4
”சமத்தி என்ன பெத்தா தலைச்சன் பொண்ணு பெத்தா” என்ற சொலவடைக்கு
ஏற்ப ஒமையா பொண்ணைப் பெத்துட்டா. பதினாறாம் நாள் அன்னிக்குப் புண்யாசனம் பண்ணிக் காது
குத்தியாச்சு. தொப்புள் கொடியைத் தாயத்துல போட்டு ஆயாவீட்டு ஐயா கொடுத்த சங்கிலியில
மாட்டிப் போட்டு விட்டாச்சு. நெத்தியிலயும் கன்னத்துலயும் கறுப்புப் பொட்டு வச்ச சின்னச்
சிலை மாதிரி இருந்தா சோகி.
ஆயாவீட்டிலிருந்து வெள்ளித் தொட்டில் கொண்டாந்திருந்தாக. மகன் கருப்பன்செட்டி கப்பல்ல ஏறிட்டானாம். வர இன்னும் நாலு நாள் இருந்தது. ஆனாலும் வீட்டுக்கு அழைக்கணும்கிற சாங்கியப்படி அன்னிக்கு ஒமையாளையும் புள்ளையையும் மாமியா வீட்டுக்கு அழைச்சிக்கினு வந்திருந்தாக அவுக ஆத்தாவீடு.
நாலஞ்சு ஐயாக்க வீட்டுப் பங்காளிகளுக்குச் சொல்லிவிட்டு அவுக
எல்லாம் வந்து பார்த்துப் போனாக. ”குட்டி சிறுசாத்தான் இருக்கு. இன்னும் ஊறோனும். பால்ல
வெள்ளைப்பூண்டை வேகவைச்சுச் சாப்பிடு. வயித்துப் புண் ஆறும். மோரை முறிச்சுப்புட்டு
ஊத்திக் கஞ்சியும் தண்ணியுமாக் குடி. அப்பத்தான் புள்ளைக்குப் பால் ஊறும்” என்று பங்காளி
வீட்டு ஆச்சிகள் ஆளாளுக்கு யோசனை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
மாமியார் சிவகாமி சிவபதவி அடைஞ்சு ரெண்டு வருஷமாகி இருந்தது.
கருப்பஞ்செட்டிக்கும் ஒமையாளுக்கும் பத்துவருஷம் புள்ளையில்லாம இருந்து அப்புறம்தான்
இவ சனிச்சா. அதுனால கருப்பஞ்செட்டிக்குக் கையும் ஓடல. காலும் ஓடல. போஸ்டாஃபீஸ்லேருந்து
அப்பச்சி ட்ரங்கால் புக் பண்ணிப் பேசுனாக, மக பொறந்துட்டானு. அப்பவுலேருந்து கருப்பஞ்செட்டி
பறந்துக்கினே இருந்தாக.
இந்தக் கணக்கை முடிச்சிட்டு அடுத்த கணக்குக்கு அடுத்த வருஷம்தான்
வரணும். அதுவரை கணக்கப்புள்ளை மேப்பார்வையிலேயே இருக்கட்டும். இல்லாட்டி அங்கனயே இருக்குற
பங்காளிவீட்டுச் செட்டியாரைப் பொட்டியடியை மேப்பாத்துக்கச் சொல்லவேண்டியதுதான் என நினைத்தார்கள்.
நாள் நெருங்க நெருங்க அவுக
ஊருக்குப் போய் முட்டாய்த்தட்டில் வைக்க முட்டாய் டின்னும் ரொட்டி டின்னுமா
வாங்கிக்கினாக. அடுக்கி மாளல. கிளம்பிப் பத்து நாளாச்சு. இன்னும் நாலு நாள்ல நாகப்பட்டினக்
கரை தட்டுப்படும்.
”இன்னும் நாலு நாளுல தம்பி வாரான் அப்பத்தான் ஒண்ணா மிட்டாய்த்தட்டு
வைக்கிறோம். இப்ப வந்தவுக சாப்பிட்டுட்டுப் போங்க. கருப்பையாண்ணே சமையல் அருமையா இருக்கும்
“ அப்பிடின்னாக ஆவுடையப்பன்.
மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. கருப்பையாண்ணே எல்லாருக்கும்
சுண்டைக்காய் சூப்பைக் கிண்ணத்துல ஊத்திக் கொடுத்தாக. ”அருமையா இருக்கு கருப்பையா ”என்று
இன்னொரு கப் வாங்கிக் குடிச்சாக ஆவுடையப்பனின் ஐயாக்க வீட்டுப் பங்காளியான நாவன்னா
லெனா.
”கருப்பையா ஆறாவயல்காரன்தானே. உஞ்சனைப் பக்கட்டு அக்காக்கள்
சமையலும் நல்லா இருக்கும்” என்று ஒருவர் சொல்ல ”இன்னிக்கு என்ன சமையல் கருப்பையா” என்று
விசாரிச்சாக நாவன்னா லெனா. பட்டாலையில் விரித்திருந்த சமுக்காளத்தில் அமர்ந்து சூப்பியைக்
குடித்துக் கொண்டிருந்த செட்டியார்களின் பார்வை இவர்கள் பக்கம் திரும்பியது.
”எண்ணெய்க் கத்திரிக்காய்க் கெட்டிக் குழம்பு,, பன்னீர் ரசம்,
சௌசௌ பால்க்கூட்டு, காங்கிரஸு தொவட்டல், வாழைக்காய் கருவாட்டுப் பொரியல், உருளைக்கிழங்கு
சிப்ஸு, பிசினரிசிப் பாயாசம் என்று கருப்பையா சொல்ல “அதென்ன காங்கிரஸுத் தொவட்ட” என்று
நடேசன் செட்டியார் கேட்டாக. ”கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் மூணையும் துருவிப்பிட்டுத்
தொவட்டுறதுதாண்ணே காங்கிரஸுத் தொவட்டல்” என்று விளக்கினார் கருப்பையாண்ணே.
”பிங்கலி வெங்கையான்னு ஒருத்தரு அறிமுகப்படுத்துன கொடில மூணு
நிறமண்ணே. அதுதான் சிவப்பு, வெள்ளை, பச்சை நடுவே ராட்டைன்னு. அத காங்கிரஸ் கூட்டத்துல
அறிமுகப்படுத்துனதால நம்மூர்ச் செட்டு ஆளுக இந்தத் தொவட்டலுக்கு இப்பிடிப் பேர் வைச்சிட்டாக.
கதர்க்கொடி அல்வான்னு கூட எங்காச்சி ஒரு தரம் மூணு கலர்ல அல்வா கிண்டி அடுக்கிக் கொடுத்துச்சுண்ணே.”
என்றாக பங்காளி வீட்டு வள்ளியப்பண்ணன்.
“அந்த ராட்டைச் சின்னத்த இப்ப தர்மச்சக்கரமா மாத்திட்டாக அண்ணே.
காங்கிரஸ் கொடியைத் தேசியக் கொடியா அறிவிச்சுட்டாக “ என்றாக மதறாசில் இருந்து வந்திருந்த
நாச்சியப்பன்.
”பேத்தி பொறந்ததுக்கு விருந்து அமர்க்களமா இருக்கே” என்று ஒருவர்
சொல்ல ” பேரன் பொறந்திருந்தா ஆவுடையப்பனைப் பிடிச்சுக்க முடியாது” என்று இன்னொருவர்
ஆமோதித்தார்.
”அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணே. நம்ம கையில என்ன இருக்கு . எனக்குப்
பேத்தியும் பேரனும் ஒண்ணுதான் .எல்லாம் நம்ம நத்தம்தானேண்ணே. ஆயுசோட நல்லா இருந்தாச்
சரி “ என்று ஆவுடையப்பன் கூறவும் அவுக வீட்டின் எதிரே இருந்த சங்கூதும் இடத்திலிருந்து
பன்னிரெண்டு மணிக்கான சங்கு ஒலிக்கவும் சரியாக இருந்தது.
தொட்டிலில் அசந்திருந்த சோகி திடுக்கிட்டுக் கண்விழித்து அழத்துவங்கினாள்.
ஒமையாளுக்கு ஆயுதம் போட்டு எடுத்ததால் ஆல்வீட்டில் கட்டிலில் படுத்திருந்தாள். சீதை
ஆச்சி பிள்ளையை எடுத்து அணைத்து சமாதானப்படுத்தியும் வீறிட்டுக் கொண்டிருந்தது. ஒமையாளிடம்
கொடுக்க அவள் அணைப்பில் அடங்கியது.
பங்காளி வீட்டு ஆச்சிகள் இருந்ததால் அவள் திரும்பி உக்கார்ந்து
சேலையை மூடி அமர்த்தத் தொடங்கினாள். பால் வாசம் பட்ட குட்டிச் சோகி முகத்தால் தேய்த்து
முலையைப் பற்றிப் பாலருந்தத் தொடங்கியது. வேகவேகமாகக் குடித்ததால் புரையேறியது.
”ஆத்தா காதுல ஊது காதுல ஊது” என்று பெரியாச்சிகள் குரல் கொடுக்க
குழந்தையைத் தூக்கி இருகாதுகளிலும் காற்றை ஊதினாள் ஒமையா. ”மகளுக்கு அப்பச்சி நெனைச்சுக்கிறாக
போல. அதான் பொறைப்போகுது’ என்று சிலாகித்து சோகியின் காலை வருடினார்கள் ஆயா சீதா ஆச்சி.
திரும்ப ஒமையா அமர்த்த பாலைக் குடிக்கக்குடிக்கவே அதற்குத் தூக்கம்
ஆட்கொண்டது . பாவம் அப்பச்சியையும் ஆத்தாளையும் ஒருசேரப் பார்க்கக்கூடக் கொடுத்து வைக்கலை
அந்தச் சிசுவுக்கு. தெரிந்திருந்தால் கண்ணைத் திறந்து ஆத்தாவை நன்றாகப் பார்த்திருக்குமோ
என்னவோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)