செவ்வாய், 25 ஜனவரி, 2022

கே. ஆர்.விஜயா என்னும் தெய்வநாயகி !

 கே.ஆர்.விஜயா என்னும் தெய்வநாயகி !


”ஒரு மகாராஜா ஒரு மகாராணி அந்த இருவருக்கும் ஒரு குட்டி ராணி”. நம்ம விஜயாம்மாவும் சிவாஜியும்தான் அந்த மகாராஜாவும் மகாராணியும்!அந்தக் குட்டி ராணி கொள்ளை அழகுசின்னப் பிள்ளையில் கேட்ட பாடல் என்பதால் இதன் இசை காட்சியமைப்பு எல்லாமே பிடிக்கும்பாந்தம்

”த்லுலுலுவ்வாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ.. அத்தை மடி மெத்தையடி..” என்று குட்டிக் குழந்தையை மடியில் இட்டு கே ஆர் விஜயா தாலாட்டும்போது நாமும் குழந்தையாகிவிடமாட்டோமா என்றிருக்கும். இந்தப் பாடலை இன்று என்றில்லை கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு வயதிருக்கும் பார்த்த அன்றிலிருந்தே அப்போதிலிருந்தே அப்படி ஒரு பைத்தியம் இந்தப் பாட்டின் மீதும் கே ஆர் விஜயாமீதும்.

மன்னவனே அழலாமா என்று வெள்ளை உடை அணிந்து பாடி அழவும் வைத்திருக்கிறார். சில சமயம் இருட்டில் நிலவில், மேகங்களில் கூட வெண்ணிற உடையில் விஜயாம்மா தெரிந்திருக்கிறார். !

கே ஆர் விஜயாவைப் பற்றி அவ்வளவாகத் தெரியாத காலத்தில் என் பெரியம்மா பெண் ரேவதி ரவுடி ராக்கம்மா படத்தில் ஒரு சீனில் டேபிள் ஃபேன் சுற்றும்போது தூங்கும் கே ஆர் விஜயாவின் சுருட்டைக்கூந்தல் பம்மென்று காற்றில் அசைவது பற்றி சிலாகித்துக் கூறினாள்.

அந்த சீன் எப்ப வரும் எப்ப வரும் என்று விலாவாரியாகக் கேட்டுக் கொண்ட நான் அடுத்த நாள் படம் பார்க்கச் சென்றபோது அந்த சீன் வருவதற்காகக் காத்திருந்தேன். சில நொடிகளே வந்த அந்த சீனில் பம்மென்று புடவையும் முடியும் காற்றில் பறக்க புருவமும் இமைகளும், அழகான நாசியும் இதழ்களும் கொண்ட பூவைப்போல, மச்சம் வைத்த வட்ட நிலவைப் போல அவர் தூங்கும் காட்சி மனதைக் கொள்ளை கொண்டது. நம் சகோதரிக்குப்பிடிக்கும் என்றால் நமக்கும் பிடித்துவிடும்தானே. ! வெகுளித்தனமான அழகோடு அவர் நடித்த படங்களில் ஒன்று ரௌடி ராக்கம்மா. ராமு படத்தில் ஜெமினியோடு பாடும் பாடலிலும் கொள்ளை அழகுதான். இயல்பாய் அழகாய் பொருந்தி இருப்பார் எந்த வேடத்துக்கும்.

முத்துராமனோடு ஒரு படத்தில் நடித்திருப்பார். அதில் இந்தப் பாடல்வரும். “ உன்னைப்பார்க்கவேண்டும் பழக வேண்டும் பேச வேண்டும் ரசிக்க வேண்டும் எத்தனையோ ஆசை இந்த மனதிலே. இதை என்னவென்று எடுத்துச் சொல்ல முடியல. ஐ டோண்ட் நோ. ஐ லவ் யூ.. “ இதை எல்லாம் ரேடியோவில் கேட்கும்போதே திக் திக் என்று இருக்கும். ஐ லவ் யூ என்பதெல்லாம் அப்போது மிகப் பெரிய உச்சரிக்கக்கூடாத வார்த்தை. ஆனால் அந்த வார்த்தை தன்னுடைய த்ரில்லை இழந்து பலகாலமாகிவிட்டது. இன்றைய நட்பில் கூட ஒருவருக்கொருவர் இதை எல்லாம் சர்வசாதாரணமாகச் சொல்கிறார்கள்.

பட்டினத்தில் பூதம் படத்தில் அவர் டபிள் பீஸ் ஸ்விம் சூட் போட்டு ஒரு பாடலில் நடித்திருப்பார். சான்ஸே இல்லை. சிலருக்கு உடல் மட்டுமே நன்றாக இருக்கும். சிலருக்கு முகம் மட்டுமே நன்றாக இருக்கும். ஆனால் கே ஆர் விஜயாம்மாவுக்கு முகம் உடல் இரண்டுமே அழகு.

"பூமாலைகள் உன் தோளில் விழுந்து ஊரெங்கும் பேர் பாடும் நன்னாளிலே பாமாலைகள் பல்லாக்கு வரிசை ஒன்றல்ல  பலகோடி உன் வாழ்விலே. " மனதார எந்த ஈகோவும் இல்லாமல் வசீகரப் பார்வை, அழகான முகபாவங்களோடு அழகு கொஞ்சகாதல் பொங்க  ஒவ்வொரு வரியையும் விஜயாம்மா பாடும் விதம்  அருமை. தனது காதலுக்குரியவன் சிறப்பாக வாழவேண்டும் என்று பாசத்தோடு வாழ்த்துவார்

வளர்ந்த குழந்தையைப் போலிருக்கும் விஜயாம்மா நடித்த அழகுப் பாடல்களில் அதுவும் ஒன்று. ட்ரெயின் எனக்குப் பிடித்த அழகான ராட்சசன்இந்தப் பாடல் ரயில் ப்ரயாணத்தில் இடம்பெறுவதோடு அந்த ரிதமிக்கிலும் இசை அமைந்திருக்கும். 70 - 90 விஸ்வநாதன் காலகட்டத்தில் பல பாடல்களின் இசை இப்படி விதம் விதமாக நிகழ்வோடு இயைந்து விருந்தாகவும் இருக்கும்.

சகோதரி கே ஆர் சாவித்ரியும் கே ஆர் வத்சலாவும் கூட நடிகைகள்தான். ஆனால் இவர் அளவு பேசப்படவில்லை.  400 படம் நடித்துள்ள இவருக்கு 74 வயதாம்!  பசுவின் மென்மையாய்க் கண்கள், மிருதுப் பார்வை, இடது கன்னத்து மச்சம், சுருட்டை முடி பம்மென்ற கூந்தல், முத்துப்பல் வரிசை முறுவலுக்காகவே புன்னகை அரசி பட்டம் பெற்றவர்.  

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்,  தமிழுக்கும் அமுதென்று பேர், கண்ணன் வருவான் எனப் பஞ்சவர்ணக்கிளியின் பாடல்கள் அவருக்குப் பேர் பெற்றுத் தந்தவை. பாரதிதாசனாரின் வரிகளை அவர் ஓங்கிப் பாடும்போது கம்பீரம் பெருக்கெடுக்கும்.

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு  எனக் கந்தன் கருணையில் கே ஆர் விஜயாம்மாவும் சிவகுமாரும் பாடும் மிக அழகும் பொலிவுமான பாடலில் செட்டிங்ஸ் கலர்ஃபுல்லாக இருக்கும்ஏபி நாகராஜன் படம்.  மகர யாழ் முன் இருக்க பின்னணியில் யானைச் சிற்பங்கள் இருக்க விஜயா அழகான நாணத்துடன்.. ’தோழீ.. தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள்’.. என்று  பாடுவார்.


’எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு’ என்ற பாடலில் குடித்து விட்டு வரும் முத்துராமனிடம் ’காதல் என்றால் சேயாவேன் . கருணை என்றால் தாயாவேன், கண்ணா உந்தன் நிழலாவேன்.உனக்கென நான் வாழ்வேன்’ என நெக்குருகுவார். ‘காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்காத்திருப்பேன்என் பாதையில் தெய்வம் இணைந்து வரும்’என்ற வரிகள் நம்பிக்கை ஊட்டும்.

”மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ” வாணி ஜெயராம் குரலும் கே ஆர் விஜயாம்மாவின் நடிப்பும் ஏ க்ளாஸ். அடிக்கடி முணுமுணுக்கும் பாடல். என் அம்மாவுக்கும் பிடித்த பாடல். அப்பவே அம்மா வாணி ஜெயராம் குரலுக்கு அடிமை.

நத்தையில் முத்து என்றொரு படத்தில் முத்துராமனுடன். மாட்டுத்தொழுவத்தில் சாணி அள்ளும் காட்சியில் கண்களைச் சுருட்டி முகத்தைச் சுழட்டி ஒரு கீழ்ப்பார்வை பார்ப்பார் பாருங்கள். முத்துராமன் என்ன நாமே கொள்ளை போய்விடுவோம்.

எவ்வளவுதான் படங்களில் நடித்துவிட்டாலும் அவர் ஒரு குழந்தை முகம் கொண்டவர். காதல் காட்சிகளில் கூட வளர்ந்த குழந்தைபோன்ற மென்மையான முகபாவங்களே இருக்கும். “ பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும். “ இதில் முஸ்லீம் பெண்ணாக நடிப்பார். அசல் முஸ்லீம் பெண்ணைப் ( மும்தாஜைப் ) பார்த்தது போலவே ஒரு தோற்றமயக்கம் ஏற்படும்.

“ஹேப்பி இன்றுமுதல் ஹேப்பி” இந்தப் பாடலில் அந்த ரோஸ் நிற ஸ்லீவ்லெஸ் சூடிதாரில் அசல் குழந்தைதான். நளினமாகவும் மென்மையாகவும் இருப்பார். அதே படத்தில் தேடினேன் வந்தது என்று பிள்ளைத்தனமாக ஆடும் ஆட்டமும் கொள்ளை அழகு. சிவாஜி மறைந்திருந்து புகைப்பிடித்தபடி பார்த்துக் கொண்டிருப்பார்மிக வெகுளித்தனமாக நடனமாடுவார் கே ஆர் விஜயா பார்த்துக் கொண்டே இருக்கலாம்

ஊட்டி வரை உறவு படத்தில் ஊட்டியின் எழில் மிகு தோற்றமும் கே ஆர் விஜயாம்மா, சிவாஜியின் கெமிஸ்ட்ரியும் வண்ணமிகு உடைகளும் காட்சியமைப்பும் மெல்லிய நடனமும் அற்புதம். பூமாலையில் ஓர் மல்லிகையில் கணவன் மனைவி போல மிகப் பாந்தமாக இருக்கும் இந்த ஜோடிபாடலும் இணைவும் இழைவும் குழைவும் அப்படியேவிஜயாம்மாவின் சிரிப்புக்கு நான் அடிமைஅந்த மச்சத்துக்கும் 

ரவிச்சந்திரனுடன் தொடாமலே பாடும் ”தொடுவதென்ன தென்றலோ மலர்களோ.” என்ற பாடலும் எனக்குப் பிடித்தது. ’பூ முடித்தாள் இந்தப் பூங்குழலி’, தீர்க்க சுமங்கலி வாழ்கவே, திரிசூலத்தில் ’மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன்’, பாரதவிலாஸில் ’இந்தியநாடு என் வீடு’, தங்கப்பதக்கத்தில் ஸ்ரீகாந்த் அம்மாவாக, தசாவதாரத்தில் இஸ்லாமிய முதிய பெண்ணாக என பாந்தமான பெண்களுக்கான ஐகான் ஆகவே நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர்.

சர்வர் சுந்தரம் படத்தில் சிற்பங்களுடன் சிற்பமாகச் சிக்கென்று  ’சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு’ என ஆடியவர் சில ஆண்டுகளிலேயே அப்போதைய ஹீரோயின்கள் போல ( சாவித்ரி) குண்டாகி விட்டார். நல்ல நேரம் படத்தில் எம்ஜியாரோடு நடிக்கும்போது அது நன்கு தெரியும்.

கற்பகம், ராமன் எத்தனை ராமனடி, குறத்தி மகன், ராமு, சரஸ்வதி சபதம், எல்லோரும் நல்லவரே, மேயர் மீனாட்சி, கை கொடுத்த தெய்வம், இருமலர்கள், திருமால் பெருமை, ஜஸ்டிஸ் கோபிநாத், சந்திரமுகி, சத்யசுந்தரம், தீர்க்க சுமங்கலி, பணம் படைத்தவன் எனப் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் அம்மனாக சூலம் ஏந்தி நவக்ரஹ நாயகி, சமயபுரத்தாளே சாட்சி என அருளாட்சி துலங்கத் தெய்வநாயகியாகவே காட்சி அளித்தவர்.

கே ஆர் விஜயாவையும் ரம்யா கிருஷ்ணனையும் அம்மனாகவே விழுந்து வணங்கியது தமிழ்க்குலம். தசாவதாரத்திலும் நடித்திருக்கிறார். எவ்வளவு பெரிய உருவம் என்றாலும் எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் சிலரிடம் மறைவதில்லை. பாந்தமும் மென்மையும் அழகும் எந்த வயதிலும் ஒரு சிலருக்கே வாய்க்கிறது. அவர்களில் எனக்குப் பிடித்த கே ஆர் விஜயா என்னும் தெய்வநாயகிக்கே முதலிடம்.


டிஸ்கி:- மனத்திரையில் மின்னல் என்ற என் தொடரில் இடம்பெற்ற “காலத்தால் மறக்க முடியாத கலைஞன் ரகுவரன்” பற்றிய கட்டுரைக்கு வாழ்த்துத் தெரிவித்த திரு. செல்வராஜன், திருச்சி அவர்களுக்கு நன்றி. 

2 கருத்துகள்:

  1. சிறப்பான கட்டுரை. வாழ்த்துகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  2. நன்றி துளசி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)