சனி, 4 ஏப்ரல், 2020

ஒப்பிலாள் - பெண்களின் குரலில்.

ஒப்பிலாள்.

னா செட்டியார் கடுதாசில போட்டபடி நாளானைக்குக் கிளம்பி வாராகளாம். நாகப்பட்டினம் கப்பலடிக்குப் பிளைமவுத் கார் அனுப்பச் சொல்லித் தந்தி அடிச்சிருக்காக வெனையத்தாச்சி” என்றபடி தந்தி தபால் ஆபீசில் இருந்து வந்த ஊழியர் தந்தியை உடைத்துப் படித்தார். அரசப்பன் செட்டியாரின் ஆத்தா வெனையத்தாச்சி தபால்காரர் கையில் ஒரு ரூபாய் நோட்டைக் கொடுத்து "நல்ல சேதி சொன்னே தம்பி வைச்சுக்க" என்றார்கள்.

“அடி ஒப்பிலா. ஓசைமணி காளிக்குக் காசெடுத்து வையி. பாப்பாத்திக்குப் படைக்கோணும். முத்தாத்தாளுக்கு மாவெளக்கு வைக்கோணும்” என்றபடி தன் சேவல்கொண்டையைச் செருகிக்கொண்டே விபூதி பூசிக்கொண்டார் வினை தீர்த்தாள் ஆச்சி.

பிள்ளைகளுக்குத் தூக்குச் சட்டியில் பள்ளிக்கோடத்துக்குச் சாப்பாடு கட்டிக் கொண்டிருந்த ஒப்பிலா ஆச்சி ”அதான் தெரிஞ்ச விசயமாச்சே, மகனைக் காணமுன்னே ஆத்தா இந்தச் சத்தம் போடுறாக. மகனை கண்டுபிட்டா ஒரே ஆட்டபாட்டம்தான்” என மோவாயை இடித்தபடி உள்ளே சென்றாள்.

சேதியைக் கேட்ட பிள்ளைகளுக்கெல்லாம் கொண்டாட்டம். அப்பச்சி வந்தா மலயா ரிப்பன், முட்டாயி, ரப்பர், ப்ளேடு, ஸ்டிக்கர், டேப்பு, வெளையாட்டுச் சாமான், கைக்கெடிகாரம், பிஸ்கட்டு டின்னு, துணிமணி அம்புட்டும் வருமே. கேக்கும்போதே மலயா வாசம் அடித்தது அவர்கள் மனசுக்குள்.

மலயாச் சாமான் வைச்சிருக்கிற வளவறைக்குள்ள ஆத்தா விடுறதேயில்லை என்ற ஏக்கம் அவர்கள் நெஞ்சுமட்டும் நிரம்பி இருந்தது. அப்பச்சி வந்தா ரொட்டி முட்டாய் வேஃபர்ஸ் கிடைக்கும் என்ற இனிப்புக் கனவோடு பள்ளிக்கு வேண்டாவெறுப்பாய்க் கிளம்பினார்கள்.


”அடி இந்த விபூதித் தட்டைக் கொண்டுபோயி உள்ளே வையி. பலகாரத்தைக் கொண்டா என்று ஏவினார்கள் வெனையத்தாச்சி. சமைக்க சொகப்பி அக்கா இருந்தாலும் சுடச் சுட இட்டலியையும் வெங்காயக் கோஸையும் கொண்டு வந்து மாமியாருக்கருகில் வைத்த ஒப்பிலா ஆச்சி ஒன்பது அரசும் நாலு பொண்ணும் பெத்தவன்னு சத்தியம் பண்ணாக்கூட நம்பமுடியாபடிக்கு அழகா இருந்தாக.

ப்ளைமவுத் கார் கம்பீரமாக வந்தது. அரசப்ப செட்டியார் வரும்போதும் போகும்போதும் மட்டுமே எடுப்பது. அதுக்குத் தகுந்த கம்பீரம் அவுகளுக்கு மட்டுமே இருந்தது. நல்ல செவப்பா ஒசரமா திருத்தமா சுருட்டைத் தலைமுடியோட அந்தக்கால சினிமா ஹீரோ மாதிரி இருப்பாக அப்பச்சி. அப்பத்தா ஆலாத்தி எடுத்து சாமி வீட்டுக்குக் கூட்டிக்கினுபோய் அப்பச்சிக்கு  விபூதி பூசி விட்டாக.

வர்றவரைக்கும் தெரியலை., கொண்டுவிக்கப்போன அ னா செட்டியார் அம்புட்டையும் சுருக்கிக்கினு வந்துட்டாகன்னு. பிள்ளைகதானே. எனவே செட்டியார் கொண்டு வந்திருந்த ரொட்டி மிட்டாயில் மயங்கி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஐயா பேர் வைச்ச சின்னவனுக்கும் பாட்டையா பேர் வைச்ச பெரியவனுக்கும் நண்டுப்பிடி சண்டை. பெரியவனுக்குப் பதிமூணு வயசு. இன்னும் ரெண்டுங்கெட்டானாத்தான் இருந்தான். வீட்டு நெலவரம் தெரியாம வளர்ந்திருந்தான் அப்பிடி.

ஆடிக்கொண்டிருந்த பிள்ளைகளுக்கு ஒழக்கு ரத்தம் வர்றாப்போல ஆளுக்கொரு கொட்டு வைத்து ”ஓடிப்போயிப் படிக்கிற வேலையப் பாருங்க. ஆட்டபாட்டமெல்லாம் போதும்” என்று சாத்த ஆரம்பித்தாள் ஒப்பிலா. இதைப் பார்த்து மிரண்ட மற்ற பிள்ளைகளெல்லாம் ஆல்வீட்டில் ஓடிப்போய் பதுங்கி உக்கார்ந்து படிக்க ஆரம்பித்தார்கள்.

’ஆத்தா ஏன் இப்பவெல்லாம் பொல்லாத ராட்சசி ஆயிட்டா’ என்று வெளங்கவேயில்லை அவர்களுக்கு. 'முன்னாடி அப்பத்தா கோச்சுக்கும்போதெல்லாம் கூட வக்காலாத்து வாங்கிப் பேசும் ஆத்தாளா இன்னதுக்கின்னு இல்லாம எடுத்ததுக்கெல்லாம் இப்பிடிப்போட்டு அடிக்கிறாக'.

“பொய் சொல்லா மெய் ஐயனாரே ஆத்தா இப்பிடி தெனம் எதுக்காச்சும் அடிக்காம இருந்தா உனக்கு செதர்காய் ஒடைக்கிறேன்” என்றெல்லாம் பாட்டியாயா பேர் வைச்ச மூணாவது மக தர்மாம்பா கூட வேண்டிக்க ஆரம்பிச்சிட்டா. அவ சடையைப் பிடிச்சு இழுத்து ரிப்பன உருவி ஒப்பிலா அன்னைக்கு வளவச் சுத்தி ஓடவிட்டு வெரட்டி வெரட்டி அடிச்சிருந்தா. பிள்ளைகள் எல்லாம் ஆத்தாவுக்கு பேயோ பிசாசோ, காளியோ கருப்பனோ பிடிச்சிருக்கு என்று அஞ்சத் துவங்கினார்கள்.

ரைப்பரிட்சை லீவு விட்டாச்சு . ஒரு வழியாப் புள்ளக எல்லாம் ஆயா வீட்டுக்கு ஆறாவயலுக்குப் போனாக. அங்கே காளியம்மா கோயில் திருவிழாவும், கூத்துமாப் பத்துநாள் பொழுது போச்சு. சீதை ஆயா சுடச்சுட இட்லியும் பொரிச்சுக் கொட்டித் தொவையலும், குழிப்பணியாரமும் கதம்பச் சட்னியும், வெள்ளைப் பணியாரமும் மொளகாய்த்தொவையலும் கந்தரப்பமும் கும்மாயமும் பண்ணிப்போட்டுப் புள்ளகள போஷாக்கா வைச்சிருந்தாக.

தோட்டத்துக் கெணத்துக்குக் குளிக்கப்போறதும் கொடுக்காப்புளியும், புளியம்பிஞ்சும் பறிச்சுத் திங்கிறதும், பஞ்சுச் செடியைப் பிச்சு ஊதுறதும், கனகாம்பரத்தைப் பறிச்சுக் கட்டி வைச்சுக்குறதுமா பொம்பளப் புள்ளைகளும், வில்லு வண்டில ஏறி ஆட்டம் போட்டு கம்மாய்ல குதிச்சுக் கும்மாளம் போட்டு ஆம்புளப்புள்ளைகளும் சொகமா காலம் கழிச்சாக.

ராத்திரில ஆயா கும்பாவுல கஞ்சியப் பிழிஞ்சு போட்டு மோர் ஊத்தி கிண்ணில பெரட்டலோ மசாலையோ வைச்சுக் கொடுப்பாக. கதை பேசிக்கிட்டே சாப்பிடுறது எம்புட்டு சொகமா இருக்கும் இதெல்லாம் கானத்தான் பட்டிக்குப் போனா ஆத்தான்னு ஒரு கொடுமைக்காரிக்கிட்ட கிடைக்குமான்னு ஏக்கமாயிப் போச்சு அவுகளுக்கு.

லீவு முடிஞ்சு ஊர் வார அன்னிக்கு புள்ளைகளுக்கெல்லாம் கானத்தான் பட்டிக்குத் திரும்பவே மனசில்ல. இங்கனயே ஆயாவோட இருந்து ஒரு பள்ளிக்கோடத்துல படிப்பமான்னு கூட நெனைக்க ஆரம்பிச்சிட்டாக. கண்ணெல்லாம் கலங்கி அழுத அவுகளை எல்லாம் பிரிய சீதை ஆச்சிக்கும் மனசேயில்லை.

னா செட்டியாருக்கு என்ன..  ஒடம்பெல்லாம் மச்சம்யா. எங்க போனாலும் பச்சைக்கிளியாப் பிடிச்சிருறாரே”. சீட்டுப் போடும் கிளப்பில் நாவன்னா செட்டியார் ராவன்னா மானாவிடம் சொல்லிக் கிண்டலடித்துச் சிரித்தார்.

ஒரு வகையில் பார்த்தால் அவருக்கு ஒப்பிலாள் அம்மான் மகள் முறை ஆகணும். ஒப்பிலாள் வீட்டில் இவருக்கு உருப்படியான வேலை இல்லை, வீடு வாசலும் இல்லை என்பதால் கட்டிக் கொடுக்க மாட்டேனென்று மறுத்திருந்தார்கள்.

”என்னன்னே சொல்றீக.” என்றார் ராவன்னா மானா.

”அட என்னப்பா தெரியாத மாதிரி கேக்குறே. அவதான் அந்த மேனாமினுக்கி சினிமா நடிகை ஜமுனாபாய்க்கு ஒங்கூர்லேருந்து தேக்கு மரக் கட்டிலும் எலவம்பஞ்சு மெத்தையும் செஞ்சு போச்சாம்ல ஊரே சிரிப்பாய்ச் சிரிக்குது ஒனக்குமட்டும் தெரியாதா “ ” வைரக் கண்டசரமும் சேட்டுக்கிட்டேருந்து போச்சாம்லப்பா “

”என்னன்னே சொல்றீக . புதுசா நடிக்க வந்திருக்கே அந்தப் பச்சப் புள்ளயவா வைச்சிருக்காக” என்று தனது தூக்கத்தைக் கெடுக்கும் கனவுக் கன்னி ஜமுனா பாய் அ னாவின் கைவசம் எப்படி அகப்பட்டாளோ என்று வருத்தத்தோடு கேட்டார் ராவன்னா மானா.

“அவளேதான். மலயாவுல இருந்தப்போ இவரோட லீலையெல்லாம் சொன்னா நீ இன்னும் என்ன ஆவியோ.” 

“என்னமோ அங்கனயும் ஒரு சைனாக்காரியோட சுத்துனாகளாமுல்ல. அப்புடியா  ”

”பெருவாரிப் பணம் வைச்சிருப்பாரு போல . எல்லாம் வெண்ணலப் பணம். சினிமா வேற எடுக்குறாராம். படம் பேரு ஜம்பமாம். அதான் சினிமாக்காரய்ங்க சினிமாக்காரிகளைக் கோத்து விடுறாய்ங்க ”

”அண்ணே அவுக வர்றாக” என்று ராவன்னா மானா சாடை காட்டியவுடன்

“அண்ணே வாங்க உங்களப் பத்தித்தான் பேசிக்கிட்டு இருந்தோம்னே. உங்களமாதிரிப் பெரியாளுக எல்லாம் வர்றதுக்கு எங்க கிளப்பு கொடுத்து வைச்சிருக்கணும். என்ன வேணும்னாலும் சொல்லுங்கன்னே செஞ்சுபிடலாம்.”

“டேய் அனா செட்டியாருக்கு சுடச் சுட மடக்குப் பணியாரமும் எளந்தோசையும் டாங்கர் சட்னியும் தெக்குத் தெரு ராமாயி அக்காகிட்ட கேட்டேன்னு வாங்கியாந்து கொடு” என ஏவினார். 

“இந்தாப்பா வைச்சுக்க” என்று அ னா செட்டியார் பத்து ரூபாய்த் தாள் ஒன்றை எடுத்து நீட்ட, ”இருக்கட்டும்னே இது எங்க போயிடப்போகுது” என்று வாங்கித் தனது சட்டைப் பையில் வைத்துக் கூழைக்கும்பிடு போட்டு நகர்ந்தார் நாவன்னா.

சினிமா எடுத்து நொடிச்சுப் போன அ னா செட்டியார் , ஃபோட்டோ ஸ்டூடியோ, ஷேர் ப்ரோக்கிங், எண்ணெய் வியாபாரம், கார் வியாபாரம் எல்லாம் செய்து ஒவ்வொன்றிலும் விதம் விதமாய் நட்டப்பட்டிருந்தார்.

ப்ளைமவுத், செவர்லெட், அம்பாசிடர் , ஃபியட், வோல்ஸ் வாகன் , மெர்டிசிடஸ் பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் என்று நாற்பது வகையான கார்களை அப்பச்சி வைச்சிருந்தாக என்று இன்றும் அவர்களின் பிள்ளைகளுக்குப் பெருமிதம்தான் அவர் மேலே.

குறிச்சியில் சாய்ந்து மடக்குக் கட்டையில் காலைப் போட்டுக் கண்ணை மூடிப் படுத்திருந்தார்கள் அ னா செட்டியார். இடது கண் ஆபரேஷன் செய்திருந்ததால் கண்ணில் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார்கள்.

கடைக்குட்டியை ஐயப்பனைப் பிள்ளை விட்டிருந்தார்கள். மிக அழகாக இருந்ததால் பொம்பிள்ளைப் பிள்ளைகளுக்கு எப்படியோ திருமணம் ஆகி விட்டிருந்தது. மத்த பிள்ளைகளும் படிச்சு ஆளுக்கொரு உத்யோகத்தில் அமர்ந்திருந்தார்கள். அனைவருக்குமே திருமணமாகிப் பிள்ளைகள் பிறந்திருந்தார்கள்.

அப்பச்சிக்கு அறுபதுதான் கொண்டாட முடியல எழுபதாவது கொண்டாடணும் என்று பிள்ளைகள் கூடியிருந்தபோது அப்பச்சிக்கும் ஆத்தாளுக்கும் அசந்தர்ப்பமாய் ஒரு சண்டை வந்துவிட்டது. இன்னும்கூட ஆத்தா கோவக்காரியாகத்தான் அவர்கள் கண்ணுக்குத் தென்பட்டார்கள்.

வேலைக்குப் போய் சம்பாதிக்கிற வரைக்கும்தான் ஒருத்தருக்கு மதிப்பா. பணம்தான் பெரிசா. அப்பச்சி நொடிச்சுப் போனால் என்ன. வீட்டுக்குத் தேவையான பணம்தான் ஏதோ ஒரு வழியில் வந்து கொண்டே இருக்கிறதே.

முன்பு பாட்டியாயா வீட்டில் இருந்தும் ஆயா வீட்டிலிருந்தும் வந்தது. அப்பத்தா சிவபதவி அடைந்த பிறகு அவர்கள் சாமான்களை விற்றது., அப்புறம் கடைக்குட்டியைப் பிள்ளை விட்டது எனப் பணம் வந்தது. அது போக பிள்ளைகள் வேறு சம்பாதிக்கிறார்கள். என்ன கொறை ஆத்தாளுக்கு. எப்பப்பாரு சிடுமூஞ்சியும் கடுப்பும் கோபமுமாகவே இருக்கிறார்கள் என்று எரிச்சலாய் வந்தது பிள்ளைகளுக்கு.

பிள்ளைகள் கூடி ஆதங்கமாய்ப் பேசிக்கொண்டு இருந்தபோது ஆத்தாவுக்கு அட்டாக் வந்துவிட்டது. அப்பச்சியோடு உரத்துப் பேசியபடி திடீரென நெஞ்சைக் கையில் பிடித்தபடி கீழே விழுந்தவர்கள்தான். எழுந்திருக்கவேயில்லை. பிள்ளைகள் யாருக்கும் ஓரிரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை. கல்லில் செய்தது போல இரும்பு மனதுடன் சடங்குகளைச் செய்தார்கள். அ னா செட்டியார் மட்டும் ஆபரேஷன் செய்த கண்ணுடன் அடிக்கடிக் கலங்கிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டே நாட்களில் அனா செட்டியாரும் அன்றிலைப் பிரிந்த ஜோடியைப் போல குறிச்சியில் படுத்திருந்தபடியே இறைவனடி சேர்ந்திருந்தார்கள். பிறந்தநாள் கொண்டாடவந்த பிள்ளைகள் அதிர்ந்து போயிருந்தார்கள். அதிலும் அவுக பிரியமான அப்பச்சியின் சாவு அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.

”அப்பச்சி காலமுக்கி விடுவாகளே, தலைகோதி விடுவாகளே, என் பள்ளிக்கோடத்துல என்ன அடிச்ச வாத்தியார்கிட்ட சங்குச்சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடுனாப்புல ஆடித் தீர்த்துட்டாகளே, தூங்கும்போதும் விடியும்போதும் ’பொழுதெப்ப விடியும் பூவெப்ப மலரும் சிவனெப்ப வருவார் பலனெப்பத் தருவார்’னு பாட்டு சொல்லிக் கொடுத்துப் ’பொழுதும் விடிந்தது பூவும் மலர்ந்தது , சிவனும் வந்தார் பலனும் தந்தார்’னு பாடுவாகளே, காலைல குளிச்சிட்டு நெல்லிமரத்துப் பிள்ளையாரைக் கும்பிட்டுட்டுப் பலகாரம் சாப்பிடுவாகளே, சாயங்காலத்துல ரெண்டு கையையும் தலைக்கு மேல கூப்பிச் சிவபுராணம் சொல்வாகளே” என்று ஒவ்வொரு பிள்ளைக்கும் அப்பச்சி குறித்து விதம் விதமான எண்ணமும் கேவலும் வெளியாகியது.

ஆத்தா இறந்ததுக்கு ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்காத பிள்ளைகள் அப்பச்சிக்குக் குளம் கட்டும் அளவுக்குக் கண்ணீர் வடித்துத் தீர்த்தார்கள். ஆத்தாவுக்கு ஐந்தாம் நாள், அப்பச்சிக்கு மூன்றாம் நாள் சவண்டி முடிந்ததும் பழைய கணக்கு வழக்கு, வீட்டுப் பத்திரம், வெள்ளி, தங்கம், வைரம், மிச்ச சொச்ச சாமான்கள் கணக்கெடுத்துப் பொம்பிள்ளைப் பிள்ளைகளுக்கும் அரசப்ப செட்டியாரின் அரசுகளுக்கும் பங்காளி வீட்டுக்காரர்கள் பங்குவைத்துக் கொடுத்தார்கள். சவண்டிக்கு வந்தவர்கள் அனைவரும் சென்றுவிட்டார்கள்.

சாயங்காலமாகிவிட்டது. வீட்டில் ஒரே ஒரு அலமாரி மட்டும் எஞ்சி இருந்தது. நல்ல அருமையான வேலைப்பாடு கடைந்த தேக்கம்பீரோல். அதுக்குள்ள ஏகப்பட்ட லாக்கர் இருந்துச்சு. ஒவ்வொரு ஷெல்ஃபுக்கும் கீழ ஒரு லாக்கர். அந்த அலமாசியை ஆத்தா தொறக்க விட்டதேயில்லை. அது மலயாச்சாமான் அறைக்குள்ள இருக்கும். அந்த அலமாரியில் மலாயாச் சாமான் வைத்து வைத்து மலயா வாசனை வீசியது. அந்த அலமாரியையும் ஒரு வியாபாரியைக் கூட்டிவந்து விலை பேசினார்கள்.

அந்த நேரத்தில் வயசானதால் உடம்பு சரியில்லாமல் ஐந்தாறு வருஷத்துக்கு முன்னே வேலையை விட்டுவிட்டு மகள் வீட்டில் போய் இருந்த சிகப்பி அக்கா ஓடி வந்திருந்தது. அது கண்ணெல்லாம் அருவியாய்த் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது. ’ஆச்சியும் செட்டியாரும் பெருமாளும் தேவியும் போல இருப்பாகளே. இப்பிடி என்ன விட்டுட்டுப் போய்ச் சேர்ந்துட்டாகளே. இனி எனக்கு யாரிக்கா.’ என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு அக்கா ஓங்கிக்  குரலெடுத்து அழ ஆரம்பித்தது.

“ஒப்பில்லா பொறுமைக்காரி.
ஒப்பத்த பெருமைக்காரி
தப்பில்லா மனசுக்காரி
தவறவிட்டுப் போனேனே”

கேவிக் கேவி அழுது முடிக்கவும் கடைசி மகள் புவனா அக்காவின் கையைப்பிடித்துக் கேட்டாள். “ அக்கா எங்காத்தா எப்பிடி எல்லாம் அடிக்கும் எங்கள. நீ என்னவோ பொறுமைக்காரிங்கிறே “ ”சாகுற அன்னிக்குக் கூட அப்பச்சியோட சண்டைதான். இப்பிடியா இருப்பாக வயசான காலத்துலயும். எங்களுக்குப் போதும் போதும்னு ஆயிருச்சு இவுக சண்டையப் பார்த்து.” என்று நொடித்தாள்.

”ஆத்தா அவ வாவரசியாப் போயிட்டா. அவளத் தப்பாப் பேசப்புடாது. எல்லாம் ஒங்க நன்மைக்குத்தான் பண்ணுனா. பிள்ளக சேட்டை பண்ணா கண்டிக்கிறதுதானே. ஆம்பிள்ளையான் பொண்டாட்டின்னா சண்டை இருக்கதுதானே “

”அதுக்குன்னு இப்பிடியா. போங்கக்கா எங்க ஆத்தா ரொம்பக் கடுசு” என்றாள் புவனா.

”ஆத்தாக்காரி கடிசுதான். அவ ஏன் கடிசா இருந்தா. அவ எப்பவுமே கடிசாவா இருந்தா யோசிச்சுப் பாருங்க. கொண்டுவிக்கப்போன ஒங்கப்பச்சி அங்கனயே கிட்டங்கிக்கு வேலை செய்ய வந்த ஒரு சைனாக்காரியக் கட்டிக்கிட்டாக. அவளும் நல்லா தங்கச்சிலை மாதிரி இருப்பாளாம். இங்கே வேற வருஷம் தப்பாம வந்து ஒரு புள்ள. அங்கே அவளுக்கு வேற நாலு புள்ளைகளாம். அதுபோக நடிகைக கூட வேற தொடர்பு”

கலியாணஞ் செஞ்சு வந்த புதுசுல ஒங்க ஆத்தா அம்புட்டு அழகாயிருப்பா. நல்லா செகப்பா மூக்கும் முழியுமா இந்த கானத்தான் பட்டிச் சீமையே கண்கொண்டு எரிஞ்சுது. கல்யாணம் ஆனதும் உங்க ஆத்தா ஆசைப்பட்டான்னு ஒங்கப்பச்சி அவளுக்காக மொத மொதல்ல கண்ணாடி வைச்ச தேக்கம்பீரோல் செஞ்சு கொடுத்தாக. இதுதான் அந்தப் பீரோலு. இது முன்னாடி நின்னுதான் சீலை உடுத்திக்குவா. அந்த அம்மனே நேர்ல வந்தமாதிரி இருக்கும்.”

”உங்கப்பச்சிக்குப் பிடிக்கும்னு அவுக முகப்புல வரும்போதுதான் சூடா இருக்கணும்னு இட்லி கிண்டுவா, உப்புமாவைத் தாளிப்பா, சுடச் சுட சமையலுக்கு நான் இருந்தாலும் தங்கையாலேயே வெங்காயம் வெள்ளைப்பூண்டுக் கொழம்பும் புடலங்காய்க் கூட்டும் செஞ்சு போடுவா. உப்புக்கணம் வறுத்து வைப்பா. சாயங்காலம் பச்சத் தேங்கொழல் பிழிஞ்சு கொடுப்பா. சாத்துக்குட்டிய உரிச்சு சொளை சொளையா அடுக்கி வைப்பா. வாய்க்கு எதமாய் இருக்கும்னு வீட்டுலயே ஓமப்பொடியும் காராபூந்தியும் போட்டு மிக்ஸர் புழிவா. ஆம்பிள்ளையான் எள்ளுன்னா எண்ணையா நிப்பா.”

”எம்புட்டுப் பொம்பளக அவ வாழ்க்கையில. அதை எல்லாம் சுளுவா எடுத்துக்கிட்டுப் போக முடியுமா? ஒரு தரம் உங்கப்பச்சி பொறந்தநாளன்னிக்கு அந்த சைனாக்காரிகிட்டேருந்து லெட்டர் வந்திருக்கு. முன்னாடியே அவளுக்குப் பணம் கொடுத்து வெட்டிட்டு வந்துட்டாக. ஆனாலும் அவளுக்கு இவுக மேல பிரியம் சாஸ்தி. அதுனால அவுகளப் பார்க்கணும்னு ஆசைப்பட்டு அவ லெட்டர் போட்டிருக்கா. அவ போட்டாலும் பரவாயில்லை. நான் அவளைப் பார்க்கப் போறேன். அவ கூடவே இருக்கப் போறேன். நீ என்ன நல்லாவே வைச்சுக்கலைன்னு உங்க அப்பச்சி அடம் பிடிச்சிருக்காக. எப்பத் தெரியுமா இதெல்லாம்  வலது கண் ஆபரேஷன் பண்ணி 60 வயசுல. அதப் பார்த்து உங்காத்தா காளியாயிட்டா.  எந்தப் பொம்பளைன்னாலும் கோவம் வரும்தானே. அப்ப நான் இங்கனதான் இருந்தேன். நாந்தான் சமாதானப்படுத்தினேன்.”

”ஒங்கப்பச்சியவே ஒசத்தியா சொல்றீகளே. ஒரு நாளாவது ஒங்காத்தா பட்ட பாட்டையெல்லாம் நெனைச்சுப் பார்த்திருக்கீகளா புள்ளைகளா. “ சொகப்பி அக்காளின் குரல் சம்மட்டியாய் அனைவரின் காதிலும் அறைந்தது. அந்த வளவே ஒரு கணம் ஸ்தம்பித்தது. வியாபாரிகள் இருவரும் கூட திகைத்து நின்றுவிட்டார்கள்..

அலமாரியைக் குடைந்துகொண்டிருந்த சின்னவன் ஐயப்பன் கையில் அப்பச்சியும் அந்தச் சைனாக்காரப் பொம்பளையும் அப்பச்சி சாயலிலும் அந்தம்மா சாயலிலும் நான்கு பிள்ளைகள் சூழ்ந்திருக்க எடுக்கப்பட்ட விதம் விதமான புகைப்படங்கள் நழுவி விழுந்தன.

வாசலில் ஏதோ சலசலப்புக் கேட்டது. மூன்றாவது மகன் வள்ளியப்பனைப் போன்ற தோற்றத்துடன் இருந்த ஒருவனுடன் ஃபோட்டோவில் இருந்த சீனக்காரப் பெண்மணி நின்றிருந்தாள்.

மாலையுடன் அப்பச்சி இருந்த ஃபோட்டோவைப் பார்த்து அழுத அவள் ஆத்தாள் ஒப்பிலாளின் ஃபோட்டோவைப் பார்த்து ஆச்சிகளையும் சொகப்பி அக்காளையும் கட்டிக் கொண்டு அழுதாள்.

அவள் கேவிக் கேவிச் சொன்னதை அவளின் மகன் ”தனக்கு நாலு கொழந்தை இருக்கது தெரிஞ்சதும் இந்தியா வரச் சொல்லி ஆத்தா சொன்னதாக ” ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தான்.

பொறுமையில் பூமாதேவியாயிருந்த ஆத்தாளை நினைத்து முதன் முறையாகப் பிள்ளைகள் பதின்மரும் வாய்விட்டு மனம் விட்டு ஆத்தாளுக்காக அழ ஆரம்பித்தார்கள்.

”ஆத்தா..ஆ ஆ ஆ “ என்று வெடித்துச் சிதறிய விம்மல்கள் பார்த்து புகைப்படத்தில் ஆத்தா ஒப்பிலாள் கொப்பாத்தாள் போன்ற உருவத்தில் பதினெட்டு வயதுச் சிற்பமாய் இருபது வயது அப்பச்சி அரசப்ப செட்டியாருக்கருகில் நின்று தனது பிள்ளைகளை அருட்பார்வை பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள். 

டிஸ்கி :- இது 2020 ஃபிப்ரவரி மாத பெண்களின் குரல் இதழில் வெளியாகி உள்ளது. ஆனால் நடுவில் பாராக்கள் மாறி உள்ளன. 
 

4 கருத்துகள்:

  1. வாசிக்க வாசிக்க உயிரோட்டமாய் கதை போய்க்கொண்டிருந்தது. அற்புதம்

    பதிலளிநீக்கு
  2. வாசிக்க வாசிக்க உயிரோட்டமாய் கதை போய்க்கொண்டிருந்தது. அற்புதம்

    பதிலளிநீக்கு
  3. சிந்திக்க வைக்கிறியள்
    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி கௌசி

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)