வியாழன், 15 பிப்ரவரி, 2018

எங்கும் நிறைந்திருக்கும் இறைவன். தினமலர் சிறுவர்மலர் - 4.

எங்கும் நிறைந்திருக்கும் இறைவன்.



த்யயுகம் இது. இந்த யுகத்திலும் அசுரர்களும் அவர்களால் தொல்லைகளும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. யாரோ ஒரு அசுரக் குழந்தை என்னை அழைக்கிறது. அசுர நாவில் தெய்வத் திருநாமம்.

”எங்கும் நிறைந்திருக்கும் இறைவா இங்கே காட்சி கொடு” என்கிறது மழலைக் குரல். நானும் அசுரனும் தேவனுமாய், மனிதனும் மிருகமுமாய்க் கிளர்ந்தெழுகிறேன். மெல்ல மெல்ல எனக்குச் சிங்கமுகமும் பதினாறு கரங்களும் முளைக்கின்றன. பிடரி மயிர்கள் சிலிர்த்தெழுகின்றன.,,எல்லாம் ஒரு நொடிக்குள். இந்த அவதாரத்தை நான் தீர்மானிக்கவேயில்லை. கடவுள் பாதி மிருகம் பாதியாய் அது அவனால் நிகழ்ந்துவிட்டது.   

“நாராயணா நாராயணா” என்ற பிஞ்சுக்குரல் என் மனமெங்கும் மோதி என்னைக் கட்டி இழுக்கிறது. வெல்லப்பாகாய் என்னை உருகச் செய்கிறது. யாரோ ஒரு அரக்கன் கோட்டை கொத்தளங்களை உடைக்கிறான்.

“இங்கே இருக்கிறானா.. உன் இறைவன்,?. இங்கே இருக்கிறானா உன் இறைவன்..?” என்று அச்சிறுவனிடம் கேட்டபடி கோட்டையை தன் முரட்டுக் கதாயுதத்தால் உடைத்துச் சிதறடிக்கிறான் அந்த அசுரன்.

“ஆமாம் தந்தையே அவன் தூணிலும் இருப்பான் , அந்தத் துரும்பிலும் இருப்பான் ” என்கிறான்.

ஆவேசத்தோடு கொடிய முகம் காட்டி வெறி உரு எடுத்து நிற்கும் தந்தை முன் சின்னஞ்சிறு பாலகன் சித்தம் கலங்கி நிற்கிறான். தாயின் வயிற்றில் பிறக்காத நான் அந்த பாலகனுக்காய் தூணில் பிறக்கச் சித்தமாகிறேன். அசுரனை எதிர்க்க மிருகம்தானே தேவை.

இந்தத் தூணை உடைக்கிறான் அசுரன். உடனே உருவாகி நான் பிடரியை சிலிர்த்தபடி சிம்ம முகமும் அசுர வடிவும் , மனித உடலும் கொண்டு வெடித்துப் பிறக்கிறேன். அது மதியமும் மாலையும் இரவும் இல்லாத அந்திப் பொழுது. வாயிற்படியில் வைத்து அக்கதாயுதம் ஏந்தியவனை என் தொடைகளில் வைத்து நகங்களால் கிழிக்கிறேன்.  அவன் ரத்தத்தை அருந்துகிறேன்.

எத்தனையோ அவதாரங்களில் பாலனாய்ப் பிறந்து பின் வளர்ந்து அதன் பின் சம்ஹாரம் செய்த நான் இந்தப் பிறவியில் பால பக்தனுக்காய் உடனடியாகப் பிறந்து பகை முடிக்கிறேன். 

என் ருத்ரம் அடங்கவில்லை. சரபேஸ்வரன் என்னை சமாதானப்படுத்த முயல்கிறான். லெக்ஷ்மி முயல்கிறாள். பிரம்மன் முயல்கிறான் . அந்த பால பக்தன் முயல்கிறான். என் சீற்றம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கத் துவங்குகிறது. அதற்கு முன் என் பிறப்பைப் பற்றியும் அந்தப் பால பக்தனைப் பற்றியும் கூறுகிறேன்.

ன் பிறப்பை நானே தீர்மானிக்கவில்லை என் பால பக்தன் தான் தீர்மானித்தான். அவன் நம்பிக்கைதான் தீர்மானித்தது. நான் வருவேன் என்ற அவனது நம்பிக்கையை மெய்ப்பிக்கவே உருக்கொண்டேன். தூணில் நிமிட நேரத்தில் கருக்கொண்டேன்.

என்னைப் பிறப்பித்த அவன் யார் ? அவன்தான் காசியப முனிவரின் பேரன் ப்ரகலாதன். இரண்யகசிபுவுக்கும் கயாதுவுக்கும் மகனாகப் பிறந்தவன். இரண்யகசிபு பிரம்மனை நோக்கித் தவமிருந்து மனிதர், மிருகம், பறவை, விலங்கு, ஆகியவற்றாலோ, வீட்டிற்கு உள்ளேயோ வெளியிலோ, எந்த ஆயுதத்தாலோ மரணம் சம்பவிக்கக்கூடாது என்று வரம் வாங்கியவன்.

வரம் வாங்கியதும் இரண்யகசிபுவின் அகந்தை பெருகியது. தனக்கு மரணமில்லை, இறைவன் கூட தனக்குச் சமமில்லை என்று அகந்தை கொண்டு தன்னைத் தானே இறைவன் என்று பிரகடனப்படுத்திக்கொண்டான். தன்னையே மக்கள் வணங்கவேண்டும் என்று ஆணையிட்டான்.

இச்சமயம் அவனது மகனாக கயாதுவின் வயிற்றில் உருவான ப்ரகலாதனிடம் நாரதர் ஸ்ரீமன் நாராயணே முழு முதற்கடவுள் என்று போதித்திருந்தார். கருவிலே திருவுபதேசம் பெற்றதால் அவன் சிறுவயதிலேயே கடவுள் என்றால் அவர் ஸ்ரீஹரி ஒருவரே என்று சொல்லத் தொடங்கினான்.

நாடே தன்னைக் கடவுள் என்று வணங்க தன் மகனான இச்சிறுவன் தன்னை எள்ளுவதா என்று  வெகுண்டான் இரண்யகசிபு. ”தந்தைதான் கடவுள் என்று சொல்” என்று அவன் சொல்லச் சொல்ல ”இல்லை ஸ்ரீஹரிதான் கடவுள் ” என்று மறுப்புச் சொல்லிக் கொண்டிருந்தான் பாலகன்.

வானளாவிய அதிகாரம் பெற்ற தன்னையே இந்த அற்பச் சிறுவன் எதிர்ப்பதா என்று கோபமுற்றான் இரண்யகசிபு. மகன் என்பதால் அன்பாகவும் அதட்டியும் மிரட்டியும் சொல்லிப் பார்த்தும் கேட்காததால் அதி கோபத்தில் கொடிய தண்டனைகள் கொடுத்தும் கொல்லப்பார்த்தான்.

பிரகலாதனை பூமியில் புதைத்து யானையின் காலால் இடறச் செய்தான். கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தான், மகனை விஷம் குடிக்க வைத்தான், படுபாவி பச்சைச் சிசுவை எரியும் தீக்குள்ளும் இறங்க வைத்தான். இச்சமயத்தில் எல்லாம் உருவெடுக்காமலே நான் உயிர்களுக்குள் புகுந்து அவனைக் காப்பாற்றினேன். அவனைப் பிடித்திருந்த ஹோலிகாவை எரித்து பாலபக்தனை பத்திரமாக வெளியேற்றினேன்.

சொல்லொணா துயரடைந்தும் அந்த பால பக்தன் ப்ரகலாதன் என் மேல் நம்பிக்கை இழக்கவில்லை. திரும்பத் திரும்ப “நாராயணன் ஒருவரே கடவுள் ” என்றான் .

”அவர் எங்கே இருக்கிறார். எனக்குக் காட்டு” என்று கர்சித்தான் இரண்யகசிபு.

”அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்.” என்றான் சிறுவன்.

”இந்தத் தூணில் இருப்பாரா” என்று தூணைத் தட்டினான் அசுரன் .

”ஆம் தந்தையே. அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார். ” என்கிறான் அப்பாலகன்.

கொடியவர்கள் அழிவார்கள், பக்தர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதை நிரூபிக்க நான் அந்தத் தூணில் தோன்றவேண்டியதாயிற்று. கோபாவேசத்தில் தோன்றியதால் நானும் மிருக உரு எடுக்க வேண்டியதாயிற்று. கோபமாக உடைத்த தூணில் நானும் உக்கிரமாகத் தோன்றி அகந்தையை அழித்தேன். ஆணவத்தை ஒழித்தேன்.

பிரகலாதன் அசுரனாகப் பிறந்தாலும் தூய பக்தி கொண்டவன். என் மேல் நம்பிக்கை கொண்டவன். ’எங்கும் நிறைந்திருக்கும் இறைவன்’ என்ற அவனது நம்பிக்கையை மெய்ப்பிக்க நான் தூணில் தோன்றினேன். ”ஸ்ரீ மாதவா முகுந்தா பாபசம்ஹாரா ” என்று பாடிக்கொண்டிருக்கிறான். என் ருத்ரமும் உக்கிரமும் அடங்கி நான் என் பால பக்தன் ப்ரகலாதன் முன் பாலனாக மாறிக்கொண்டிருக்கிறேன்.

டிஸ்கி :- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 2. 2. 2018  தினமலர் சிறுவர் மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.

4 கருத்துகள்:

  1. // வெடித்துப் பிறக்கிறேன். // // தூணில் நிமிட நேரத்தில் கருக்கொண்டேன்.// // என் பிறப்பை நானே தீர்மானிக்கவில்லை என் பால பக்தன் தான் தீர்மானித்தான். //

    ஸூப்பர். தெரிந்த கதையைப் புதிதாகப் படிப்பது போல இவ்வளவு சுவாரஸ்யமாக, வித்தியாசமாகச் சொல்ல முடியுமா?

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க தேனு. வெரி இன்ட்ரெஸ்டிங்க்! //என் பிறப்பை நானே தீர்மானிக்கவில்லை என் பால பக்தன் தான் தீர்மானித்தான். அவன் நம்பிக்கைதான் தீர்மானித்தது. நான் வருவேன் என்ற அவனது நம்பிக்கையை மெய்ப்பிக்கவே உருக்கொண்டேன். தூணில் நிமிட நேரத்தில் கருக்கொண்டேன்.// நரசிம்ம அவதாரத்தை இபப்டியும் சொல்லலாம் ஸ்வாரஸ்யமாய் என்று ஆஹா போட வைத்தது.. அருமையான வரிகள்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஸ்ரீராம். :)

    நன்றி சுபா ரவீந்திரன்.

    நன்றி கீதா :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)