வெள்ளி, 28 ஜனவரி, 2022

அனலாசுரனை அடக்கியவன்.

அனலாசுரனை அடக்கியவன்.

யாராவது கோபமாகப் பேசினால் தீப்போலச் சுடும் நமக்கு. ”தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு” என்பது திருக்குறள். ஆனால் ஒருவன் உடல் முழுவதும் தீயாய்ச் சுட்டால் எப்படி இருக்கும். அப்படித் தீய்மையின் வடிவாய்த் தீயாய்ச் சுட்டவனையும் ஒருவன் எடுத்து விழுங்கி அடக்கினான். அது என்ன கதை என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
காலதேவனுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் அனலாசுரன். தர்மத்தின் வடிவமாய் இருந்த காலதேவனின் மகனோ அதர்மத்தின் மொத்த உருவமாய் இருந்தான். உள்ளபடியே தீக்குணங்கள் கொண்ட அவன் தீயவர்களோடும் சேர்ந்து அட்டகாசம் செய்து வந்தான். அதனால் அவன் தீய எண்ணங்கள் கொண்ட உடலே தீயாய் மாறித் தகிக்க ஆரம்பித்தது. அந்த அனல் அவனைச் சுடாமல் அடுத்தவர்களைச் சுட்டது.
எந்தக் காரணமும் இல்லாமல் எதிர்ப்பட்டவர்களை எல்லாம் அனலாசுரன் சும்மாவே கொடுமைப்படுத்துவான், அவன் உடல் தீயாய் மாறித் தகிக்க ஆரம்பித்ததும் தன் முன் வந்தவர்களை எல்லாம் சாம்பலாக்கி சந்தோஷப்பட்டான். எனவே தேவலோகத்தில் மட்டுமல்ல. ஈரேழு பதினாலு லோகத்திலும் அவனைக் கண்டாலே பஸ்பமாகி விடுவோம் எனப் பதறி மும்மூர்த்திகளிடம் தங்களைக் காக்கும்படி வேண்டிக் கொண்டே தேவரும் முனிவரும் ஓடினார்கள்.

அபயம் என்று வந்தவர்களைக் காப்பது மும்மூர்த்திகளின் கடமையல்லவா. எனவே மூவரும் கூடி யோசித்தார்கள். அப்போது முக்கண்ணன் முன் வந்தார். கோபத்தில் அவர் நெற்றிக்கண்ணைத் திறந்தால் பொறி பறக்குமே எனவே அனைவரும் பயந்தார்கள். அவரோ “ அஞ்சாதீர்கள். இவனை அழிக்க நான் யாரையும் உருவாக்கப் போவதில்லை. இந்த அனலாசுரனை அழிக்க அங்கயற்கண்ணியே ஒரு அழகான குழந்தையை உருவாக்குவாள்”.  என்றார். அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

அங்கோ ஆற்றங்கரைக்கு நீராடச் சென்றிருந்த அன்னை உமையவள் தனக்குக் காவலிருக்கும் பொருட்டு மஞ்சளைப் பிசைந்து ஒரு குழந்தையை உருவாக்கிக் காவலுக்கு வைத்துச் சென்றாள். சிவனார் தன் மனையாளாகிய உமையாளைக் பார்க்கப் போனார். அங்கோ பார்வதி உருவாக்கிய புத்திரன் சிவனாரை அங்கே வரக்கூடாது எனத் தடுக்கிறார். கோபம் கொண்ட சிவனோ அவன் சிரசை எடுக்கிறார். பார்வதி ஓடிவந்து உண்மை உரைக்கிறாள்.
“ஐயனே நான் உருவாக்கிய குழந்தை அவன். நம் மூத்த மகன். என்ன காரியம் செய்தீர். எனக்கு அவனை உயிர்ப்பித்துத் தாரும் “ என்று கதறுகிறாள் உமையம்மை.
அடடா உண்மை தெரியாமல் போயிற்றே என எண்ணிய சிவனார் “வடக்குப் பக்கம் யார் தலைவைத்துப் படுத்திருக்கிறார்களோ அவர்கள் சிரசை எடுத்து வாருங்கள் “ எனத் தன் தேவகணங்களுக்குக் கட்டளை இடுகிறார். அவையோ ஈரேழு பதினாலு லோகத்திலும் தேடுகின்றன. ஒரே ஒரு யானை மட்டும் வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுத்திருந்தது. உடனே ஓடி அதன் சிரசைக் கொண்டு வருகின்றன. ”ஐயனே இந்த யானை மட்டும்தான் வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுத்திருந்தது “ எனத் தயக்கத்தோடு கொடுக்கின்றன. வேறு என்ன செய்வது, நாழிகையோ கழிந்து கொண்டிருக்கிறது என பார்வதி வருந்த சிவனார் அந்த யானையின் சிரசை வாங்கிக் குழந்தையின் உடலில் பொருத்தி உயிர்ப்பிக்கிறார். அனைவரும் மகிழும் வண்ணம் அந்தக் குழந்தை எழுந்து அமர்ந்தது.
ஆனைத்தலை பெற்றதாலும் கணங்களுக்கு அதிபதி ஆனதாலும் அவனைக் கணபதி என அழைத்தார்கள். அவரிடம் அசுரனை அழிக்குமாறு அனைவரும் வேண்ட அவர் உடனே அனலாசுரனை அழிக்கக் கிளம்பினார். எல்லாரையும் எரித்தது போல அவரையும் எரிக்க ஓடிவந்தான் அனலாசுரன். ஆனைமுகன் அசந்தவரா என்ன. அவனைக் கண்டதும் நெருப்புப் போலக் கொழுந்து விட்டெறிந்து கொண்டிருந்த அவனை எந்தத் தயக்கமும் இல்லாமல் எடுத்து விழுங்கினார்.
பார்த்தவர்கள் அனைவரும் பதறிப் போயினர். வயிற்றுக்குள் பெரு நெருப்பை விழுங்கி விட்டதே குழந்தை என உமையம்மையும் பதறினாள். தும்பிக்கையால் அநாயசமாகத் தூக்கி உள்ளே போட்டு விட்டானே என என்ன ஆயிற்றோ ஏதாயிற்றோ எனக் குழந்தையைத் தொட்டுப் பார்க்கிறாள்.

வயிற்றினுள் சென்ற அனலாசுரனோ அங்கே மேலேயும் கீழேயும் குதிக்க ஆரம்பிக்கிறான். ஆனால் ஆனை முகனோ தன் வயிற்றைத் தடவிக் கொடுத்து அவனைச் சீரணிக்கிறார். என்னதான் இருந்தாலும் பெரு நெருப்பாயிற்றே. அவரது உடலும் கொதிக்கத் தொடங்குகிறது. உள்ளே வெப்பம் அதிகமாக அதிகமாக உடலிலும் முகத்திலும் நெற்றியிலும் வியர்க்கத் தொடங்குகிறது.
சிவகணங்கள் அவருக்கு மாபெரும் விசிறி கொண்டு வீசுகிறார்கள். எந்த மாற்றமும் இல்லை. அவர் முகத்திலிருந்து வேர்வை ஆறாகப் பெருகி வழிகிறது. அனலாசுரனை விழுங்கியபின் அவன் மேலும் கீழும் குதித்ததால் அவரது தொப்பையும் பெரிதாகிறது. ஆனைமுகன் மேனி மட்டும் நெருப்பாய்த் தகிக்கவில்லை, சுற்றியிருப்போரையும் அந்த வெக்கை தாக்குகிறது.
எப்படி அந்த வெக்கையைப் போக்கலாம் என அனைவரும் யோசிக்கிறார்கள். தேவர்கள் சமயோசிதமாக தம்மைக் காத்த ஆனை முகனை மிகக் குளிர்ந்த அருகம்புல்லை கொண்டு அர்ச்சிக்கத் தொடங்குகிறார்கள். குளிர்ந்த தடாகத்தில் மஞ்சளில் உருவான ஆனை முகனை அந்த அருகம்புல் திரும்பவும் குளிர்விக்கிறது.  அவரது மேனி குளிர்ந்தவுடன் அனைவருக்கும் நெருப்பாலும் அனலாசுரனாலும் ஏற்பட்ட அவதி தணிகிறது. உமையம்மையும் மகிழ்கிறாள். 
அனலாய்ச் சுட்டவனை விழுங்கி அடக்கி அவனியில் அனைவருக்கும் நன்மை செய்த ஆனைமுகனின் கதை வித்யாசமானதுதானே குழந்தைகளே.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)