சனி, 25 செப்டம்பர், 2021

சாட்டர்டே போஸ்ட். தன்னைச் செதுக்கிய சிற்பி பற்றி திரு. இரா.இரவி.

 தமிழ்நாடு அரசுச் சுற்றுலாத்துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார் திரு. இரவி. மதுரையில் தானம் அறக்கட்டளை எனது நூல்களை வெளியிட்ட நிகழ்வில் இவரைச் சந்தித்துள்ளேன். 

1992 ஆம் வருடம் குடியரசு தினத்தன்று மாவட்ட ஆட்சியரிடம் சிறந்த அரசுப் பணியாளருக்கான விருதைப் பெற்றவர். விழிப்புணர்வுப் பட்டி மன்றங்கள், கவியரங்கங்கள் ஆகியவற்றில் முத்திரை பதித்தவர். மதுரைக் கவிஞர் பேரவையின் செயலர். 

23 நூல்கள் எழுதி உள்ளார். ஹைக்கூ திலகம், கவியருவி, கவிமுரசு கலைமாமணி விக்ரமன், எழுத்தோலை , ஹைக்கூ செம்மல், பாரதி ஆகிய  விருதுகள் பெற்றவர். இவரது ஹைக்கூ கவிதைகள் தமிழகத்தின் அநேகப் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன! இவரது ஹைக்கூ கவிதைகளை மாணவர்கள் க. செல்வகுமார், லெ. சிவசங்கர் , மாணவி ஜானு ஆகியோர் ஆய்வு செய்து ஆய்வேடு வழங்கி  உள்ளார்கள். இன்னும் பல்வேறு சிறப்புகளும் விருதுகளும் பெற்றவர். சிறப்பு விருந்தினராகவும் சிறப்புப் பேச்சாளராகவும் அநேக அவைகளை அலங்கரித்தவர். 

இவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக எழுதித் தரும்படிக் கேட்டிருந்தேன்

தான் எழுத்துக்கு வரக் காரணமாயிருந்தவரும் தன்னைச் செதுக்கியவருமான முனைவர் திரு. இரா. மோகன் பற்றி எழுதிக் கொடுத்தார். நீங்களும் அவரைச் செதுக்கிய சிற்பியைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். 

தமிழ்த்தேனீயும் நானும்!

கவிஞர் இரா.இரவி

 
தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவ்ர்கள் நாடறிந்த தமிழ் அறிஞர். அவரது இழப்பு உண்மையிலேயே ஈடுசெய்ய முடியாத இழப்பு. மதுரையில் ஒரு வெற்றிடமானது. நூல் வெளியீட்டு விழாக்களை முன்நின்று நடத்தி தமிழன்னைக்கு அணிகலன்களைப் பூட்டி அழகு பார்த்தவர்.


பட்டிமன்ற நடுவராக இருந்து தனிமுத்திரை பதித்தவர். விழிப்புணர்வு பட்டிமன்றங்களை நடத்தியவர். தமிழுணர்வை விதைத்தவர். அவரது பட்டிமன்றம் கேட்டுவிட்டு, முடிந்ததும் ஐயாவை

கைகொடுத்துப் பாராட்டினேன். மடலாகவும் அனுப்புங்கள் என்றார். அப்படித்தான் தொடங்கியது எனது கட்டுரைப்பணி. மடல் அனுப்பினேன். படித்துவிட்டு உடன் அலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்.

அவருடைய தனிப்பேச்சு என்றாலும், தவறாமல் சென்று குறிப்பெடுத்து பாராட்டு மடல் அனுப்புவேன். இப்படித்தான் மலர்ந்தது எங்கள் நட்பு. திடீரென ஒருநாள் நீங்களும் பட்டிமன்றத்தில் பேசுங்கள் என்றார். முதலில் தயங்கினேன். ஊக்கம் தந்து, பேச அழைத்தார். முதல் பட்டுமன்றம் வெளியீரில் மகிழுந்தில் அழைத்துச் சென்றார். செல்லும் வழியிலேயே வாந்தி வந்தது எனக்கு. உடன் மனம் சோர்ந்து ஐயா, நான் பேசவில்லை என்றேன். உங்களால் முடியும் பேசுங்கள் என்று பேச வைத்தார். எத்தனை பட்டிமன்றங்கள் பேசினோம் என்று குறித்து வைக்கவில்லை. ஆனால் மோகன் ஐயா ஆவணப்படுத்துவதில் வல்லவர். உங்களுக்கு இத்தனையாவது பட்டிமன்றம் என்று எண் சொல்வார்.

என்னைப்பற்றி தி இந்து ஆங்கில நாளிதழில் மெட்ரோ பிளஸ் பகுதியில் பிரசுரம் செய்து இருந்தார்கள். பல வருடங்கள் ஆகி விட்டது. நானும் மறந்து விட்டேன். மோகன் ஐயா அந்த பகுதியை கத்தரித்து பத்திரமாக வைத்திருந்து என்னிடம் தந்து உங்கள் நூலில் சேருங்கள் என்று தந்தார்.

இதுவரை 20 நூல்கள் எழுதி விட்டேன். ‘விழிகளில் ஹைக்கூ’ என்ற எனது மூன்றாவது நூலில் இருந்து ஐயா அணிந்துரை இல்லாமல் என் நூல் வெளிவந்தது இல்லை. அணிந்துரை மட்டுமல்ல சொந்தமாக புத்தகம் வெளியிட்டு நட்டப்பட்டு மனம் சோர்ந்து இருந்த நிலையில் வானதி பதிப்பகம் மதிப்புறு முனைவர் இராமனாதன் அவர்களை அறிமுகம் செய்து வைத்து எனது நூல்களை வானதி பதிப்பகம் மூலம் வெளியிட உதவினார்.

ஆயிரம் ஹைக்கூ என்ற நூலை வானதி வெளியிட்டு 1000 நூல்கள் நூலக ஆணை பெற்று வெற்றிகரமாக மூன்று பதிப்புகள் விற்றுத்தீர்ந்தன. ஹைக்கூ உலா நூலிற்கும் நூலக ஆணை கிடைத்தது. வானதி இராமனாதன் நட்பாகப் பழகி தொடர்ந்து எனது நூல்களை வெயியிட்டு வருகிறார்கள் மனம் மகிழ்ந்தார். என்னால் நட்டம் இல்லை, இலாபம் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

மேலசீவல்புரி கல்லூரியில் பட்டிமன்றம் பயணமாக ஆயத்தம் ஆனோம். மோகன் ஐயாவின் சகோதரர் இறந்த செய்தி வந்தது. மற்றவராக இருந்தால் அலைபேசியில் அழைத்து பட்டிமன்ற நிகழ்வை ரத்து செய்து இருப்பார்கள். ஆனால் மோகன் ஐயா கனத்த இதயத்துடனும், கலங்கிய கண்களுடனும் பயணமானார். நான் கூட ஐயாவிடம், நிகழ்வை ரத்து செய்து விடலாமே என்றேன். நமக்காக ஆயிரம் மாணவ மாணவியர் காத்திருக்கிறார்கள், நம் சோகத்திற்காக அவர்களை ஏமாற்றம் அடைய வைக்கக் கூடாது, செல்வோம் என்றார். சென்றோம். வரவேற்பு தோரணங்கள், பிளக்ஸ் போர்டுகள் வைத்து இருந்தனர். வெற்றிகரமாக பட்டிமன்றத்தை முடித்துவிட்டு, வரும்போது எல்லோரும் துக்க வீட்டிற்குச் சென்று துக்கம் விசாரித்தோம். உடன்பிறந்த சகோதரர் மரணத்தைக் கூட தாங்கிக் கொண்டு தமிழ்த்தொண்டு செய்தவர் மோகன் ஐயா அவர்கள்.

மனிதநேயம், கவிதை உறவு, புதுகைத் தென்றல் போன்ற இதழ்களில் வருடக்கணக்கில் மாதம் தவறாமல் எழுதி வந்தார். திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாளில் சேரும்படி இதழ்களுக்கு அனுப்பி விடுவார். கவிதை உறவில் நான் உள்பட பல கவிஞர்களின் கவிதைகளை திறனாய்வு செய்து, கவிதை அலைவரிசையாக அலைஅலையாக எழுதி வந்தார். புதுகைத் தென்றல் இதழில் சங்க இலக்கியத்தை எளிமையாக்கி எல்லோருக்கும் புரியும்வண்ணம் பத்து ஆண்டுகளுக்கு மேலாக மாதம் தவறாமல் தொடர்ந்து எழுதி வந்தார். என்னையும் அந்த இதழ்களில் எழுதிட வைத்தார்.

மோகன் ஐயா கோபப்பட்டு யாருமே பார்த்திருக்க முடியாது. எதற்கும் கோபம் கொள்ள மாட்டார்கள். எல்லோரையும் மதிக்கும் பண்பாளர். அவருக்கு கடலென நட்பு உண்டு. கடுகளவு கூட பகைவர் இல்லை. உணவகத்தில் உணவருந்த சென்றால், உடன் ஓட்டுநரையும் அழைத்துச் சென்று உணவருந்த வைப்பார். உணவு பரிமாறுபவர்-களுடனும் மிகவும் அன்பாக பேசி மகிழ்வார்கள். ஒருமுறை ஐயாவை சந்தித்தால் அவரை மறக்க மாட்டார்கள். எளிதில் எல்லோரும் நட்பாகி விடுவார்கள்.

பேராசிரியர் முனைவர் இ.கி. இராமசாமியுடன் நட்பு பாராட்டியவர். கருத்தரங்கம் நூல் வெளியீட்டு விழா என்றால் இராமசாமி ஐயாவை அழைத்து பேசவைத்து மகிழ்வார். ஐயா இறந்த இரண்டு நாளில் பேராசிரியர் இராமசாமி ஐயா, விமான நிலையம் வந்திருந்த போது என்னை சந்தித்தார். மோகன் ஐயா என்னிடம் திருவள்ளுவர் மன்றத்தில் அறக்கட்டளை நிறுவிட வேண்டினார் என்றார். நான், ஐயா உடன் நிறுவுங்கள், நல்ல செயல் என்றேன். திருவள்ளுவர் மன்றம் இராசேந்திரன் அவர்கள் மோகன் ஐயாவின் நண்பர், அவருக்கும் தகவல் தந்தேன். உடன் பொறுப்பாளர்கள், இராமசாமி ஐயாவின் இல்லம் செல்ல, அவர் ரூ.25000 கான காசோலை வழங்கி , அறக்கட்டளை நிறுவி விட்டார்கள். மோகன் ஐயா பெயரிலேயே மறைந்தபின்பும் திருவள்ளுவர் மன்றத்திற்கு உதவி வருகிறார்.

மோகன் ஐயா எப்போதும் உடன்பாட்டுச் சிந்தனையோடு இருப்பார். கவிதையில் சினத்தில் சில நேரங்களில் எதிர்மறை சிந்தனையில் நான் எழுதி இருந்தால், இரவி எதற்கு இது நீக்கி விடுங்கள் என்பார். உடன் நானும் நீக்கி விடுவேன்.

மாமனிதர் அப்துல் கலாம், நீதியரசர்கள் கற்பகவிநாயகம், மகாதேவன் போன்றவர்களை மோகன் ஐயாவுடன் சென்று சந்தித்து இருக்கிறேன். பெரியவர்களை சந்திக்கும் போது இவன் எதற்கு? என்று எண்ணாமல், என்னை அவருடன் அழைத்துச்சென்று அறிமுகம் செய்து வைப்பார். மிகப்பெரிய உள்ளம் மோகன் ஐயாவிற்கு.

தினமலர் நாளிதழில் ‘என் பார்வை’ பகுதியில் தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார். என்னையும் எழுத வைத்தார். புத்தகத் திருவிழாவிற்கு சென்று புத்தகம் வாங்கும்போது என்னை அழைத்துச் செல்வார். ‘மு.வ.-வின் செல்லப்பிள்ளை மோகன் ஐயா. மோகன் ஐயா-வின் செல்லப்பிள்ளை இரவி’ என்று சொல்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.

மகாகவி பாரதியாரிடம் நிவேதிதா சொன்னது போல, மோகன் ஐயா எங்கு சென்றாலும், நிர்மலா அம்மாவை அழைத்துச் செல்வார். காதலித்துக் கரம் பிடித்தவர், இருவரும் காதல் இணையர் மட்டுமல்ல, இலக்கிய இணையர்.

நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்களிடம் மணவிலக்கு வழக்கு ஒன்று வந்தது. அவர்களிடம் இலக்கிய இணையர் மோகன்-நிர்மலா அவர்க்ளை சந்தித்து பேசி வாருங்கள், பிறகு மணவிலக்கு தருகிறேன் என்று நிபந்தனை வைத்தார். மணவிலக்கு வேண்டி வந்தவர்கள், இலக்கிய இணையரை சந்தித்து பேசியபின்னர், மணவிலக்கு முடிவை கைவிட்டு விட்டனர்.

பட்டிமன்றங்கள் பேசும் போதும், நூல் எழுதும் போதும் நீதியரசர்களின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை மேற்கோள் காட்டி உள்ளார். இதனைப் படித்த நீதியரசர்களும் மனமகிழ்ச்சி அடைந்தார்கள். நீதியரசி விமலா அவர்களின் தீர்ப்பை மேற்கொள் காட்டி நூல் எழுதி இருந்தார். இதனைப் பார்த்து அவரும் மனமகிழ்ச்சி அடைந்தார்.

பட்டிமன்றம் என்றால் மேம்போக்காக பேசிட விரும்ப மாட்டார். வீட்டில் பட்டிமன்றத்திற்மு முன்பாக ஒத்திகை பார்க்க வேண்டும். சொல்ல இருக்கும் கருத்துக்களை சொல்ல வேண்டும், ஐயாவும் ஆலோசனைகள் வழங்குவார். நிர்மலா அம்மா அவர்களும், வீட்டிற்கு வருகை தரும் பட்டுமன்ற அணியினர் அனைவருக்கும் விருத்து வைத்து விடுவார். சாப்பிட வைக்காமல் யாரையும் அனுப்ப மாட்டார். திருவள்ளுவருக்கு ஒரு வாசுகி, காந்தியடிகளுக்கு ஒரு கஸ்தூரிபாய், பாரதியாருக்கு ஒரு செல்லம்மாள், தமிழ்த்தேனீ மோகன் ஐயாவிற்கு ஒரு நிர்மலா மோகன். இதனை பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கவிதையில் குறிப்பிட்டேன். புகழ்ச்சி அல்ல முற்றிலும் உண்மை!

அதிகாலை 4.45 மணிக்கு நிர்மலா அம்மா அவர்கள் அலைபேசியில் அழைத்து ஐயாவிற்கு உடல்நலம் இல்லை, மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உள்ளோம் என்று தகவல் தந்தார். புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி. வரதராசன் அவர்களுக்கும் தகவல் தந்திருந்தார். உடனே இருவரும் மருத்துவமனை சென்றோம், பார்த்தோம், செந்தமிழ் கல்லூரியின் செயலர் மாரியப்ப முரளி அவர்களையும் வரதராசன் அவர்கள் வரவழைத்து இருந்தார். அவர் மருத்துவர் சேதுராமன் அவர்களுடன் பேச, சிறப்பு மருத்துவர்கள் பலரும் வந்து விட்டனர்.

உள்ளே சென்று உயிர் இருக்கும்போதே ஐயாவைப் பார்த்தேன். எதற்குமே கண் கலங்காதவன் நான். ஐயாவின் நிலைமையைப் பார்த்து கண்கலங்கி விட்டேன். பல்ஸ் அளவு குறைந்து கொண்டே வருகின்றது என்றனர். 64 என்றனர். அடுத்து ஒரு மணி நேர்த்தில் 34 என்றனர். மருந்து வேலை செய்யவில்லை, பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டனர். ஐயாவின் ஒரே மகள் செல்ல மகள் அரசிக்கும் அம்மா தகவல் தந்து விட்டார். ஐயாவின் உடலில் இருந்து உயிர் பிரிந்தது.

இல்லத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டது. செல்ல மகளின் வருகைக்காக காத்திருந்தது. அமெரிக்காவிலிருந்து பல நாடுகள் சுற்றி, அரசி அவர்கள், கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் வந்து சேர்ந்தார்கள்.

அமைச்சர் பாண்டியராஜன், கவிப்பேரரசு வைரமுத்து, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கலைமாமணி ஏர்வாடியார், புதுகை மு. தருமராசன், பானுமதி தருமராசன், கார்த்திகேயன் மணிமொழியன், திருமதி மணிமொழியன், மணிமொழியனாரின் மகள், திருமதி கார்த்திகேயன்,கவிபாரதி அசோக்ராஜ் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

மோகன் ஐயா இறந்ததிலிருந்து எனது அலைபேசிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள். நீதியரசர் கற்பக விநாயகம் அவர்கள் பேசினார், அதிர்ச்சியைத் தெரிவித்தார். நிர்மலா அம்மாவின் எண் வாங்கி ஆறுதல் சொன்னார். முதுமுனைவர் இறையன்பு இ.ஆ.ப., இராசாராம் உள்ளிட்ட பலரும் அலைபேசியில் அழைத்து எனக்கு ஆறுதல் வழங்கினார்கள்.

என்னை செதுக்கி சிலையாக்கிய சிற்பி மோகன் ஐயா. அவரை இழந்து மிகவும் வருத்தத்தில், கவலையில் தவித்து வருகிறேன். சோர்வு கூடாது, சுறுசுறுப்பு வேண்டும் என்று எனக்கு கற்றுத் தந்த ஆசான் மோகன் ஐயா.

மோகன் ஐயாவின் பட்டிமன்ற அணியினரான முத்து இளங்கோவன் திருநாவுக்கரசு ,சங்கீத் இராதா ,சேரை பால கிருஷ்ணன் ,நான் உள்பட அனைவரும் ஐயா இல்லத்தில் இருந்து வருபவர்களுக்கு ஐயாவின் பேரிழப்பு பற்றி எடுத்து இயம்பினோம்

தஞ்சை பல்கலைக் கழகத்தின் முன்னை துணை வேந்தரும் ஐயாவின் நண்பருமான திருமலை , ,பொறியாளர் சுரேஷ் ,வழக்கறிஞர் சாமிதுரை உள்பட மதுரையின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள் புதன் கிழமை காலையில் இறந்தார்கள் வெள்ளிக் கிழமை மதியம் வரை .அய்யாவின் மாணவர்கள் ,நிர்மலா அம்மாவின் மாணவர்கள் ,பேராசிரியர்கள் ஆய்வு மாணவர்கள் காமராசர் பல்கலைக் கழகத்தில் உடன் பணிபுரிந்தவர்கள் அஞ்சலி செலுத்திட வந்த வண்ணம் இருந்தார்கள் .

ஐயாவின் மரணம் இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது .இலண்டனில் இருந்து புதுயுகம் பேசினார் .இலண்டன் தமிழ்ச் சங்கத்தில் நூல்கள் வெளியீட்டு விழாவும் ஏற்பாடு செய்து இருந்தார் .மோகன் அய்யாவும் நிர்மலா அம்மாவும் செல்வதாக இருந்தது .விழாவை ரத்து செய்து விட்டார் .இலண்டனில் இருந்து சிவயோகம் மலர் ஆசிரியர் பொன் பாலசுந்தரம் பேசினார்.வருந்தினார் .உடன் இரங்கல் மடல் அனுப்பினார் .இலண்டனில் இருந்து ஐ .தி .சம்பந்தன் இரங்கல் மடல் அனுப்பினார் .

கனடாவில் இருந்து தமிழ் ஆதர்ஷ் டாட் காம் இணையத்தின் ஆசிரியர் அகில் பேசினார்.மனம் வருந்தினார் .இணையத்தில் ஐயாவின் கட்டுரைகளை தொடர்ந்து பதிவு செய்து வந்தார் .

பேராசிரியர் உலக நாயகி பழனி அவர்களுக்கு விமானச் சீட்டு கிடைக்காமல் வாடகை மகிழுந்து ஓடித்து வந்து இறைதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் .

காவல் உதவி ஆணையர் முனைவர் கவிஞர் ஆ.மணி வண்ணன் அவர்கள் இறுதி வரை இருந்து சென்றார்கள் .
தினமலர் பொறுப்பாளர் ரமேஷ் குமார் வந்து மரியாதை செலுத்தினார் .

எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தரராஜன் கேரளார் சென்று இருந்தார் .அலைபேசியில் அழைத்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்கள் .

முக நூலிலும் பலர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்கள் .

வெளிநாடு சென்றவர்கள் வர இயலாதவர்கள் இன்னும் இல்லம் வந்து நிர்மலா மோகன் அம்மாவிடம் துக்கம் விசாரித்து செல்கின்றனர் .தியாகராசர் கல்லூரியின் செயலர் ஹரி தியாகராசன் ,சாகித்ய அகாதமி விருதாளர் கவிஞர் சிற்பி பாலா சுப்பிரமணியன், ஐயாவின் ஆய்வு மாணவர் கரூர் இனியன் கோவிந்தராஜூ அவரது மனைவி சம்பந்தி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் வந்து சென்றனர் .எல்லோருக்கும் அதிர்ச்சி .மோகன் அய்யா இறப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை . நம்பவில்லை .உண்மையா என்று பலரும் என்னிடம் அலைபேசியில் உறுதி செய்துக்க கொண்டனர் .

மோகன் அய்யா உடலால் உலகை விட்டு மறைந்தாலும் ,தமிழ் இலக்கியத்தில் என்றும் வாழ்வார்.

டிஸ்கி:- தன்னைச் செதுக்கிய சிற்பி பற்றி திரு. இரா. இரவி அவர்களின் வார்த்தைகளில் படிக்கும்போது மிகுந்த வியப்பேற்பட்டது. அவரது உடன்பாட்டுச் சிந்தனை . அனைவரையும் சமமாக மதித்தல், மனிதநேயம்  போன்ற பண்பு விழுமியங்கள் அவர் எப்பேர்ப்பட்ட மனிதர் என்பதைச் சொல்லியது. அவரது செல்லப் பிள்ளை நீங்கள் என்பதில் பெருமிதம் அடையலாம், நிச்சயமாக ! 

உங்கள் நூலை வெளியிட்டதில் வானதி பதிப்பகத்தின் சேவை பாராட்டத்தக்கது. 

சங்க இலக்கியங்களை எளிமையாக்கித் தந்தது, சக கவிஞர்கள் பற்றியும் திறனாய்வு செய்து ஊக்குவித்தது, 

பட்டி மன்றங்களின் தீர்ப்பை மேற்கோள் காட்டிப் பேசியதும், பிரிய இருந்த தம்பதிகளைப் பேச்சால் இணைத்ததும் அருமை. அவரது இலக்கிய இணையருக்கு மட்டுமல்ல, இலக்கிய உலகுக்கும் அவரது இழப்பு இரவி சார் சொன்னது போல் பேரிழப்பே. சோர்வு கூடாது , சுறுசுறுப்பு வேண்டும் என்று அவர் கூறியதையே தாரக மந்திரமாகக் கொள்ளலாம். 

உலகெங்கிலும் இருந்து பல்வேறு பிரபலங்களும் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து இருப்பது அவரின் பெருமையையும் அவரது இன்மையினால் ஏற்பட்ட துயரையும் உணர்த்தியது. நிச்சயம் நீங்கள் கூறியது போல் மோகன் ஐயா அவர்கள் உடலால் இவ்வுலகை நீங்கினாலும் இலக்கியத்தில் என்றும் வாழ்வார். 

சாட்டர்டே போஸ்டுக்காக அரிய மனிதர் முனைவர் திரு. இரா. மோகன் அவர்களின் பேரன்பையும் பெரும் பண்பையும்  பற்றி உலகறிய எடுத்துச் சொன்னமக்கு நன்றி திரு. இரா. இரவி சார். 

2 கருத்துகள்:

  1. நன்றி திரு இரவி சார். :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)