புதன், 28 பிப்ரவரி, 2018

கேட்டதும் கொடுப்பவளே கேட்பதெல்லாம் கொடுப்பவளே. தினமலர் சிறுவமலர். 7.

கேட்டதும் கொடுப்பவளே கேட்பதெல்லாம் கொடுப்பவளே.

முப்பத்து முக்கோடி  தேவர்களும் முனிவர்களும் ஓருருவில் அடக்கம். அந்த உருவை வணங்கினாலே மும்மூர்த்திகளையும் தேவாதி தேவர்களையும் வணங்கியதாக அர்த்தம்.

ஆம் இப்படிப்பட்ட உருவம் கொண்டவள் யார்.? அனைவரும் வணங்கும் அவளின் சிறப்பென்ன ?

அன்னையைப் போன்ற முகமும் மனதும், பசுவைப் போன்ற உருவமும் அத்தோடு பறக்க இறக்கைகளும், அழகான மயில் தோகையும், இத்தனையும் ஒரே உடலிலா. ஆம் ஒரே இத்தனையையும் ஒரே உடலில் கொண்டவள்தான் அவள். ஆனால் கேட்டது அனைத்தையும் கொடுப்பாள். அதுவும் நன்மனம் கொண்ட தவசீலர்க்கே கொடுப்பாள். தெய்வீக விருந்து படைப்பாள்.

வள் யார் ? எப்படித் தோன்றினாள் ? தெரிந்துகொள்ள நாம் பாற்கடலைக் கடையும்போது போகவேண்டும். கிட்டத்தட்டப் பதினெட்டாயிரத்து ஐநூறு நாட்கள். திருப்பாற்கடலைக் கடைந்தார்கள் கடைந்தார்கள் தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் ஒருபுறமுமாக. மந்தார மலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் கொண்டு கடைந்தார்கள்.


தேவர்கள் வால்புறமும் அசுரர்கள் தலைப்புறமுமாகக் கடைந்தபோது முதலில் ஆலகாலவிஷம் உருண்டு வெளி வந்தது. அது பட்டதும் தேவர்களும் அசுரர்களும் மயங்கும் நிலைக்கு வந்தார்கள். உடனே அதை தீனதயாளனாகிய சிவன் பருகி அனைவரையும் காத்தார். ஆனால் அவருக்கும் விஷத்தால் தீங்கு நேராவண்ணம் பார்வதி அவரது கழுத்தைப் பிடித்ததால் அவ்விஷம் அவர் கண்டத்திலேயே தங்கிவிட்டது.

அதன்பின் பாற்கடலிலிருந்து பல அபூர்வ பொருட்கள் தோன்றின. சந்திரன், வாருணி, உச்சைஸ்ரவஸ் என்னும் குதிரை, ஐராவதம் என்னும் யானை, காமதேனு என்னும் பசு, பாரிஜாதமரம், கற்பகவிருட்சம், கௌஸ்துப மணி, குடை, மகர குழை, அப்ஸரஸ் கன்னிகைகள், சங்கு, லெக்ஷ்மி, ஜ்யேஷ்டா, தன்வந்திரி, விஷம், அமிர்தம், ஆகியன.

இதில் விஷம், ஜ்யேஷ்டா என்னும் சோம்பேறித்தனம், வாருணி ஆகிய தீயவற்றோடு நல்லன பயக்கும் கற்பகவிருட்சம், அமிர்தம், தன்வந்திரி, காமதேனு ஆகியோரும் கிடைத்தார்கள். இதில் காமதேனு இந்திரன் வசமாகியது.

அனைவருக்கும் படியளக்கும் காமதேனு கிடைத்தது இந்திரலோகத்துக்குக் கிடைத்த பெருவரம். புனிதம் மிக்க இவள் உடலில் அனைத்து தேவர்களும் வாசம் செய்ய விரும்பினார்கள். அனைவருக்கும் இடம் கொடுத்தாள். எனவே இவள் பரமேஸ்வரனுக்கும் தாய். ஆனாள். புராணங்கள் போற்றும் புனிதம் கொண்டவளானாள். அனைவரும் பூஜிக்கும் பெருமைக்குரியவளும் ஆனாள்.  

தெய்வீகப் பசுவான இவளை சுரபி என்றும் அழைப்பார்கள். அமுதசுரபி போன்றவள். இவளது குழந்தைகள் நந்தினி பட்டி ஆகிய பசுக்கள். அவைகளும் கேட்டதைக் கொடுப்பவையே.

சிஷ்ட மகரிஷியின் ஆசிரமத்தில் பூஜைக்கான ஹோமதிரவியங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நேரிட அவர் இந்திரலோகத்துக்குச் சென்று இந்திரனிடம் பூஜாதிரவியங்கள் அளிக்க வேண்டி காமதேனுவைக் கேட்டுப் பெறுகிறார்.

அதன்பின் வசிஷ்டரின் ஆசிரமத்தில் தங்குதடையில்லாமல் ஹோமங்களும் வேள்விகளும் பூஜைகளும் உலக ஷேமத்துக்காக நடைபெற்றுவருகின்றன. அவை மட்டுமல்ல பசித்தவர்க்குக் கேட்ட உணவு வகைகளும் அளிக்கிறாள் அவள். 

எல்லாம் அப்படியே சென்றால் அதன் சிறப்பு தெரியாது போய்விடுமல்லவா. காமதேனுவின் சிறப்பை இன்னும் அதிகமாக உலகறியச் செய்தவர் ஒரு மன்னர். அவர் பெயர் விஸ்வாமித்திரர்.

ரு முறை விசுவாமித்திரர் கானகத்தில் தனது படையுடன் வந்தபோது திசை தப்பி  வசிஷ்ட மகரிஷியின் ஆசிரமத்துக்கு வந்தார். படையினருக்கோ பெரும்பசி. ஆனால் அங்கே ஆசிரமமும் வசிஷ்ட மகரிஷியும் சில முனிசிரேஷ்டர்களும் ஒரு கோமாதாவுமே இருந்தார்கள்.  

ஆனால் என்ன ஆச்சர்யம்.? அந்த ஒரே பசுவே ஹோமத் திரவியங்களைக் கொடுத்தது. குடம் குடமாக யாகத்துக்குப் பாலையும் நெய்யையும் அளித்தது. படை பட்டாளத்துக்கும் வசிஷ்ட மகரிஷி கேட்டுக்கொண்டதற்கிணங்க அறுசுவை அடிசில் படைத்தது. அள்ள அள்ளக் குறையாமல் நிற்காமல் உணவு வகைகள் வந்துகொண்டே இருந்தன. அனைவரும் திருப்தியாக உண்டு பசியாறினர்.

இதைப் பார்த்ததும் மன்னன் விஸ்வாமித்திரர் மனதில் பொறாமை உருவானது. உயர்வான அந்தக் காமதேனு மன்னனான தன்னிடமே இருக்கவேண்டும் எனவும் ஹோம திரவியங்கள் பெற பத்தாயிரம் பசுக்களை அதற்கீடா அளிப்பதாகவும் வசிஷ்டரிடம் பேரம் பேசுகிறான்.

வசிஷ்டர் புன்னகைக்கிறார். ”கேட்டதைக்  கொடுக்கும் காமதேனு இருக்கும்போது அதற்கீடாக பத்தாயிரம் பசுக்கள் எதற்கு? “  என வினவுகிறார். விஸ்வாமித்திரருக்கோ கேட்டது கிடைக்காத கோபம். காமதேனுவைக் கட்டி இழுத்து வரும்படி வீரர்களுக்கு அதமக் கட்டளை இடுகிறார்.

காமதேனு வசிஷ்டரைப் பார்த்து இறைஞ்சுகிறது காப்பாற்றும்படி.. வசிஷ்டர் நிறைய வீரர்களை உருவாக்கும்படி காமதேனுவிற்கு உத்தரவிடுகிறார். அதன்படி அது உற்பத்தி செய்கிறது அந்தப் படைவீரர்கள் அனைவரும் விஸுவாமித்திர மன்னரின் படையுடன் மோதி காமதேனுவைக் காப்பாற்றுகிறார்கள்.

இவ்வாறு கேட்டதெல்லாம் கொடுக்கும் பெருவரம் படைத்த காமதேனு வேறு யாருமல்ல நமது மனம்தான். எந்தக் காரியத்தையும் சிறப்பாகச் செய்யமுடியும் என நினைத்தால் முடியும். எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஆழ்ந்து சிந்தித்து செயல்பட்டால் அந்தச் சிக்கலில் இருந்து விடுபடவும் நாம் நினைத்ததைப் பெறவும் நம் மனமென்னும் காமதேனு உதவி புரியும் என்பதே இக்கதை கூறும் கருத்து. 

டிஸ்கி :- 

கண்ணப்பர் கதையைப் பாராட்டிய வாசகர்    ஸ்ரீரங்கம், ப. சரவணன் அவர்களுக்கு நன்றிகள். வெளியிட்ட தினமலருக்கும் நன்றிகள். 


பக்த ப்ரகலாதன் கதையைப் பாராட்டிய வாசகி திருவண்ணாமலை என். வேணி அவர்களுக்கும் வெளியிட்ட தினமலருக்கும் நன்றிகள். 


டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 23. 2. 2018  தினமலர் சிறுவர் மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.

4 கருத்துகள்:

  1. காமதேனு பற்றிய தங்களின் இதிகாச-புராணக் கதை அருமை.

    தினமலர்-சிறுவர் மலரில் வெளியாகியுள்ளதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    இந்த மகிழ்ச்சியான தகவலை என் பதிவு ஒன்றிலும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளேன். அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2018/02/blog-post_23.html

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  2. படித்தேன். இதழில் வந்ததறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  3. ஸ்வாரஸ்யமான கதைகள். ரசித்தோம்...தினமல சிறுவல் மலரில் வந்தமைக்கும் வாழ்த்துகள்.

    கீதா: இப்படியான கதைகள் குறியீடுகள் நிறைந்தவை என்று சொல்லலாமோ....மலை என்பது மனம்....அது நேர்மறை எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள் நிறைந்த ஒன்று...அந்த மனதைக் கடைந்து கடைந்து எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறை எண்ணங்களால் நிரப்பினால் அமிர்தம்..இரண்டிற்கும் போட்டி...எது நிரம்ப வேண்டும் என்று..அதான் ஒவ்வொன்றும் ஒரு புறம் மனதை இழுக்கிறது..அப்படி மனம் போராடி போராடி பண்பட்டு.....உயர்வான நிலை அடைவோம்....என்பதாகவும் கொள்ளலாம் என்றும் தோன்றும் எனக்கு...

    பதிலளிநீக்கு
  4. நன்றி விஜிகே சார். ரொம்ப சந்தோஷம் .

    நன்றி ஜம்பு சார்

    நன்றிகீத்ஸ். சரியா சொன்னீங்க. விளக்கம் அருமை.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)