எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 16 நவம்பர், 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 12

 

12

”ஒருத்தருக்கு ஒரு வீட்டுக்கு மேல இருக்கப்புடாதாம். இருந்தா கவுர்மெண்டுல எடுத்துக்கிடுவாகளாம்.” இந்தப் பொரளியைக் கிளப்பிவிட்டது யாரோ தெரியல. முருகப்பனும் சீதாளும் கதிகலங்கிப் போனார்கள். பக்கத்தில் இருந்த பெரிய வீட்டை மேங்கோப்பைப் பிரிச்சு வித்துப்புட்டுக் காலி மனையாகப் போட்டிருந்தாக. சோகியின் மனசைப் போல அதுல கரம்பை ரெம்பிப்போய் கருவேலம் மொளைச்சு அடைஞ்சு போச்சு.

வருஷாவருஷம் குடும்பத்தோட காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் போய் சொக்குவுக்குத் தெவசம் கொடுத்துட்டு வந்தாக குமரப்பன். ஒரு பத்து வருசமா இதுதான் நடைமொறை. ஒவ்வொருதாட்டியும் சோகியைக் கூட்டிக்கினு போறது ரொம்பச் செரமமா இருக்கும். டிரைவர் வேலுவும் , சமையக்காரக் கருப்பண்ணனும் வேற எடங்கள்ல வேலைக்குச் சேர்ந்துட்டதால ஆத்தா வீட்டு ஆளுகன்னு அவள யாருமே பாக்க வர்றதுமில்ல. வீடு ஏலத்துல போயிருச்சு. இனி ஆத்தாவீடுன்னு என்ன இருக்கு அங்க. வீடு ஏலத்துக்குப் போனதும் அங்காளி பங்காளிகன்னு யார் தொடர்பும் இல்லாம அத்துப் போயிருச்சு.

ஒருதரம் குமரப்பனோட ராமேஸ்வரத்துக்குத் தெவசம் கொடுக்கப் போனாக முருகப்பனும் சீத்தாளும் மட்டும். கடல்ல மூழ்குனவுக மூழ்குனதுதான். மூழ்கிட்டு எந்திரிக்கவே இல்லை. அலைபாய்ஞ்சு போனாக குமரப்பன்.  ஆளுகளை விட்டுத் தேடி அப்பச்சி ஆத்தாளைப் பொணமாத்தான் கண்டுபிடிச்சாக குமரப்பன். நொந்துபோய் அங்கனேயே அப்பச்சி ஆத்தாளுக்கும் மகனுக்கும் ஒண்ணாத் தெவசத்தைக் குடுத்துட்டு வந்தவுக, அப்புறம் ராமேஸ்வரமே போகல.

அப்பச்சி ஆத்தாவுமில்லாம மகனுமில்லாம வெறுங்கூடாகிப் போனாக. குமரப்பனும் மீனாவும். வீட்டுல உக்காந்து உக்காந்து ரெண்டு பேருக்கும் நடை ஒடை எல்லாம் சுருங்கிப் போச்சு. அவுக சுருங்க சுருங்க சோகியும் சுருங்கித்தான் போனான்னாலும் பேச்சு மட்டும் வீரியமா ஆகிக்கிட்டே போச்சு.

செலவு நடைக்கே பணம் பத்தாமப் போயிக்கிட்டு இருக்க மூணு பேர் உக்காந்து சாப்புடுறது எப்புடி. வட்டிக்கடையில் அடைச்ச பணம் எல்லாம் வசூலாகாமக் கெடக்க ஒவ்வொருத்தரையா கூப்பிட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குனா சோகி. கொஞ்சப்பேர் அசலையும் வட்டியையும் திருப்பிக் கொடுத்தாக. கொஞ்சப்பேர் அதுலயும் டிமிக்கி கொடுத்தாக.

மாமியாரும் மாமனாரும் அவ வெறைப்புக்கு முன்னாடி ஒண்ணும் பேச முடியல. அவ இல்லாட்டியும் யார்ட்டயும் வசூல் பண்ணவும் முடியல. கொஞ்சம் கொஞ்சமா அவுகளும் தளர்ந்தபோதுதான் ஒரு விசயம் கேள்விப்பட்டா சோகி.

”பாங்கு வேலைக்கு செட்டிய வீட்டு ஆச்சிகள எடுக்குறாகளாம். ஆனா எஸ் எஸ் எல் சி படிச்சிருக்கோணுமாம். முத்தையான்னு ஒரு சேர்மன் இந்த நல்ல தொண்டைச் செய்யிறாகளாம்”

”எட்டாவது வரைக்கும்தானே படிக்க வைச்சாக அப்பச்சியும் ஐயாவும். பதினொண்ணாவது படிக்க வைச்சிருந்தா அந்த பாங்கு வேலையாவது கெடைச்சிருக்குமுல்ல. இன்னைக்குப் பணங்காசுக்குச் செரமப்பட வேண்டாமுல்ல. எக்கு என்ன வேணும்னு அப்பச் சொல்லத் தெரியல. “ கோபமாய் சொல்லிக் கொண்டிருந்தாள் சோகி.

 ”ஆமா இவதான் போயி பாங்கு வேலையெல்லாம் பாக்கப்போறா “ என்று அப்பவும் கைகொட்டிச் சிரித்துக் கொண்டிருந்தாக வெனையத்தாச்சி. இந்த வீட்டுல இந்த வெனை புடிச்ச ஆயாளோட்ட இருக்கது மட்டும் சிரமமா இல்லை சோகிக்கு. இன்னொன்னும் ரொம்பச் சிரமமா இருந்துச்சி.

நாச்சா நாலஞ்சுப் புள்ளப் பெத்து நல்லாத் தடிச்சுப் போயிட்டா. சோகி கல்யாணம் கட்டியும் இறுக்கு மாதிரி இருந்தா. மொகத்துல இறுக்கம் இருந்தாலும் உடம்புல அவ சிக்குன்னு சின்னப்புள்ள மாதிரித்தான் இருந்தா.

அப்பப்ப வளவுக்குள்ளயும் முகப்புக்குள்ளயும் வேலையாப் போகும்போது நடை இருட்டுல தெரியாமப் படுறமாதிரி சந்திரமௌலி பலமுறை ஒரசிப் போயிருக்கான். ”சீ” என்று சொல்லிக்கொண்டே கடந்து போய் விடுவாள் சோகி. எச்சரிக்கையாத்தான் போவா. அப்பிடியும் ஒருதரம் ஆல்வீட்டு இருட்டுக்குள்ள இழுத்துக் கட்டிப் புடுச்சுக்கிட்டான் அந்த அக்கிரமக்காரப்பய சந்திரமௌலி. அருவருப்பாய் இருந்தது அவளுக்கு மேலெல்லாம் பூரான் ஊர்வதுபோல. ”சை” என்று அவனை உதறி வேகு வேகென்று வெளியே போனவள் பந்திக்கட்டில் சிறிது நேரம் உட்கார்ந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். அம்மானையும் அம்மாமுண்டியையும் கலவரப்படுத்திப்புடப்படாதுன்னு முடிஞ்சவரைக்கும் அவுககிட்ட ஒண்ணுமே சொல்லுறதுல்ல.

போஜன் ஹாலில் சந்திரமௌலியின் பிள்ளைகளும் லீவுக்கு அவுக வீட்டுக்கு வந்த பிள்ளைகளும் ”ஐ சக்கா ஐ அரைப்படி நெய். சீனாக்காரன் தலையில தீயப் பத்தவை” என்று பாடிக் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

சிலபிள்ளைகள் கைவைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

”ஒருபத்தி
திருப்பத்தி
ஓவிய
மங்கல
மாமுனி
மாடு
கன்னு
வார
நேரம்
மஞ்சத்
தண்ணி
குடிக்கிற
நேரம்
உங்கப்பா பேரு என்ன” என்று ஒன்று கேட்க இன்னொன்று சந்திரமோலி என்றது. ”இல்லையில்ல வெளையாட்டுல முருங்கப்பூன்னு சொல்லணும்”. என்று சொல்ல அது ”முர்ங்கப்பூ” என்றது. ”முருங்கப்பூவும் தின்னாதே முள்ளுத்தண்ணியக் குடிக்காதே கரும்புக் காட்டுக்குப் போகாதே பாம்பு வெரலை படக்குன்னு மடக்கு.” என்று பிள்ளைகள் சொல்ல ரொம்ப நாட்களுக்குப் பிறகு வாய்விட்டுச் சிரித்தாள் சோகி. மௌலிக்கு முர்ங்கப்பூ என்று மனதுக்குள் பேரும் வைத்து விட்டாள். அவள் பேய்ச்சிரிப்புச் சிரித்தது பார்த்துப் பிள்ளைகள் அரண்டு எழுந்து ஓடின.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)