வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

கைகேயி படைத்த கம்பன்.

 கம்பனல்லவா கைகேயியைப் படைத்தான். கைகேயி எங்கே கம்பனைப் படைத்தாள் எனக் குழம்புகிறதல்லவா. ஆம் அப்படித்தான் நானும் எண்ணி இருந்தேன். ஆனால் கைகேயி படைத்த கம்பனை நானும் அங்கே கண்டேன். அவ்வாறு கைகேயி படைத்த கம்பனை உருவாக்கி உலவவிட்டு கைகேயின்மேல் கழிவிரக்கத்தை உண்டு செய்தவர் கம்பனடி சூடி. திரு பழ பழனிப்பன் அவர்கள்.

/////காரைக்குடி கம்பன் கழகத்தின் பிப்ரவரி மாதக் கூட்டம் 04.02.2017 அன்று கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குக் கம்பன் அறநிலையின் தலைவர் திரு சக்தி திருநாவுக்கரசு அவர்கள் தலைமை வகித்தார். கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள் ‘‘கைகேயி படைத்த கம்பன்” என்ற தலைப்பில் மீனாட்சி பழனியப்பா நினைவு அறக்கட்டளைப் பொழிவை நிகழ்த்தினார்.////

இனி சொற்பொழிவில் என்னைக் கவர்ந்த சில விளக்கங்கள். நினைவில் இருத்தியவற்றைப் பகிர்கிறேன். பிழையிருப்பின் பொறுத்தருள்க.

கம்பன் அறநிலையின் தலைவர் திரு சக்தி திருநாவுக்கரசு அவர்கள் நட்பிற்காகத் தலைமை ஏற்க வந்ததாகக் கூறினார்.
வந்திருந்த அனைவரையும் அன்போடு வரவேற்று மிக நீண்ட முன்னுரைக்குப் பின் கைகேயி எப்படிக் கம்பனைப் படைத்தாள் என நிறுவினார் திரு கம்பனடி சூடி அவர்கள். அவர் ஒரு வழக்குரைஞர்/அறிஞர் என்பது இலட்சத்து ஓராவது தடவையும் நிரூபணமாயிற்று :)


மெகா வில்லி என்று நாம் நினைத்திருந்த கைகேயி எப்படி லாவகமாக வரங்கள் பெற்று ராமனின் மதிப்பிலும் வீழாதிருந்தாள் , கதையின் போக்குக்கு எப்படி உறுதுணையாயிருந்தாள் என எண்ணும்போது கழிவிரக்கமும் திகைப்பும் ஏற்படுகிறது. 

கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு முன் ஒருவர் கேட்ட வேண்டுகோளை ஏற்று  கைகேயி படைத்த கம்பனை கடந்த நாலாம் தேதி அன்று திரு கம்பனடி சூடி படைத்தார்கள். அவற்றின் சில துளிகள் இங்கே.

கம்ப ராமாயணத்தை நிகழ்த்திச் செல்பவளே கைகேயிதான்.ஒரு மகாராணியானவள் தன் மகன் பரதன் அரசாள வேண்டி வேலைக்காரியான கூனி சொல்லிக் கொடுத்து அதைக் கேட்டு ராமனைக் காட்டுக்கு அனுப்பவில்லை.

ஏற்கனவே அவளே பட்டத்து மகிஷியானதாலும் அரச பரம்பரையில் பிறந்திருந்ததாலும் பரதன் அரசை ஆள்வதற்கு மரபுப்படி உரிமை பெற்றிருந்தான். இருந்தும் அவள் கேட்ட இரு வரங்களால் தயரதன் புத்திர சோகத்தில் இருந்து தப்பவும், ராமன் காடாளப் போகவும் நேர்ந்தது.

தயரதனிடம் ராமன் காட்டுக்குப் போகவேண்டும் என்று வரம் கேட்டாளே தவிர எத்தனை ஆண்டுகள் என்று சொல்லவில்லை.. ஆனால் ராமனிடம்

’பரதன் அரசாள்வான்.

'ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்
தாழிரும் சடைகள் தாங்கித் தாங்க அரும் தவம்மேற் கொண்டு
பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணிய துறைகள் ஆடி
ஏழிரண் டாண்டின் வா என்றியம்பினன் அரசன் என்றாள்!'

உன்னை ஏழிரண்டு ஆண்டும் தவம் மேற்கொண்டு புண்ணிய துறைகள் ஆடி வரும்படி ஆணையிட்டான் அரசன்’ என்று கூறுகிறாள்

அனைவரும் வினைப்பயனை அனுபவிக்க வேண்டும். ஒரு முறை தயரதன் கானகத்தில் யானை என்று நினைத்து சிரவணன் மேல் அம்பெய்துவிட அவரின் பெற்றோர்கள் கொடுத்த சாபம்தான் தசரதன் புத்திர சோகத்தில் ஆழ வேண்டுமென்பது.

அந்தப் புத்திர சோகத்தில் தயரதன் ஆழ வேண்டுமானால் புத்திரர்களை இழக்காமல் அதன் சோகம் மட்டும் தயரதனைத் தாக்கவே இவ்வரங்களைப் பயன்படுத்திக் கொண்டாள்  கைகேயி  எனக் கூறினார் கம்பனடிசூடி அவர்கள்.

ராவணனைக் கூட சிலாகிக்கும் கம்பன்  கைகேயியைக் கொடுமையானவளாகப் படைக்க திணறித்தான் போயிருப்பான் எனவும் கூறினார்.

“தீயவை யாவினும் சிறந்த தீயாள் “ என தன்னிலை மறந்து ( தான் ஒரு படைப்பாளி, அவள் ஒரு பாத்திரம் என்பதையும் மறந்து ) கைகேயியைக் கம்பன் திட்டும்போதே அவள் அவனைப் படைத்து விட்டாள் எனக் கூறினார்.

கைகேயி பேசும் இடம் அந்த வரம் வாங்கும் இடம் மட்டும்தான். அதன்பின் வனத்தில் வழியனுப்பச்செல்லும்போதும் ராமன் திரும்பி வராதிருக்கவே சென்றாளாம். அப்படியாப்பட்ட கைகேயியை தங்கள் வினைப்பயன் தீர்க்கவே வந்தவள் என்று ராமன், கடைசியில் வானுலகில் இருந்து தயரதன் தோன்றி திரும்ப இரு வரம் அளிக்கும்போது கைகேயியே தன் அன்னையாகவும் பரதன் தன் சகோதரனாகவும் கேட்டானாம்.

“ தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக எனத் தாழ்ந்தான்
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர் எல்லாம் வழுத்தி ( 10,079 )

இதைக்கேட்டு எல்லா உயிர்களும் வாய் திறந்து ஆர்த்து எழுந்து வாழ்த்தினவாம்.

-- இப்படிக் கம்பனடி சூடி அவர்கள்  கூறிய எல்லாவற்றையும் நான் இங்கே கூறிவிட்டால் எப்படி. ? :) இது ஒரு நூலாக ஆக்கம் பெறுகிறது. கைகேயி படைத்த கம்பன் வரும் கம்பர்விழாவில் - 2017 ஏப்ரல் - நூலாக ஆக்கம் பெறும். வாங்கிப் படித்து மேலும் கம்பரசம் அருந்திக் களிப்புறுங்கள். :)

காரைக்காலம்மை ( புனிதவதி ) , கண்ணகி என்று பேர் வைப்பவர்கள் கூடக்  கைகேயி என்று  பேர் வைப்பதில்லை என்பதையும் அங்கே சுட்டினார்கள். அதுநாள்வரை வெறுத்திருந்த கைகேயின்மேல் பரிவு ஏற்படச் செய்தது அவரின் உரை என்றால் மிகையில்லை. I PITY HER. 

பார்வையாளர்களுடன் கலந்துரையாடல்.
கம்பன்கழகச் செயலாளர் திரு முத்துபழனியப்பன் அவர்களின் நன்றியுரை.
இந்த உரை புத்தகமாக ஆக்கம் பெறும் என்றும் கூறினார்கள். இவ்வளவு அருமையான உரை அனைவரையும் நூல் வடிவில் அடையப்போவது மிகச் சிறப்பு. கிடைத்தால் கட்டாயம் வாசியுங்கள்.

கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. காரைக்குடியில் கம்பன் விழா 

2. கம்பர் விழாவில் தினமணி ஆசிரியர்

3.கம்பன் விழாவில் படத்திறப்பும் புத்தக வெளியீடும் ..பரிசுகளும்

4. கம்பன் விழாவில் கவிக்கோ

5. காரைக்குடி கம்பன் கழகத்தில் குழந்தைக் கவிஞருக்கு கம்பன் அடிப்பொடி விருது :-

6. குழந்தைக் கவிஞரும் மேனாள் நிதியமைச்சரும் மொழிக்கோயிலும்.

7. கம்பன் கழகம் - சொ சொ மீ யின் பாராட்டுரை. மூன்று தாமரைகளும் பிள்ளையார்களும். 

8. கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலா, அறவியல் பாடல்களிலா .

9. கம்பர் விழா – 2016

10. கம்பர் திருவிழா - 2016 . மக நாள் மங்கல நிகழ்வுகள். 

11. அந்தமானில் கம்பராமாயணக் கருத்தரங்கு. 

12. பாரடைஸ் லாஸ்ட் & பாரடைஸ் ரீகெயின் - கம்பனும் ஜான் மில்டனும். - இராமகிருஷ்ணானந்தா. 

13. பூரத் திருநாளும் உத்திரத் திருநாளும்.

14. நாட்டரசன் கோட்டையிலே.. எங்கள் பாட்டரசன் கோட்டையிலே..

15. ஏன் பொலிந்தது - முதல் சொற்பொழிவாளர் மாதுவின் பொலிவுரை.

16. மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் ரூபாய்க்கான பரிசுப் போட்டிகள்

17. கம்பன் கழகத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கம்.

18.  கைகேயி படைத்த கம்பன்.

7 கருத்துகள்:

  1. நல்லதொரு அசர வைக்கும் விளக்கம்...

    நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. கம்பனை இன்னும் முழுக்கப் படித்தபாடில்லை

    பதிலளிநீக்கு
  3. புத்திர சோகத்தை அவனைப் பிரிவதால் அடையட்டும் அவனை இழந்து அல்ல எனும் நோக்கில் வரம் பெற்றதாய்க் கருதுவது சிறப்பு.

    செய்யுளில் ஒரு எழுத்துப்பிழை. தாங்க அரும் என்று திருத்தவும்

    பதிலளிநீக்கு
  4. புதிய பரிமாணத்தில் விளக்கம் அருமை! மிக்க நன்றி விழா விவரணத்திற்கும் விளக்கத்திற்கும்..

    பதிலளிநீக்கு
  5. நன்றி டிடி சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி பாலா சார்

    நன்றி பாலா சிவசங்கரன் சார். திருத்திவிட்டேன்.

    நன்றி துளசி சகோ.

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)