திங்கள், 25 அக்டோபர், 2021

தாய்போல் காத்த தாரை.

தாய்போல் காத்த தாரை


நம்மைச் சார்ந்த ஒருவருக்கு ஒரு இக்கட்டு நேரும்போது காப்பது நம் கடமை. அதையும் ஒருத்தி வெகு இலகுவாகச் செய்தாள். தனக்காக மட்டுமல்ல தன் நாட்டையும் வீட்டையும் தாய்போல் தீர்க்கமான மதியுடன் செயல்பட்டுக் காத்த அந்தப் பெண்ணைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
வானர அரசன் வாலியின் மனைவி தாரை. இவள் வானரர்களின் மருத்துவர் சுசேனரின் மகள். வாலி தேவர்களுக்குத் துணையாகப் பாற்கடலைக் கடைந்தபோது அவதரித்தவள் என்றும் சொல்கிறார்கள். அவள் தன் கணவன் வாலியின்மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்தாள். இவர்கள் மகன் அங்கதன்.
ஒரு சமயம் சுக்ரீவனும் வாலியும் ஒரு மாயாவி அரக்கனுடன் போர் செய்யச் சென்றபோது வாலியும் அந்த அரக்கனும் ஒரு குகைக்குள் சென்றனர். போர் தொடர்ந்தது. ஆனால் இதை அறியாத சுக்ரீவன் தனயன் திரும்பவில்லை எனவே அவனுக்கு என்னவோ ஆகிவிட்டது என்று சொல்லி நாடு திரும்பி அரசாட்சியை எடுத்துக் கொண்டான்.


ஆனால் அரக்கனை வென்ற வாலி திரும்பி வந்து தம்பி செய்த அடாத செயலைக் கண்டித்து அவனைத் துரத்திவிட்டு நாட்டையும் அவன் மனைவி ருமையையும் எடுத்துக் கொண்டான். இதைக் கேட்ட ராமனும் இலக்குவனும் சுக்ரீவனுக்காக வருந்தி அவன் பக்கம் போரிட்டு வாலியைக் கொன்று நாட்டை மீட்டுக் கொடுத்தனர்.
சுக்ரீவன் வாலியைப் போருக்கு அழைத்து அறைகூவல் விட்டபோதே வாலிக்கு அன்புரையும் அறிவுரையும் கூறி எச்சரித்தவள் தாரை. ஆனால் அவனோ மனைவி சொல்லைக் கேட்காமல் போரிடச் சென்று அழிந்தான். வாலிவதம் நிகழ்ந்ததும் அழுது அரற்றும் தாரை ஒருவாறாக மனதைத் தேற்றிக் கொண்டு தன் மகன் அங்கதனுக்காக வாழத் தொடங்குகிறாள். அதேபோல் தன் கணவன் ருமையைக் கவர்ந்ததால் கிடைத்த தண்டனை இது என மனதைச் சமாதானப்படுத்திக் கொள்கிறாள்.


அதன் பின் சுக்ரீவனும் தாரையைத் தாய்போல் மதித்து நடக்கிறான். தாரையும் வீட்டு நலனையும் நாட்டு நலனையும் கருத்தில் கொண்டு அவனை மன்னிக்கிறாள்.
ராமனும் இலக்குவனும் சுக்ரீவனுக்கு உதவியதே கார்காலமுடிவில் சுக்ரீவன் தன் படைகளைத் திரட்டிக் கொண்டு வந்து சீதையை மீட்கத் தங்களுக்கு உதவுவான் என்றுதான். ஆனால் அவனோ அரசுக் கட்டில் கிடைத்ததும் சுகபோகத்தில் மூழ்கித் தன் வாக்கை மறந்தான்.
இப்படி நாளும் பொழுதும் ஓடுகிறது. அங்கோ ராமன் சீதையின் பிரிவினால் அனலில் இட்ட புழுப்போலத் துடித்துக்கொண்டிருக்கிறான். ஆனால் சுக்ரீவனோ களியாட்டங்களில் ஈடுபட்டுக் கொடுத்த வாக்கை மறந்தான்.  ராமன் தன் தம்பி இலக்குவனை அழைக்கிறார்.
“இலக்குவா இன்று வருவான் நாளை வருவான் என நினைத்துக் காத்திருந்தோம். ஆனால் சுக்ரீவன் தன் சேனைகளை ஒழுங்குபடுதினானா எனத் தெரியவில்லை. சொன்னபடி அத்தனை அக்ரோணி சேனைகளுடன் சொன்ன நாளில் வரவுமில்லை. கார்காலமும் முடிந்துவிட்டது. சீதை எத்தகைய துயரில் ஆட்பட்டிருக்கிறாளோ என நினைக்கும்போதெல்லாம் என் மனம் வெந்து நொந்து போகிறது. நீ உடனே நன்றியும் நட்பும் கொன்ற சுக்ரீவனிடம் செல். கொடுத்த வாக்கு என்னாயிற்று என்று கேள் “ என்று ராமன் சொன்னார்.
உள்ளபடியே கொந்தளித்துக் கொண்டிருந்தது இலக்குவனின் உள்ளம். அண்ணன் பொறுமை காக்கிறாரே என்றுதான் அவனும் பொறுமையாயிருந்தான். ’இனியும் பொறுப்பதற்கில்லை. இந்த சுக்ரீவனுக்கு உதவ வாலியைக் கொன்றோம்.ஆனால் இவனோ நமக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் காலம் கடத்துகிறான். இவனை இன்று உண்டு இல்லை என்று செய்துவிடவேண்டியதுதான்’. என்று கோபாவேசத்தோடு உருவிய வாளுடன் சுக்ரீவனின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான் இலக்குவன்.
சுக்ரீவனின் வருகையைக் கண்ட வாயிற்காப்போன்கள் திடுக்கிட்டனர். சும்மா வந்தாலும் பரவாயில்லை. உருவிய வாளுடன் வெறிகொண்ட வேங்கைபோல் வருகிறாரே இந்த இலக்குவன் என்று பதறிய வாயிற்காப்போன்கள் இலக்குவன் வந்துகொண்டிருப்பது குறித்து அந்தப்புரத்தில் இருந்த அன்னை தாரைக்கு வீரர்கள் மூலம் அவசரச் செய்தி அனுப்பினர். 


தாரைக்குப் புரிந்துவிட்டது. சுக்ரீவன் தான் கொடுத்த வாக்கைக் காவாவததனால் ராமன் இலக்குவனை அனுப்பி இருக்கிறார். ஏற்கனவே சீதையைக் காக்கத்தான் அவர்கள் சுக்ரீவனுக்கு உதவினார்கள் என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது. சுக்ரீவனோ சோமபானம் சுராபானம் அருந்தி அந்தப்புரத்தில் மயக்கத்தில் கிடக்கிறான்.
அவனுக்கோ இங்கே நடப்பது ஒன்றும் தெரியாது, மேலும் சொன்னாலும் குடியின் மயக்கத்தில் புரியாது. எனவே தானே முன்வந்து ஏதும் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இலக்குவன் கோபத்தில் சுக்ரீவனையும் வெட்டி விடுவான். மன்னன் இல்லாத நாடு மண்ணாய்ப் போகும் . எனவே தானே முன்சென்று இலக்குவனை ஆற்றுப்படுத்த வேண்டும் என எண்ணினாள்.
வாயிலில் இலக்குவன். கையிலோ வாள். அவன்முன் அந்நேரம் யார் சென்றாலும் வெட்டுவான். கண்மண் தெரியாமல் அவ்வளவு கோபத்தில் இருந்தான் அவன். அரண்மனைப் பெண்டிர், அமைச்சர்கள் தடுத்தும் அவன்முன் சென்று வெள்ளுடை அணிந்த தாரை பணிந்து நிற்கிறாள். ஓங்கிய இலக்குவனின் வாள் தணிகிறது. அவனுக்குப் பேச்சே எழவில்லை. இலக்குவன் வந்ததோ சுக்ரீவனை வெட்ட. ஆனால் முன்னிற்பதோ அவனது தாய்களைப் போல வெள்ளுடை அணிந்த தாரை. அதுவும் தாங்கள் கொன்ற வாலியின் மனைவி வேறு. அவளைக் கண்டு அவன் மனம் குழம்புகிறது.
தாரை சொன்னாள்,” கவலற்க ஐயனே, ஓரிரு தினங்களில் உங்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மன்னன் சுக்ரீவன் தன் சேனைகளுடன் வந்து சேர்வார். இதற்கு நான் உறுதி அளிக்கிறேன்.” இதைக் கேட்டதும் இலக்குவனின் கோபம் தளர்ந்தது. வாளேந்திய கரம் தொய்ந்தது. தங்கள் தாயரைப் போல வெள்ளுடையில் நிற்கும் தாரை வாக்குறுதி அளித்துவிட்டாள். நிச்சயம் அதை நிறைவேற்றுவாள். எனவே திரும்பி நடந்தான், இந்தச் சேதியை இராமனிடம் சொல்ல.
வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என்றவுடன் சுக்ரீவன் தன் வாழ்வை அழித்தவன் என்றாலும் தாயைப் போல் முன்வந்து காத்த தாரையின் தீரம் போற்றத்தக்கதுதானே குழந்தைகளே.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)