செவ்வாய், 4 மே, 2021

நாச்சம்மை பட்டு செண்டர் தனலெக்ஷ்மி வேலன் அவர்களுடன் ஒரு பேட்டி

 காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற நாச்சம்மை பட்டு செண்டரைத் தன் கணவர் திரு. வேலன் அவர்களுடன் திறம்பட நிர்வகித்து வருகிறார் திருமதி தனலெக்ஷ்மி வேலன். இவர் ஆறாவயல் காடேரி அம்பாள் டெக்ஸ்டைல்ஸ் மில் திரு.O. VR. SV.AR. சேவுகன் செட்டியார் அவர்கள் மகள். காரைக்குடி ஆவுடையான் செட்டியார் வீடு பேராசிரியர் திரு.வெ. தெ. மாணிக்கம் செட்டியார் அவர்கள் மருமகள், திரு.வேலன் அவர்கள் மனைவி.


காஞ்சிபுரத்தில் 1980ல் திரு. வெ. தெ. மாணிக்கம் அவர்கள் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணி செய்த போது, அவர்களாலும் அவர்கள் மாமனார் சேந்தனியார் வீட்டு திரு. இராமசாமி செட்டியாராலும் நம் நகரத்தாருக்காக நச்சாம்மை கைத்தறி பட்டு நிறுவனம் 4 தறியுடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்சமயம் 150 தறி வரை நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளது. மாதத்திற்கு 350 கைத்தறி பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.



மேலும் சென்னை போத்திஸ், நல்லி, பெங்களூரு, அங்காடி, எர்ணாகுளம் சீமாட்டி போன்ற பெரிய நிறுவனங்களுக்கு இந்தியா முழுவதும் சப்ளை செய்து வருகிறார்கள்.


இது தவிர தருண் தகிலானி, சபியாசச்சி போன்ற டிசைனர்களுக்கும் நம் நகரத்தார்களுக்கும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப கலர், டிசைன்களில் கைத்தறிப் பட்டு சேலைகள் உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள்.


நகரத்தார்களும் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கும் அவர்கள் தேவைக்கேற்பக் குறித்த நேரத்தில் கைத்தறி பட்டு சேலைகள் உற்பத்தி செய்து கொடுப்பது இவர்கள் நிறுவனத்தின் தனி சிறப்பு.


கணவரின் தொழிலில் உங்களுக்கும் ஈடுபாடு வந்தது எப்படி?  நீங்கள் இணைந்ததும் என்னென்ன மாற்றத்தைக் கொண்டு வந்தீர்கள் என்று அவரிடம் கேட்டேன். 

"நகரத்தார்களுக்கு நாச்சம்மை பட்டு நிறுவனம் முன்னோர்களின் ஆசியால் கைராசியான நிறுவனமாக என்னென்றும் திகழ்கிறது.

1985ல் கல்யாணம் ஆகி வந்ததிலிருந்து நாச்சம்மை பட்டு நிறுவனத்தில் கலர், டிசைன்களில் என்னுடைய எண்ணங்களை சொல்லி வந்தேன். அதுவே வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்திருந்த காரணத்தால் அடுத்தடுத்து கடைக்கு வரும்போது அவர்களுடைய ஆர்டர்களுக்கு கலர், டிசைன் சொல்ல, ஆச்சி இல்லையா? என அவர்களே கேட்டது என்னை இன்னும் இந்த தொழிலில் ஈடுப்படுத்தி கொள்ளச் செய்தது. தற்போது முழுநேரமாக சேலைகளுக்கு கலர், டிசைன் சொல்வது, தறியிலிருந்து வரும் சேலைகளைத் தர ஆய்வு செய்வது, ஆர்டர்கள் வாங்குவது, விற்பனையை கவனிப்பது என என்னைத் தொழிலில் ஈடுபடுத்திக் கொள்கிறேன்."


ஆக 35 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறீர்கள். பட்டுத்தொழிலில் ஈடுபட்ட முதல் பெண்மணி நீங்களாகத்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது. இதற்கான மூலப் பொருள், உற்பத்தி, வியாபாரம் பற்றிக் கூறுங்கள் என்றவுடன் அவர்


"இந்தத் தொழிலுக்கு தேவையான மூலபொருள்கள் கோறா (Raw silk ) கர்நாடகா மாநிலத்திலிருந்தும், ஜரிகை (jari ) சூரத்திலிருந்தும் வருகிறது. கோறாவை நம் தேவைக்கேற்ப கலர் சாயம் ஏற்றி தறிக்கு கொடுக்கிறோம்."



வேறு ஏதேனும் புதுமைகள் உண்டா என்று கேட்டபோது "தற்போது எங்கள் நிறுவனத்திற்கு மென்பொருள் வசதி (software ) இணையதள வசதி (website ), online sale, முதலியவற்றை செய்துள்ளேன்" என்று அசர வைத்தார்!.


வியாபாரம் என்றால் ஏற்ற இறக்கம் இருக்கத்தானே செய்யும்.மேலும் வாடிக்கையாளர் கோரிக்கைகளுமே மாறுபடுமே அதை எப்படிச் சமாளிக்கிறீர்கள் எனக் கேட்டபோது "இந்தத் தொழிலில் சேலை ஆர்டர் கொடுப்பவர்கள் சின்ன ரக சேலைகளை கேட்பார்கள். தறி நெசவு செய்பவர்கள் சின்ன ரக சேலைகளை விருப்பப்படுவதில்லை. சின்ன ரக சேலைகளில் அவர்களுக்கு வரும் வருமானம் குறைவு. வாடிக்கையாளர்களையும், தறி நெசவு நெய்பவர்களையும் திருப்திப் படுத்துவது மிகவும் சவாலாக உள்ளது. எனினும் இயன்றவரை தரத்தை விடாமல் திறம்பட செய்து வருகிறோம்." 


"ஆரம்பத்தில் நாச்சம்மை சில்க்ஸ் இருந்தது, தற்போது மீனாட்சி ஹேண்டலூம் சில்க்ஸ், வேலன் சில்க்ஸ் ஆகிய sister concern களையும் நடத்தி வருகிறோம்.


*#2015ல் IBCN ல் சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருது கிடைத்தது.*# " ஒரே நேரத்தில் மூன்று நிறுவனங்கள் நடத்தி வருவது குறித்தும், சிறப்பான விருது பெற்றமைக்காகவும் பாராட்டினோம்.


மென்முறுவலுடன் அங்கீகரித்தவரிடம் வீடு வியாபாரம் இரண்டையும் எப்படி பேலன்ஸ் செய்கிறீர்கள் எனக் கேட்டோம். "தொழில் என வந்தவுடன் முழுமனதுடனும், வீட்டுக்கு வந்தவுடன் தொழில் சம்பந்தமாகவும் விவாதம் செய்வதில்லை. தொழில் வேறு குடும்பம் வேறு என்பதில் உறுதியாக இருக்கிறேன் " என வியக்க வைத்தார். 


உங்கள் ஸ்பெஷல் தயாரிப்புகள் பற்றி அறியத் தாருங்கள் என்றபோது," நாச்சம்மை என்றாலே  traditional சேலைகள் நினைவுக்கு வரும். தற்சமயம் youngsteres கட்ட without border, partlypallow, half & half ஆகிய ரகங்களையும் காலத்திற்கேற்ப தயாரிக்கிறோம்."


தன்னடக்கத்துடன் பாரம்பரியத்தையும் மீட்டெடுத்துக் கொடுக்கும் திருமதி. தனலெக்ஷ்மி வேலன் விருதுகளை ஜெயித்ததில் ஆச்சர்யமில்லைதானே!

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)