செவ்வாய், 29 ஜூன், 2010

பிடிவாதமும் பிடிமானமும்

சாயங்காலங்களில் சம்புடங்கள் திறந்து
அம்மா தரும் இனிப்பாய்..
தினம் உன் குரலை எதிர்பார்த்து..

பேதையை மயக்கும்
போதையாய் உன் குரல்..

திறந்திடு சீசேம் என
காட்டிவிட்டு மறைந்தாய்...
அற்புதக் குகையே என்னை
உள்வைத்து மூடிவிடு..
கடவுச்சொல் மறந்து கிடக்க..

ஞாயிறு, 27 ஜூன், 2010

நெட் போதை

விடிந்ததும் எழுந்ததும்
லாப்டாப்பின் சுவிட்சை
சொடுக்குவதுதான் சுப்ரபாதம்...
தூக்கம் கண்ணை கழட்டும் வரை..

பல்தேய்த்துக் கொண்டே
ஜிமெயில்., யாஹூ., வலைத்தளம்
மேய்ந்தது போக இப்போது
அதிபோதை உச்சமாக முகப்புத்தகம்...

காபியோடு ஒரு குட்மார்னிங் டாகிங்.,
டிபனோடு ஒரு வியூ நோட்.,
லஞ்சோடு ஒரு போட்டோ டாகிங்..,
டின்னரோடு ஒரு குட்நைட் டாகிங்..

வியாழன், 24 ஜூன், 2010

கண்ணதாசனும் பதிப்பகங்களும்

கண்ணதாசனின் வனவாசம் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதல்ல எப்படி வாழக்கூடாது என்பதற்கான வழிகாட்டி...

உண்மைகளை நிர்வாணமாகவும் துயரங்களைத் தாழ்வு கருதாமலும்., மேன்மைகள் என்று கருதியவற்றை பயத்துடனும்..செய்து வாழ்ந்த ஒரு மகா கவிஞனின் உள்ளீடு இது..

சமுதாயம் நம்மைத்தூக்கி எறிந்தாலும்.. மீண்டும் சமுதாயத்திற்குள் ஓடித்தான் இடம் பிடிக்க வேண்டும் என்பார் கண்ணதாசன்.. கடலில் நண்டு அலை வீசி எறிந்தாலும் திரும்பக் கடலுக்குள் ஓடுவது போல...

காலூன்றாத நண்டு போல் அலை மோதாமல் உயர்ந்த இடத்தில் காலூன்றி விடவேண்டும்,, என்பார்..

செம்மொழி .. எம்மொழி..

செம்மொழியாம் எம்மொழி
அம்மையப்பன் தந்த மொழி
இம்மையிலும் மறுமையிலும்
எம்மோடு வாழும் மொழி..

ஐயன் வள்ளுவன் வாய்மொழி.,
ஐவகை நிலத்தின் சேய் மொழி..
ஐம்பெருங்காப்பியம் ஈந்த மொழி..
தொல்காப்பியத் தொன்மை மொழி..

புதன், 23 ஜூன், 2010

பழைய மரத்தின் கிளைகள்

கெடிகாரத்தின் கரங்கள்
முடங்கிப் போய் அல்லது
நுடங்கிப் போய்..

அலுவலுக்கும் பள்ளிக்கும்
சென்ற பின்னர்
கடமைகளில் கனத்துக்
கிடந்த கரங்களில்
பூஞ்சிறகு முளைக்கிறது..

கண்ணுக்குத் தெரியா உலகு சென்று
எல்லோரையும் உறவாய் உணர்ந்து.,
கதைத்துக் கலாய்த்துக் கவிதை எழுதி.,

கண்கள் சோர்வுறும் வரை...
அலைந்து அனைவரும்
திரும்பும் வரை இது நீடித்து......

ஞாயிறு, 20 ஜூன், 2010

உங்களுக்கு ஒன்றுமில்லை அப்பா... நீங்கள் நலம்

இன்னும் சில வருடங்களில்
திருமணமாகும் பேரனுக்கு..
ஆனாலும் அப்பா தாத்தாவல்ல..
சம வயதுத் தோழர்..

எண்ணெய் தடவிக் குளியாட்டுதலும்
கல்லூரி கவுன்சிலிங்குக்கு
ஊர் ஊராய் அலைவதும்..
பிடித்தமோ இல்லையோ
பேரனோடு ஆங்கிலப்படம்
பார்த்து ரசிப்பதும்..

பிறந்த சமயம் பேரன்கால்
நெஞ்சில் பட படுத்திருப்பார்..
உவகையுடன்.. அவன் எது
செய்தாலும் ஓவியமாய் எண்ணி..

நானும் இவ்வாறு சிலசமயம்
அறியாமல் வருத்தி இருக்கக் கூடும்..
உள்ளுக்குள் அடக்கிய கோபத்துடன்..

எல்லா நல்லதும்
கிடைத்தால் உன் அதிர்ஷ்டம்..
கிடைக்காவிட்டால் என் துரதிர்ஷ்டம் என
தன் பக்கம் திருப்பிக் கொள்வார்..

வெள்ளி, 18 ஜூன், 2010

காய்ச்சல்

உனக்குக் காய்ச்சல்..
கொதித்துக் கிடக்கிறது மனசு..
பாபர் ஹுமாயூனின்
நோவை வாங்கியதாய்...
உன்னிடமிருந்து இடம்பெயர்ந்து
எனக்கு வரட்டும்..

அணைத்து ஆரத்தழுவி.,
சூடெல்லாம் உருவிப்போட
நினைக்கிறேன்..
சூ மந்திரக் காளியென..

வியாழன், 17 ஜூன், 2010

அன்பின் நியோ. ....இது எதிர் பதிவு அல்ல.. தன்னிலை விளக்கம்..

அன்பின் நியோ..

முதல் முதல் என் தளத்தில் பின்னூட்டமிட்டு இருந்தீர்கள்,. மகிழ்வாய் இருந்தது.. நான் இதுவரை 200 இடுகைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன்..
எதிர் கருத்துக்கள் எதுவும் இதுவரை இல்லை.. எனவே நானும் எதிர் இடுகைகளோ., எதிர் கவுஜைகளோ எழுதியது இல்லை. சந்தர்ப்பம் வாய்த்ததுமில்லை.. இதுவும் எதிர் இடுகையோ .. மறு வினையோ அல்ல. ஒரு தன்னிலை விளக்கம்தான்..

எந்தக் காலதிலும் வலைப்பதிவர் ஒற்றுமை எந்தக் காரணத்தாலும் குலையாமலிருக்க வேண்டும் என எண்ணுபவருள் நானும் ஒருவள்..
குடும்பம் ., குழந்தை., விருந்தினர் ., விடுமுறை., சுற்றுலா.. என்ற பல விஷயங்களுக்கு நடுவிலும் தான் நினைத்தவற்றைப் பகிர பெண்கள் வலைத்தளத்தில் எழுதி வருகிறோம்.. கவிதையோ., கட்டுரைகளோ., சமையல் குறிப்போ., தையலோ.. எல்லாம்.. முடிந்தவரை அனைவரும் சிறப்பாகவே கொடுக்கிறார்கள்..

புதன், 16 ஜூன், 2010

லேடீஸ் ஸ்பெஷல்..-- பாதுகாப்பான முதலீடு .. சில ஆலோசனைகள்...

பெண்கள் சுய உதவிக் குழுக்கள் வந்த பிறகு.. எளிய பெண்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டிருக்கிறது எனலாம்.. சிக்கனம் சிறந்த சேமிப்பு.. பெண்கள் அதில் சிறந்தவர்கள்..கையில் இருக்கும் சிறிதளவு பணத்தையும் சீட்டுப் பிடிப்பது.. சிட் ஃபண்ட்களில் போடுவது முதல்.. பங்கு சந்தையில் முதலீடு செய்வது வரை பெண்கள் ஏதோ ஒரு வழியில் சேமித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்..

என் அம்மாவுக்கு 65 வயதாகிறது .. அவர் சி என் பி சி டிவியிலும் என் டி டிவியிலும் வரும் பங்குச் சந்தை விலை விபரங்களைப் பார்த்து (share prize movements).. ஃபோன் மூலமாக .. பங்குகளை வாங்கி விற்று லாபம் பார்த்து வருகிறார்..

திங்கள், 14 ஜூன், 2010

ரவிகுல திலகன்..-ஒரு பார்வை..


இந்த விமர்சனம் அமேஸானில் 25 நூல்கள் - ஒரு பார்வை என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி:...2...:- இரண்டு மூன்று நண்பர்களின் புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன் .. விரைவில் விமர்சனம் வரும்..:)) இது கம்பர் விழாவுக்குப் போன போது படித்தது.. இப்போதுதான் வெளியிட நேரம் கிடைத்தது.. எனவே மக்காஸ்.. கூடிய சீக்கிரம் எழுதிவிடுவேன்.. கோபிக்காதீங்க..:))

டிஸ்கி..3 ..:- நேற்றிலிருந்து டிஸ்கவரி புக் பேலஸில் கிழக்கு பதிப்பகம் மற்றும் ஆழி பதிப்பகத்தின் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.. ஒரு மாதம் வரை.. பயன்படுத்திக் கொள்ளுங்கள் மக்காஸ்..:))

சனி, 12 ஜூன், 2010

விளையாட்டு பொம்மை.....

கடைக்கு வந்தாய்..
எல்லா பொம்மைகளிலும்
சொல்பேச்சு கேட்பது போலிருந்த
என்னைத்தான் விரும்பினாய்..

பேசுவதற்கு என்று
எனக்கு அதிக பலமிருப்பது
உனக்குத் தெரிந்திருக்கவில்லை..

வீடு வந்தவுடன் நான்
உன்னை விளையாடிக்
கொண்டிருக்கிறேன்..

வெள்ளி, 11 ஜூன், 2010

துர்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ:

புன்னகை நிலவு பெற்ற
இரு பால் நிலவுகள்....
ஒன்று செல்லக் குட்டி.,
ஒன்று வெல்லக் கட்டி..

சிங்கக் குட்டிகளின்
சர்க்கரை தோய்ந்த சிரிப்பில்.,
சந்தோஷமாய்ச் சிதறுகிறது மனசு..

பிள்ளை நிலாக்கள்., பிஞ்சு நிலாக்கள்..
பிறைச்சந்திரனை ஒட்டி வைத்ததாய்..
நம்மையும் தொற்றும் புன்னகை..

வியாழன், 10 ஜூன், 2010

யங் லேடீஸ்.. கவிதைப் போட்டி..

அன்பின் சகோதரிகளே..
உங்க மற்றும் உங்க டீனேஜ் மகளின் குட்டிக் கவிதைகளை SMS அல்லது email மூலம் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்..தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகள் இனிவரும் நம் லேடீஸ் ஸ்பெஷல் இதழில்... உங்களுக்காக..

முகவரி..:- thenulakshman@gmail.com

SMS NO..:- 78459 70162
சீக்கிரம் சகோதரிகளே.. உங்க திறமையைக் காண்பிங்க..
****************************
என் இன்றைய கவிதை...
விண்ணப்பப் பெட்டி.:-
*****************************
பழைய துக்கங்களையும்
ஏலாத கனவுகளையும் கையளித்து
விண்ணப்பப் பெட்டியில் இடுகிறேன்..
அவை அத்துள்ளே...
அடங்கி விடட்டுமென..

புதன், 9 ஜூன், 2010

கிராமத் திருவிழா..

கட்டை வண்டி
சக்கர இதழ்களினால்
ரோட்டுக் காதலனை
முத்தமிடும்..

புழுதி
உல்லாசமாய்...
விசிலடித்துப் பறக்கும்..

மந்தைகள்
மஞ்சள் பூசிக்குளித்துக்
குங்குமமிட்டு
மங்கலப் பெண்களாக வரும்..

திங்கள், 7 ஜூன், 2010

புறக்கணிப்பு...............

வைத்துக்கொள் அல்லது
தூக்கிப் போடு..
இன்னும் பலம் சேர்த்து
நீந்தி வருவேன்..

இன்னமும் படிக்கப்பட்டாத
பக்கங்களோடு
புதிதான வாசனையுடன்...

இருப்பை அலட்சியப்படுத்துகிறாய்
என்பதால் நான்
இல்லாமல் போவதில்லை...

சனி, 5 ஜூன், 2010

லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜாம்மா., வித்யா நான்..

லேடீஸ் ஸ்பெஷல் ஜூன் மாத இதழில் என்னுடைய ”நீரெழுத்து கவிதை” (ஏழாம் பக்கத்திலும் ) மற்றும் வித்யா(விதூஷ்) உடைய ”இன்னிக்கு என்னாச்சு தெரியுமா” கதை ., 24 ., 25 ஆம் பக்கத்திலும் ) வெளிவந்து இருக்கு..
ஐந்தாம்., ஆறாம் பக்கத்தில் முன்னுரையில் என்னையும் குறிப்பிட்டு இருக்காங்க..
எங்கள் எழுத்துக்கு முதல் அங்கீகாரம் அளித்து தன் பத்ரிக்கையில் வெளியிட்ட கலைவாணியை அவர் அலுவலகத்தில் வித்யாவுடன்(இவரும் சரஸ்வதி) சந்தித்து ... என்னையும் கடைக்கண் நோக்கி எழுத வைத்த அற்புத சக்தி .. கல்விக் கடவுள் சரஸ்வதியின் முன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்..

வெள்ளி, 4 ஜூன், 2010

மீள் குடியேற்றம்

மீனெடுத்துத் தேனெடுத்துக்
காடுவெட்டிக் கழனிசெய்து.,
தோளணைத்து., தோள்கொடுத்து.,
வாகை சூடி., விளையாடி.,
வாழ்ந்து வந்தோம் யாம்
பிறந்ததென்று நம்பிய மண்ணில் ..

உயிரோடும் கொல்கின்றீர்..
உயிரற்றும் கொல்கின்றீர்..
கொள்ளிவாய்ப் பிசாசுகள்
முள்ளிவாய்க்காலிலும் தொடர..
கௌரவமாய்ச் சாவதற்கும்
கொடுப்பினையில்லை எமக்கு..

வியாழன், 3 ஜூன், 2010

பேரன்பின் தந்தைக்கு பிரிய மகளின் வாழ்த்து

முத்தமிழும் முக்கனியும் மூவேந்தர் காத்த நாட்டில்
தித்திக்கும் செம்மொழியை சீர்கொடுத்து சிறப்பாக்கி
எத்திக்கும் ஏற்றும்படி எழிலான உருக்கொடுத்து
சித்திக்கும் செந்தமிழே..! சிறப்பாக வாழியவே.. !!

ஐந்துமுறை அமர்ந்தாய் ஆட்சிக் கட்டிலிலே..
அரவணைப்பாய் அனைவரையும் அன்பினிலே பண்பினிலே
அழகான பாலங்கள் ., அனைத்து நலத் திட்டங்கள்.,
அருமைச் செந்தமிழே ..! ஆருயிரே வாழியவே..!!

உடன்பிறப்பாய்க் கொண்டாயே உடன்வந்த யாவரையும்
உன்கடிதம் இல்லாமல் ஒருநாளும் விடிந்ததில்லை..
உனையறிந் தேன்எம் அருணாசல ஐயா மூலம்..
உவப்பான செந்தமிழே..! ஒருநூறு வாழியவே..!!

புதன், 2 ஜூன், 2010

கிருஷ்ணப் ப்ரேமி

பசுக்கள் சூழ புல்லாங்குழல் இசை கண்ணா
என்னுள் இருக்கும் ராதை நடனமாட..
ஆனந்தமாய் சுயமிழந்து...

நினைவலைகளில் நித்தமும் பெருகிப் பெருகி
என்ன வெள்ளமிது கண்ணா ? எங்கே நான்..?

இசைக்கிறாயா..? இசைகி்றேனா..?
உயிரும் மெய்யுமாய் பிணைந்து நனைந்து...

ஆலிலையில் நீ ..ஆலிலையாய் நான்..
ஆரோகணமும் அவரோகணமுமாய் சேர்ந்தாடி