திங்கள், 20 செப்டம்பர், 2021

சினேகா பொட்டீக்கும் அன்னபூரணி நாராயணனும்.

 சினேகா பொட்டீக்கும் அன்னபூரணி நாராயணனும்


 

டிகிரி படித்துவிட்டு வீட்டில் இருக்கும், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இல்லத்தரசி அன்னபூரணி நாராயணன். இவர் பிறந்தது அழகான ஆத்தங்குடியில். வாக்கப்பட்டது பாசமான பள்ளத்தூரில். இவரது அன்புக் கணவர் திரு. நாராயணன், ஆசை மகள் சினேகவல்லி, அருமை மாப்பிள்ளை சுப்பையா, தங்கப் பேத்தி யாழினி, அறிவான மகன் அவினாஷ் குமரன் என்று கட்டுசெட்டான குடும்பம் இவருடையது.

 

பெங்களூரில் வசிக்கும் இவர் கடந்த பத்து ஆண்டுகளாக சினேகா பொட்டீக் என்றொரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். சினேகா பொட்டீக் உருவானது எப்படி எனக் கேட்டபோது இவரது மகள் சினேகா கல்லூரிக்குப் போட்டுச் சென்ற அணிகலன்கள், ஆடைகள் பார்த்து அவர்களின் தோழிகளும் அதேபோல் வேண்டும் எனக் கேட்ட பொழுதினில் சினேகாவுக்கான விதை விழுந்தது. அது இன்று விருட்சமாய் ஆகி இருக்கிறது என்கிறார்.

 

இதை பிஸினஸாக எடுத்து நடத்தலாம் என்று இவர் நினைத்தபோது உறுதுணையாக நின்றவர் இவரது கணவர் திரு. நாராயணன் அவர்கள்தான். கண் பார்த்தால் கை செய்யும் என்னும் வல்லமை கொண்டவர். அவர் பிள்ளையார் சுழியும் முதலும் போட்டு ஆரம்பித்துக் கொடுத்த பிஸினஸ் இன்று இவரை பிஸியாக வைத்திருக்கிறது.

 

இவர்களின் தயாரிப்புக்களின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் நியாயவிலையையும் பார்த்து வாடிக்கையாளர் எண்ணிக்கையும் விரிவடைந்தது. அணிகலன்களுடன் ஆடைகளையும் வாங்கித் தரச் சொல்லி மேல்நாட்டு வாடிக்கையாளர்கள் இவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அப்படியே ரவிக்கை, லெஹங்கா எனத் தைத்துத் தரச் சொல்லவும் இன்னும் விரிவடைந்தது சினேகா.

 

பெண்களுக்கான ஆடைகள், ஆண்கள் உடைகள், குழந்தைகள் உடைகள், பாரம்பரிய உடைகள், மேல்நாட்டு பாணி உடைகள், நகைகள்,கைப்பைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், வீட்டில் தயார்ப்படுத்தும் மாவு வகைகள், கேக்குகள், சாக்லேட்டுகள், தைத்துக் கொடுப்பது என இன்னும் விரிவடைந்துள்ளது இந்த வியாபாரம். ( Women's wear, Traditional, Western Men's wearKids wearJewelryHandbagsHousehold articlesHomemade floursHomemade CakesHomemade chocolates, All stitching ).

 

பொன்பரை என்ற அமெரிக்கா சார்ந்த குழு ஒன்றிற்கு சினேகாவிலிருந்து 100 செட் உடைகளை, அணிகலன்களுடன் 20 நாட்களுக்குள் தைத்து அனுப்பியதைத் தங்கள் மைல்ஸ்டோனாகக் கூறினார் அனு.

 

சிறு சிறு அளவில் ஆரம்பித்த பாசி, முத்துக்கள் கோர்த்த ( BEADED JEWELLERY ) நகைகள் முன்பு நன்றாகப் போகிறதென்று நிறையக் கொள்முதல் செய்து நகை செய்து வைத்திருந்திருக்கிறார் அனு. ஆனால்  பொதுமக்களுக்கோ அதன் மேலான ஆர்வம் திடீரெனக் குறைந்துவிட செய்து வைத்த நகைகள் மற்றும் கொள்முதல் செய்து வைத்த பொருட்கள் (RAW MATERIALS )  பெருமளவில் முடங்கி இருப்பதை இதன் இறக்கமாகச் சொன்னார்.

 

கொரோனா காலத்திலும் ஆன்லைன் பிஸினஸையே பெரும் அளவில் சார்ந்து இருப்பதால் குரியர் சர்வீஸ் மற்றும் அதன் தொடர்பான சேவைகள் லாக்டவுன் காலத்தில் பெரிதும் அடிபட்டதை இதன் மூலம் ஏற்பட்ட இடராகக் குறிப்பிட்டார்.

 

இவர்களின் ஸ்பெஷல் என்றால் குழந்தைகளுக்கான ஆடைகள் அதிலும் மாம் & மீ ( MOM & ME ) போன்ற புதுமையான கருத்தோடு அம்மா மற்றும் குழந்தைகளுக்கான உடைகள், கவுன் போன்றவற்றை வடிவமைத்திருக்கிறார் இவர். குடும்ப ஆடைகள், FUSION COMBOS ஆகியனவும் இவரது ஸ்பெஷல் தயாரிப்புகள்.

 

கடந்த 10 வருடங்களாக இந்த நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார். இவ்வாறு ஒரு பிஸினஸைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருவதற்கு இவர் கைக்கொள்ளும் சில விஷயங்களையும் கூறினார். வாடிக்கையாளர்களுக்கு நம்மேல் நம்பிக்கை வரவேண்டும். அதற்கு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக, குறைந்தது ஒரு மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். அவர்களுக்குப் பொருள் சென்று சேரும் வரை ஃபாலோ அப் செய்ய வேண்டும்.

 

புதிதாக இத்துறையில் ஈடுபட விரும்புபவர்களுக்கு அறிவுரையாக இவர் ”உங்கள் வாடிக்கையாளர் என்ன மாதிரிக் கொள்முதல் செய்வார், என்ன விலையில் வாங்குவார் என ஒரு கணக்கெடுப்புச் செய்தபின் ஆரம்பியுங்கள்” என்கிறார். மேலும் ”அதிக லாபம் வைப்பதும் கூடாது” என்கிறார். “இதனால் ஆரம்பத்தில் சிறிய லாபம் ஈட்டினாலும் போகப்போக நல்ல லாபம் காணலாம்” என்கிறார்.

 

குங்குமம் தோழியில் இவரது பிஸினஸ் பற்றி வெளியான கட்டுரை இவரை இன்னும் ஊக்கமடையச் செய்திருக்கிறது. நவராத்திரியின்போது அதிக விற்பனை செய்தமைக்காக பெங்களூர் எக்ஸிபிஷன் மீட் அவார்ட், பிரிகேட் மில்லென்னியம் அபார்ட்மென்ஸில் அதிக விற்பனைக்காக ஸ்பெஷல் ஃப்ரீ ஸ்டால், 2015 இல் பெஸ்ட் சர்வீஸுக்காக காம்ப்ளிமெண்டரி ஸ்டால் கிடைத்ததைப் பெருமையாகக் குறிப்பிடுகிறார்.

 

இன்னும் பல விருதுகளும் பெருமைகளும் பெற்று சினேகா பலருக்குச் சேவை செய்ய வாழ்த்தி வந்தோம்.

 

 

Virudhugal

 

1. Bangalore exhibition meet award for highest sale during  navarathri

 

2. Special free stall for making highest sale in Brigade millennium apartments

 

3. Complementary stall for best service 2015

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)