செவ்வாய், 21 செப்டம்பர், 2021

அந்த வானத்தைப் போல மனம் படைத்த நல்லவரு

 அந்த வானத்தைப் போல மனம் படைத்த நல்லவரு


கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்த ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சப்ளை செய்வதாகச் சொன்னவர் இன்று இரண்டு அரங்கங்களிலும் ஆக்டிவாக இல்லை என்பதை நம்பவே முடியவில்லை.

தூரத்து இடி முழக்கத்தில் “உள்ளமெல்லாம் தள்ளாடுதே” என்ற பாடலைப் பார்க்கும்போதெல்லாம் இவர் வெற்றிக்குக் காரணம் இவரது பந்தா இல்லாத எளிமையே என நினைப்பேன். நல்ல திராவிட நிறம். தொப்பை இல்லாத உடல்வாகு. கிராமத்து இளைஞன் போல் தோற்றம். விசாலமான, நேர்மையாய் நோக்கும் பெரிய கண்கள். இந்தக் கண்கள் அற்புதமாக நடித்த ”சின்னமணிக் குயிலே” என்ற பாடலை என்னால் மறக்க இயலாது.

’அம்மன் கோயில் கிழக்காலே என்ற படம். இதில் இன்னொரு பாடலையும்தான். ஏனெனில் அது என் திருமணத்தன்று சிவன் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைத்தபோது எடுக்கப்பட்ட வீடியோவில் எங்கோ ஒரு மண்டபத்திலிருந்து ஒலித்தது, “ பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்து வைச்சேனே என் சின்ன ராசா “ எதிர்பாரா ஆச்சரியமாக திருமணத்திற்குப் பிறகு அந்த வீடியோவைப் பார்த்தபோது டைமிங்காக ஒலித்து இன்ப ஆச்சர்யம் ஏற்படுத்தியது.   

’வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் இரவு எட்டு மணியானா இவர் பாடும் பாடல் கேட்டு உழைத்து ஓய்ந்த ஊர் மட்டுமல்ல, தொட்டில் குழந்தைகளும் அமைதியாவது அழகு.

சுகாசினியோடு நடித்த ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான்’ இவர் படங்களில் கொஞ்சம் அமைதியும் வித்யாசமும் உடையது. தையற்கலைஞரான இவரிடம் சுகாசினி ‘என்னை டீ என்று உங்களால் கூப்பிட முடியுமா’ என்று கேட்பார். இவர் முதலில் தையல்தொழிலில் வாய்ப்பு இல்லாமல் இருந்தபோது சுகாசினிதான் இவர் திறமையைக் கண்டறிந்து துணிகள் கொடுத்துத் தைத்து வாங்கி இவரைப் பலரிடமும் அறிமுகப்படுத்துவார். அதனால் இவருக்கு சுகாசினிமேல் காதல் இருந்தாலும் அதைவிட அதிகமாக மதிப்பு இருக்கும். எனவே இவர் தயங்கிச் செல்வார். அதன்பின் ரேகாவை மணமுடிப்பார். மனோபாலா இயக்கிய இப்படம் இவரது படங்களில் சிறந்த ஒன்று.  

’நூறாவது நாள்’ ‘சட்டம் ஒரு இருட்டறை’ ’ஊமை விழிகள்’ ‘புலன் விசாரணை’, ’கேப்டன் பிரபாகரன்’ ’வல்லரசு’ ‘பரதன்’ ‘நரசிம்மா’ சேதுபதி ஐபிஎஸ்’  ஆகியன இவரது மிரட்டலான படங்கள். உழவன் மகனில் இவரை மட்டுமல்ல ராதிகாவையும் நாங்கள் ரசித்துப் பார்த்தோம். வெகு பொருத்தமான ஜோடி.

சின்னக் கவுண்டரில் ”அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே” என்ற பாடலுக்கேற்ப விசாலமான கருத்துக்களும் மனமும் படைத்தவர் விஜய்காந்த். இந்திய தேசத்துக்கு எந்த ஒரு அச்சுறுத்தல் வந்தாலும் அதை எதிரிகளிடமிருந்து காப்பது போன்ற படங்கள் இளையர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு பெற்றன. விளையாட்டுக்காக விஜய்காந்த் போல் லெஃப்டில சுவரை உதைச்சு எகிறி ரைட்டுல வில்லன் தலையில் கால் வைச்சுப் பந்தாடுற மாதிரி எல்லாம் சில இளசுகள் சீன் காட்டினாலும் இளைஞர்கள் மத்தியில் மதிப்பில் உயர்ந்தே இருக்கிறார்.

ஒரு டிவி பேட்டியில் இராணுவ அதிகாரி ஒருவர் தனக்குப் பிடித்த படம் ’கேப்டன் பிரபாகரன்’ என்றும் அதில் மிகச் சிறப்பாகச் செய்திருப்பதாகவும் கூறினார். மேலும் பல படங்களில் விஜய்காந்த துல்லியமாக அசல் இராணுவ வீரரைப் போலத் துணிச்சலும் போராட்டக் குணமும் கொண்டு வீர தீரத்தோடு சண்டைக்காட்சிகளில் அநாயசமாக நடித்திருப்பதாகவும் பாராட்டினார். போலீஸ் அதிகாரியாக இவர் நடித்த படங்கள் அனைத்துமே மிகச் சிறப்பானவை.   

எதற்காவது வீட்டில் புள்ளி விவரம் சொன்னால் ரமணா ஆயிட்டியா என்று கேட்கும் அளவு அவரது நடிப்பு ஃபேமஸ். அவரது நேர்மை, எளிமை, பணிவு, தன்மையான குணங்களோடு சில அதிரடிகளும் அப்படத்தை மிக விரும்ப வைத்தன. லேசான மிதப்பான கரகர குரல் அவரது ஸ்பெஷல். அவரது பெரும்பாலான படங்களில் தன் நடிப்பால், குரலால் அவர் அசையாமலே நம்மைக் கலங்கடித்து விடுவார். நீதிக்காகப் போராடும் ரமணாவிலும் அப்படித்தான். மருத்துவமனை அவலங்களை அதில் பட்டியலிட்டுத் திருத்துவார்.  


வானத்தைப் போலப் படத்தில் உறவுகளின் பெருமை ஒளி விடும். அப்போது நாங்கள் சிதம்பரத்தில் இருந்தோம். மதியம் மேட்னி ஷோவில் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு எங்கள் வீட்டிற்கு வந்த எங்கள் வீட்டு வேலைக்காரப் பெண் ’அக்கா, அவரு எங்க அண்ணா போல. மழை பேயுதுக்கா. வீடு முச்சூடும் ஒழுவுது. அப்போ அவரு தன் தம்பிங்களை மடியில படுக்க வைச்சு ஒரு தட்டி வைச்சு மழை விழுவாம ராத்திரிப் பூரா புடிச்சிட்டு ஒக்காந்திருப்பாருக்கா. என்னா பாசம்’ என்று சொல்லி ஒரே அழுகை. அது 2000 ஆவது வருடம். அக்கா அவர் மட்டும் எலக்சன்ல நின்னா எங்க எல்லார் ஓட்டும் அவருக்குத்தான் என்பாள்.

2011 களில் எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கே கே நகருக்குப் பேருந்தில் போய்க் கொண்டிருந்தேன். என்னுடன் வடபழனி/கோடம்பாக்கம் செல்லவதற்காக அதே ரயில் நிலையத்திலிருந்து ஒரு அம்மாவும் ஏறிக் கொண்டார். அவர் “விசய்காந்து ஆஃபீசுக்குப் போறேன். ஒருத்தர் அட்ரஸ் கொடுத்தாரு எங்கூர்ல. அங்கே போனா சமைச்சுப் பொழைச்சுக்க என்ன மாதிரி ஆளுகளுக்கு ஆப்பச் சட்டி, சமையல் சாமானுங்க, பணம் எல்லாம் கொடுக்குறாராம். மவராசன் நல்லா இருக்கணும்” என்றார். இன்றும் அதை அடிக்கடி நினைத்து ஆச்சர்யப்படுவேன். மனிதர்களில் இவர் தனிவகை என்று. பலர் சொல்வார்கள் செய்வதில்லை. ஆனால் இவர் செய்வதைத் தவிர வேறொன்றையும் சொல்வதில்லை.

இப்படிப்பட்ட மனிதர் இருந்தாலே எளியோர் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை. என்றும் இல்லை அவர்கள் உறவில் தேய்பிறை என்று தோன்றியது.

கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் ஹீரோவாகவே நடித்திருக்கிறார். இவற்றில் பத்துப் பதினைந்து படங்கள்தான் பார்த்திருப்பேன். பலவற்றில் காக்கும் ரட்சகனாக, குறிப்பாகக் கடத்தப்பட்ட குழந்தைகளை/மனிதர்களைக் காப்பவராக நடித்த படங்கள் மனிதநேயமிக்கவை. அவற்றில் ரமணாவும் வானத்தைப் போலவும் என்னை மிகவும் கவர்ந்த படங்கள். அவரது க்ரீடத்தில் மயிலிறகாக வானத்தைப் போலவும், ரத்தினமாக ரமணாவும் இன்றும் அவர் பெருமை சொல்பவை. மக்களின் மனம் கவர்ந்த அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவர் இன்னும் ஒரு நூற்றாண்டு வாழட்டும். 

4 கருத்துகள்:

  1. சிறப்பான கட்டுரை

    துளசிதரன்

    என் அப்பாவிற்கு இவர் நடிக்குக் படங்கள் பிடிக்கும் குறிப்பாக வீர தீரனாக நடிப்பவை

    கீதா

    பதிலளிநீக்கு
  2. திரையுலகில் தனக்கென்று தனிப்பாணி அமைத்துக்கொண்டவர். இவரால் தமிழ்நாட்டின் வரலாறு புதிதாக எழுதப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் சூழல் வேறு விதமாக அமைந்துள்ளது. நீங்கள் கூறியதுபோல அவர் நூறாண்டு வாழவேண்டும். சமுதாயத்திற்கு பல நல்ல செய்திகளை திரைப்படம் மூலமாகப் பகிர்ந்தவர்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி துளசி சகோ, நன்றி கீத்ஸ்

    நன்றி டிடி சகோ

    நன்றி ஜம்பு சார்.உண்மைதான்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)