எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 9 ஜூலை, 2023

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்:- 3

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்:- 3

  புதுவருட வகுப்பு நோட்டுப் புத்தகங்களுக்கு ஆதித்யாவும் ஆராதனாவும் தாத்தாவிடம்  அட்டை போடக் கற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு செய்தித்தாளை விரித்து அதன் மேல் வைத்து அட்டைபோடுவது எப்படி எனக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஆராவமுதன். இடையிடையே வழக்கம்போல கத்திரிக்கோலுக்கும் ஒட்டுப்பசைக்கும் ஆதித்யாவுக்கும் ஆராதனாவுக்கும் சண்டை வந்தது.

  ”அண்ணன் தங்கச்சிதானே எதுக்கும் விட்டுக் கொடுத்துப் போறதில்லை.”  ”என்ன சத்தம்” எனக் கேட்டவாறு பால்பாக்கெட்டுகளை எடுத்தவாறு உள்ளே சென்றார் அவர்களின் தாய்.

  உஷ் எனச் சைகை காட்டிய ஆராவமுதன் ”கொஞ்சநேரம் கதை நேரம். நோட்டை எல்லாம் அப்பிடியே வைங்க நான் ஒரு சின்ன கதை சொல்வேன். அப்புறம் நாம காஃபி, போன்விட்டா சாப்பிட்டுட்டுத் திரும்ப அட்டை போடலாம் ”என்றார்.

  ”மாமா நீங்க மட்டும் இல்லைன்னா இந்தக் குட்டீஸை என்னால சமாளிக்கவே முடியாது. தாங்க்ஸ் மாமா ”என்றபடி மூவருக்கும் சின்ன சின்ன கப்புகளில் பாதாம் அல்வாவும், முந்திரி பக்கோடாவும் கொண்டு வந்து வைத்தாள் ரம்யா.

  “ஐய் எனக்குப் பிடிக்குமே” என பாதாம் அல்வாவை ஆராதனாவும், முந்திரி பக்கோடாவை ஆதித்யாவும் எடுக்க ”அப்பாடா இதுலயாவது பிரச்சனை இல்லாம இருக்கே” என்று சிரித்துக் கொஞ்சினார் ஆராவமுதன்.

  “தாத்தா ஸ்டோரி சொல்றேன்னு சொன்னீங்க மறந்துடாதீங்க” என்று ஞாபகப்படுத்தினான் ஆதித்யா. அல்வாவை ஸ்பூன் ஸ்பூனாய் சப்புக்கொட்டிச் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆராதனாவும் தாத்தாவை தன் கரிய பெரிய கண்களால் அழகாகப் பார்த்தாள்.

  இருவரையும் இருபக்கம் அணைத்தபடி ஆராவமுதன் சொல்ல ஆரம்பித்தார். ”இப்ப நான் ஒரு சில ராஜாக்களோட கதையைச் சொல்லப்போறேன். அந்தக் காலத்துல ராஜாக்கள் எல்லாம் வள்ளல்களா இருந்தாங்க. அதுல ஏழு பேரைக் கடையெழு வள்ளல்கள்னு சிறப்பா சொல்வாங்க. பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி ஆகிய ஏழு ராஜாக்களுமே மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் தாவரங்களுக்கும் கூட மனம் இரங்கி உதவி இருக்காங்க. 

  ”இதுல பாரிங்கிற ராஜா ஒரு நாள் காட்டுக்குப் போகும்போது தேரை நிறுத்திட்டுப் போனாராம். திரும்பி வந்து ரதத்துல ஏறப்போகும்போது அதன் மேலே ஒரு முல்லைக்கொடி படர்ந்திருந்துச்சாம். அந்த கொடியை விலக்க மனமில்லாம அந்தத் தேரையே அந்த முல்லைக்கொடிக்குப் பற்றுக் கொழு கொம்பா விட்டுட்டு நடந்தே அரண்மனைக்கு வந்துட்டாராம்.”

  இந்தக் கதையைக் கேட்டதும் இருவரும் நெருக்கி அமர்ந்து “இன்னும் ராஜா கதை சொல்லுங்க தாத்தா” என்றபடி முந்திரி பகோடாவை ஒரு கை பார்க்க ஆரம்பித்தனர்.

  ”இதுல அதியன் என்ற ராஜா செய்தது அற்புதமான விஷயம். என்னன்னா தமிழ் மூதாட்டி ஔவைப் பிராட்டி ஒரு தரம் ராஜாவைப் பார்க்க வந்திருந்தாங்க. அப்போ அவுங்களுக்கும் சரியாசனம் கொடுத்து ராஜா அவையில் அமர வைத்திருந்தார். அப்ப அங்கே வந்த ஒரு முனிவர் நீண்ட நாள்  வாழ உதவும் நெல்லிக்கனி ஒன்றை ராஜாவுக்குப் பரிசாகக் கொடுத்தாரு. ”

  மத்த ராஜான்னா என்ன பண்ணிருப்பாங்க. இத நாம் சாப்பிட்டு நீண்டநாள் உயிர்வாழணும்னு எடுத்து வைச்சிருப்பாங்க ஆனா அதியமான் ராஜா என்ன பண்ணாரு. ”இந்த நெல்லிக்கனியை ராஜாவான நான் உண்பதை விட தமிழ்ப்பிராட்டியான ஔவைக்குக் கொடுத்தா இன்னும் அதிகநாள் உயிர்வாழ்ந்து தமிழ் மொழிக்குச் சேவை செய்வார்னு சொல்லி அத ஔவைப்பிராட்டிக்குக் கொடுத்துட்டாரு  !. அவ்வளவு உயர்ந்த வள்ளல்தன்மை உள்ளவங்க நம்ம ராஜாக்கள் எல்லாம். “ அதுனால இயல்வது கரவேல். உங்களால இயன்றதை ஒளிக்காமக் கொடுக்கணும் என்றார்.

  அதே சமயம் ரம்யா அவருக்கு காஃபியையும் பிள்ளைகளுக்கு போன்விட்டாவையும் கொண்டுவந்து வைத்ததால் மூவரும் அதை அருந்தினர்.

  ”தாத்தா தாத்தா ஒங்ககிட்ட ஒரு ஹெல்ப்” என்றான் ஆதித்யா. ”சொல்லுடா கண்ணு” என்றார் ஆராவமுதன். ”எங்க ஆட்டோக்காரர் இல்ல அவர் பையன் நகராட்சி பள்ளில படிக்கிறானாம். அங்கே புக் வைக்கும் ஷெல்ஃப் எல்லாம் திறந்திருக்காம். அதுனால புக் எல்லாம் மழையில நனையுதாம். அத இன்னொரு ஆட்டோகாரர்கிட்ட சொல்லிட்டு இருந்தாரு. நீங்க ஏதும் ஹெல்ப் பண்ணி அத கப்போர்ட் ஆக்கி மூடிபோட்டுத்தாங்க தாத்தா” என்றான்.

  ”ஆமா தாத்தா ஹெல்ப் பண்ணுங்க” என்று ஒத்தூதினாள் ஆராதனாவும். அவரது பென்ஷன் பணத்தில் அவ்வப்போது இவ்வாறு உதவிகள் செய்வதுண்டு. “அடடே குட் ரெண்டு பேருமே ஒண்ணா சேர்ந்திட்டீங்களே. இதவிட என்ன சந்தோஷம் எனக்கு இருக்கு. அப்ப ஹெல்ப் செய்திட வேண்டியதுதான். நாளைக்கு உங்க ஆட்டோகாரர்கிட்ட கேட்டு அதுக்கானதைச் செய்றேன். இப்ப அட்டை போடுவோம். ஆனா ஒண்ணு கத்திரிக்கோல்ல நீ கட்பண்ணும்போது அவ அட்டையை மடிச்சு ஒட்டணும். அவ கட் பண்ணும்போது நீ உன் நோட்டை மடிச்சு ஒட்டணும். விட்டுக்கொடுத்து அட்டை போடுவோம்னு உறுதி சொன்னீங்கன்னா நான் ஹெல்ப் பண்றேம்பா ”என்றார்.

  ”ஐய் எங்க தாத்தா சூப்பர் தாத்தா” என்று கத்திக் கொண்டே அவரை கட்டிக் கொண்டு முத்தமிட்டு ”ஒண்ணா ஒர்க் செய்வோம்” என்று தம்ப்ஸ் அப் காட்டினார்கள் பேரப் பிள்ளைகள்.

  அவர் கன்னமெங்கும் பாதாம் அல்வாவும் போர்ன்விட்டாவும் மணத்துக் கிடந்தது. அவரும் பிள்ளைகளைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டார்.

1.   3.  இயல்வது கரவேல்
கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...