புதன், 13 நவம்பர், 2019

கனவுதாசன் என்றொரு கவி ஆளுமை

கனவுதாசன் என்றொரு கவி ஆளுமை



கனவுதாசனின் நினைவு முற்றமெங்கும் கவிதைப்பூக்கள். அவை போதவிழ்ந்து நறுமணம் பரப்பும்போது முகிழ்க்கும் தேனில் உமர்கய்யாம் கவிதைகள் போல் நம்மையும் போதைக்குள்ளாக்குகின்றன, சில தெளியவும் வைக்கின்றன. ஆகாசவீதியில் சூரியனைப் பந்தாடுவதும் புதை சேறைச் சுனைநீராக்குவதும் இவருக்கே சாத்தியம்.
இவரின் கவிதைகள் ஹைக்கூ, க்ளரிஹ்யூ வகையிலும் பூத்துள்ளன. முருகன், மானகிரி, காரைக்குடி, கம்பன் கழகம், கண்ணதாசன், சென்னை, பாரதி , இளங்குடி மேடைக்காளி, கொல்லங்காளி , பிள்ளையார், இளங்கோவடிகள், சுந்தரர் பரவை நாச்சியார் , பட்டுக்கோட்டையார் , கொப்புடையம்மன், தளக்காவூர் அதளநாயகி, கருப்பர் , வர்ஷா கல்யாணி , பாலமுரளி கிருஷ்ணா, முத்துக்குமார், மனோரமா, நா. காமராசன், கவிக்கோ, ஆண்டாள், ஸ்ரீதேவி, பாலகுமாரன் என்று தொடர்ந்து பூக்கின்றன இவரது கவிதைகள்.

“ஆறேழு மொழிகளின் தாயவள் ஆயினும்
அன்றுபோல் இன்றும் பால் சுரக்கிறாள்.” என்று தமிழ்த்தாயின் பொங்கிப் பெருகும் கருணை பற்றிய கவிதை வெகு அருமை. அதேபோல் இளங்கோவடிகள் பற்றிய கவிதையில் முச்சங்கம் பற்றிய சித்திரமும் பாண்டிய மன்னர்களின் தமிழ்க்கொடை பற்றிய செய்திகளும் அற்புதம்.
கொப்புடையம்மனைக் கண்டதும் வரும் காட்சிச் சன்னதம் நம்மையும் தொற்றுகிறது.  இவர் அம்மனிடம் செல்வவளம் கேட்கவில்லை. கவி வளம் கேட்கிறார். அதுவும் எப்படி ?
“ கொட்டிக்கொடு கொட்டிக்கொடுவென
முட்டக்குடி குட்டிப்பசுவென
சற்றைக்கொரு சொர்க்கக் கவிதனை
கற்றைக்குழல் சக்திச்சுடர்மகள் தருவாயே. ”
இவை மட்டுமல்ல வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். எல்லாத் தடைகளையும் மீறி ஜெயிக்க வேண்டும் என்ற உந்துதலை உருவாக்குவது இவரது சக்திமிக்க எழுத்து.
தடுமாற்றம் வரும்
தடுமாற்றமே
வந்துகொண்டிருக்காது.
தேவர்கள் பூச்சொரிவார்கள்
அசுரர்கள்
சிலுவையில் அறைவார்கள்
உயிர்த்தெழுவது
உன் கையில்.
பாதம் தேய்ந்துவிடாது
பாதைதான் தேயும்.
நிமிரலாம்
திமிரலாமா ?

என கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதக் கட்டுரைகளில் வருவதுபோல் ஞானமும் அறிவுரையும் கூடிய கவிதைகளும் காணக் கிடைக்கின்றன.
நான் நினைக்கிற
என் உயரமும்
நீ நினைக்கிற
என் உயரமும்
அவன் அவன் நினைக்கிற
என் உயரமும்
வேறு வேறானவை:
அதனால்தான்
எவன் உயரமும்
இங்கே
எளிதில் மட்டுப்படவில்லை.
என மனிதர்கள் அடுத்தவர்களை அளக்கும் அளவுகோல்களைக் கேள்விக்குட்படுத்துபவை. மனத் தடுமாற்றங்களையும் எள்ளி நகையாடுபவை இவரது கவிதைகள்.
புலம் பெயர்ந்தார்களா
நலம் பெயர்ந்தார்களா
என்ற அகதிகள் பற்றிய அக்கறைக் கவிதை நெஞ்சை நெகிழ்த்த ஒன்று.
“உன் சிம்மாசனத்தைக்
காத்துக் கொள்ள
சிரசாசனம் செய்ய வேண்டியுள்ளது.”
குற்றவாளிகள் கோடிகளை
எண்ணுகிறார்கள்
பல நிரபராதிகள்
கம்பிகளை எண்ணுகிறார்கள்.
வாக்களித்த வேர்களில்
வெந்நீர் ஊற்றினீர்கள்
விழப்போகிறது மரம்.
என அரசியல் சாடல் கவிதைகள் தனிரகம். அரசியலையும் ஆட்சியாளர்களையும் அநேகக் கவிதைகளில் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்திருக்கிறார் இவர்.
என் செருக்கு
நீ தந்தது
பின் எப்படி
ஆளாமலிருப்பது ! என மனையாளிடம் மயங்கும் அதே கணம்
எப்படி இருவரும்
இணைந்து வாழ்வது ?
மார்பு விளிம்பில்
மயக்கம் தோன்ற
பின்புறத் திரட்சியில்
நரம்பு சிலிர்க்க
நசுங்க நசுங்க
அணைத்துக் கிடக்கையில்
எத்தனை இடைவெளி ?
எந்த நூற்றாண்டு ?
என ஆண்டாண்டு காலமாய்த் தொடரும் திருமண வாழ்வின் மன இடைவெளியையும் பகிரங்கப்படுத்துகிறது எழுத்து.
காதலும் காமமும் கூட ஊடியும் கூடியும் வருகின்றன. காமமும் பிரிவும் அதன்பின் காதலும் ஊடலும் கூடலும் தவிர்க்கவே இயலாதவை என்பதை வரைந்து செல்கின்றன இக்கவிதைகள்.
படுக்கும்போது
பார்க்காத சாதி
எடுக்கும்போது
பார்க்கப்படுகிறது
கையிலே குண்டு
வார்த்தையில் அமைதி
தந்திரம் இன்றைய
தத்துவம் ஆனது
என மனிதம் செத்த மனிதர்களையும், அமைதி ஒப்பந்தங்களை மீறும் நாடுகளையும் சாடத் தயங்குவதில்லை கவிஞர். படிக்கும்போதே கவியரங்கக் கவிதைகள் போல் பலவற்றின் தொனி உயர்ந்தோங்கி ஒலிக்கிறது.
உவமை உவமேயம் உருவகம் எல்லாம் இவர்முன் கைகட்டி நிற்கின்றன.
வில்லிலிருந்து அம்பு விடுபட்டு வருவதுபோல்
சொல்லிலிருந்து கவிதை சுழன்று வருவதெவ்வாறு ?” என்று படிக்கும்போதே காட்சிச் சுவையை உண்டாக்கி விடுகிறது. – உவமை
“தீநனைந்த வாசனைபோல் கவிதை அள்ளித்
தெளிப்பதற்கு வந்துள்ளார் கவிஞர் எல்லாம்” இவ்வரிகளையே பலமுறை படித்துச் செம்மாந்தேன். தீ நனையும் வாசனை என்ற சொல்லாடலால் நெருப்பையும் மழையையும் ஒருங்கே காட்சிப்படுத்திய விதம் வித்யாசம். – உவமேயம்
“ஆகமொத்தம் அணை என்ற கமண்டலத்தில்
அடைத்துவிட்டார் மறுபடியும் கன்னடத்தில் “ என காவிரி பற்றிக் கூறி பூகம்பமாய் அதைப் பிள்ளையாரிடம் உடைக்கச் சொல்கிறார். – உருவகம்.
பேத்திக்கான பிறந்தநாள் வாழ்த்தில் பாசமும் கனிவும் பீரிட்டெழுகிறது.
“ முண்டி முளைத்துவந்த முன்னோர் மறுபிறப்போ?
அண்டி வந்தவர்க்கு அளிக்க வந்த ஒரு சிறப்போ ?
துண்டுச் சந்திரனோ? துளைக்காத சூரியனோ?
இதில் முன்னோரே தன் வாரிசாய் வரக் கோரும் தன்மையும் அவர்களின் வள்ளல்தன்மை தொடர வேண்டும் பிரார்த்தனையும் தெரிவதோடு துண்டுச் சந்திரனோ எனப் பிள்ளை இளம் மதியையும் துளைக்காத சூரியன் என அதன் சாஸ்வதத்தன்மையையும் கவிக்குள் கொண்டு வந்து சிலாகித்துச் சிலிர்க்கிறார் கவிஞர்.
சௌந்தர்ய லஹரியை சுந்தர மந்திரம் என்றும் கனகதாரா ஸ்தோத்திரத்தைத் தங்கமழை என்றும் தமிழாக்கி அமுதாக்கியவர். மகாமேருவை முப்பரிமாணமாகக் காணமுடியுமா. இதோ அச்சக்கரத்தைக் கூட வாசிப்பவர் மனக்கண்ணில் தன் வார்த்தைகளால் உயிர்ப்பித்தவர்.
நாற்பத்தி நான்காகும் கோணங்கள் மொத்தம்
நடைபாதம், திரிகோணம், பின்எட்டுக் கோணம்,
பார்க்கறிய உட்கோணம், பத்துவெளிக் கோணம்
பத்தோடும் பதினான்கு கோணங்கள் ஆகும்.
காக்குமவள் தளம்எட்டு பதினாறு பின்பு
கைரேகை போல்மூன்று நல்வட்ட ரேகை
நாற்றுளைகள் போட்டிருக்கும் பூபுரங்கள் மூன்று
நம்அம்மை சக்கரத்தின் நல்வடிவம் கண்டீர். !
“யாவரும் வணங்குமாறே
அருள்தரும் எங்கள் தாயே
நாவரும் வார்த்தை கொண்டு
நானுனை வணங்குகின்றேன்.” என ஆசுகவியாய் பாடிச் செல்கிறார். கவி யாப்பதில் மட்டுமல்ல மொழிபெயர்ப்பிலும் சொற்சிக்கனத்தோடு மின்னல்போல் தெறிக்கின்றன இவரது கவிதைகள்.
பாரதி விழாவில் கவி பாடச் சென்றபோது கவிக்கையோடு வருகிறது ஒரு ரவிக்கை என்றும் , வகுப்பறை கொடுத்தீர்களே கழிப்பறை அமைத்தீர்களா என்றும் எதுகை மோனையோடு கேள்விகளை எழுப்பி அரங்கை அதிரவைத்தவர் இவர்.
“விழிச்சுடரில்
மொழிச்சுடர் ஏற்றிய
ஒளிச்சுடர் அல்லவா பாரதி “ எனப் படிக்கும்போது பாரதி குறித்து நாமும் பெருமிதமாகிறோம்.
நீர் நகரும் பூ என்னும் தொகுப்பில்
“ஒன்றில் ரெண்டு, மூன்று, நான்கு,
உடைசல் ஆகிப் போனது
உடைசலையே கடைசலாக்கும்
உன் முயற்சி பெரியது.” என நேர்மறைத் தன்மை கொண்டு முடித்திருப்பது அருமை. இவரது பெரும்பான்மைக் கவிதைகளில் சுய எள்ளல், விரக்தி, அறிவுரை, யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு வாழும் தன்மை, சுய தேடல், மனிதம் பற்றிய பரிவு, துணை நலன், துணையைப் பற்றிய எதிர்பார்ப்புகள், காதல் ஆகியன வெளிப்படுகின்றன. ஆணும் பெண்ணும் ஒரு உடலின் இரு பாதி என்பார்கள். அதையே கவிஞர் இக்கவிதையில்
“குடல் விளக்கம் செய்தவளோ
குறையான என்னை விட
உடல்விளக்கம் செய்தென்
உயிர்விளங்கச் செய்தது யார் ?” என உசாவுகிறார்.
வள்ளல் அழகப்பர் பற்றிய கவிதையில்
”கொடுப்பதுவாய்ச் சொல்லாமல்
கொடுத்ததுபோல் இல்லாமல்
மிடுக்குடனே நில்லாமல் – தன்னை
மேலென்று கொள்ளாமல்”
என இவர் பேனா துள்ளி வந்து நர்த்தனமாடுகிறது. சொல்லவந்தது செய்நேர்த்தியுடன் பூர்த்தியாகி இருக்கிறது.
இவரின் சுயதேடல் அனைவருக்குமானது.
”என்னைப் பிடுங்கி
வெளியே
நடத்தான் ஆசை
பிடுங்கிப் பிடுங்கிப்
பார்க்கிறேன்
அரையும் குறையுமாய்
நட்டு நட்டு
இன்னும் முளைக்கவில்லை” என தன்னில் சுயதேடல் நடத்தும் இவர் தன்னம்பிக்கை வெளிப்படும் விதமாகக் காலத்துடன் நடத்தும் போராட்டம் விசுவரூப தரிசனம். 
“ காலம் என்னை
மாங்கொட்டையாய்
சப்பித் துப்பியது.
மரமாய் வான்முட்ட
முளைத்துக் கொண்டிருக்கிறேன்”
இவரின் கவி ஆளுமையை நிறுவப் பேதைமை, கடற்கரை நாகரிகம் போன்ற பல்வேறு கவிதைகளிருந்தாலும் எனக்குப் பிடித்தது சொல் – பொருள் என்ற கவிதையின் இவ்வரிகள்
“பொருள் நீர் சுரக்காத
சொல் மேகங்கள்
கலைந்து விடுகின்றன “ இதைத் திரும்ப வாசிக்கும்போது வாழ்வின் அர்த்தமும் பொருளும் விளங்கிவிடுகிறது. மேலும் இக்கவிதையும் இவர் கவி வளமைக்குச் சான்று.
முடிக்க முயலாதவர்களும்
முடிக்க முடியாதவர்களும்
முடிக்க இயலாதவர்களும்
முடிக்க விடாதவர்களும்
இருக்கும் வரை
எதுவும் முடிந்துவிடாது.
கனவுதாசனாக இருந்தும் கம்பதாசனையும் கண்ணதாசனையும் உள்ளன்போடு கவிதைகளில் உவந்திருக்கிறார். இறை நம்பிக்கை, இல்லறப் பாசம், அகதிகளிடம் பரிவு, அரசியல் தெளிவு, கலைஞர்களிடம் நெகிழ்வு, மனிதநேயப் பண்பு, நகரத்தார் மாண்பு, சுய சாடல், யதார்த்தத் தேடல், காதலின் கனிவு, காமத்தின் ஒளிவு, ஞானத்தின் தெளிவு, கவி ஆளுமை, சொல்லாட்சி, நவீன பாணி எனச் சிறந்தோங்குகின்றன இவரது புதுக்கவிதைகள்.  
சில பல மயிலிறகு வார்த்தைகளே கோரும் இவர் என் பேரன் கையில் பேனா இருக்கட்டும் என்று கூறும் ஆசியே வரும் தலைமுறை தலைநிமிர்ந்து நிற்க காலத்தை வென்ற கவிஞனாக வழங்கும் மிகச் சிறந்த பரிசு.  
தரவுகள் :- 1. பேசும் புதிய சக்தி, 2. சுந்தர மந்திரம், 3. தங்கமழை, 4. மேல் நோக்கிப் பெய்த மழை. 5. உள் வெளி, 6. பரந்து பறந்து, 7. நீர் நகரும் பூ, 8. கண்ணாடிச் சில்லுகள்.

4 கருத்துகள்:

  1. கவிதையுடன் கருத்துரையும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. அருமை.   அருமை. சொல்லச்சொல்ல நிறுத்த முடியாமல் உதாரணம் காட்ட கவிகள் அணிவகுக்கின்றன என்பதிலிருந்தே அவர் திறமை தெரிகிறது.  கவர்கிறது.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ரவிச்சந்திரன் சார்

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)