பகிர்ந்தளிப்பதில் இன்பம் பெற்ற முத்கலர்
முற்காலத்தில் முத்கலர் என்றொரு மகரிஷி இருந்தார். பார்மியாசா என்றொரு முனிவரின் மகன் . தானம் தர்மம் என்பதற்கு எடுத்துக்காட்டு இவர்தான். தான் செய்த புண்ணியங்களால் தன் உடலோடு சொர்க்கம் செல்லும் வாய்ப்புக் கிட்டியும் மறுத்தவர் . அப்படி இவர் செய்த புண்ணியம் என்ன ஏன் சொர்க்க லோகம் செல்வதை மறுத்தார் என்பதைப் பற்றி அறிவோம் வாருங்கள்.
களத்து மேட்டில் அறுவடையான சோளதானியங்கள் அடித்துத் தூற்றப்பட்டுக் கொண்டிருந்தன. அத்தனை தானியங்களையும் மூட்டைகளில் அடைத்து அந்த வயலுக்குரியவர்கள் எடுத்து சென்றபின் அந்த வயலில் இறங்கினார் முனிவர் முத்கலர். அங்கே சிதறிக் கிடந்த தானியங்களைப் பொறுக்கிச் சேர்த்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வயலில் இருந்தும் முடிந்த அளவு தானியங்களைக் கொண்டு சென்று வீட்டில் சேர்ப்பார் முத்கலர்.
அவருக்கு ஒரு மனைவியும் மகனும் இருந்தார்கள். ஒவ்வொரு அமாவாசையின் போதும் ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் இந்தத் தானியங்களை எல்லாம் குத்திப் புடைத்துக் கஞ்சியாக்கி இஷ்டிகிரிதா என்னும் வேள்வி செய்வார். தர்சம் பௌர்ணமாஸ்யம் என்ற வேள்வி சடங்குகளைச் செய்து இந்திரனுக்கும் பிற தேவர்களுக்கும் அந்த உணவில் பங்களிப்பார். அதன் பின் முன்னோர், முனிவர், வாயில்லா ஜீவன்கள், மனிதர்கள் ஆகியோருக்கும் ஈந்து அதன் பின் உண்ணும் பழக்கம் உள்ளவர் அவர்.
உஞ்சவிருத்தி முறையில் உணவைப் பெற்றுப் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையே அவர் விருந்தளித்தாலும் அதை ஏற்றுக்கொள்ள இந்திரன் முதலான தேவர்களும் மனிதர்களும் மற்றுமுள்ள அனைவருமே ஆவலோடு காத்திருந்தார்கள். பொறாமை இல்லாத தூய குணமும், அடக்கமும் அமைதியும் கொண்ட அவர் பகிர்ந்தளிக்கும் அந்தக் கஞ்சி உணவே அனைவருக்கும் அமிர்தம் பெற்ற மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருந்தது.
முத்கலரின் பெருமையும் கீர்த்தியும் எங்கெங்கும் பரவியது. எதற்கும் ஆசைப்படாமல் ஒரு மனிதனா, இப்பூமியில் பிறந்தும் பொன் பொருள் போகம் என அதன் எந்தக் கவர்ச்சிக்கும் மயங்காமல் இப்படி ஒரு மனிதன் இருக்க முடியுமா என வியந்து அவர் மனதின் சமநிலையைக் குலைத்து அவரை எப்படியும் வீழ்த்தியே ஆகவேண்டும் என்ற துர் எண்ணம் கொண்டார் துர்வாசர்.
ஒருமுறை சோளத்தைக் கஞ்சியாகக் காய்ச்சி தேவர்களுக்கும் மற்றுமுள்ளோருக்கும் படைத்துவிட்டு முத்கலர் தம் குடும்பத்தினருடன் உணவருந்த அமர்ந்தார். தகுந்த நேரம் பார்த்துக் காத்திருந்த துர்வாசர் முத்கலரின் வீட்டிற்குச் சென்று “எனக்குப் பசிக்கிறது. உணவு வேண்டும்” எனக் கேட்டார். உணவருந்தும் போது வந்துவிட்டாரே என்று கொஞ்சம் கூட மனம் கோணாது வந்த விருந்தினரை உபசரித்துக் கைகால் கழுவிக் கொள்ளவும், அருந்தவும் நீர் கொடுத்து ஆசனம் கொடுத்தார் முத்கலர்.
முதலில் தனக்கு வைத்திருந்த கஞ்சியை எடுத்து வந்து கொடுத்தார் முத்கலர். அதை அப்படியே அருந்திய துர்வாசர் பசி அடங்காததுபோல் அமர்ந்திருக்கத் தன் குடும்பத்தாருக்கு வைத்திருந்த கஞ்சியையும் கொண்டு வந்து வைத்தார். அதையும் மிச்சமில்லாமல் குடித்தபின் பாத்திரத்தில் மீதமாய் ஒட்டி இருந்த கஞ்சியையும் தன் உடம்பில் தடவியபடி வெளியேறினார் துர்வாசர்.
இதை எல்லாம் கண்டு துளிக்கூடக் கோபப்படாமல் மௌனமாய் உள்ளே சென்றார் முத்கலர். இதேபோல் அடுத்தடுத்து ஆறு பௌர்ணமி அமாவாசைகளின் போதும் திடீரென முத்கலர் வீட்டிற்கு வந்து இவ்வாறு அவர் உஞ்சவிருத்தி எடுத்து வந்து சமைத்த உணவை முழுமையாக உண்டுவிட்டுச் சென்றுவிடுவார்.
இவ்வாறு பலமுறை செய்தும் முத்கலர் தன் சமநிலை குலையாமல், கோபம், பதட்டம், வெறுப்பு அடையாமல் இருந்ததைப் பார்த்த துர்வாசருக்கு அவர்பால் பெரிதும் ஈர்ப்பு ஏற்பட்டது. ”உணவுக்காகவே இவ்வுலகில் மனிதர்கள் உழைக்கிறார்கள். உணவாலேயே உயிர் நிலைத்திருக்கிறது. பசியின் வேட்கையையும், உணவின் சுவையையும் உணர்ந்தும் நீ பொறுமை காத்தது உன் புலனடக்கத்தைக் காட்டுகிறது. இதுவே உன் சுத்தமான இதயத்தால் அடைந்த தூய துறவு. உனது இச்செயலால் நீ அருள் உலகுக்குச் செல்லும் வழியை அடைந்துவிட்டாய். உன் இத்தூய உடலுடன் சொர்க்கலோகம் செல்வாய்” என வரம் கொடுத்தார்.
அவர் சொன்னதுதான் தாமதம். அன்னங்களும் கொக்குகளும் பூட்டப்பட்ட கிண்கிணி மணிகள் கட்டப்பட்ட நறுமணம் நிறைந்த, அழகிய வண்ணங்களோடு கூடிய நினைத்த இடம் செல்லக்கூடிய ஒரு தேருடன் தேவதூதன் ஒருவன் தோன்றினான். “ மாபெரும் தவசியே. உங்கள் தவத்தின் பலனை அடைந்துவிட்டீர்கள். எப்போதும் மகிழ்ச்சியையே அளிக்கும் சொர்க்கலோகத்தில் கொண்டு சேர்க்கும் இந்தத் தேரில் ஏறுங்கள்.” என வேண்டினான்.
“சொர்க்கமா.. அதன் யோகங்கள் தோஷங்கள் என்னென்ன”” என வினவினார் முத்கலர். ”தேவர்கள், ஸத்யசுக்கள், வைஸ்வசுக்கள், தர்மர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள் ஆகியோர் அங்கே இருக்கிறார்கள். அதன் யோகங்கள் என்னவெனில் அங்கே பொன் மேரு இருக்கிறது. பசி, தாகம், சோர்வு, தூக்கம் ஏற்படாது. சுகந்த நறுமணம் வீசும், இனிமையான ஓசையால் நிரம்பி இருக்கும். ஒளிமயமாய் இருக்கும். துக்கம், மூப்பு, பிணி கிடையாது.” என்று கூறி நிறுத்தினான். மேலும் “அதற்கு மேலும் இந்திர லோகம், பிரம்ம லோகம் ஆகிய 33 லோகங்கள் இருக்கின்றன. பிரம்மலோகத்தில் ரிபுக்கள் எனப்படுபவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் புலன்களுக்குப் புலப்படாத தெய்வீக உருவம் கொண்டவர்கள். கல்பம் மாறினாலும் அவர்களுக்கு மாற்றம் ஏற்படாது ” என்றான்.
முத்கலர் கூர்ந்து நோக்க சிறிது தயங்கியபடி “அதன் தோஷங்கள் என்னவெனில் ஒவ்வொரு உயிரும் அங்கு சென்றபின் தன் புண்ணியத்தின் பலனை அனுபவித்து ஆனந்தத்தில் திளைக்கும். தம் நல்வினையின் கணக்குக் குறையக் குறைய திரும்பப் பூமியில் விழுந்து மனிதப் பிறப்பு எடுக்க வேண்டும். இதுவே சொர்க்கலோகம், இந்திரலோகம், பிரம்மலோகம் ஆகியவற்றில் நடைமுறை. மேலும் அங்கே புண்ணியத்தின் கணக்கைத் தீர்க்கலாமே தவிர இப்பூலோகம் போல் புண்ணியத்தைப் பெருக்க முடியாது. மனிதப் பிறப்பு ஒன்றே அதைச் செயலாக்கம் செய்ய வல்லது” என்றான்.
”குறைகளற்ற நித்ய தெய்வீக உலகம் என்று ஏதும் உள்ளதா?” என முத்கலர் கேட்க, அத்தேரோட்டியோ,” இருக்கிறது ஐயனே, அது பிரம்மலோகத்திற்கும் மேலே உள்ள பரப்பிரம்மம் என்று அழைக்கப்படும் விஷ்ணுவின் பதமான சுத்தவெளி. நித்யமாய் ஒளிரும் தன்மை உடையது. நான், எனது என்பதை அடக்கிப் புலன் நுகர்ச்சி அற்று யோகமும் தியானமும் புரிபவர் மட்டுமே அங்கு செல்ல முடியும்”
“புண்ணியத்தைப் பெருக்கமுடியாத, திரும்பப் பூமியில் பிறப்பெய்து வீழச் செய்யும் சொர்க்கலோகம் எனக்கு வேண்டாம். நீ செல்க. இவ்வளவு தூரம் எனக்காக வந்ததற்கு நன்றி.” என்று முத்கலர் உறுதியாக மறுக்கவே திரும்பிச் சென்றான் தேவதூதன். தனது சித்த சுத்தியால் இந்திரியங்களை அடக்கித் தன் ஞான தியான யோகத்தால் விஷ்ணுவின் பிரம்மபதத்தை அடைந்தார் முத்கலர். கர்மபூமியே புண்ணியம் பெருக்கும் இடம் என்று தீர்க்கமாய் செயல்பட்ட இவர் வணங்கத்தக்கவர்தானே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)