திங்கள், 17 செப்டம்பர், 2012

நெல்லை சந்திப்பு. எனது பார்வையில்.

மீரா கிருஷ்ணன், மேகா நாயர், தேவிகா, லட்சுமி ராமகிருஷ்ணன், யுவஸ்ரீ என பெண்கள் அனைவரும் நடிப்பில் அசத்தியும் புவனை ஸ்ரீ நடிப்பில் மிரட்டியும் இருக்கும் படம் இது. அதே சமயம் பாபிலோனா கவர்ச்சியில் மிரட்டுகிறார். ரோஹித், பூஷண், தேனப்பன், சரவணன் சுப்பையா, இவர்கள் நடிப்பும் அருமை.

 நெல்லை சந்திப்பில் ஒரு சில முறை ட்ரெயின்கள் வந்து போகின்றனவே தவிர இது நெல்லையில் நடந்த ஒரு தவறான என்கவுண்டரைப் பற்றியும் அதன் பின் விளைவுகள் பற்றியதுமான கதை


நவீன் இயக்கம் அருமை என்றாலும் அங்கங்கே படத்தில் காட்சிகள் கலங்கலாகத் தெரிவது ஏன்? பாடல்களில் இதுதானே எங்கள் வீடு அடிக்கடி கேட்டதால் முணுமுணுக்கவும் ரசிக்கவும் வைக்கிறது. நிறைய பாடல்களை அசந்தர்ப்பமாகப் போட்டு ( முக்கியமாக பாபிலோனாவுக்கு ஒரு குத்துப் பாட்டு போடவில்லை. அப்பாடா.) படுத்தாமல் கதை அதன் இயல்பான போக்கிலேயே செல்கிறது.

ஒரு சிலரைத் தவிர அனைவரும் புதுமுகம். நாம் அந்தப் புது முகங்களில் பொருந்திப் போவதற்குள் காட்சிகள் வேகமாகப் போகின்றன. நடுத்தரக் குடும்பத்தின் சந்தோஷங்கள், இயலாமைகள், வருத்தங்களைப் பதிவு செய்யும் கதை இடை வேளையில் வேறொரு ட்ராக்கில் பயணிக்கிறது.

என்கவுண்டர், சகோதரி தவறான வழக்கில் பதிவு செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்படுவது, சில இடங்களில் நடக்கும் காவல்துறை அக்கிரமங்களை அம்பலப்படுத்துகிறது.

தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டாலும் தவறாக என்கவுண்டர் செய்யப்பட்டவர் அல்லது கைது செய்யப்பட்டவரின் நிலைமை அடுத்து என்ன என்பது நமக்குத் தெரிய வருவதில்லை. அதன் இன்னொரு கோர முகத்தை இந்தப் படம் காட்டுகிறது.

அக்கா, தம்பி சண்டை புன்னகையை வரவழைத்தது. ”படிக்கும்போது எதுக்கு டிவி”, ”யாரும் பார்க்காட்டாலும் இந்த டிவி ஓடிக்கிட்டே இருக்கணுமா ”என்று மீராகிருஷ்ணன் சொல்லும்போது அட.. எல்லா அம்மாக்களும் இப்படித்தானா என்ற எண்ணம் வந்தது.

எம். ஜி. கன்னியப்பன் வசனம் எல்லா இடங்களிலும் சரளம். மனுஷன் கொஞ்சம் பஞ்ச் டயலாக்குகளையும் கத்து வச்சுக்கணும். ஜெயிலில் இருக்கும் தேவராஜ் சொல்லும் சில டயலாக்குகள் அற்புதம். மேகா நாயர் கோர்ட் வாயிலில் புவனுடன் பேசும் வசனமும் ஷார்ப்.

புன்னகை முகத்தோடு ரோஹித்தும், பூஷணும், மீராவும் மனதில் படிந்து போகிறார்கள். கொஞ்சம் சிடுசிடுப்போடு கண்டிப்பான பெண் பிள்ளைகளாக மேகா நாயரும், தேவிகாவும் மிக அருமையாக நடிக்கிறார்கள். மேகா நாயரிடம் ஒரு நெருப்பு இருக்கிறது. நிச்சயம் இவருக்கான கதைகள் தொடர்ந்து கிடைத்தால் ஒளிவிடுவார்.

தேவிகா தன் தாய் யுவஸ்ரீயின் மனதை துன்புறுத்துவது போல பேசுவது, பிள்ளைகள் சில விஷயங்களில் பொறுப்பற்றுப் பேசுவது ஆகியவற்றை இந்தக் காலக் குழந்தைகளைப் பார்த்து நவீன் மிகச் சரியாகப் பதிவு செய்து இருக்கிறார் என்று தோன்றுகிறது.

ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தின் கதையோடு என்கவுண்டர் கதையையும் சேர்த்துச் சொல்லும்போது சில இடங்கள் கொஞ்சம் தொய்வது போல தோன்றினாலும் யதார்த்தபாணியில் கதை செல்வது ஆறுதல்.நாய் கடிப்பது, ஜிம்மில் சாவது விட அங்காளம்மன் , பேச்சியம்மன் வரும் கட்டங்களில் கொஞ்சம் ஆவேச உணர்வு வந்தது போல் இருந்தது.

 பாடல் காட்சிகள் அற்புதம், மழையில் நனையும் தேவிகாவும், ரோஹித்தும் பாடும் 4 வரிகள் அழகு. வெளிநாடு எல்லாம் போய்த்தான் பாட்டை எடுக்கணும்னு யார் சொன்னது.? இந்தியாவிலேயே ஒரு மழையில் கூட அழகைக் கொண்டுவர முடியும். காட்சிகள் சில இடங்களில் ஷார்ட்டாகவும் ஸ்வீட்டாகவும் இருந்தது. மலேஷியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனின் இசை அருமை.

மயில்சாமியின் கடையும் காமெடியும் வரவழைத்த சிரிப்பை விட அவரது ஃபோட்டோ வரவழைத்த சிரிப்புத்தான் அதிகம். ப்ரோக்கர் மற்றும் அனைவரும் அதிகமாக வசனம் பேசுகிறார்கள். சிலர் நெல்லை பாஷையில் பேச பலர் சாதா தமிழ்தான் பேசுகிறார்கள். இந்தப் படத்தில் அனைவரும் முதல் படம் போலில்லாமல் மிகச் சிறப்பாகவே நடிப்பதால் இன்னும் வசனங்களைக் குறைத்து அவர்கள் முக பாவங்களையே காட்டி இருக்கலாம்.

பட்ஜெட்டுக்குள் எடுக்க புதுமுக இயக்குநர்கள் பிரயத்தனப்படுகிறார்கள், தங்களுடைய கருத்துக்களை புதுமுக இயக்குநராக சமரசம் செய்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது, எடுக்க நினைத்ததை விட சிறப்பாக எடுக்க இயல்வதில்லை என்ற கருத்துக்களை எல்லாம் பரிசீலிக்க நேருகிறது.

மொத்தத்தில் திருமலை கிரியேஷனின் ஒரு நல்ல படம். நவீன் கேபிபியின் முதல் படம். ஒரு என்கவுண்டரில் நிரபராதி ஒருவனும் தவறாக கொல்லப்படலாம் --- பல குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி கொல்லப்படக் கூடாது என்ற செய்தியை சொல்லுவதாகவே படம் அமைந்து இருக்கிறது.
 

சினிமா சரித்திரத்தில் நவீனின் பெயர் பொறிக்கப்பட்ட முதல் படம். ஸ்பெஷல் வாழ்த்துக்கள் நவீன்.:)

இன்னும் வெவ்வேறு பரிமாணங்களில் அடுத்த அடுத்த படங்கள் வரட்டும். வெல்லட்டும். நவீனுக்கும், திருமலைக்கும் அனைத்து நடிகர்களுக்கும், மொத்த யூனிட்டுக்கும் வாழ்த்துக்கள்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 


3 கருத்துகள்:

  1. ரொம்ப நாள் கழிச்சு நம் FB நண்பர் டைரக்டருக்காக ஒரு திரை விமர்சனம் !
    அடுத்து வரும் நவீன் படங்களுக்கும் எழுதவும்...
    வளரட்டும் வாழ்த்துவோம் !
    வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  2. நல்ல விமர்சனம். தமிழ்ப்படங்கள் பற்றிய விமர்சனங்களை மட்டுமே படித்து சந்தோஷப் படவேண்டியிருக்கிறது. பார்க்க முடிவதில்லை - சில படங்கள் மட்டுமே இங்கே வெளிவருவதால் - அதுவும் வெகு தொலைவில் உள்ள தியேட்டரில்....

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஆகாய மனிதன்

    நன்றி வெங்கட்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)