செவ்வாய், 10 செப்டம்பர், 2019

ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினருடன் ஒரு சந்திப்பு.

ஜெர்மன் தமிழ் கல்விச் சேவை தலைவர் திரு அம்பலவன் புவனேந்திரன் அவர்களும், உபதலைவர் திரு சிறி ஜீவகன் அவர்களும் எங்கள் டூயிஸ்பர்க் இல்லத்துக்கு வருகை தந்து வாழ்த்தினார்கள். இந்தச் சந்திப்புக்கு வழிகோலிய அன்புத்தோழி ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் , மூன்று நூல்களின் ஆசிரியர், பிரபல வலைப்பதிவர் திருமதி கௌரி சிவபாலன்.  அவருக்கு முதலில் என் நன்றிகள்.



இச்சங்கத்தில் 30 பேர் உறுப்பினராக உள்ளனர். அவர்களுள் தலைவரும் உபதலைவரும் எங்கள் இல்லத்துக்கு வந்திருந்தார்கள். ஜெர்மனிக்கு வந்துள்ள தமிழக எழுத்தாளர் என்ற முறையில் எனக்குப்  பொன்னாடை போர்த்திக் கௌரவித்து நூல்கள் அளித்துச் சென்றார்கள்.

புலம்பெயர் வாழ்வில் தமிழை ஊனாய் உயிராய் வளர்த்துவரும் தமிழ்க் கல்விச் சேவையின் பணிகள் குறித்துக் கேட்டறிந்து மிகுந்த மகிழ்வடைந்தேன். ( கல்விச் சேவைபற்றியும் ஆண்டுமலர்கள் பற்றியும்  இன்னொரு இடுகையில் விரிவாகப் பகிர்கிறேன். )

மேலும் எழுத்தாளர் சங்கத்தின் மூலம் ஈழத்தின் 50 சிறுகதைகள் போட்டி வைத்துத் தொகுக்கப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டிருந்தது வியப்பு. ஜெர்மனியில் இருந்து கொண்டு தாயகத்தில் போட்டி நடத்தி 50 சிறுகதை ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தி அவர்களின் படைப்புக்களைத் தொகுத்து நூலாக்கம் செய்து அளிப்பது என்பது சாதாரண விஷயமா என்ன.

மேலும் அந்த நூல் விற்பனையில் வந்த தொகையையும் ஈழத்தில் ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்கள். அவர்களின் உயரிய பணிக்கும் சேவைக்கும் தலைவணங்குகிறேன்.

ஜெர்மனியும் தமிழும் அறிந்த, தமிழ்க் கல்விச் சேவையில் பயிலும் குழந்தைகள் ஜெர்மன் மொழி இலக்கியங்களைத் தமிழிலும் தமிழ் மொழி இலக்கியங்களை ஜெர்மன் மொழியிலும் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிட வழிநடத்தும்படிக் கேட்டுக் கொண்டேன். அவர்களும் அதைச் செய்வதாக ஆமோதித்தார்கள்.


இது என் முகநூல்  பதிவு

///ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான திரு. அம்பலவன் புவனேந்திரன் அவர்களும் ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவரும் ஜெர்மனி தமிழ்க்கல்விச்சேவையின் தலைவருமான தமிழ்மணி திரு. பொன்னுத்துரை சிறிஜீவகன் அவர்களும், எங்கள் இல்லத்துக்கு வந்தபோது செவ்வரத்தை என்ற நூலை ( இலங்கை வாழ் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு - போட்டிச் சிறுகதைகள் ) மற்றும் முடிவல்ல ஆரம்பம் என்னும் நூலையும், ஜெர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் பதினைந்தாம் ஆண்டு, இருபத்தியைந்தாம் ஆண்டு மலர்களையும் வழங்கினார்கள்.///




இது தலைவர் திருமிகு அம்பலவன் புவனேந்திரன் அவர்களின் முகநூல் பதிவு.

//// தமிழகத்திலிருந்து ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு தற்போது யேர்மனியில் தங்கியிருக்கும் தமிழகத்தின் பிரபல எழுத்தாளரும் சிந்தனையாளருமான திருமதி தேனம்மை லெட்சுமணன் (காரைக்குடி) அவர்களை டுயிஸ்பேக் நகரில் நேற்றைய தினம் (04.9.2019) சந்தித்தோம்.

தமிழகம் திரும்புதற்கான குறுகியகாலத்து ஆயத்தப் பணிகளுக்கிடையில் எமக்கென தனது நேரத்தை ஆத்மார்த்தமாக ஒதுக்கித்தந்தமைக்காக நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு, யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நானும் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவரும் யேர்மனி தமிழ்க்கல்விச்சேவையின் தலைவருமான தமிழ்மணி திரு. பொன்னுத்துரை சிறிஜீவகன் அவர்களும் திருமதி தேனம்மை அவர்களுடன் சிறு கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டோம்.

இலக்கியம், சமூகம் ,தமிழ்க்கல்வி, பக்தி ,பெண்ணியம், தாயகவாழ்வியல் ,புதியதலைமுறை, இடம்பெயர்வு, புலம்பெயர்விலக்கியம் என்று பல்வகைப்பட்ட விடயங்களைப்பற்றிய கருத்தாடல் செய்ததிலிருந்து அவரொரு பரந்துபட்ட சிந்தனையுள்ள பன்முகப்படைப்பாளி என்பதை உணரக் கூடியதாவிருந்தது.

இதுவரை வெளியிட்ட தனது பத்து நூல்களைப்பற்றியும்; பல கட்டுரைத்தொடர்களைப் பற்றியும் அவற்றின் தோற்றுவாய்களையும் மகிழ்வோடு எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

யேர்மனிய மற்றும் புலம்பெயர் இலங்கைத்தமிழரின் வாழ்வியலின் வியப்பான தனது பதிவுகளையும் எம்மோடு பகிர்ந்து மகிழ்ச்சியடைந்தார். தாய்மொழி இலக்கியம் கலைகலாச்சார விழுமியங்களைக் கட்டிக் காப்பதற்கு இங்குள்ள தமிழ் அமைப்புகளின் சேவைகளைப் பாராட்டியதோடு எமக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

யேர்மனிய மற்றும் மேற்குலக இலக்கியங்ளையும் எமது தமிழிலக்கியங்களையும் மொழிமாற்றம் செய்து நூலுருவாக்குவதால் பதிய தலைமுறைக்கு பயன்பாடாய் அமைவதோடு எமது மொழியின் தொன்மமும் சிறந்த கலை இலக்கிய கலாச்சார வடிவங்களும் இங்களுள்ள மக்கள் அறியும் வகையாகும் என்ற தனது ஆதங்கத்தையும் கோரிக்கையாக முன்வைத்தார். சங்கத்தின் எதிர்காலத் திட்டங்களில் அவற்றைக்கருத்தில் எடுத்துக்கொள்வோம் என்ற உறுதியினை அவர்களுக்கு நாம் வழங்கினோம்.

எமது சங்கத்தால் வெளியீடுசெய்யப்பட்ட நூல்களில் சிலவற்றையும் ; தமிழ்க்கல்விச் சேவையின் ஆண்டுமலர்களில் சிலவற்றையும் படைப்பாளி - திருமதி தேனம்மை அவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தோம். இனிதான அந்த மாலை நேரச்சந்திப்பு ஆரோக்கியமானதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தமை சிறப்பு.

சுமார் இரண்டு மணித்துளிகளை நிறைத்த இந்தச்சந்திப்பிற்கு இணக்கம் தெரிவித்தமைக்காக திருமதி. தேனம்மை லெட்சுமணன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் மகிழ்வோடு நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டோம்.///

டிஸ்கி :- மிக்க நன்றியும் அன்பும் கௌசி, ஸ்ரீஜீவகன் சார் & புவனேந்திரன் சார்.. ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், & ஜெர்மன் தமிழ்க் கல்விச் சேவை. 

3 கருத்துகள்:

  1. அருமையான சந்திப்பு
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஸ்ரீராம்

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)