எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 17 ஜனவரி, 2019

கார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.

விடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை

புத்தகத்தைப் பற்றி
கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளாக வெளிவந்தவற்றை தொகுத்து இப்பொழுது புத்தகமாக வெளியிட்டுள்ளார். கட்டுரையாக வெளியிட்ட கல்கி குழுமத்திற்கும்,புத்தகமாக கொண்டு வந்த “படி வெளியீடு” நிறுவனத்திற்கும் நன்றிகள்.  நாட்டு விடுதலைக்காக இருமுறை சிறை சென்ற திரு. கல்கி அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்திருப்பது வெகு சிறப்பு !


நம்  நாட்டின் விடுதலைக்காக தங்கள் உடல், பொருள், சொத்து போன்றவற்றை இழந்தவர்கள் லட்சக்கணக்கில் இருப்பர். ஆனால் நாம் பெரும்பாலும், 1857இல் இருந்து நம் விடுதலைப் போராட்டத்தில் பங்குப்பெற்றவர்களைப் பற்றி மட்டுமே படித்திருக்கிறோம்.அதற்கு முன்னால் எந்த விதப் போராட்டங்களும் நடக்கவில்லையா என்று கேட்டால் அது எத்தனை அபத்தம். அதற்கு முன்னால் சிறு குறு அரசர்களாக இருந்த பலர், தங்கள் ராஜ்யம் போனாலும் பரவாயில்லை ஆனால் அன்னியரை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்நியர்களுடன் போரிட்டுள்ளுனர். 


நாம் இன்று பெண்கள் இராணுவத்தில் சேருவதை பற்றியும் போர்முனைக்கு செல்வதைப் பற்றியும் பெருமையாக பேசுகிறோம் ஆனால் இந்தப் புத்தகத்தில் மட்டுமே எட்டு வீரப் பெண்மணிகளை பற்றி திருமதி தேனம்மை எழுதியுள்ளார்கள்.மொத்தம் பதிமூன்று பேரை பற்றி எழுதப்பட்டுள்ளது இப்புத்தகத்தில். ஒவ்வொருவரைப் பற்றியும் இரண்டு அல்லது அதிகபட்சமாக மூன்று பக்கங்களுக்கு மிகாமல் அழகாக சுருக்கமாக அதே சமயம் முக்கியத் தகவல்கள் எதுவும் விடுபடாமல் சொல்லப்பட்டுள்ளது.

இதில் சிலரைப் பற்றி நான் கேள்விப்படுவது இதுவே முதல் முறை.பொதுவாய் நம் கட்டபொம்மனையும் , பூலித்தேவனையும், மருது சகோதரர்களை பற்றியும் தமிழகம் தாண்டினால் யாருக்கும் தெரியாது நாம் மட்டும் அனைவரைப் பற்றியும் படிக்கிறோம் என்று குறை சொல்வோம். ஆனால் இப்புத்தகத்தில் வரும் கிட்டூர் ராணி சென்னமாவைப் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிந்துள்ளோம். அதே போன்றுதான் வீரமங்கை வேலுநாச்சியார் எவ்விதம் மருது சகோதரர்களின் துணையுடன் ஆங்கிலேயரை வீழ்த்தி சிவகங்கை கோட்டையை கைப்பற்றிய வரலாற்றை நம் குழந்தைகள் எத்தனை பேர் படிக்கிறார்கள்.

எப்படி தமிழகத்தில் வீர மங்கை வேலு நாச்சியார் கொண்டாடப்படுகிறார்களோ அப்படி கர்நாடகத்தில் போற்றப்படுபவர் கிட்டூர் ராணி சென்னாமாவும்  அப்பக்காதேவி சௌதாவும். ஜான்சி ராணிக்கு 3௦௦ ஆண்டுகள் முன்பே ஆங்கிலேயரையும் போர்த்துக்கீசியரையும் எதிர்த்து போர் புரிந்தவர்கள். இன்றும் கர்நாடகாவில் நாட்டுப்புற பாடல் வடிவில் இவர்களின் வீரம் பரப்பப்படுகிறது.


நாம் நன்கு அறிந்த மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன், திப்பு சுல்தானைப் பற்றியும் அவர்கள் ஆங்கிலேயருடன் செய்த போர் பற்றியும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. இதில் நாம் வியக்கும் விஷயம் முகமது யூசுப் கான். ஆங்கிலேயரின் படைத்தளபதியாக இருந்தவன் தன் இறுதி நாட்களில் மனம் மாறி அவர்களுடனேயே சண்டையிட்டு துரோகத்தால் வீழ்ந்தான் என்பதே. காலம் மனிதர்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்ததுக்காட்டு.


டிஸ்கவரி புக் பேலசின் அங்கமான “படி வெளியீடு” மூலம் வெளிவந்துள்ள இப்புத்தகத்தின் விலை வெறும் ஐம்பது மட்டுமே. நம் குழந்தைகளுக்கு இப்புத்தகத்தை வாங்கித் தருவது அவர்களுக்கு நாம் அளிக்கும் சிறந்த பரிசாகும்.ஒரே கல்லில் இரு மாங்காய் எனபது போல், இன்று தமிழ் வாசிப்பு என்பதே அருகி வரும் நிலையில், இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலம் , வாசிப்புலகிற்குள் குழந்தைகளை அழைத்து வர இயலும் அதே சமயம் நமது விடுதலை வீரர்களைப் பற்றிய விவரமும் அவர்களுக்குத் தெரியும்.


இப்படி ஒரு புத்தகம் எழுத முனைந்த திருமதி தேனம்மைக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும். இதைப் பதிப்பித்த “படி வெளியீடு” நிறுவனத்தாருக்கும் எனது பாராட்டுகள்.

-    எல்கே (எல். கார்த்திக்)

2 கருத்துகள்:

  1. பதிவு அருமை
    அவசியம் படிக்க வேண்டிய
    புத்தகமாயிருக்கும் என நினைக்கிறேன்
    நிச்சயம்.வாக்கிப் படிப்பேன்
    நல்ல விமர்ச்சனப் பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி ரமணி சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...