எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 பிப்ரவரி, 2024

”நீங்களும் செல்வந்தர் ஆகலாம்” எனக்கூறும் ஸ்டேட் எக்ஸ்ப்ரஸ் திரு இராமநாதன்.

3.”நீங்களும் செல்வந்தர் ஆகலாம்” எனக் கூறும் ஸ்டேட் எக்ஸ்ப்ரஸ் திரு இராமநாதன்


தேவகோட்டையைச் சேர்ந்தவர்கள் திரு. இராமநாதன். இளமைப்பருவத்தில் கடின உழைப்பால் உயர்ந்தவர்கள். இன்றும் தன் கொள்கைப் பிடிப்போடு நேர்மையாகச் செயல்படுபவர்கள். பி டி எம் ( பால தண்டாயுதபாணி மலர் ) என்றும் பி டி எம் எம் ( பால தண்டாயுதபாணி மங்கையர் மலர் ) என்றும் வாட்ஸப்பில் ஈ மேகஸீனை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவர்கள்.

இவரது மனைவி லலிதா ஆச்சியும் மகள்கள் மாலதி சுப்பு, மற்றும் சீதாலெக்ஷ்மியும் இணைந்து நிர்வகிக்கும் பி டி எம் எம் மூலம் கவிதாயினிகளும், சிறந்த பேச்சாளர்களும் இனம் காணப்பட்டனர். இன்னும் பல மேடைகளில் அவர்கள் சிறப்பிடம் பெற்று வருகின்றனர். திரு இராமநாதன் அவர்களின் மகன் வெங்கடேஷ் சிறந்த வக்கீல் மட்டுமல்ல நூறு முறைக்குமேல் ரத்ததானம் செய்தவர் என்பதும் சிறப்பு.

தேவகோட்டை பாலதண்டாயுதபாணி சாரிட்டபிள் ட்ரஸ்ட் என்னும் அமைப்பை 2001 இல் நிறுவி அதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வி நிதி உதவியையும், மற்றும் பலருக்குத் திருமண உதவியையும் வழங்குகிறார்கள். வருடந்தோறும் பிரபலங்களை அழைத்து நகரத்தார் சான்றோர்களைப் பாராட்டி ”மாமணி” விருது வழங்கி விழா எடுப்பவர்கள். அந்த ட்ரஸ்ட் இப்போது வெள்ளிவிழா விளிம்பில் உள்ளது. அண்ணன் அவர்கள்தான் அதன் மேனேஜிங் ட்ரஸ்டி.

முதன் முதலில் கல்யாண வீடுகளில் ஸ்டேட் ஐஸ்க்ரீம் நிறுவனத்தார்தான் அட்டை விசிறிகளை நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் ஊர்கள் கொண்ட மேப் ( வரைபடத்தோடு ) வெளியிட்டவர்கள். இனிமையான ஐஸ்க்ரீம் தொழிலில் ஈடுபட்டு மாபெரும் உயரத்தை எட்டியிருக்கும் அண்ணன் தன் வாழ்வில் எதிர்கொண்ட பல்வேறு தரப்பட்ட மனிதர்கள், இன்னல்கள் பற்றியும் அதைக் கடந்து வந்த விதம் பற்றியும் இன்றைய இளைஞர்களுக்கான ஆலோசனையாகக் கூறியதைத் தொகுத்துள்ளேன்.

”*STATE EXPRESS என்ற பெயரில் தான் வேகம்.ஆனால் 50 ஆண்டு வாழ்வில் மிதமான வேகமே!* சொந்த ஊர் தேவகோட்டை. கோவில் பிள்ளையார்பட்டி.  செல்லஞ் செட்டி வகை பங்காளி. அப்பு.லெ.வீடு.ஆயா வீட்டு ஐயா சேது செட்டியார் @ NK.V.L.Rm இராமநாதன் செட்டியார் மிகுந்த செல்வ செழிப்பில் பவருடன் கொழும்பில் வாழ்ந்தார்கள்.  1950 செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதியில் பிறந்த எனக்கு ஆயா வீட்டு ஐயாவின் பெயர். ஐயாவின் பெயரை எனக்கு சூட்டியதால் ரூபாய் ஆயிரம் கொடுத்து ஆசீர்வதித்தார்களாம். பெயரோடு என் இனீசியலும் V.L. என பொருந்தியது பாக்கியம்.  தன்மானத்துடன் ஊக்கமாக வாழ்ந்தார்களாம்.  அப்படி ஐயாவுடன் பல பொருத்தம் எனக்கு உண்டு.

நான் ஆரம்ப கல்வி கற்கும் போது முதல் நான்கு ஆண்டுகள் மதுரை பசுமலை கிறிஸ்துவப் பள்ளி.  ஆயா வீட்டின் ஆதரவில் தங்கி திருவேங்கடமுடையான் மற்றும் நகரத்தார் பள்ளியில்  பத்தாவது வரை படித்தேன். எங்கள் தாய் மாமன் என்னிடம் நகரத்தார் பள்ளியில் படிக்கும் போது, நன்றாக படித்து மார்க் பெற்றால் மகள் லல்லியை உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று பெரிய பரிசாக ஒரே வார்த்தையில் அறிவித்தார்கள். இறையருளால் 1973 நவம்பர் 9 ஆம் தேதி அப்படியே நடந்தது.

வாழ்க்கையில் இளைஞர்களுக்கு Goal வேண்டும் என்பார்கள். என் வாழ்வை சீர் அமைத்தது தெய்வமாக வாழும் எங்கள் அப்பத்தாள் தெய்வத்திரு சீதை ஆச்சி. பெற்றோர் கிராமத்தில் வாழ்ந்து கொண்டு, வலிவலம் தேசிகர் பண்ணையில் கணக்கராக பணி செய்து சிறிதளவு வாங்கிய சம்பளத்தில் சிக்கன வாழ்க்கை வாழ்ந்து, மாதம்  100 யை அருமைமிகு தந்தை பிரேக் இல்லாமல் அனுப்பி வந்தார்கள். சொல்லும் போது *கண்கள் நனைகின்றது*. 1967- 68 ல் PUC படித்த ஒரு வருடத்தை வீண் அடித்ததோடு எங்கள் தந்தையின் உழைப்பையும் வீண் அடித்தேன். இப்போது உணர்கிறேன்.


ஆனால் என் தொழிலில் ஆர்வத்துடன், தொழில் பயத்துடன் ஈடுபட்ட பணி மூலம் 1976 - 77 களில் என் தலை நிமிர்ந்தது..நான் 1968 ல் சென்னையில் தேவகோட்டை நகரத்தார் நடத்திய  அருணா பார்மஸி என்ற பிரபல மருந்துக் கடையில் ஐந்தரை மாதங்கள் காஷியராகப் பணி செய்தேன். சம்பளம். மாதம் ₹ 80.

தேவகோட்டை  PL.L.L. எங்கள் சீதை அப்பத்தாள் வழியில் சற்று தூரத்து உறவினர். மதுரையில் உள்ள அவர்களின் ஸ்டேட் ஐஸ் கம்பெனிக்கு மானேஜர் தேவை என்பதால் வங்கி வேலையில் சேர்த்து விடுமாறு கேட்கச் சென்ற என்னை அவர்கள் ஐஸ் கம்பெனிக்கு மேனேஜராக இருக்கும்படிக் கூறினார்கள்.  ரயில் செலவிற்கு முதலாளி அவர்கள் பொற்கரங்களால்  ₹ 20 கொடுத்தார்கள். அந்தப் பணம் தான் முதலும் கடைசியுமாக அவர்கள் கையில் வாங்கியது. பிறகு ஏராளமான பணங்களை அரை நூற்றாண்டுகளில் பார்த்து விட்டேன்.

*ஆற்றலை பயன் படுத்தி தொழில் மூலம் சக்தியை வளர்த்து அந்தஸ்தை பெருக்கி கொள்ள வேண்டும்* பணம் சம்பாதிக்க வேண்டும். மறைமுகமாக சக்தியையும் அந்தஸ்த்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  1977,78 வரை  STATE என்று மார்கெட்டிங் செய்தோம். சீதை அப்பத்தாளின் அண்ணன் பெயரனும் முதலாளிக்கு சின்ன மைத்துனருமான தெய்வத்திரு பழ. லீஸிற்கு கம்பெனியை ஒப்புக் கொண்டதால் இடம் பெயர்ந்து ஒரு தொழிலை எப்படி துவக்குவது எனப் பிள்ளையார் சுழி போட்டு, அறிந்தேன். எனக்கு கஷ்டக் கூட்டு  25 % . முதலாளி தொழிலை விற்க முற்பட்டதால், 1977 ஜனவரியில் உறவினர்கள் நால்வருடன் கூட்டு சேர்ந்து சொந்தமாக கிரயம் பெற்று, சொந்த தொழில் செய்ய டிக்கெட் கிடைத்தது இறைவன் அருள்.

ஈ ஸ்டேட் என்ற பெயருடன் போட்டியாளர் ஒருவர் மோதினார்.டிரேட் மார்க் குறித்து வழக்கு தாக்கல் செய்தேன். ஸ்டேட் எக்ஸ்பிரஸ் என்ற பெயரை பதிவு செய்ய 18 மாதங்கள் ஆகின. ஆர்வமாக ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும். தனிப்பட்ட சக்தி இருந்தால் தான் அதர்மங்களை எதிர்க்க இயலும். ஸ்டேட் எக்ஸ்பிரஸ் ஐஸ்கிரீம் நிறுவனம் சேலத்தில் பொன்விழா விளிம்பிற்கு வந்து விட்டது..

இக்காலகட்டங்களில் சேலத்தில் இருந்து சென்னைக்கு அடிக்கடி போய் வந்தேன். என் இல்லத்தரசி மூன்று பிள்ளைகளுடன் சேலத்தில் இருந்து முழு ஒத்துழைப்புக் கொடுத்து வந்தார்.. கடந்த இருபது ஆண்டுகளாக அவரும் இணைந்து நேரில் நிர்வாகம் செய்வதால் என் பணிச்சுமை தற்போது குறைந்துள்ளது.

பணியாளர்களை பங்குதாரர்களாக நினைத்து சம்பளங்களை கொஞ்சம் விரிவாக கொடுத்து வந்தால் தாக்கு பிடிக்கலாம். எங்கள் தொழிலின் மிஷின்களை இருபது ஆண்டுகள் மதுரை மெக்கானிக் பார்த்து வந்தார். ஒரு கால கட்டத்தில் அவரால் தான் தொழில் நடைபெறுகிறது என அதர்மமாக நினைத்து 1991 களில் விலகினார்.

மின்சார இணைப்புகளோ அல்லது ஃபோன் இணைப்புகளோ 50 வருட பயன் பாட்டில் ஒரு தடவை கூட  துண்டிக்கப்பட வில்லை சானிட்டரி ஆய்வாளர்கள் மற்றும் சேல்ஸ் டாக்ஸ் பணியாளர்கள் அதி நம்பிக்கையில் டார்ச்சர் கொடுப்பார்கள். சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர் லஞ்சம் கேட்பார்கள். லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்து சிறைவாசம் அடைந்தனர். துணிந்தவனுக்கு துக்கமில்லை. 

நாம் சம்பாதிக்கும் பணங்களை , மோசடியாக ஆசை வார்த்தை காட்டும்  வெளி நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்து ஏமாறாமல் நம் அதிகாரத்திலேயே இருக்கும்படி தொழில் மற்றும் நிலங்களில் முதலீடு செய்து கொள்ள வேண்டும். சிறியளவில் தொழில் செய்ய முதலீடாக நிதிமட்டும் போதாது.சம்பந்தப்பட்ட எல்லாத்துறையிலும் அடிப்படை அறிவு வேண்டும். தொழில் செய்ய  முன் அனுபவம் வேண்டும். அடிப்படை கணக்கு விபரம் அறிந்து கொள்ள வேண்டும். நவீன காலத்தில் Food Safety & GST அறிவிப்புகள் படி செயல்பட திறமை வேண்டும்.மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் டார்ச்சர் களை சமாளிக்க திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மிஷினில் கோளாறு வரும் போது சரிசெய்ய திறன் வேண்டும். மெக்கானிக் திறமையானவராக இல்லாவிட்டால், நம்மை பள்ளத்தில் இறக்கி விட சந்தர்ப்பம் உண்டு. பணியாளர்களை கையாளும் திறன் வேண்டும்.இளைய சமுதாயத்திற்கு ஒன்றை சொல்லி நிறைவு செய்கிறேன். சிறு தொழில் செய்யும் போது கடன்களை அளவிற்கு அதிகமாக வாங்கி அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக கூடாது. மிதமான முன்னேற்றமே போதுமானது. அது தான் நிம்மதியை கொடுக்கும்.தொழில் , குடும்பம் மற்றும் சமூகச் சேவை என வாழ்வு இருக்க வேண்டும்.

அது தான் மகிழ்வான வாழ்வு. கடன் எவ்வளவு வைத்துள்ளீர்கள் என்ற கேள்வி கேட்டால்....0 % என்பது என் பதில். வருமான வரியில் சலுகை என்ற கணக்கில் கடன் வாங்கும் பழக்கம் வேண்டாம். கோடிகளை முதலீடு செய்து வெளிநாட்டு மிஷின்கள் வாங்கி ஆர்டர்கள் கிடைக்காமல் பல முதலீட்டாளர்கள் முழிக்கிறதை சர்வே செய்து நடப்பை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வப் பொழுது மிஷின்கள் டைப் மாறுவதால் விழிப்புணர்வுடன்  முதலீடு செய்ய வேண்டும். இப்படி எல்லாவற்றையும் நியதியுடன், வழிகாட்டுதலுடன் கடைப்பிடித்தால் இன்றைய ஏழை நாளைய செல்வந்தர்.

எனது இப்பேட்டியை இளைய சமுதாயம் பயன் அடைய பொது நலன் குறித்து வெளியிடுகிற *நமது செட்டிநாடு* நிர்வாகத்திற்கு நன்றி.”என்று கூறி மடை திறந்த வெள்ளமென தன் மனத்திலிருந்தவற்றை எல்லாம் இளைஞர்கள் மட்டுமல்ல. தொழில் முனைவோர் எல்லோரும் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகளாகக் கூறிய ஸ்டேட் எக்ஸ்பிரஸ் திரு. இராமநாதன் அண்ணன் அவர்களிடம் நமது செட்டிநாடு இதழ் சார்பாக நன்றி கூறி வந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...