்களுக்கும் வில்வித்தையும் மற்ற வித்தைகளும் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார் . அங்கே சென்று அவரிடம் கேள். சீடனாகச் சேர்ந்து கற்றுக் கொள் “ என்று கூறினார் ஏகலைவனின் தந்தை.
உடனே அஸ்தினாபுர அரண்மனைக்குப் புறப்பட்டான் ஏகலைவன். அங்கே துரோணர் தர்மர், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய பாண்டவர்க்கும், துரியோதனன், துச்சாதனன் மற்றும் அவர்களின் நூற்றுக்கணக்கான தம்பியரான கௌரவர்களுக்கும் வில் வித்தை பயிற்றுவித்துக் கொண்டிருந்தார்.
அவர்களில் அர்ஜுனன் வில்வித்தையில் மிகத் திறமையாளனாக இருந்தான். அவர்களின் பயிற்சியைக் கண்ட ஏகலைவன் துரோணரின் அடி பணிந்து தனக்கும் வில்வித்தை கற்றுத்தர வேண்டுகிறான்
துரோணர் யோசிக்கிறார். ,’ ஏற்கனவே இவன் தந்தை வேட்டையில் சிறந்து விளங்குவதால் இவனும் சீக்கிரம் எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்து சிறந்த வில்லாளி ஆகிவிடுவான். ஆனால் பீஷ்மரிடம் அர்ஜுனனை சிறந்த வில்லாளியாக ஆக்குவதாக உறுதி அளித்திருக்கிறேன். எனவே இவனுக்குக் கற்றுத்தரக் கூடாது ‘ என முடிவெடுக்கிறார்.
“நான் அஸ்தினாபுர அரசிளங்குமரர்களுக்கு மட்டுமே கற்பிப்பேன். மற்றவர்களுக்குக் கற்பிப்பதில்லை “
இப்பதிலைக் கேட்டு வருத்தமுற்ற சிறுவனான ஏகலைவன் கானகம் திரும்புகிறான். தந்தையிடம் சொல்ல அவர் துரோணரை மானசீக குருவாக ஏற்று வித்தையைக் கற்கச் சொல்கிறார். தந்தையிடமிருந்துதான் கற்றுக்கொண்டான் எனினும் துரோணரை மானசீக குருவாக ஏற்றுப் பயிற்சி செய்கிறான் ஏகலைவன்.
ஒருமுறை காட்டில் வேட்டையாடச் செல்லும்போது வேட்டைநாய் பயங்கரமாகக் குரைக்க அதன் சத்தத்தைக் குறைக்க வாயின் நாற்புறமும் நான்கு அம்புகளை எய்து கட்டிவிடுகிறான். பயந்துபோன நாய் காட்டுக்குள் ஓடுகிறது.
இப்படி நான்கு அம்புகளுடன் வாய் கட்டப்பட்ட நாயை நகரத்தின் எல்லையில் பீமன் பார்க்கிறான். உடனே தன் சகோதரர்களுக்கு அந்த அதிசயக் காட்சியைக் காட்டுகிறான். அர்ஜுனன் அதைப் பார்த்து வியந்து தனக்கு துரோணர் இம்மாதிரி வித்தையைக் கற்பிக்கவில்லையே என நினைத்து அவரிடம் தெரிவிக்கிறான்.
துரோணரும் ஆச்சர்யப்பட்டு விசாரிக்க அது ஏகலைவன் எய்த அம்பு எனத்  தெரிய வருகிறது. பீஷ்மரிடம் துரோணர் அர்ஜுனனை சிறந்த வில்லாளி ஆக்குவேன் என உறுதியளித்திருக்கிறார். ஆனால் ஒரு சாதாரண வீரன் சிறந்த வில்லாளி ஆகிவிட்டால் அவர் பெருமை என்னாவது ?. உடனே அவர் மூளை குயுக்தியாக யோசிக்கத் துவங்குகிறது.
ஏகலைவனை அழைத்துவரச் சொல்கிறார். “ சிறுவனே, நீ இப்படிப்பட்ட வித்தையை யாரிடம் கற்றாய் ?”
“குருவே இவ்வித்தை எனக்கு என் தந்தையிடமிருந்து வந்தது. ஆனால் அவர் உங்களை மானசீக குருவாக ஏற்கச் சொன்னதால் ஏற்றுக் கற்று வருகிறேன் “ என மகிழ்வோடு பதில் அளிக்கிறான்.
“என்னது என்னை மானசீக குருவாக ஏற்றாயா. “
“ஆம் குருவே “
”அப்படியானால் கற்ற வித்தைக்கு தட்சணை கொடுக்கவேண்டும். “
“நிச்சயமாகத் தருகிறேன் குருவே “
“சொன்ன சொல் மாறக்கூடாது “
”நிச்சயமாக மாறமாட்டேன் குருவே “
“குருதட்சணையாக உனது கட்டைவிரல் வேண்டும் “ இதைக்கேட்டதும் பாண்டவர்க்கே பதைக்கிறது.
‘வில் வித்தையாளனுக்குக் கட்டைவிரல் முக்கியம். அதை வைத்துத்தான் அம்பைப் பிடித்து எய்ய முடியும். ஆனால் குருவோ ஏகலைவனின் விரலைக் கேட்கிறாரே.
துரோணர் மனதைக் கல்லாக்கிக் கொண்டு அமர்ந்திருக்கிறார். அர்ஜுனன் மட்டுமே சிறந்த வில்லாளியாக இருக்கவேண்டும். இது பீஷ்மருக்குக் கொடுத்த வாக்கு. அதை நிறைவேற்ற என்ன கொடுமையையும் செய்ய சித்தமாக இருக்கிறார்.
ஒரு கணம் திகைத்துப் போனாலும் ஏகலைவன் துரோணரின் முகத்தைப் பார்க்கிறான். அரசிளங்குமரர்களும் கற்காத வித்தையை, குரு கற்பிக்காத வித்தையைத் தான் கற்று வைத்திருப்பது அவர்களுக்கு அச்சத்தைக் கொடுத்திருப்பது புரிகிறது.
தந்தையிடம் கற்றுக்கொண்ட பரம்பரை வித்தையானாலும் துரோணரை மானசீக குரு என்று வேறு சொல்லிவிட்டோம். ஆகையால் அவர் கேட்ட தட்சணையைத் தருவதுதான் முறை. பேச்சு மாறுவது வீரனுக்கு அழகு அல்ல.
ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் தன் விரலைத் துண்டித்து துரோணர் முன் சமர்ப்பிக்கிறான் ஏகலைவன். அவன் அப்படிச் செய்யாமல் குருஷேத்திரப் போரில் ஈடுபட்டுப் பேரும் புகழும் பெற்றிருந்தாலும் கூட நூற்றுக்கணக்கான வீரர்களில் ஒருவனாகத்தான் இருந்திருப்பான்.
ஆனால் தன் குருவின் ஆணையை ஏற்று தன் கட்டைவிரலைக்கொடுத்ததற்காக இன்றும் நாம் அவனை மறக்காது நினைவில் இருத்தி போற்றித் துதிக்கிறோம். அவனுடைய வீரமும் துணிவும் மட்டுமல்ல . குருவிற்கான பணிவும் போற்றத்தக்கதுதானே குழந்தைகளே.

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 21. 6. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

2 கருத்துகள்:

  1. என்ன ஒரு சூழ்ச்சி

    பதிலளிநீக்கு
  2. ஆமா பெயரில்லா சரியா சொன்னீங்க

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)