வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

கண்ணுக்குக் கண் கொடுக்கும் அன்பு. தினமலர் சிறுவர்மலர். - 5.

கண்ணுக்குக்  கண் கொடுக்கும் அன்பு.  


வேடனாய் இருந்தாலென்ன விருத்தனாய் இருந்தாலென்ன. பக்தியால் அவனும் நாயன்மாரில் ஒருவராக ஆகமுடியும் என்பதைக் கூறுவது திண்ணனின் கதை.

அது யார் திண்ணன். ? அவன் உடுப்பூர் என்னும் ஊரிலிருந்த நாகனார் என்ற வேட்டுவரின் மகன். சிவனடியார்களைப்போல சிவனை அகமும் புறமும் தொழுது ஐந்தே நாட்களில் சிவனிடம் ஐக்கியமானவன். அவன் தன் அன்பின் முன் பரம்பொருளையும் மெய்மறக்கச் செய்தவன். பக்தியாலும் பாசத்தாலும் தன் கண்ணையே அகழ்ந்து தந்தவன்.

பிறப்பு சாதி இனம் இவை யாவும் கடவுளுக்கு முன் சமம். அன்பும் ப்ரேமையும் பக்தியுமே அவரை அடையும் யுக்தி என்பதைச் சொல்ல வருகிறது இக்கதை.

காளகஸ்தி என்னும் ஊரில் மலைமேல் ஒரு சிவன் கோவிலிருந்தது. அந்த இறைவன் பெயர் குடுமித்தேவர். சிவகோசாரியார் என்பார் தினம் வந்து ஆகம முறைப்படி திருமஞ்சனம் செய்வித்து, வில்வம் கொண்டு பூஜை புனஸ்காரங்கள் செய்து, திருவமுது படைத்துச் செல்வார்.

அந்த மலையின் பக்கம் வந்த திண்ணனும், அவன் நண்பர்கள் நாணனும் காடனும் ஒருநாள் காட்டுப் பன்றி ஒன்றைப் பெரும் வேட்டையாடியவாறு இம்மலையின் பக்கம் வருகிறார்கள். தண்ணீர் தாகம் எடுக்கிறது திண்ணனுக்கு.

அங்கே ஓடிய பொன்முகலி ஆற்றில் நீரருந்துகிறார்கள் மூவரும். நிமிர்ந்து பார்க்கும் திண்ணனின் கண்ணில் காளத்தி மலை தென்படுகிறது. ஏனோ அம்மலை அவனை ஈர்க்க அதில் ஏறிச் செல்கிறான். செல்லும்போதே மனமெங்கும் சொல்லொணா இன்பமும் அமைதியும் நிரம்புகிறது அவனுக்கு.

மலைமேல் ஏறியதும் அங்கே வீற்றிருந்த திருக்காளத்தி அப்பரான லிங்க உருவிலிருக்கும் குடுமித்தேவரைக் கண்ணுறுகிறான். இத்தனை நாட்களாய்க் காணாமலிருந்து கண்ட கடவுட் காட்சி அவனை சித்தம் மயக்குகிறது.  அவனுள் பக்தியும் பாசமும் பற்றும் ஊற்றெடுக்கிறது. ஆட்கொள்ள இருக்கும் அப்பன் அல்லவா அதனால் பார்த்ததும் பரவசமாகிறான் திண்ணன்.

அவரின் மேல் சிவாசாரியார் பூஜித்துச் சென்ற வில்வமும் கொன்றைப் பூக்களும் கிடக்கின்றன. தானும் அவரை பூஜிக்க விழைகிறான். நண்பன் நாணனும் காடனும் சொன்னபடி ஆற்று நீரை வாயில் நிரப்பி , தன் குடுமியிலேயே சில காட்டுப் பூக்களைப் பறித்துச் செருகிக் கொண்டு வந்து காளத்தி அப்பருக்குத் திருமஞ்சனம் செய்வித்து பூக்களை வைக்கிறான்.

வேட்டையாடிய பன்றிக் கறியையும் அவனுக்குத் தெரிந்தபடி சுட்டு வெந்த மாமிசத்தை ருசிபார்த்துத் தேக்க இலையில் எடுத்துவந்து படைக்கிறான். நண்பர்கள் நாணனும் காடனும் திகைத்து நிற்கிறார்கள். வீட்டிற்கு அழைத்தால் கிளம்பவே இல்லை. அவனுக்கு வீடுபேறு அங்கேயே விதித்திருப்பது தெரியாமல் அவர்கள் அவனை இழுக்கிறார்கள்.

திண்ணனோ காளத்தி அப்பரின்மேல் மையலாகி அங்கேயே கிடக்கிறான். நாணனும் காடனும் ஓடிச் சென்று திண்ணனின் தந்தை நாகனாரிடமும் தாய் தத்தையிடமும் திண்ணனின் சிவ பக்தியைத் தெரிவிக்கிறார்கள்.

தந்தையும் தாயும் வந்து வீடுவரும்படி வேண்டிக்கொண்டது எதுவுமே திண்ணனின் காதில் விழவில்லை. அவன் சிந்தையெங்கும் சிவமயம் நிரம்பி இருந்தது. காளத்தி அப்பரை ஒரு நொடி பிரிவது கூட அவனுக்குக் கடினமாயிருந்தது.

தினம் வேட்டையாடி அதைத்தீயில் வாட்டித் தேன் ஊற்றி தேக்கிலையில் எடுத்து வந்து வாய்நீரால் நீராட்டி பூச்சுட்டிப் படையல் நிகழ்த்துவது அவனது பழக்கமாகிவிட்டது.

தினமும் ஆகம முறைப்படி தான் பூஜை செய்துவிட்டுச் சென்றபின் ஈசன் திருவுருவின் மேல் காட்டுப்பூக்களும் அவர் பக்கமாய் மாமிசமும் எலும்புகளும் சிதறி இருப்பதைப் பார்த்த சிவாசாரியருக்கோ உள்ளம் துடிக்கிறது. இந்த அக்கிரமங்களை எல்லாம் செய்பவர் யார் என்று ஈசனிடம் கேட்கிறார் அவர். அங்கே கிடப்பவற்றைத் தினம் சுத்தம் செய்து அவரும் நீராடி சுவாமிக்கும் திருமஞ்சனம் செய்து திருவமுது படைத்துச் செல்கிறார்.

அன்றிரவு அவர் தூங்கும்போது ஈசன் அவர் கனவில் தோன்றி இவ்வாறு செய்பவன் தன்மேல் உள்ள ப்ரேமையாலே செய்கிறான் எனவும் மறுநாள் மலைமேல் ஒரு மரத்தில் ஒளிந்திருந்து நடக்கப் போகும் காட்சியைக் கண்ணுறுமாறும் கூறுகிறார்.

ந்து நாட்கள் ஆயிற்று. அது ஆறாவது நாள். வழக்கம்போல் பன்றி வேட்டையாடிய திண்ணன் தீச்சகுனங்கள் கண்டு மலைமேல் ஓடி வருகிறார். சிவாசாரியாரோ சிவன் சொற்படி மரத்தின் பின் மறைந்து கவனிக்கிறார்.

ஓடிவந்த திண்ணன் தன் ஈசனின் வலது கண் பள்ளமாகி ரத்தம் வருவதைக் கண்டு துடிக்கிறார். பூக்களும் இறைச்சியும் சிதறிவிழ மயக்கமுறும் திண்ணன் தன்னைத் தேற்றிக் கொண்டு பொங்கும் ரத்தத்தைத் துடைக்கிறார். பின்னும் வழிகிறது.

’இதென்ன மாயமோ ? யார் நிகழ்த்திய காயமோ’ என்று குடுமித்தேவரை இறுக அணைக்கிறார். அன்னைபோல் பதைக்கிறார்.

துடைத்துச் சோர்ந்த அவர் கண்ணுக்குக் கண் தரலாம், தன் கண்ணை அந்த ரத்தம் வரும் இடத்தில் அப்பினால் ரத்தம் நிற்கும் என முடிவெடுக்கிறார். தனது அம்பை எடுத்துத் தனது வலக்கண்ணைத் தோண்டி இரத்தம் பொங்கும் ஈசனின் வலக்கண் குழியில் வைக்கிறார்.

அப்பாடா ஒருவழியாய் இரத்தம் நிற்கிறதே..

ஐயோ இதென்ன இடக்கண்ணில் ரத்தம் பொங்குகிறதே இப்போது ?

செய்வதறியாது மயங்கிய திண்ணன் தனது இடக்கண்ணையும் கெல்ல முனைகிறார். அடடா இரு கண்ணும் இல்லாவிட்டால் ஈசனின் கண் இருக்கும் இடம் தெரியாதே.

எதுவும் யோசியாமல் தனது செருப்பணிந்த இடக்காலைத் தூக்கி ஈசனின் இடக்கண் இருக்குமிடத்தில் அடையாளமாய் வைத்து அம்பால் தனது இன்னொரு கண்ணையும் கெல்ல முனைகிறார். பொறுக்குமா காளத்திஅப்பனின் உள்ளம்.

அவரது கை உயர்கிறது. திண்ணனின் கையைப் பிடித்து “ நில் கண்ணப்ப “ என்று தடுத்தாள்கிறார். அவரது கண்களைத் திரும்ப அளித்து ”என்றும் என் வலத்தினில் நில் கண்ணப்ப “ என்று ஆணையிட்டு இறப்பில்லாப் பேரின்பப் பெருவாழ்வும் நல்குகிறார்.

கண்ணுக் கண் தந்ததால் திண்ணன் கண்ணப்பர் ஆகிறார். அவரது பக்தி காவியம் ஆகிறது. வேடனானால் என்ன விருத்தனானால் என்ன? மாறாத பக்தியும்  மாசில்லாத அன்பும் கண்ணுக்குக் கண் கொடுக்கும்.

டிஸ்கி :- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 9. 2. 2018  தினமலர் சிறுவர் மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.

9 கருத்துகள்:

  1. நானும் தான் படித்தேன்.
    அதைப் பலரிடம் பகிர்ந்து கொள்ள உங்களுக்குத் தான் தெரிந்திருக்கிறது.
    நல்ல பகிர்வு. இணையத்தில் போட்டால் தினமலர் பிரசுரத்தை விட பல மடங்கு சிறப்பாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. ஜிவி சார் இது நான் எழுதிய கதை.அதனால்தான் என் ப்லாகில் பகிர்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் எழுதும் தொடர் என்று தெரிந்து தான் சொன்னேன், தேனம்மை.
    தினமலர் வாசகர்களைத் தாண்டி இணையத்திலும் என்று பொருள் கொள்க.
    தங்கள் அழைப்புக்கு நன்றி. எப்படியான கட்டுரை என்று புரிந்து கொண்டு அனுப்பி வைக்க முயற்சிக்கிறேன். ('பாரதியார் கதை' எழுதும் முழு முயற்சியில் இருக்கிறேன்) மிக்க நன்றி, சகோ.

    பதிலளிநீக்கு
  4. அருமையான கதை அழகா சொல்லிருக்கீங்க..கண்ணப்பனாரின் கதை...

    தினமலரில் வந்தமைக்கு வாழ்த்துகளும்!!!

    பதிலளிநீக்கு
  5. அழகாக எழுதியுள்ளீர்கள். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. கண்ணப்ப நாயனார் கதை மிக எளிமையாக சொல்லப்பட்டுள்ளது. சிறுவர்கள், பெரியவர்கள் எல்லோரும் ரசிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி துளசி சகோ

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி முத்துசாமி சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)