கேட்டதும் கொடுப்பவளே கேட்பதெல்லாம் கொடுப்பவளே.
முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களும் ஓருருவில் அடக்கம். அந்த உருவை வணங்கினாலே மும்மூர்த்திகளையும் தேவாதி தேவர்களையும் வணங்கியதாக அர்த்தம்.
ஆம் இப்படிப்பட்ட உருவம் கொண்டவள் யார்.? அனைவரும் வணங்கும் அவளின் சிறப்பென்ன ?
அன்னையைப் போன்ற முகமும் மனதும், பசுவைப் போன்ற உருவமும் அத்தோடு பறக்க இறக்கைகளும், அழகான மயில் தோகையும், இத்தனையும் ஒரே உடலிலா. ஆம் ஒரே இத்தனையையும் ஒரே உடலில் கொண்டவள்தான் அவள். ஆனால் கேட்டது அனைத்தையும் கொடுப்பாள். அதுவும் நன்மனம் கொண்ட தவசீலர்க்கே கொடுப்பாள். தெய்வீக விருந்து படைப்பாள்.
அவள் யார் ? எப்படித் தோன்றினாள் ? தெரிந்துகொள்ள நாம் பாற்கடலைக் கடையும்போது போகவேண்டும். கிட்டத்தட்டப் பதினெட்டாயிரத்து ஐநூறு நாட்கள். திருப்பாற்கடலைக் கடைந்தார்கள் கடைந்தார்கள் தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் ஒருபுறமுமாக. மந்தார மலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் கொண்டு கடைந்தார்கள்.