ஒப்பிலாள்.
”அ னா செட்டியார் கடுதாசில போட்டபடி நாளானைக்குக்
கிளம்பி வாராகளாம். நாகப்பட்டினம் கப்பலடிக்குப் பிளைமவுத் கார் அனுப்பச் சொல்லித்
தந்தி அடிச்சிருக்காக வெனையத்தாச்சி” என்றபடி தந்தி தபால் ஆபீசில் இருந்து வந்த ஊழியர்
தந்தியை உடைத்துப் படித்தார். அரசப்பன் செட்டியாரின் ஆத்தா வெனையத்தாச்சி தபால்காரர்
கையில் ஒரு ரூபாய் நோட்டைக் கொடுத்து "நல்ல சேதி சொன்னே தம்பி வைச்சுக்க" என்றார்கள்.
“அடி ஒப்பிலா.
ஓசைமணி காளிக்குக் காசெடுத்து வையி. பாப்பாத்திக்குப் படைக்கோணும். முத்தாத்தாளுக்கு
மாவெளக்கு வைக்கோணும்” என்றபடி தன் சேவல்கொண்டையைச் செருகிக்கொண்டே விபூதி பூசிக்கொண்டார்
வினை தீர்த்தாள் ஆச்சி.
பிள்ளைகளுக்குத்
தூக்குச் சட்டியில் பள்ளிக்கோடத்துக்குச் சாப்பாடு கட்டிக் கொண்டிருந்த ஒப்பிலா ஆச்சி
”அதான் தெரிஞ்ச விசயமாச்சே, மகனைக் காணமுன்னே ஆத்தா இந்தச் சத்தம் போடுறாக. மகனை கண்டுபிட்டா
ஒரே ஆட்டபாட்டம்தான்” என மோவாயை இடித்தபடி உள்ளே சென்றாள்.
சேதியைக் கேட்ட
பிள்ளைகளுக்கெல்லாம் கொண்டாட்டம். அப்பச்சி வந்தா மலயா ரிப்பன், முட்டாயி, ரப்பர்,
ப்ளேடு, ஸ்டிக்கர், டேப்பு, வெளையாட்டுச் சாமான், கைக்கெடிகாரம், பிஸ்கட்டு டின்னு,
துணிமணி அம்புட்டும் வருமே. கேக்கும்போதே மலயா வாசம் அடித்தது அவர்கள் மனசுக்குள்.
மலயாச் சாமான்
வைச்சிருக்கிற வளவறைக்குள்ள ஆத்தா விடுறதேயில்லை என்ற ஏக்கம் அவர்கள் நெஞ்சுமட்டும்
நிரம்பி இருந்தது. அப்பச்சி வந்தா ரொட்டி முட்டாய் வேஃபர்ஸ் கிடைக்கும் என்ற இனிப்புக்
கனவோடு பள்ளிக்கு வேண்டாவெறுப்பாய்க் கிளம்பினார்கள்.