வியாழன், 14 நவம்பர், 2019

கணக்கில் பிசகாத விசாரசருமர். தினமலர் சிறுவர்மலர் - 39.

கணக்கில் பிசகாத விசாரசருமர்.
இருவர் அல்லது மூவர் கொண்ட ஒரு குடும்பத்தின் கணக்கு வழக்கை நிர்வகிக்கவே சிரமமாய் இருக்கிறது. யாரும் வரவு செலவைக் கணக்கெழுதி வைப்பதில்லை. ஆனால் ஆலயத்தின் அதுவும் ஈரேழு பதினான்கு லோகத்தையும் படைத்துக் காக்கும் சிவபெருமானின் ஆலயத்தின் வரவு செலவுக் கணக்குகளையும், சிவனுக்கு அளிக்கப்படும் உணவு, உடை ஆகியற்றையும் பல்லாயிரம் ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார் ஒருவர். நித்யதியானத்தில் இருந்தாலும் அவரின் கணக்கு பிசகாது. அவர் யார், அவருக்கு சிவாலயத்தின் கணக்கை நிர்வகிக்கும் வேலை எப்படிக் கிடைத்தது என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
சோழநாட்டின் மணியாற்றின் கரையில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நீரில் துளைந்தும் நிலத்தில் குதித்தும் மர விழுதுகளில் ஊஞ்சலாடியும் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.  அவர்களில் ஒரு ஞானக் குழந்தையும் இருந்தது. சேய்ஞலூர் என்ற ஊரில் வாழ்ந்த எச்சதத்தன், பவித்திரை ஆகிய தம்பதிகளின் மகன்தான் அவன். விசார சருமன் என்ற பெயர் கொண்ட அச்சிறுவனுக்கு அப்போது ஏழு வயது.
குழந்தைகள் விளையாடும் இடத்தில் சில இடையர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது அவை இடையர்கள் ஓட்டிச் செல்லும் தடத்தை விட்டுப் பெயர்ந்து போய்க் கொண்டிருந்தன. அவற்றை அவர்கள் ஒன்றாக நடக்கும்படி விரட்டி மரக்கொம்பால் அடித்தனர். வாயில்லா ஜீவன்களான அவற்றின் துன்பம் கண்டு துடித்த விசாரசருமர் தானே அப்பசுக்களை மேய்ப்பதாகவும் அவற்றை அடிக்க வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டார். இடையர்களும் ஒப்புக் கொண்டனர்.

தானே மேய்த்துத் தர ஒப்புக் கொண்டதால் தினம் விடிகாலையில் எழுந்து விசாரசருமர் அப்பசுக்களை ஓட்டிச் சென்று வயிறு நிறைய மேயவிட்டு மாலையில் இடையர் இல்லத்திற்குத் திரும்பி ஓட்டிக் கொண்டுபோய் விடுவார். இப்படி இருக்கையில் நன்கு மேய்ந்ததால் கொழுத்துச் செழித்த மாடுகள் பால் சொரியத் தொடங்கின.
ஏற்கனவே சிவனின் மேல் பற்றுக் கொண்ட விசாரசருமர் மண்ணால் லிங்கம் சமைத்து மாடுகள் சொரியும் பாலைப் பிடித்து அந்த மணல் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து அக்கம் பக்கம் பூத்த புத்தம்புதிய பூக்களைப் பறித்து அந்த லிங்கத்தின் மேல் போட்டுப் பூஜை செய்து மகிழ்ந்தார்.   
தினமும் இச்செயல் தொடர்ந்தது. தினமும் பசுக்கள் வீடு அடைந்ததும் சுரக்கும் பால் குறைவாயிருப்பதைக் கண்டு சந்தேகித்த இடையர்கள் ஒருநாள் விசாரசர்மரைப் பின் தொடர்ந்து வந்து கண்காணிக்கிறார்கள். அவரோ மணலில் லிங்கம் பிடித்துப் பாலை ஊற்றி அபிஷேகம் செய்வதைப் பார்த்து அவர்களுக்குக் கோபம் மேலிடுகிறது.
உடனே அவரது தந்தை எச்சதத்தனிடம் சென்று முறையிடுகிறார்கள். “ நாங்கள்பாடு எங்கள் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தோம். தான் மேய்ப்பதாகக் கூறி உங்கள் மகன் பாலைக் கறந்து மண்ணில் ஊற்றி வீணாக்குகிறான். இதை நீங்கள் கண்டிக்க வேண்டும். “
“அப்படியா நடக்கிறது. எனக்கு இதுவரை தெரியவில்லை. தெரிந்திருந்தால் கண்டித்திருப்பேன். இப்போதே போகிறேன் “ என்று கோபத்தோடு விசாரசருமரின் தந்தை எச்சதத்தன் விசாரசருமன் மாடு மேய்க்குமிடத்துக்குச் செல்கிறார்.
அங்கே அவர் காணும் காட்சி கொந்தளிக்க வைக்கிறது அவரை. குடம் குடமாகப் பால் கறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அதன் பக்கத்திலேயே அங்கே பூத்த பூக்கள் பூஜைக்குக் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவரது மகன் விசாரசருமனோ காரியமே கண்ணாயினனாக மணலில் லிங்கம் பிடித்துக் கொண்டிருக்கிறான்.
”விசாரசருமா. என்ன காரியம் செய்கிறாய் “
“தந்தையே ,நான் சிவனுக்கு பூசை செய்து கொண்டிருக்கிறேன்”
“இடையர்களின் பாலைக் கறந்து மணலில் கொட்டிப் பூசை என்கிறாயே . அவர்கள் புகார் அளிக்கிறார்கள். நிறுத்து உன் பூசையை “.
தந்தையின் கோபமொழியெல்லாம் விசாரசருமனின் காதில் புகவேயில்லை. அவன் பாடு கொளுத்தும் வெய்யிலில் லிங்கத்தைப் பிடித்துக் குடம் குடமாகப் பாலை அதில் ஊற்றி அபிஷேகம் செய்து கொண்டிருக்கிறான். பார்க்கும் தகப்பன் எச்சதத்தனுக்கோ கோபம் தலைக்குமேல் பீரிடுகிறது.
கோபத்தால் அங்கே அடுக்கிவைக்கப்பட்டிருந்த பால் குடங்களைக் காலால் எத்துகிறார். அந்நேரம் விசாரசருமன் சிவனுக்கு உரிய பால் வீணாகப் போகிறதே என்ற பதைப்பில் அருகில் இருந்த மாடு மேய்க்கும் கொம்பை எடுத்து வீசுகிறான்.
ஒரு க்ஷணத்தில் அனைத்தும் நிகழ்ந்துவிட்டன. ஆனால் அந்தக் கொம்போ மழுவைப் போலத் தாக்கி எச்சதத்தனின் கால்களை வெட்டிவிட்டது. ”ஐயோ” என எச்சதத்தன் குரல் எழுப்ப, “ஈசனே “ என்று வாய்விட்டலறி விசாரசருமன் தன் தவறுணர்ந்து ஓடிவர அங்கே சிவபெருமான் உமையம்மையோடு தோன்றுகிறார்.
விசாரசருமனைப் புன்னகையோடு பார்த்த சிவன் எச்சதத்தனின் கால்களின் காயத்தைத் தன் பார்வையாலேயே குணமாக்குகிறார். விசாரசருமனை அழைத்துத் தன் தலையில் சூடியிருந்த கொன்றை மாலையைச் சூட்டித் ”தந்தை என்றாலும் என் பூஜைப் பொருட்களைக் காக்க வேண்டித் தாக்கிவிட்டாயே விசாரசருமா. இன்றிலிருந்து நீதான் என் பூஜைப் பொருட்கள், உணவு , உடை ஆகியவற்றுக்கு அதிபதி. உனக்கு சண்டேசுவரர் பதவி தந்தேன் “ என்று கூற அன்றிலிருந்து சிவாலயத்தின் நிர்வாகத்தைத் தன் தியானத்தின் மூலமே ஞானத்தால் கணித்துக் கவனித்து வருகிறார் சண்டேசர்.
“சிவன்சொத்துக் குலநாசம்” என்று சிவன் கோவிலை விட்டு நாம் புறப்படும்போது அதனால்தான் சண்டேசுவரர் சந்நிதியில் ”என் கையில் சிவன் சொத்து ஒன்றுமில்லை” என்று சண்டேசரிடம் தட்டிக் காட்டிவிட்டு வருகிறோம். மேலும் ஆடைகள் சமர்ப்பிக்கும் விதமாக நூல் ஒன்றைப் போட்டு வருகிறோம்.
இப்படித்தான் சிவாலயத்தின் கணக்கைக் கவனித்துவருகிறார் சண்டேசர். நம் கணக்குக் கூடப் பிசகினாலும் பிசகும். அவரின் கணக்கு என்றைக்குமே பிசகியதில்லை என்பது ஆச்சர்யத்துக்குரிய விஷயம்தானே குழந்தைகளே. 

டிஸ்கி :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 25 .10. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

4 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. சண்டேசர் கதை அறிந்ததுதான். இருந்தாலும் உங்கள் பாணியில் உள்ளதை படித்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஸ்ரீராம்

    நன்றி ஜம்புலிங்கம் சார் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)