எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 ஜூன், 2024

வள்ளல் அழகப்பர் அருங்காட்சியகம்.

 வள்ளல் அழகப்பர் அருங்காட்சியகம்.



உள்ளம் அழகா இருந்தா ஊரே அழகா இருக்கும். தன் பேரும் அழகா இருக்கும் ஒருத்தரைப் பற்றிச் சொல்லிக்கிட்டே போகலாம். காரைக்குடியைக் கல்விக்குடியாக மாற்றியவர் வள்ளல் அழகப்பர். அவரோட வள்ளல்தன்மைக்கு முன்னாடி கர்ணன் மட்டும்தான் நிக்கமுடியும். தன் கவசத்தைக் கொடுத்த கர்ணன் மாதிரி அரண்மனை போன்ற தனது இல்லத்தைப் பெண்கள் கல்லூரி துவங்கக் கொடுத்தவர்.

கல்விக்கூடம், ஆராய்ச்சிக்கூடம், கட்ட ஏக்கர்கணக்கில் தனது சொந்த நிலத்தை வழங்கியவர். 1943 இலேயே ஒரு லட்சம் ரூபாயை கல்விப்பணிக்காக நன்கொடை வழங்கியவர். இவர் செய்த பணிகளைப் பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும். கிட்டத்தட்ட 47 ஏ ஆண்டுகள் வாழ்ந்த இவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்கா.



ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். லண்டன் சாட்டர்ட் வங்கியில் பயிற்சி பெற்ற முதல் இந்தியர். விமானம் இயக்கத் தெரிந்தவர். கேரளா, மலேஷியா, பர்மா, கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய இடங்களிலும் தனது வியாபாரத்தை விரிவுபடுத்தியவர்.

டெக்ஸ்டைல்ஸ், டீ எஸ்டேட், ஈயச்சுரங்கம், இன்சூரன்ஸ் கம்பெனி , ஹோட்டல்கள், தியேட்டர்கள்,  பங்குவணிகம் எனப் பரந்துபட்ட வியாபாரம் இவருடையது. இவை எல்லாவற்றையும் விட இவர் ஆரம்பித்த கல்விச்சாலையும் பல்வேறு இடங்களில் கல்விச்சாலைகளுக்கு வழங்கிய நன்கொடையும்தான் இன்றும் இவர் பெயரைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆங்கில அரசு வழங்கிய சர் பட்டத்தை ஏற்காதவர் இவர் . 1957 ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கௌரவம் பெற்றது அவ்விருதும் நமது தேசமும். இவர்போல் ஒரு மனிதர் இனித்தான் பிறந்துவரவேண்டும்.
 

 

காரைக்குடி திருக்குறட் கழகத்தின் 61 ஆண்டுவிழாவில் (2015) தவத்திரு பொன்னம்பல அடிகளார் தன் உரையில், “பாரதி சொன்னதுபோல் “ அன்ன சத்திரம் ஆயிரம் கட்டலிலும் .. ... கோடிப் புண்ணியம் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் “  நேருஜி ஒரு முறை பதினைந்து லட்சம் பணம் கொடுத்து இடம் கொடுத்தால் அந்த ஊருக்கு ஆராய்ச்சிக் கூடம் உண்டு என்று அறிவித்தார். அப்போது காரைக்குடியில் இருந்து கோடி கொடுத்துத் தன் மாளிகையையும் கொடுத்தார் ஒருவர்.  அவர்தான் வள்ளல் அழகப்பர். இங்கே பள்ளி கல்லூரி எல்லாம் தன் சொந்த செலவில் அமைத்து எல்லாருக்கும் கல்வி அளித்தவர் வள்ளல் அழகப்பர். அவர் போத நெறி அல்ல வாழ்வு நெறியைக் கொண்டவர்.”” என்றார்.” அப்படி வந்ததுதான் இன்றுவரை செயல்பட்டு வரும் செண்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் எனப்படும் சிக்ரி.


கோட்டையூரில் 2017 இல் காரைக்குடி கம்பன் கழகம் நடத்திய நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கில் உரையாற்றிய சொ சொ மீ அவர்களின் பேச்சு முத்திரைப் பேச்சு. வள்ளல் அழகப்பர் குடும்பத்தில் பிறந்த பெண்பால் வள்ளல் = வள்ளி யம்மை ஆச்சி எனக் குறிப்பிட்டார்.1947 ஜூலை மூன்றாம் தேதி வள்ளல் அழகப்பர் காரைக்குடியில் கல்லூரி ஒன்று அமைப்பதாக அரசிடம் உறுதிகொடுத்து அதே ஆண்டே 1947 ஆகஸ்ட் 15 அன்று கல்லூரியை ஆரம்பித்ததாகக் குறிப்பிட்டார். அரிய வரலாற்றுத் தகவல்கள் நிரம்பியதாக இருந்தது அவர் பேச்சு. மேலும் அந்தக் காலத்தில் தமிழில் பேராசிரியர்கள் இல்லை ஆனால் ஒருவருக்கு விரிவுரையாளர் என்று பதவி கொடுப்பதற்குப் பதிலாக பேராசிரியர் என்று பதவி கொடுத்ததாகவும் , எழுத்து பூர்வமாக வள்ளல் அழகப்பரின் கையெழுத்தோடு கொடுக்கப்பட்டு விட்டதால் அதையே அவர் கடைபிடித்து அந்தப் பேராசிரியருக்கு அதிக சம்பளம் வழங்கியதாகவும் சொன்னார். அதற்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகே தமிழ்த்துறைக்கு பேராசிரியர் என்ற பதவியை அறிமுகப்படுத்தியதாம் அரசு.


இப்பேர்ப்பட்ட பெருமனச்செம்மலான அழகப்பரின் 108 ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரைக் கௌரவிக்கும் விதத்தில் காரைக்குடியில் தமிழ் உயராய்வு மையத்தின் முயற்சியால் ஒரு அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2017  ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய இந்திய கவிஞர்கள் சந்திப்பில் இந்த அருங்காட்சியகம் ஆசிய இந்தியக் கவிஞர்களால் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது.

 

இதில் இவரது குழந்தைப்பருவம் முதல் இவரது முழு வாழ்க்கைச் சரிதமும் புகைப்படமாகப் பதிவு ஆகியுள்ளது. மினி தியேட்டர் ஹாலில் இவர் பற்றிய டாகுமெண்டரி ஒன்று திரையிடப்படுகிறது. இது போக இங்கே தமிழ்ப் பண்பாட்டு மையம் தமிழகத்தின், தென்னகத்தின், செட்டிநாட்டின் பாரம்பரிய வாழ்வு முறைகளையும் முன்னோர் பயன்படுத்திய/பயன்படுத்தி வரும் பொருட்களையும் தனித் தனியாகக் காட்சிப்படுத்தியுள்ளது சிறப்பு.

 

இதன் முகப்புத் தோற்றம் செட்டிநாட்டு வீடுகளை நினைவுபடுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. உள்புறத்தில் மார்பளவு சிலையில் என்றும் மாறாப் புன்னகையுடன் ஒளிர்கிறார் கல்வி வள்ளல், நிறையப்பேருக்கு  வாழ்வளித்த பெருந்தகை

இங்கே தமிழர் வாழ்வைச் சித்தரிக்கும் ஐவகைத் திணைகளில் வாழ்வு, மூவேந்தர்கள், பண்டைக்காலத்திய வரலாற்று ஆவணங்கள், பித்தளை, இரும்பு, மங்கு, சீர்வரிசை ஆகியன காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

எரகா மரம் எனப்படும் இரவை மரத்தில் செய்யப்பட்டது - கால்வாய்களில்/வாய்க்கால்களில் இருந்து நீர் இறைக்க உபயோகப்படுத்திய கருவி, மரக்கால் எனப்படும் அளவிக் கருவிகள். ( உழக்கு , ஆழாக்கு , படி போன்றவை ), கலப்பைகளும் கொட்டான்களும் ஏறுதழுவுதலும், உழவும் மரக்கட்டில் ஊஞ்சலும் சிறு குடிலும் ஆகியனவும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

 

உள்ளே அழகப்பருக்கான அரங்கில் அழகப்பர் உபயோகப்படுத்திய பொருட்கள். மூக்குக் கண்ணாடி, பாஸ்போர்ட், அவரது கோட், ஷால் ஆகியன வைக்கப்பட்டிருந்தன.  நடுநாயகமாக தங்க அரளிப் பூக்கள் முன்னிருக்க வீற்றிருக்கும் தங்க மனிதர். 2007 இல் இவரைக் கௌரவிக்க அரசால் வெளியிடப்பட்ட ஸ்டாம்பு காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தது.

 

ஊரே விருந்துண்ட திருமணம் இவரது மகள் உமையாள் இராமநாதன் அவர்களின் திருமணமாகத்தான் இருக்கும். பள்ளிச்சிறுவர்கள் ஒவ்வொருவரும் இவரைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்.  அனைத்துப் பள்ளிகளும் தங்கள் மாணாக்கர்களை இங்கே அழைத்துவந்து வள்ளல் பற்றி அறியச் செய்ய வேண்டும். அவரது வாழ்க்கைச் சரிதம் புதுக்கவிதைத் தொகுப்பாக நலந்தா பதிப்பகத்தில் வெளியாகி உள்ளது. 1909 முதல் 1957 வரை வெறும் 48 ஆண்டுகளே வாழ்ந்து ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் ,  சிக்ரி என்னும் ரிசர்ச் இன்ஸ்ட்டிடியூட் காரைக்குடிக்கு வரக்காரணமாக இருந்தவர் அழகப்பர்.. சைமன் கமிஷனை எதிர்த்தவர்,  பார் அட் லா படித்தவர்,  விமானப் பயிற்சியும் பெற்றவர். கொச்சியில் அழகப்பர் நூற்பாலை, கிருஷ்ணன் கோயில் ஆகியவற்றையும் அழகப்பா நகரையும் உருவாக்கியவர். முதன் முதலில் மதிய உணவுத்திட்டம் கொடுத்தவர். பத்மபூஷண் விருது பெற்றவர். அவர் பற்றிய இந்நூலை எழுதியவர் அவரது உறவினர் - வள்ளலின் தாய் மாமனின் மகன் வழிப் பேரனான கவிஞர் சித. சிதம்பரம் அவர்கள்.

இதில் நான் ரசித்த வரிகள் பலப் பல. புதுக்கவிதையையே சந்த நயத்தோடு எதுகை மோனையோடு அழகாய்த் தந்திருக்கும் இந்நூலில் ஓரிடத்தில் என் கண்கள் என்னை அறியாமல் கசியவும் செய்தன.

“புற்று நோய்க்கும்
புற்று வந்தது
எலும்புப் புற்றுநோய்
அழகப்பக் கலாசாலையில்
கற்க வந்தது”

“கப்பலாய் இருந்தவர்
தோணியாய் இளைத்தார்
பூமி முழுவதும் அவருக்காய்ச்
சாமி கும்பிட்டது “
 

“விசித்திர சித்தனே ! சமுத்திரம் அனையாய் !
பசித்திடப் பார்க்கா(த)
  பால் மார்புடையாய் “

“கடலும் எரிய மலையும் எரிய
இறைவன் செய்தான் கொடிய கொடிய “

இவ்வரிகள் படித்ததும் தாயுமான தந்தையைத் தரிசித்த புளகமும் தன்னையறியாத கண்ணீரும் பெருகியது. அருமையாகச் சொன்னீர்கள் கவிஞர் சித சித அவர்களே. ! நெகிழ வைத்தீர்கள் உங்கள் அடுக்கு மொழிக் கவிதையால்.

வள்ளல் அழகப்பர் காவியம், நாடு , இனம், ஊர், குடும்பம், பிறப்பு , கல்வி, கனவின் பயணம், பங்கு வணிகம், பம்பாய்ச் சாதனை, மாநகர்க்கு ஈந்த மனம், காரைக்குடி -கல்விக்குடி, அழகப்பா கல்லூரி, சிக்ரி, மின்வேதியல் ஆய்வுக் கழகம், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பவநகர் அரங்கு, பொறியியற் கல்லூரி, அழகப்பர் மழலையர் பள்ளி, அழகப்பர் மகளிர் கல்லூரி, சென்னை கிருஷ்ணவிலாசம் இல்லம், கொடைக் கொடுமுடி ஆகிய தலைப்புகளில் கவிதை அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.

இன்னும் நான் ரசித்த பல வரிகள்.

கொடுக்கப் பிறந்த மகன்
பிறக்கும்போதே
கொண்டு பிறந்தான்
கோடிச் சந்திரக் குளிர்ஒளி அழகை
கொய்யாப் பூக்களின் ஒய்யாரத்தை.

திருவாசகமும் திருவண்ணாமலையும்
கருவாசத்திலிருந்தே அவரிடம் கலந்திருந்தன.

வேண்டத்தக்கது அறிவோனாய்
வேண்ட முழுதும் தருவோனாய்..

அவர்
வாங்கினால் வளரும்
விற்றால் தளரும்
பங்கு அவருக்குப் பாங்கி ஆனது

கட்டுமானத்தொழில், காஸ்டிக் உற்பத்தி, இந்தியன் வங்கி, மருந்துத் தயாரிப்பு என்று பல்தொழில் வித்தகர் ! சென்னையில் இருக்கும் சேம்பர் ஆஃப் காமர்ஸ்
  கட்டிடம் அவர் அளித்த நன்கொடையால் உருவானதுதான்.

எண்ணிக் கொடுக்காமல்
எதிர்பார்ப்பவர்
எண்ணியதைக் கொடுக்காமல் - அவர்
எண்ணியதிலும்
பல்கிக் கொடுத்த
பயன் கொடையர் அழகப்பர் !

காரைக்குடியின் காமதேனு!

கயாவில் நாளந்தா
காரைக்குடியில் அழகப்பா

கள்ளிப்பால் சொட்டிய இடத்தில்
கல்விப்பால் பெருகியது.

அரசுகள் சாதிக்காததை
அழகப்பர் சாதித்தார்.

வித்தை விருட்சமாக்க
நூற்பாலை ஒன்றும்
நீர்ப்பாசனம் ஆனது

கொடி நிற்கத் தேரளித்தான் வள்ளல் பாரி
பெண்
கொடி கற்க வீடளித்தார் அழகப்ப மாரி.

ஆலைகள்
  விற்றுக் கல்விச்
சாலைகள் கட்டிய கார்மேகம்

 ஆயிரம் வீடுகளில்
அகப்பைச் சோறாய்
பாயிரம் பாடிய
கற்பனைச் சாறாய்


வெறும் முப்பது ரூபாயில் ஒரு வள்ளலின் காவியத்தைச் செப்பும் அரிய நூல் இது. அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. மாணாக்கர் கைக்கொள்ள வேண்டிய கையேடு. பலரும் அறியும் வண்ணம் அரிய தகவல்கள் அடங்கிய இந்தக் கொடையின் கதையினை ஆக்கம் செய்தவர் பதிப்பாளர் நலந்தா செம்புலிங்கம்.

கோடியில் ஒருவர் கோயிலாகிறார்
அழகப்பர் கல்வி ஆலயம் ஆகினார் !

அறிஞர்களை எல்லாம் தேடியவர்
அறிஞர்கள் எல்லாம் தேடியவர்.

என ஓசை நயத்தோடு வள்ளலின் காவியம் அற்புதமாகப் படைக்கப்பட்டுள்ளது. வள்ளலின் அடியொற்றி நடக்க முயல்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...