திங்கள், 29 அக்டோபர், 2018

கூட்டாஞ்சோறு – அணிந்துரை.


கூட்டாஞ்சோறு – அணிந்துரை.

நிஜமான கூட்டாஞ்சோறு என்றால் இது தான். புதுக்கவிதைகள் மட்டுமல்ல. மரபுக்கவிதைகளும் வெண்பாக்களும் க்ளெரிஹ்யூக்களும் கூட கூட்டாஞ்சோற்றில் இடம் பெற்றுள்ளன. சுற்றுச்சூழல், இயற்கை ஆக்கிரமிப்பு, விவசாயம், வான்பொய்த்தல், மழை, தரிசு, வெள்ளாமை, காதல், பாசம், காமம், உறவுகள், மூன்றாம் பாலினத்தவர், கிராமம் எனப் பல்வேறு பாடுபொருட்களுடன் துலங்குகின்றன கவிதைகள். அனைத்துக் கவிதைகளையும் பக்குவமாக ருசியான ஒரே கூட்டாஞ்சோறாக்கிய இம்மாபெரும் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

கலக்கல் ட்ரீம்ஸின் வெளியீடான இதில் பதினாறு கவிஞர்கள் எழுதி இருக்கிறார்கள். தன சக்தி, சீதா, ஸ்வேதா, கார்த்திக் மணி, ராம் சங்கரி, காயத்ரி அருண்குமார், கிருபாஷினி, மதுவதனி, கரிக்கட்டி கவிராயர், ஸ்ரீபுஷ்பராஜ், தமிழ்த்தென்றல், சாயா சுந்தரம், அனுசரன், கடவுளின் ரசிகன், மதுரை சிக்கந்தர், வைகை ராஜீவ் ஆகியோர்.


ஸ்வேதாவின் வெண்பாக்கள் அமிழ்தம். சுற்றமது வேண்டும் அவளிற்குப் பெற்றவர் வேண்டும் அவளிர்க்கு ஆசை கொண்டவன் வேண்டும் அவளிற்கு ஒன்றில்லாமல் போனாலும் உயிர் நீங்கும் உடலை விட்டு என்ற கவிதையின் பெண்ணின் பரந்த அன்பு செய்யும் மனது வெள்ளிடை மலை. பெண்ணைப் போற்றுவதும், பற்றியெரியு ப்ரியப் பெருங்காடும், எழுதிப்பழகும் குழந்தையும் வெகு அழகு.

கடவுளின் ரசிகனின் பார்வைகள் வேறு. பூர்ஷ்வாக்களின் பார்வையில் ஒரு கவிதையும் மனைவியின் கரடி பொம்மையுடனான உரையாடலும் வித்யாசம். ஏமாந்த நாயின் கனவு இரக்கத்தைத் தூண்டியது. கட்டெறும்பும் நானும் மனதை இறகாக்கிய காதல் கவிதை.

தனசக்தியின் நவீனபாணி கல்வெட்டுக் கவிதை வித்யாசம். நூறு நாள் வேலைத்திட்டம் போன்றதொன்றைக் கேள்வி கேட்கிறது கவிதை ஒன்று. அதன் வலி நதிக்கரையோரம் முளைத்திருந்த தலைகள் கொண்டிருந்த காலி இரைப்பைகள் பற்றியது. வைக்கோல் கன்னுக்குட்டியும் அம்மாவின் வாசனை நீலநிறமாக எழும்புவதும் கனவு மெழுகாய் உடைவதும் நுண்ணிய உணர்ச்சிகளை ஏற்படுத்தியவை தனசக்தியின் கவிதைகள்.

அர்த்தநாரீ எதிர்பாரா தருணங்களில் எதிர்பாரா விஷயங்களைப் பட்டெனப் போட்டுடைத்துக் கட்டுடைக்கிறாள். எதிர் எதிர் துருவ முத்தங்கள், தடம் மீது தடம் பதித்தல், சிக்கி முக்கிக்காதல், மழைநீர்க் காதல் என அன்பில் உருகும் கவிதைகள் மனதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

கார்த்திகேயனின் மெழுவர்த்தி கவிதை துணுக்குறச் செய்தது.

“குறுஞ்செய்தியிலேயே
குடும்பம் நடத்தும்
கொடுங்கலையில்
இளங்கலைப் பட்டம் தந்தாய் “ என்று சந்த நயத்தோடும் புதுக்கவிதை படைத்திருக்கிறார். சொல்லியிருக்கும் கருத்தின் சாரமும் காரமானது. பறவைகளுக்கு சுயம் புரியவைப்பது அழகு. யாரோ ஒருவன் புன்னகைக்க வைத்த கவிதை.

சீதாவின் கவிதையில் அழைப்பு மணிப் பறவைகள் அழிந்துபட்ட வனப்பறவைகளின் ஆன்மாவின் சங்கீதமாய் ஒலித்தன. உள்ளங்கை உலகு வெகு அற்புதமான கவிதை. தேவதையின் சிறகுகள் எப்போது முளைக்கின்றன என்று எண்ண வைத்தவை. மதுக்குட்டியும் மலர்த்தூததனும் இன்றைய குழந்தைகள் மற்றும் பெற்றோர் பற்றிய அவசமெழ வைத்த கவிதை.

வைகை ராஜீவின் இறப்பிற்குப் பின் வாழ்வு, சாதியப்பற்றுடன் வாழ்ந்த உடலும், சமூகத்தின் நிர்வாணமும், வாழ்விழந்த மக்களும் சிறிது நிம்மதியின்மையை உண்டு செய்த கவிதைகள். மிக அழுத்தமான விஷயங்களை ஆழமாகப் பதிவு செய்தவை இவருடைய கவிதைகள். கொஞ்சம் இருண்மையான விஷயங்களையே தொடுகின்றனவோ என்றும் தோன்ற வைத்தன. மனிதர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துத் திருத்த நினைக்கின்றன இக்கவிதைகள்.

ராம் சங்கரியின் பிரயாணத்தின் பாதுகாப்பு சரியான எச்சரிக்கைக் கவிதை. சுவர் ஒட்டியைத் தின்ற கழுதைகள் கவிதை சற்று சிரிக்க வைத்தது. இரு கனிகள் தொங்கும் மரம் குறியீட்டுக் கவிதை. வரிவிதிப்பும் வான் பொய்ப்பதும் வயல் தரிசாவதும் விவசாயிகள் இறப்பையும் அரசால் தடை செய்யப்பட்ட கவிதையில் கண்ணீர் வரச் செய்கின்றன. நாட்டுக் கோழி, பிராய்லர் கோழி, ஈமூக்கோழி என்றவற்றோடு ஒரு பெண்ணின் உடல் மலர்வதை வித்யாசமாகச் சொல்லிச் செல்கிறது ஒரு கவிதை.

குமுதா சுப்பையனின் ஐந்திணைத் தலிவிகளின் காதல் .ஐந்து திணைகளையும் அவற்றின் மனிதர்கள், பூ, மிருகம், நேரம், இடம் ஆகியவற்றைக் களனாகக் கொண்டு பாடப்பட்ட அருமையான சங்கம் தழுவிய பாடல்கள். குறுந்தொகைப் பாடல் நெகிழ்வு. மனங்கவர்ந்த மன்னவன் கவிதை கம்பீரம். ராமனை விட ராவணனின் காதலை அற்புதமாகச் சொல்லும் கவிதை ஒன்றும் கவர்ந்தது. நேர் நேர் தேமா என்ற இலக்கணக் குறிப்புகளோடு அறுபடைக் கவிதை ஒன்று வெகு வித்யாசம்.

அனுசரணின் கவிதைகளில் ஆமாவா என்ற வார்த்தை ஏற்படுத்தும் கிறக்கம் அழகு. வான் சுவர்ச் சித்திரத்தில் மழைவில் உதிப்பதும், மிருதுள நிலா என்னும் பதமும் கவர்ந்தன. கனவுகளை நிறமாக்கிப் பார்க்கும் கவிதைகள் இவருடையவை.

சாயா சுந்தரத்தின் கவிதைகளில் வளைகுடா நாடுகளில் வாழ நேரும் - சுரக்காத மார்பு விம்மும் -  தாயுமான தந்தையின் தரிசனம் அம்முவின் அப்பா கவிதையில் கிடைத்தது. பேரன்புக்காரி, இறுக்கம், இரண்டுமே அன்பின் பரிதவிப்பைச் சொல்லின. சொல்ல இயலாமல் புதைத்துக் கொள்ளும் நேசத்தின் வலியை இயல்வாழ்க்கையோடும் அழகியலோடும் சொன்ன கவிதை இறுக்கம்.

சிக்கந்தர் காதல் கவிதையோடு பாலியல் தொல்லைக்கு ஆட்படும் பெண்ணுக்குத் துப்பாக்கி வேண்டும் உக்கிரக் கவிதைகளும் எழுதி இருக்கிறார். மனநிலை பாதிக்கப்பட்டோரின் நிலையும் கவிதையாகி இருக்கிறது. இருண்ட கருவறையில் புகுந்த ஈகைத் துளிர் கவிதை ஒருகணம் நடுக்கமுற வைத்தது. பாசமும் அளித்தது.

காயத்ரி அருண்குமாரின் வற்றிய நதி பருவத்தின் காலம் கடப்பதை நினைவுறுத்துகிறது. கல் சுமந்த தாயின் பாதவரிகள் ரணவரிகளாய் பரிதவிக்கச் செய்து கல்வெட்டாய்ப் பதிந்துவிட்டது ஒரு கவிதையில். செல்லாக் காசைத் தள்ளபின்னும் திரும்பி வந்தாலும் சந்தையில் பொருட்கள் வாங்கும் கவிதை கிராமிய மணத்தில் ஒரு தெம்மாங்கு. பொம்மி கவிதை அறிவுரையும் தன்னம்பிக்கையும் தருகிறது. கனவும் கரிய மானும் வித்யாசம்.

தமிழ்த்தென்றலின் வேண்டுதல் கடவுளையும் கதாபாத்திரமாக்குகிறது. நத்தை வெறும் உயிரல்ல உணர்வு என்ற கவிதை அற்புதம். முற்றமும் வானமும், சுவர்களற்ற பெருவீடும் மாமழையும் அழகோவியம். மழையழகுதான். நதி என்னும் பெண் கடலெனும் அன்னை மடியில் ஆழ்துயில் கொள்ளும் முன் சந்திக்கும் இயற்கைச் சீரழிவு துயரம். வயற்காட்டுக் கடவுளும், வயல்கள் வீதிகளாவதன் துயரத்தையும் சொன்ன இன்றைய எதார்த்தக் கவிதைகள் நச். எச்சில் முத்தமும் அப்பா என்னும் சாமியும் அருமை. மண்ணின் ஓலமும் வாழ்ந்து கெட்ட வீடும் ஏர்க்காலின் காயமும் பதைபதைக்க வைத்த ஒன்று.

கரிக்கட்டி முத்தையனின் மரக்கொலையும் சாலைத்திட்டத்திற்காகப் பலியாகும் மரத்தையும் மனிதத்தையும் வலியெழப் பாடியது. சமையலறையில் புகையிருக்காது, குறைவேக்காடு நிறை சாப்பாடு என்று கனவு இல்லமும் பணி நிறைவுக்குப் பின்னான வாழ்க்கைக்கான உறுதியும் அருமை. அன்புள்ள அப்பாவும் கவிதைக்குள் சிறைவைத்தலும் சிந்திக்க வைத்த கவிதைகள்.

மதிவதனியின் ஒரே கவிதைதான் இடம் பெற்றிருக்கிறது. அதுவும் மழலையின்பம் பற்றிய துயர் தோய்ந்த கவிதை. தன் மகனை தன் வயிற்றில் வசித்திருக்கவும், குடி இருக்கவும் அழைக்கும் அன்னையின் ஆன்மாவின் ஆதங்கம் கவிதையெங்கும் வெளிப்படுகிறது. அதோடு அதாய் தன் கணவனையும் சேர்த்துக் குழந்தையிடம் நிம்மதி தூக்கமும் எம்பதி ஏக்கமும் வீழ்த்தும் ஒரே கணை நீதான். துணையும் நீதான்.  

கிருபாஷிணியின் திமிரனில் கண்டதுண்டமாய்க் காதலிக்கச் செய்வது அதிதீவிரக் காதல். இக்காதல் ஒரு வாதை.

நீதானே என்
திவ்யத் துயரம்,தீரா வன்மம்
தெரிந்த பிழை, தேடிய பிறழ்வு,
தொடரும் நேசம்
தோற்றுப்போன நம்பிக்கை  
என்று வார்தைகளால் நம்மையும் பித்தங்கொள்ளச் செய்கிறார் . இவரும் ஒரு கவிதையிலேயே உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறார்.  

இயற்கையை நேசிக்கும் சுவாசிக்கும் கவிதைகள். காவியக் காதலையும் களங்கமற்ற உலகையும் கனவு காணும் மனங்கள் வாய்க்கப் பெற்றவர்கள் இக்கவிஞர்கள். பல கவிதைகளிலும் சிலேடை நயமும் சந்த நயமும் எதிர்பாராமல் துள்ளி விழும் அழகு வார்த்தைகளும் பிரமிக்க வைக்கின்றன. இலவு காத்த பகல் பொழுது, உள்மனக் கண்ணீர் பனிக்குடக் கண்ணீராய்க் காத்திருப்பது, செரிக்காத புலம்பல்கள், இன்மையின் திரிபு, சாம்பல் நிறக்காமம், பெண்பால் சிவன், சடசடத்த அருவி முத்தங்கள், உலகக் காம்பிலிருந்து உதிரும்பூ, நிழலிழந்த நிலம், ஆவிக்கிளி, கிராதகப்பழம், விடிவெள்ளி மூக்குத்தி, அரவணைக்கும் அரண், அலகுத்தூண்டில், பச்சைத் தழும்புப் புல்வெளி, கருவுறா உயிரே,மொழிக்குழைவுகளின் மௌனக்கழிவு ஆகியன சிறந்த சொல்லாடல்கள்.

இக்கவிஞர்களின் உணர்வு அனைவர்க்கும் பொதுவானாலும் மொழியின் பொருட்டு இக்கவிதைகள் அமரத்தன்மை அடைந்துள்ளன. அனைவருக்கும் தனித்தனி பாணி இருந்தாலும் கூட்டாஞ்சோற்றில் விலகி இராமல் அவை ஒன்றாகச் சேர்ந்து ருசி கூட்டுகிறது. பொதுநலனும் இயற்கை நலமும் பேசும் மனம் அனைவருக்குமே வாய்த்திருக்கிறது. அதுவே இக்கவிதைகள் நம் மனதைத் தொடவும் வெற்றி பெறவும் காரணமாகிறது. அனைவருக்கும் வாழ்த்துகள்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)