உள்ளம் கெடாதவரை எதுவுமே கெடுவதில்லை. உள்ளம் கெட்டால் அனைத்தும் கள்ளமாகும், அது ஒருவனை மலையில் இருந்து மடுவில் மட்டுமல்ல மரணத்துக்கும் செலுத்தும் என்று ஒருவனின் வாழ்க்கை நமக்குப் பாடம் புகட்டுகிறது.
அப்படி உள்ள நலன் அழிந்ததால் இழிந்தவன் சாதாரணன் அல்ல. உலகனைத்தையும் வென்றவனும், மூன்று கோடி வாழ்நாள் உடையவனும், முயன்று பெற்ற தவப்பயனால் யாராலும் வெல்லப்படமாட்டான் என சிவபெருமானே மனமகிழ்ந்தருளி வரம் வழங்கிய தசமுகன் எனப்படும் இராவணன்தான் அவன். அவனைப்பற்றிப் பார்ப்போம் குழந்தைகளே.
தென்கடலில் கெம்புப் பதக்கம் போல் ஒளிவீசி மின்னுகிறது இலங்கை மாநகரம். அங்கே அயோத்திக்கீடாக ஏன் அதை விடவும் அழகான மாட மாளிகை கூட கோபுரங்கள் எல்லாம் ஒளிவீசிப் பொலிகின்றன. அவற்றின் நடுவில் அதோ விஸ்வகர்மா சமைத்து விண்ணளாவி உயர்ந்து நிற்கின்றதே அந்த அரண்மனைதான் இலங்காதிபதி இராவணனின் மாளிகை.
இராவணனின் பெற்றோர் புலஸ்தியரின் பேரனான விஸ்ரவ முனிவரும், அசுரகுலத் தலைவனான கமாலியின் மகள் கேசியும் ஆவார்கள்.. இராவணனின் கூடப்பிறந்தவர்கள் விபீஷணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை. இவனது மனைவி மண்டோதரி. மகன்கள் இந்திரஜித்து, அட்சய குமாரன், அதிகாயன், பிரகஸ்தன், திரிசரன், நராந்தகன், தேவாந்தகன் ஆகியோர்.
சிவ பக்தனான இராவணன் இலங்கையின் நலம் வேண்டி அதி தவம் செய்து ஆத்மலிங்கம் பெற்றான். சிவனை எண்ணி உருகி வீணைவாசிக்கும்போது ஒரு முறை வீணை நரம்புகள் அறுந்துவிட தன் கை நரம்புகளை வீணையில் மாட்டி சாமகானம் பாடி சிவனை உருக்கியவன். நவக்கிரகங்களை அடக்கி தன் சிம்மாசனத்தின் படிகளாக்கியவன். அவன் உள்ள நலன் கெடும்வரை எல்லாம் சரியாகவே போய்க்கொண்டிருந்தன இலங்கை மாநகரில்.
ஒரு நாள் அவனது தங்கை சூர்ப்பனகை அவைக்கு அறுந்த மூக்கோடு ஓடிவந்து ராமன் என்பவனது தம்பி இலக்குவன் தனது மூக்கை அரிந்துவிட்டதாகக் கூறி அழுகிறாள். ராமனின் மனைவி சீதையின் அழகைக் கூறி அவளைக் கவர்ந்து வந்து மணந்து கொள்ளுமாறு கூறுகிறாள்.
தங்கை சொல்லியதும் உள்ளம் கெட்ட இராவணன் சீதை இருக்கும் வனத்துக்கு ஒரு சன்யாசி ரூபம் எடுத்துச் சென்று பிச்சை யாசிக்கிறான். பிச்சையிட வரும் அவளை குபேரனிடம் இருந்து கவர்ந்து கொண்ட புஷ்பக விமானத்தில் தூக்கி வந்து இலங்கையின் அசோகவனத்தில் சிறைவைக்கிறான்.
கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும் சீதையிடம் தன்னை மணந்துகொள்ளும்படித் துன்புறுத்துகிறான். சீதை மறுக்கிறாள். இராமன் அனுமன் மூலம் சீதை இருக்குமிடம் தெரிந்து மீட்க லெட்சுமணன், சுக்ரீவனுடன் படையெடுத்து வருகிறார்.
இலங்கையில் யுத்தம் எங்கும் ரத்தம். இராவணனைத் தடுப்பாரும் இடித்துரைப்பாரும் யாரும் இலர். அவன் மேல் அதீதப் பிரியம் கொண்ட விபீஷணனின் கோரிக்கையையும் அவன் செவிசாய்க்கவில்லை. விபீஷணன் அண்ணனிடம் சென்று, “ நியாயமில்லாத இச்செயலைக் கைவிடுங்கள் அண்ணா “ என்று இறைஞ்சுகிறான்.
“நியாயமற்ற இடத்தில் இருக்க மாட்டேன் அண்ணா “ என்று கூறி இராமனிடம் தஞ்சம் புகுகிறான் விபீஷணன்.
கும்பகர்ணனோ அண்ணன் என்ன சொன்னாலும் கேட்பான். ஆறுமாதம் உறக்கம் ஆறுமாதம் உணவு உண்பது என்றிருக்கும் அவன் தமையனுக்காக உறக்கத்திலிருந்து எழுந்து வந்து இராமனுடன் போரிடுகிறான். அண்ணனைத் தட்டியே கேட்பதில்லை.
” கட்டளையிடுங்கள் அண்ணா. உமக்காக அனைத்தும் கொடுப்பேன் “
முடிவில் போரில் மலைபோல் வீழ்ந்து தன் உயிரையும் கொடுக்கிறான்.
இராவணனின் மகன் இந்திரஜித்தும் தந்தைக்காகப் போரிட்டு மாய்கிறான்.
”ஆணையிடுங்கள் தந்தையே. உங்களுக்காக உயிரையும் கொடுப்பது என் பாக்கியம். ” சொன்னபடியே எத்தனையோ இந்திரஜால வித்தைகள் செய்து போரிட்டும் இந்திரஜித் போரில் இறக்கிறான்.
இருந்தும் இராவணன் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் இராமனுடன் போருக்குச் செல்கிறான். ஒரு நாள் போர் முடிவில் அம்புகள் தீர்ந்துவிட இராமன் இன்று போய் நாளை வா என இராவணனை அனுப்புகிறான். மறுநாள் கடுமையான யுத்தத்தில் இராவணன் இராமனின் பாணத்தால் மடிகிறான்.
கல்வியும் அறிவும் அவனை நேர்ப்படுத்தவில்லை. நல்லவர்கள் இடித்துரைத்தபோதும் ஏற்கவில்லை. சகோதரன் பிரிந்து சென்றபோதும், மகனும் சகோதரனும் அழிந்த போதும் திருந்தவில்லை. உள்ளநலன் கெட்டதான் இழிந்து அழிந்தான் இராவணன். எனவே நம் உள்ள நலன் கெடாமல் நல்வழியில் செல்வதும் நல்லோர் சொல் கேட்பதும் முக்கியம் குழந்தைகளே.
டிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 29. 3. 2019 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.
டிஸ்கி 2. :- அரும்புகள் கடிதத்தில் இதிகாச புராணக் கதைகளைப் பாராட்டிய புதுகை எஸ்.பூஜாஸ்ரீ அவர்களுக்கு நன்றி.
டிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 29. 3. 2019 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.
டிஸ்கி 2. :- அரும்புகள் கடிதத்தில் இதிகாச புராணக் கதைகளைப் பாராட்டிய புதுகை எஸ்.பூஜாஸ்ரீ அவர்களுக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)