திங்கள், 19 பிப்ரவரி, 2018

ஈசனுக்குத் தாயானவள். தினமலர் சிறுவர்மலர் - 6.

அப்பனுக்கே அம்மையானவள்.

யார் இந்தப் பெண்.?. பேயுரு எடுத்தாற்போல் தலைகீழாய் கைகளால் கைலாயத்தில் ஏறி வருகிறாளே. பார்க்கவே பீதியூட்டும் நரம்பும் தோலும் எலும்புமான இப்பெண்ணைப் பார்த்துப் பரிவோடும் பாசத்தோடும் முக்காலமும் உணர்ந்த சிவ பெருமான் “அம்மையே வருக “ என்றழைக்கிறாரே. 

ஆதி அந்தம் அற்ற சிவனுக்கும் தாயான இவள் யார். ? சிவபூதகணம் போல் இவள் இப்படி ஆனது எப்படி ?

ஒரு மாங்கனி அவளை இப்படி ஞானப்பெணாக்கியது என்று நம்ப முடியுமா .. அது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள நாம் காரைவனம் என்னும் மாநகருக்குச் செல்லவேண்டும்.

காரைமாநகரில் தனதத்தன் தர்மவதி என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு அழகான ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவளுக்குப் புனிதவதி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். சிவபூசனையில் ஈடுபாடு உள்ள குடும்பம் என்பதால் புனிதவதியும் சிவபக்தையாகவே வளர்ந்தார். உரிய பருவத்தில் அவருக்கும் பரமதத்தன் என்பவருக்கும் திருமணம் செய்வித்து மகிழ்ந்தார்கள் புனிதவதியின் பெற்றோர்.

தனியே ஒரு இல்லத்தில் புதுமணத் தம்பதிகள் வசித்து வந்தபோது பரமதத்தன் இரு மாங்கனிகளை வாங்கித் தனது இல்லத்துக்குக் கொடுத்தனுப்பினார். அவற்றை வாங்கி வைத்த புனிதவதி சமையலில் ஈடுபட்டார்.


அப்போது வாசலில் ஒரு சிவனடியாரின் குரல் கேட்டது. “சிவாய நமக” மதிய வேளையில் பசியொடு வந்திருந்த அவரைப் புனிதவதியார் வரவேற்று உபசரித்து அமரவைத்தார். சமையலோ பாதிதான் முடிந்திருந்தது. இந்த சிவனடியாருக்கு என்ன அளிப்பது. அன்னம் மட்டுமே ஆக்கப்பட்டிருந்தது. வியஞ்சனங்கள் செய்து திருவமுது படைக்க நேரமாகிவிடுமே, அதற்குள் சிவனடியார் பசியைப் போக்க வேண்டும், இல்லாவிட்டால் அவர் பசியோடு சென்றுவிடுவாரே என்ன செய்வது என யோசித்தார் புனிதவதியார்.

கணவர் கொடுத்தனுப்பிய மாங்கனி ஞாபகம் வந்தது. அதையே தயிர் கலந்த அன்னத்துடன் வெஞ்சனமாகப் பரிமாறி அந்தச் சிவனடியாருக்குத் திருவமுது பாலித்தார். அவர் ஆசீர்வதித்துச் சென்றவுடன் மிச்ச சமையலை முடித்தார்.

கணவர் உணவுண்ண வந்துவிட்டார். புனிதவதியார் பலவித அறுசுவைப் பதார்த்தங்கள், வெஞ்சனங்களோடு அன்னத்தைப் படைத்து அந்த மாங்கனியையும் பரிமாறுகிறார். உணவின் சுவையோ , மனைவியில் கைப்பக்குவமோ மாங்கனியின் சுவையோ மயங்கிய பரமதத்தன் இன்னொரு மாங்கனியையும் பரிமாற சொல்கிறார்.

மனம் துணுக்குற்ற புனிதவதியார் சமையலறையில் சென்று சிவனை வேண்டுகிறார். எல்லாருக்கும் கிடைத்துவிடுமா ஆனால் தெய்வீகப் பெண்ணாயிற்றே புனிதவதியார் அதனால் சிவன் அவர் வேண்டுதலை ஏற்றுக் கையில் இன்னொரு மாங்கனியை அளித்து மறைகிறார்.

கணவருக்கு அந்த மாங்கனியையும் பரிமாறுகிறார் புனிதவதி. முன்பை விட இந்தக் கனி சுவையாயிருக்கக் கண்டு வியந்த பரமதத்தன் மனைவியிடம் கேட்கிறார் “ இந்தக் கனி இன்னும் அமிர்தமாய் இருக்கிறதே எப்படி ?”

”இதை சிவபெருமான் அளித்தார். அதனால்தான் அப்படி இனிக்குமாயிருக்கும். ”

“என்னது சிவபெருமானா. விளையாடுகிறாயா “

“இல்லை நாதா உண்மைதான். சிறிது நேரத்துக்கு முன்பு ஒரு சிவனடியார் அமுது வேண்டி வந்தார். வியஞ்சனங்கள் தயாராகாததால் தயிரன்னத்துடன் நீங்கள் அனுப்பிய ஒரு மாங்கனியைப் பரிமாறினேன். “ “ இப்போது முதலில் நீங்கள் அனுப்பிய கனியைப் பரிமாறினேன். திரும்பவும் நீங்கள் கேட்கவும் ஈசனிடம் கேட்டேன் அவர் தந்தார் “ என்றார்

பரமதத்தன் முகத்தில் வியப்புக் குறி மாறவில்லை. மனைவி ஏதேனும் விளையாடுகிறாளா. அவருக்குத் தெரியவில்லை ஆதியந்தமற்ற அச்சிவன்தான் விளையாடுகிறான் என்று.

”அப்படியானால் எங்கே இன்னொரு மாங்கனி கேள் சிவனிடம். தருகிறாரா பார்ப்போம்” என்றார் பரமதத்தன்.

சிவனை வேண்டித் துதித்தபடி தனக்கு இன்னொரு மாங்கனி அளிக்க வேண்டிக் கண்ணை மூடி இறைஞ்சுகிறார் புனிதவதி.

’என்னே ஆச்சர்யம்’ அவர் கரத்தில் இன்னொரு மாங்கனியை ஈசனின் திருக்கரம் அளித்து மறைந்தது.

பார்த்துக் கொண்டிருந்த பரமதத்தனுக்கு வியர்த்துப் போகிறது. பேச நா எழவில்லை. இவள் பெண்ணோ பெரும் தேவதையோ. தெய்வத்திடம் பேசும் இவளைப் பெண்டாட்டியாக எப்படி நினைப்பது. ? மனதில் பயமும் பக்தியும் பெருகுகிறது அவருக்கு. அதன்பின் புனிதவதியை அவரால் நெருங்கவே முடியவில்லை.

பெண்ணுடன் குடும்பம் நடத்தலாம் தெய்வத்துடன் குடும்பம் நடத்துவது சாதாரணமனிதருக்குச் சாத்தியமல்லவே. அவருடன் இனியும் வாழத் தான் தகுதியானவனா. சிந்தித்த பரமதத்தன் திரைகடலோடி திரவியம் தேடச் சென்றார்.

சென்றவர் சென்றவர்தான் திரும்பி வரவேயில்லை. கணவரைத் தேடித் தேடிச் சலித்தார் புனிதவதியார். சிவனைப் பாடிப்பரவுதலே அவர் நித்தியக் கடமையாயிற்று.

ஒரு நாள் அந்த அதிர்ச்சிச் செய்தி வந்தது பரமதத்தன் பாண்டிநாட்டில் வேறொரு பெண்ணை மணந்து குடும்பம் நடத்துகிறார் என்று. கணவரைப் பார்க்கக் கிளம்பினார் புனிதவதி.

ஆனால் அங்கே நடந்தது என்ன ?

இவரைக் கண்டதும் கணவர் தான் மணந்துகொண்ட பெண்ணுடனும் அவர்களுக்குப்பிறந்த குழந்தையுடனும் தன் முதல் மனைவியான புனிதவதியாரைத் தெய்வமாகக் கருதி அவர் காலில் விழுந்து வணங்குகிறார்.

கணவனே கண் கண்ட தெய்வம் என்று வளர்க்கப்பட்ட அவரின் காலில் கணவன் விழுந்து வணங்குவதா. புனிதவதியாரின் சித்தம் குழம்புகிறது. கணவனுக்கும் வேண்டாத இந்த உடலும் வளமையும் வளப்பமும் இளமையும் எதற்கு ?

சனைத் துதிக்கிறார். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்க வேண்டி நிற்கிறார். உடல் என்னும் மாயையைக் கடக்கிறார். சிவகணங்கள்போல் உடல் சுருங்கி பூதவடிவாகிறது. எலும்பும் நரம்பும் தோலும் போர்த்த பேயுரு கொண்ட பெண்ணைப் போலாகிறார். ஆனால் சிவபக்தியில் அவர் மூத்த நாயன்மார் ஆகிறார்.

இனி எக்கணமும் சிவகணமாக வாழச் சித்தம் கொள்கிறார். புனிதமான ஈசன் உறையும் திருக்கயிலாயத்தை அடைய விழைகிறார். புனிதவதியார் சென்று திருக்காயிலாய மலையை அடைகிறார். அதைக் கால்களால் மிதித்தல் தவறு , திருக்கயிலாயமே ஈசனின் உருவம் என்றுணர்ந்த அம்மை தனது கைகளைக் கால்களாக்கித் தலைகீழாக மலை ஏறத் துவங்கிகிறார்.

கோரமான் பேயுருவில் தலைகீழாய் மலை ஏறிய அப்பெண்ணைப் பார்த்த பார்வதி அம்மை யார் இது என வினவுகிறார். அம்மையப்பன் பதிலளிக்கிறார் ”இவர்தான் எனது அம்மை. காரைவனத்தில் இருந்து என்னைப் பார்க்க வருகிறார்.” என்று பார்வதியிடம் பதிலளித்துவிட்டுப் புனிதவதியாரை வரவேற்கிறார். “ அம்மையே வருக. என்ன வரம் வேண்டும் உமக்கு ?”

“ஈசனே மீண்டும் பிறவாமை வேண்டும். உன் திருவடிக்கீழ் உறையும் இடம் வேண்டும் எனக்கு. என்றும் உன்னை மறவாமலும் பிரியாமலும் இருக்க வரம் வேண்டும் நீ நடனம் ஆடும்போது உன்காலடிக்கீழ் இருக்கும் வரமும் வேண்டும் “ என்கிறார். உடனே ஈசன் அவரைத் திருவாலங்காட்டுக்கு வரவழைத்துத் திருத்தாண்டவம் ஆடித் தன் காலின் கீழ் என்றும் உறையும் பாக்கியம் அருள்கிறார்.

சாதாரணப் பெண்ணான இவர் மூன்று பெண் நாயன்மார்களில் மூத்த நாயன்மார் ஆனதும் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி பாடியதும் உலகறிந்ததே. எல்லாப் பேறும் கிட்டலாம் ஆனால் ஈசனுக்கே அம்மை என்ற பேறு கிட்டியது இவர் ஒருவர்க்கு மட்டுமே .

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 16. 2. 2018  தினமலர் சிறுவர் மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.

3 கருத்துகள்:

  1. மிக மிக நன்றாக இருக்கிறது உங்கள் எழுத்தில்... சகோதரி/தேனு

    தினமலர் சிறுவர் மலரில் வெளியானமைக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. //“ஈசனே மீண்டும் பிறவாமை வேண்டும். உன் திருவடிக்கீழ் உறையும் இடம் வேண்டும் எனக்கு. என்றும் உன்னை மறவாமலும் பிரியாமலும் இருக்க வரம் வேண்டும் நீ நடனம் ஆடும்போது உன்காலடிக்கீழ் இருக்கும் வரமும் வேண்டும் “ // வாவ்! அருமையான வரிகள்!!!!!!!

    இந்த வரிகள் பாபநாசம் சிவன் அவர்கள் எழுதிய பாடலை நினைவுபடுத்துகிறது...சினிமாவிலும் கூட வந்திருக்கு என்று நினைக்கிறேன்...தண்டபாணி தேசிகர் பாடி நந்தனார் திரைப்படத்தில் வந்தது என்ற நினைவு..

    "பிறவா வரம் தாரும் பெம்மானே பிறவா வரம் தாரும். பிறவா வரம் தாரும் பிறந்தாலும் உன் திருவடி மறவா வரம் தாரும்" என்று வரும் இல்லையா...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நன்றி கீத்ஸ். ஆமாம்பா இருக்கலாம்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)